எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இப்போ என்ன செய்யணும் சொல்லு” எரிச்சலுடன் கேட்டான் திவாகர். அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.
‘ஒண்ணு, நான் சொல்றதை கேளு.இல்லையா நீ ஏதாவது தீர்வு கொடு ‘.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் அவள் .
விஷயம் இதுதான்.
கார்த்திக்குக்கு பள்ளியில் இரண்டு வாரம் விடுமுறை ஆரம்பமாகிறது. இவர்கள் இருவரும் அலுவலகம் போகிறவர்கள் .பத்து வயது பையனை தனியாக எப்படி விட்டுப் போவது?
வீட்டில் காலையில் வந்து சமையல் மற்றும் காலை வேண்டிய சிற்றுண்டி செய்து கொடுத்து விட்டு போகும் புவனா சாயந்தரம் தான் மறுபடி வருவாள் .சின்ன சின்ன வேலைகளுக்காக வரும் சங்கீதா காலையில் ஒருமணி நேரம் மறுபடி மாலையில் ஒரு மணி நேரம் வருவாள். இருவருமே எக்ஸ்பிரஸ் வேகத்தில் வேலையை முடித்துக் கொண்டு போய் விடுவார்கள் .
அலுவலகம் செல்வதற்கு முன் வந்து விடுவார்கள். மாலையும் திவாகர் சீக்கிரம் வந்து விடுவான். அதனால் வேலையாட்கள் தனியாக வந்து வேலை செய்ய விட்டதில்லை.. இப்போது கார்த்திக் தனியாக இருக்க வேண்டும். என்ன செய்வது? போன வருடம் மாற்றி மாற்றி வீட்டிலிருந்து வேலை பார்த்து சமாளித்து விட்டார்கள் .இந்த வருடம் அதற்கு வாய்ப்பில்லை. லீவு போடவும் முடியாது .
திவாகரின் அம்மா வந்து இரண்டு வாரம் இருக்க வேண்டும் என்று அவன் சொல்கிறான்.
காவ்யாவுக்கு அது பிடிக்கவில்லை. மாமியார் வந்தால் பல பிரச்சினைகள் வரும். முதல் காரியமாக தன்னுடைய சுதந்திரத்தில் தலையிடுவாள். அதைவிட முக்கியம் திரும்ப போகாவிட்டால் என்ன செய்வது? அடித்தா துரத்த முடியும்?
தனி ராஜ்யம் நடத்திக் கொண்டு இருப்பவளை மாமியார் வருகை எரிச்சலை உண்டாக்கியது.
“இதோ பார்! எனக்கு கார்த்திக் தனியாக இருக்கக் கூடாது. உன் வீட்டிலிருந்து யாராவது வந்து இருப்பார்கள் என்றாலும் சரிதான்”.
அவள் அம்மா அப்படி எளிதில் வந்து இருக்கக் கூடியவள் இல்லை. மகளிர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவள் . அங்கே அனுப்பி வைப்பதும் கஷ்டம்.
அவன் முடிவாக சொன்னான்.
“அம்மா வரதுக்கு சம்மதிச்சுட்டா. இரண்டு வாரம் லீவு முடிஞ்சதும் கண்டிப்பா கொண்டு போய் விட்டு விடுவேன். உனக்குத்தான் எங்க வீட்டு ஆளுங்க யாரையுமே பிடிக்காதே!”
காவ்யாவிடம் பதில் இல்லை.
“இங்கே பாரு! சின்ன பையன் இல்லை என்றாலும் தனியா விடுறதிலே எனக்கு சம்மதம் இல்லை. அவன் லீவு நாட்கள் என்பதால் காலையில் லேட்டாக எழுந்திருப்பான். அவன் இஷ்டம் போல இருப்பான். காலம் இருக்கிற நிலைமையிலே இவன் தனியாக இருப்பது தெரிந்து யாரும் வந்தால் என்ன செய்வது! அவன் சிநேகிதர்கள் வந்தாலும் போட்டது போட்டபடி போய் விடுவார்கள்.”
அவளிடமிருந்து பதில் ஒன்றும் வராமல் போகவே அவனே மீண்டும் தொடர்ந்தான்.
“உன் பையனுக்காக அனுசரித்துப் போ , எனக்காகத்தான் எதுவும் செய்ய மாட்டாய்!”
தீர்மானமாக சொல்லிவிட்டு அவன் எழுந்து போய்விட்டான். வேறு வழியில்லை, ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும்.
