“ஏய்யா வீரபாண்டி, நீர் என்ன ஆக்கங்கெட்ட கூவையா? வகுப்புல இந்த வேலை செஞ்சு வைச்சுருக்கீர். மூளையை பரணியில வைச்சுட்டு வந்துட்டீரோ? என இரைந்தார் ஹெச். எம்
“என்ன சார் நீங்க, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட மாதிரி, யாரோ எங்கேயோ வித்தியாசமா பாடம் எடுத்து ஃபேமஸ் ஆயிட்டாங்கனு நீங்களும் செஞ்சீங்களாக்கும். ஆனா ஊன்னா டீச்சர்ஸ் மேல தான் புகார் வருது. மேலதிகாரிங்க வந்தா மெமோ கொடுப்பாங்களோ சஸ்பென்ஷன் கொடுப்பாங்களோ, தெரியாது” இது ஏ. ஹெச். எம்.
“என்கொயரின்னு வந்தா நீர் என்ன சால்ஜாப்பு (காரணம்) சொல்வீர்” என திரும்பவும் ஹெச். எம்.
“அடுத்த வருடம் உங்களுக்கு ரிட்டையர்மென்ட். இப்பப் போயி… நீங்க பேப்பர் படிக்கறதில்லையா? நம்ம ஸ்கூல் இருக்கிற ஏரியா பதட்டமானதுன்னு தெரியாதா உங்களுக்கு?” இது திரும்பவும் ஏ.ஹெச்.எம்.
மதிய வேளையில் பள்ளியின் தலைமை ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியரும் எண்ணையில்லாமலே வீரபாண்டியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.
தலைமை ஆசிரியர் பரமகுரு வீரபாண்டியின் நெருக்கமான சிநேகிதர் தான். ஆனால் இந்த விவகாரத்தின் விளைவை நினைத்து சரியான கோபத்தில் இருந்தார்.
ஏ.ஹெச்.எம். சிவகுமார், வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பொறியில் தற்போது வீரபாண்டி மாட்டியிருந்தார்.
சின்னகாமக்காபட்டியில் இருக்கும் அந்த அரசு மேல்நிலைப்பள்ளி, சுற்றுப்பட்டு பத்து கிராமப் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கான ஏணிப்படி.
ஐந்து வருடங்களுக்கு முன் மதுரையிலிருந்து இங்கு மாற்றலாகி வந்தவர் தமிழாசிரியர் வீரபாண்டி. அந்த ஊரின் வனப்பும் எளிமையான அந்த மக்களின் இயற்கையோடு இயைந்த இயல்பு வாழ்க்கையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று
வெள்ளந்தியான அந்த கிராமப்புற மாணவர்களுக்கு, தமிழோடு வாழ்க்கை பாடத்தையும் கற்றுத் தந்ததால் வீரபாண்டி மாணவர்களின் அன்புக்குரியவராய் திகழ்ந்தார்
அவர் பாடம் நடத்தும் பொழுது கூறும் புராணக் கதைகளும், மாணவ மாணவிகளைக் கொண்டு நிகழ்த்தும் சிறுநாடகங்களும் பள்ளியில் பிரபலமான ஒன்றாக இருந்தது
‘ஆங்கிலம் அறிவியலுக்கு இல்லாத பெருமை தமிழுக்கா?’ என்ற காழ்ப்பும் ஆசிரியர்களிடையே நிலவியது. மாணவர்களின் குடும்பச் சூழல் அறிந்து அவர்களுக்கு உதவியதால், வீரபாண்டி பெற்றோரிடமும் அறிமுகமானவராக இருந்தார்
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் வகுப்பில் அவர் பாடம் நடத்திய ஒரு செய்யுளில் வந்தது தற்போதைய சிக்கல்.
தலைவனைப் பிரிந்த தலைவி பொலிவு இழந்து நிற்பதைக் கண்டு கவலையுற்ற தோழியிடம், தலைவி தான் தலைவனுடன் இருக்கும் பொழுது அவள் உள்ளத்தின் மகிழ்ச்சியையும், அவனைப் பிரிந்த காலத்தில் அவளது நிலையும் சொல்வதாக அழகுத் தமிழில் அணிலாடு முன்றிலார் எழுதிய அருமையான குறுந்தொகை பாடல் அது.
அன்று வகுப்பில் நுழைந்து வீரபாண்டி அப்பாடலை கரும்பலகையில் எழுதியவர், உற்சாகமாக அதன் சாரத்தை உவமான உவமேயங்களுடன் விளக்கினார்.