இன்றைய சூழலில் பல வீடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கும் பிரச்சினை இது .இருவரும் அலுவலகம் போகும் போது குழந்தைகளை பார்த்துக்கொள்ள வீட்டை கவனிக்க யாரையாவது நியமிக்க வேண்டியிருக்கிறது. உறவு சொந்தம் என்று இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
அவர்களும் கிரியா ஊக்கி என்று சொல்வார்களே ! அது மாதிரி தான்.வேலைக்கெல்லாம் ஆள் இருக்கும்.வேலையாள் வரும் போது கதவு திறந்திருக்க வேண்டுமே.
இன்றைக்கு பல நகரங்களிலும் நாடுகளிலும் குழந்தைகள் வளர்ப்புக்கு பெரியவர்கள் தேவைப்படுகிறது.கிரியா ஊக்கி எந்த செயலிலும் ஈடுபடாது.ஆனால் அது இல்லாமல் அந்த வேலை நடக்காது.அது மாதிரி தான்இதுவும்.
வருடம் ஒரு முறை கோவில், திருவிழா என்று போகும் போது பார்ப்பதோடு சரி.பேரன் , பாசம் என்று இங்கேயே இருந்துவிட்டால் என்ன செய்வது என்று குழம்பினாள் காவ்யா.
எதிர்பார்த்த மாதிரியே மீனாட்சி வந்ததும் பல மாறுதல்கள். கார்த்திக் பாட்டியுடன் ஒட்டிக் கொண்டான். தினமும் இவர்கள் வரும் போது பாட்டியும் பேரனும் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லையானால் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
அலைபேசியில் செலவழிக்கும் நேரம் குறைந்தது. வீட்டிலும் சிலசீர்திருத்தங்கள். ஏனோதானோ என்று வேலை செய்து விட்டுப் போகும் சங்கீதா ஒழுங்காக சுத்தம் செய்தாள். சமையலும் மெருகு கூடியது .மாமியார் பக்கத்திலிருந்து மேற்பார்வை பார்க்கிறார் என்பதும் தெரிந்தது.
திவாகர் எப்போதும் போல் இயல்பாகவே இருந்தான். அவளால்தான் அந்த சூழலில் ஒன்ற முடியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அன்று கார்த்திக்கை கூப்பிட்டாள் அவள்.
“என்னதான்டா பேசுவீங்க பாட்டியும் பேரனும் நாள் முழுவதும்! ” அவனிடம் துருவினாள் அவள்.
‘நிறைய ‘ கை காட்டினான் அவன்.
“எது கேட்டாலும் பாட்டி பதில் சொல்லுவாங்க! அதான் எனக்கு தெரியாதது எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.”
“அப்ப நான் உனக்கு எதுவும் சொல்லித் தரலையா!”
“சரி , இப்போ ஒண்ணு கேட்கிறேன் ! பதில் சொல்லு.”
“கோவிலுக்குப் போய் சாமி கும்பிடறது எதுக்காக? நாம் கேட்பதெல்லாம் உடனே கிடைப்பதில்லையே ஏன்!”
இதற்கு அவள் என்ன பதில் சொல்ல முடியும்? மிக மிக பெரிய சான்றோர்களாலேயே பதில் சொல்லமுடியாத இதற்கு அவள் என்ன சொல்ல முடியும்? அதுவும் இந்த சின்ன பையனுக்கு புரியும் விதமாக!
அவளால் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை.வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவும் மனமில்லை.
‘சரிடா! உங்க பாட்டி இதுக்கு என்ன சொன்னாங்க?’
‘சொல்லவா! ‘
பெரிய விஷயம் சொல்லப் போவதைப் போல் அவன் கண்கள் மின்னின.
“இப்போ நீ நாலாவது ஃப்ளோரில் இருக்கிறேன்னு வச்சுக்க.கீழே போகணும்னா என்ன செய்வே!.”
‘இது என்ன பெரிய விஷயம்? லிஃப்ட் அழுத்தினா தானா வரப் போகுது.’
“அதுதான்! ஒண்ணு நீ அங்கே போகணும் இல்லேன்னா அது இங்கே வரணும். கோவிலுக்குப் போறதும் அது மாதிரி தான். நிறைய பக்தி இருந்தா சாமி தானே வரும். பாஞ்சாலிக்கும் முதலைக்கும் வந்த மாதிரி. இல்லைன்னா அது இருக்கிற இடத்துக்கு நாம் போகணும் .அதான் நம்ம எல்லாம் கோவில் போறோம்.”