அக்கால இலக்கியங்களின் காதல் மக்களின் உணர்வோடு ஒன்றி வாழ்க்கையின் ஒரு அங்கமாகி இருந்தது என்று கூறியவர், அவரின் வழக்கமான பாணியில் வகுப்பில் இரு மாணவிகளை அழைத்து “மீனா நீ தலைவி, வசந்தி நீ தோழி நான் கூறியதை நடித்துக் காட்டுங்கள்” என்றார்.
இரு மாணவியரும் நன்றாகவே நடித்தனர். அதிலும் தலைவியாக நடித்த மீனா தன் தலைவனைப் பிரிந்து துன்பத்தில் இருப்பது போல் கண்களில் ஏக்கப் பார்வையுடன் தத்ரூபமாக நடித்தாள். அனைவரும் கை தட்டி பாராட்டினார்.
அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன் எழுந்து “யார் சார் மீனாவின் தலைவன்? ” என கேட்க மற்றொருவன் “சந்திரன் தான் ஒரு வாரமா வகுப்புக்கு லீவு, அவன் தான்” எனக் கூற வகுப்பே கலகலத்தது
ஆனால் அந்த நாடகம் வகுப்புடன் முடியாமல் பள்ளியில் அனைவரின் வாய்க்கும் அவலாகியது
“அவனவன் கைக்காசை வைச்சு அதை இதை வாங்கிப் போட்டு பிள்ளைங்களுக்கு பாடம் நடத்தினா, இவரு நாடகத்தைப் போட்டு நோகாம நோம்பி கும்புட்டாரு, இப்போ மாட்டிக்கிட்டாரு” என ஆசிரியைகள் வீரபாண்டியை கரித்துக் கொட்டினர்
“சார் நான் யதார்த்தமா மாணவிகளை நடிக்கச் சொன்னேன்” என வீரபாண்டி தலைமை ஆசிரியரிடம் தன்னிலை விளக்கமளிக்கத் தொடங்கியதும்
“ஆமா சார், நீங்க எதையாவது செய்வீங்க, அது வேறு ஏதாவது கலவரமா மாறினா அதுக்கு நாங்க பதில் சொல்லணுமா? அந்த பொண்ணு வேற இன்னைக்கு ஸ்கூலுக்கு வரலை, இனி வருமோ வராதோ யாருக்குத் தெரியும் ” என ஆத்திரத்துடன் கூறினார் ஏ. ஹெச் எம் சிவகுமார்
இந்த பிரச்சனை வேறு மாதிரியாக செல்வதை விரும்பாத பரமகுரு, “சிவகுமார்… இப்ப பத்தாம் வகுப்புக்கு ஆங்கிலப் பாடம் எடுக்கணும்னு சொன்னீங்களே, நீங்க வகுப்புக்கு போங்க. இதை நான் பார்த்துக்கிறேன்” என அவரை அவசரமாக அனுப்பி வைத்தார்
“எப்படியோ பெரிய இஸ்யூ ஆகாம முடிங்க சார்” என்று கூறிய சிவகுமார், வீரபாண்டியை முறைத்துக் கொண்டே சென்றார்
“இவனுகளே எதாவது கிளப்பி விடுவானுங்க” என கடுப்புடன் முணுமுணுத்த ஹெச்.எம் பரமகுரு, “என்னய்யா இது… அந்த பொண்ணு வீட்டிலிருந்து யார் எப்போ வருவாங்கனு நான் பயந்துட்டு இருக்கேன், நீர் தைரியமா யதார்த்தமா நடிக்க சொன்னேன்னு சொல்றீர் ” என வீரபாண்டியிடம் கேட்டார்
“ரெண்டுங்கெட்டான் வயசு பசங்க இருக்கிற வகுப்புல இப்படி பாடம் நடத்தியது தவறு தான் சார். ஆனா அதனால் ஒரு உண்மை வெளிவந்துருக்கு, அதை சரி செய்ய வேண்டியது என்னோட கடமை ” என்றார் வீரபாண்டி அமைதியாக
“நீர் என்ன புது குண்டைத் தூக்கி போடுறீர் ” என்ற பரமகுருவிடம்
“சார் நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாக கேளுங்க” என ஆரம்பித்தார் வீரபாண்டி
வகுப்பில் நடந்த அந்த கலகலப்பை அப்போது அடக்கினாலும், அதில் ஏதோ விஷமம் இருப்பதாக வீரபாண்டிக்குத் தோன்றியது
எனவே அந்த இரு மாணவர்களையும் அன்று மாலை தனியாக அழைத்து “என்னடா வகுப்பில பொண்ணுங்ககிட்ட லந்து பண்றீங்க” எனக் கண்டித்தார்.
“என்ன சார் நீங்க அப்பிராணியாயிருக்கீங்க, மீனாவும் சந்திரனும் ஆறுமாதமா லவ் பண்றாங்க. அது உங்களுக்குத் தான் தெரியாது. வகுப்பில எங்க எல்லாருக்கும் தெரியும” என சிரித்தபடி கூறிய மாணவர்களிடம் தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாது, இது குறித்து இனி மேல் யாரும் வகுப்பில் வாயைத் திறக்கக் கூடாது என அவர்களை மிரட்டி அனுப்பினார் வீரபாண்டி
மறுநாள் அவர் சந்திரன் வீட்டுக்கு சென்றதில், அவன் வைரஸ் காய்ச்சலால் பள்ளிக்கு வரவில்லை எனத் தெரிந்து கொண்டார்
அவனிடம் அன்பாக பேச்சுக் கொடுத்ததில், “சார் எனக்கும் அந்த புள்ள மேல ஒரு இது தான் சார், ஆனா படிப்பு தான் முக்கியம் இது வேண்டாம்னு நான் சொன்னேன். ஆனா மீனா நான் அவளை லவ் பண்ணலேன்னா கிணத்துல குதிச்சிடுவேங்குது சார், அதனால தான் நானும் லவ் பண்ணினேன்” என்றான் சந்திரன் கண்ணீருடன்
“இதெல்லாம் இந்த வயசுல எதிர்பாலினர் மேல் வரும் ஒரு ஈர்ப்பு, இது காதலேயில்ல. இப்ப நீ எந்த கவனச்சிதறலும் இல்லாம படிப்பது மட்டுமே உன்னுடைய கடமை என்று இருக்க வேண்டும். உங்க அம்மாவையும் தம்பியையும் நல்லபடியா காப்பாத்தணும், எதிர் காலத்தில் நீ பெரிய ஆளா வரணும்ன்னா இதை இப்பவே மறந்துடு. மற்றதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கவலைப்படாதே” என ஆதுரத்துடன் அவனை அணைத்துக் கொண்டார் வீரபாண்டி
“சந்திரனுக்கு அப்பா இல்லை சார், அவங்க அம்மா ஏதோ கூலி வேலை செய்யறாங்க. நேற்று அந்தப் பெண் மீனாவிடமும் பேசினேன். பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அவளிடம் எடுத்துக் கூறி, பெற்றோர் அவள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை அவள் தவறாக பயன்படுத்தக் கூடாது. மேலும் இது இளம் பருவத்தில் வரும் இனக்கவர்ச்சி, ஒரு பருவச்சிதறல்.
இதைக் காதல்னு நினைச்சுட்டு எதிர்காலத்தை தொலைத்து விடக் கூடாது. உன் பெற்றோரையும் கவலையில் தவிக்க விடுதல் தவறு என அவளிடம் கண்டித்துக் கூறினேன். அதனால் தான் அவள் இன்று பள்ளிக்கு வரவில்லை என நினைக்கிறேன்.
இன்று நானே மீனாவின் வீட்டுக்குச் சென்று அவள் பெற்றோரிடம் இது பற்றி எடுத்துக் கூறி அவள் படிப்பைத் தொடருமாறு செய்கிறேன். இந்த அனுபவம் நமக்கு ஒரு நல்ல பாடம், ஆனால் இதுவும் கடந்து போகும். நீங்கள் இதை நினைத்து பயப்படாதீர்கள், நான் சமாளித்து விடுவேன்” என ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் பரமகுருவிடம் கூறினார் வீரபாண்டி
தன் மகள் கூறியதை வைத்து, “அந்த வாத்தியை இரண்டு போட்டா எல்லாம் சரியாயிடும்” என கோபத்துடன் பள்ளிக்கு வந்த மீனாவின் தந்தையும் அவள் அண்ணனும் தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே நின்றிருந்தனர்.
அப்போது ஆசிரியர் வீரபாண்டி தலைமை ஆசிரியரிடம் பேசிய விடயங்களை கேட்டதும் வீரபாண்டிக்கு மாணவர்கள் மேல் உள்ள கரிசனத்தைக் உணர்ந்து, வந்த சுவடு தெரியாது வீட்டுக்குத் திரும்பினர்
ஒரு நல்ல ஆசிரியர், பாடத்தை மட்டும் கற்பிப்பதில்லை, வாழ்க்கையையே கற்பிக்கிறார்
#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
#ad
இந்தக் கால இளைஞர்கள்/இளம்பெண்களுக்கு ஏற்றதொரு கதை. முதலில் படிப்பு/முன்னேற்றம்/பின்னரே திருமணம் என்றிருக்க வேண்டும்.