அவள் அயர்ந்து போனாள்.
இப்படி ஒரு விளக்கம் அவள் எதிர்பார்க்கவே இல்லை.
“லிஃப்ட் சரியான இடத்துக்கு வரணும்னா சரியா இயங்கணும் .அது மாதிரி நம்ம நடந்துக்கறதை பொறுத்து ! “
‘அப்ப அப்படி இப்போ யாருக்கும் உங்க சாமி காட்சி கொடுத்திருக்கா?’
அதற்கும் அவன் பதில் வைத்திருந்தான்.
“சாமி நேராதான் வரணுமா! நிறைய பேர் மனசுலே உதவி செய்ய சொல்லி தூண்டுதல் கொடுத்துடுவாங்க.”
பிரமிப்புடன் மாமியாரைப் பார்த்தாள் அவள்.
‘உங்களுக்கு இவ்வளவு தெரியுமா?’ என்ற கேள்வி அவள் பார்வையில் மின்னியது. அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தமீனாட்சி மெல்ல சிரித்தாள்.
“என்ன உன் பிரச்சினை! உனக்குத்தான் எல்லாம் தெரியும். மத்தவங்களுக்கு அதுவும் குறிப்பாக வயதானவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது அப்படித்தானே!.”
உங்க அளவுக்கு நாங்க படிக்கலை. பட்டப்படிப்பு முடிக்கவே சம்மதம் கிடைக்காது .அப்படியே படிச்சு முடிச்சாலும் என்ன உனக்கு தெரியும்! படிச்ச திமிரா என்று மட்டம் தட்டுவார்கள். ஆனா இப்போ படிச்சுட்டோம்னு பார்க்கிறவங்களை எல்லாம் மட்டம் தட்டுறீங்க.
உங்களுக்கு எல்லாம் தெரியும் அப்படின்னு ஒரு ஈகோ. அனுபவத்துக்கு மதிப்பு கொடுக்க மாட்டீங்க. திறமைக்கு மதிப்பு கொடுக்க மாட்டீங்க.நாங்க ஒதுங்கிப் போனாலும் விட மாட்டேங்கறீங்க!”
காவ்யாவால் பதில் சொல்லமுடியவில்லை.
மீனாட்சியே மீண்டும் தொடர்ந்தாள்.
“எங்களை மதிக்க வேண்டும் பாராட்டவேண்டும் என்றெல்லாம் நாங்க யாருமே எதிர்பார்க்கலை. ஆனால் புரிஞ்சுக்க கூட மாட்டேன்னு பிடிவாதமா இருக்கிறது தான் ஏத்துக்க முடியலை. சரி, உங்க பிள்ளைங்களையாவது சரியா வளர்க்கிறீங்களான்னா அதுவும் இல்லை..”
“சரியா உழுது பண்படுத்தப்பட்ட நிலத்திலே என்ன போட்டாலும் விளையும் . அது மாதிரிதான் இளம் வயசு. நல்லகுணங்களை பழக்க வழக்கங்களை கத்து கொடுக்கிறீங்களா !.”
“ஒழுக்கம் நேர்மை உதவும் குணம் சமுதாய பார்வை எல்லாமே இந்த வயசில விதைக்கிறது தான். ஆனா இந்த வயசிலே இந்த வயலிலே களைங்க தானே முளைக்குது! என் பையனை எந்த குறையும் சொல்லமுடியாத அளவுக்கு தங்க கட்டியா வளர்த்தேன். நீ அவனையே எவ்வளவு தூரம் புரிஞ்சு வச்சிருக்கே! உனக்கு அனுசரித்துப் போறதால சர்வ சாதாரணமாக எடை போட்டு வைச்சுருக்கே!”
இவ்வளவு தூரம் பேசுவாள் மாமியார் என்று காவ்யா எதிர்பார்க்கவில்லை. தடுமாறிப் போனாள் அவள்.
“இப்பவும் நான் எனக்காகவோ இல்லை என் பையனுக்காகவோ உங்கிட்ட பேசலை! இந்த இளம் தளிர் இருக்கு பாரு , அதுக்காகத்தான் பேச வேண்டியதாயிற்று!”
சொல்லி முடித்த மீனாட்சி , இனி உன் பாடு , யோசித்துக்கொள் என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து தன் அறையை நோக்கி நடந்தாள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings