இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. கயல்விழிக்கு கணிதப் பாடம் மிகவும் பிடிக்கும். கணித வகுப்பில் மட்டும் அவளின் முழுக்கவனமும் கணித ஆசிரியர் சொல்வதை கேட்பதிலே இருக்கும். 11ம் வகுப்பு கணிதம் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். நன்கு எழுதி, எழுதி பார்த்து முயற்சி செய்தால் தான் தேர்வில் நன்றாக எழுத முடியும்.
எங்களுக்கு திருப்புதல் தேர்வு ஆரம்பித்தது. திருப்புதல் தேர்வில் அந்த வருடத்தில் படித்த முழு பாடதிட்டங்களும் வந்து விடும். கணிதத்தில் இரண்டு புத்தகம் முழுவதும் படித்தாக வேண்டும்.
எங்கள் கணித ஆசிரியர் திருப்புதல் தேர்வில், 200க்கு 200 மதிப்பெண் யார் பெறுகிறார்களோ, அவர்களுக்கு ஒரு ஹீரோ பேனா பரிசு தருவதாக அறிவித்திருந்தார். நாங்கள் படிக்கும்போது ஹீரோ பேனா என்பது எங்களுக்கு மிகப் பெரிய விஷயம்.
எல்லோரும், முட்டிமோதி படித்து தேர்வையும் எழுதி முடித்து விட்டோம். கயல் மிகவும் சந்தோஷமாக இருந்தாள். எப்படியும் முழு மதிப்பெண் பெற்று விடுவேன் என்று கூறிக் கொண்டு இருந்தாள்.
இரண்டொரு நாள் கழித்து, வினாத் தாள்களை திருத்தி கொண்டு வந்து மேஜையில் வைத்திருந்தார், ஆசிரியர். எல்லோரும் ஆவலோடு மேஜையையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒவ்வொருவராக கூப்பிட்டு வினாத்தாளை கொடுத்தார் கணித ஆசிரியர். யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை என்று வருத்தத்தோடு தெரிவித்தார்.
கயல் தன்னுடைய வினாத்தாளை உருட்டி, உருட்டி பார்த்து கொண்டிருந்தாள். அவளுடைய வினாத்தாளில் எல்லாம் சரியாக இருந்தது. ஒரு பத்து மதிப்பெண் வினாவில் தவறு என்று போட்டு ஐந்து மதிப்பெண் மட்டும் போடப்பட்டிருந்தது.
விரைவாக, வினாத்தாளோடு கணித ஆசிரியரிடம் சென்றாள். ஆசிரியரிடம், “சார் எனக்கு இந்த கணக்கு எப்படி செய்வது என்று தெரியவில்லை கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்” என்று கேட்டாள்.
ஆசிரியர், அவளுடைய வினாத்தாளை வாங்கி அதில் என்ன தவறு என்று பார்த்தார். எல்லாம் சரியாக இருந்தது. நாம் தான் தவறுதலாக மதிப்பெண்ணை குறைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டார். ஆசிரியர் கயலை வெகுவாக பாராட்டினார்.
கயல் கணிதத்தில் 200க்கு 200 முழு மதிப்பெண் பெற்று விட்டாள். ஆசிரியர் கயலுக்கு ஹீரோ பேனாவை பரிசளித்தார். அதை அவள் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துக் கொண்டாள்.
மறுநாள் நான் கயலிடம், “நீ ஏன் ஆசிரியரிடம், நான் சரியாக தான் செய்திருக்கிறேன், நீங்கள் ஏன் மதிப்பெண் போடவில்லை என்று கேட்கவில்லை” என்றேன்.
அதற்கு அவள், “அவர்களுக்கு நிறைய வேலைப்பளு இருக்கும். வீட்டுப் பொறுப்புகளையும் கையாள வேண்டும். வினாத்தாள் திருத்தும்போது ஏதோ நினைப்பில் போட்டிருக்கலாம். நீங்கள் செய்தது தவறு என்று சுட்டிக்காட்ட எனக்கு மனம் வரவில்லை. அதோடு, நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுக்கிறார்கள் ஆசிரியர்கள். அவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள். அவர்களை சிறிதாகக் கூட நாம் காயப்படுத்தக் கூடாது” என்றாள்.
யாரையும் காயப்படுத்த கூடாது என்ற மனம் என்னே ஒரு அறிவு முதிர்ச்சி அவளிடம் இருந்ததைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டு போனேன்.
அவளிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அவள் எனக்கு தோழியாக கிடைத்ததை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன்.
“டிங், டாங், டிங்” என்று அழைப்பு மணி சத்தம் கேட்டு, நினைவுகளிலிருந்து கலைந்தேன். நான் இங்கு சென்னைக்கு மாற்றலாகி, வந்த பின் மணமாகாதவர்கள் தங்குவார்களே, அங்கு தான் தங்கி உள்ளேன். என்னோடு கூட தங்கியிருக்கும் சிவா தான் வந்திருந்தான்.
நாங்கள் மொத்தம் நான்கு பேர் தங்கியிருக்கிறோம். ஒவ்வொருவரும் வேறு, வேறு நேரத்திற்கு வருவர். சாப்பாடு எல்லாம் பெரும்பாலும் வெளியே முடித்துவிட்டு வந்துவிடுவர்.
இரவு நேரம் ஒருவரையொருவர் சந்திக்கலாம். நான் மிகவும் கலகலப்பாக பேசும் ரகம் இல்லாததால், ஹாய், Bye தான் பெரும்பாலும் நாங்கள் பேசுவதாக இருக்கும். சிவா, வரும்போதே களைப்பாக இருந்ததால் ஒரு Bye சொல்லிவிட்டு படுக்க சென்று விட்டான்.
என்னுடைய கைபேசி சிணுங்க எடுத்தேன். என் அம்மா தான் பேசினார்கள்.
“என்னடா, எப்படி இருக்கிற சாப்பிட்டியா?”
“நல்லா இருக்கேன்மா. சாப்பிட்டேன்”
“ஏண்டா, சென்னைக்கு வந்த பிறகு போன் பண்ணவே இல்லை. அம்மாவுக்கு ஒரு போன் போட்டு பேசனும்னு உனக்கு தோணலையா?”
“அம்மா இரவு லேட் ஆகிட்டு, நாளைக்கு பண்ணலாம்னு இருந்தேன்.”
“என்ன இருந்தியோ? இடம் எல்லாம் எப்படி இருக்கு? உனக்கு பழக்கம் ஆகிடுச்சா. நேரத்துக்கு சரியா சாப்பிடுடா”
“சரிம்மா. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நான் என்ன சின்ன பிள்ளையா?”
“சரிடா, சரிடா, கோபம் மட்டும் அப்பா மாதிரி வந்திடும். தினம் ஒரு முறை போன் பண்ணு. உடம்பை பார்த்துக்க. வைக்கிறேன்டா போனை”
“சரிம்மா. Good night”
நாளைக்கு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிக்கணும். இல்லாட்டி பிரச்சினையாகி விடும். மணிக்கணக்கில் தொடர்ந்து கணிப்பொறி (Computer) முன்னால் உட்கார்ந்து இருக்கணும். நான் இந்த வேலையை மனதிற்கு பிடித்தெல்லாம் செய்யவில்லை. வீட்டினரின் கட்டாயத்திற்காக படித்து, சம்பளத்திற்காக வேலை பார்க்கிறேன்.
Photography தான் எனக்கு பிடித்தது. ரசித்து, ரசித்து போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைப்பேன். காலையில் எழுந்து அலுவலகத்திற்கு கிளம்பி, செல்லுமுன் அறிவழகிக்கு போன் செய்து பேசிவிட்டு செல்ல வேண்டும் என்ற நினைப்போடு தூங்கிப் போனேன்.
காலையில் எழுந்து, அலுவலகம் செல்வதற்கு கிளம்பினேன். இரவு வேலை முடிந்து போன் செய்தால் வெகுநேரம் ஆகிவிடும். பெண் பிள்ளைகளுக்கு அந்நேரத்தில் போன் செய்து பேசுவது நல்லதல்ல. எனவே இப்போதே போன் செய்து பேசி விடுவோம் என்று கைபேசியில் அறிவழகியை அழைத்தேன்.
“ஹலோ, யார் பேசுறது. நான் மதி பேசுகிறேன். கயலோட friend. மதியா, அப்படின்னு யாரும் எனக்குத் தெரியாது. கயலும் என்னிடம் ‘மதி’ன்னு யாரையும் சொன்னதில்லையே. சரி உங்களுக்கு என்ன வேணும்”
“கயலைப் பற்றி தெரிஞ்சுக்கணும் அதான்”
“ஹலோ, மிஸ்டர் நீங்க யாருன்னு எனக்கு தெரியல. நான் எப்படி கயலைப் பற்றி சொல்வேன்னு எதிர்பார்க்கிறீங்க”
அறிவழகி, நல்ல மனநிலையில் இல்லை என்று தோன்றியது எனக்கு அலுவலகத்திற்கு செல்ல நேரமாகிக் கொண்டிருந்தது. அதனால், மன்னித்துக் கொள்ளுங்கள். நான் பிறகு பேசுகிறேன் என்று அழைப்பை துண்டித்துவிட்டேன்.
பகல் நேரம், போன் பண்ணியதற்கே இவ்வளவு சூடாக இருக்கிறார் அறிவழகி. நல்ல வேலை, இரவு நேரம் போன் செய்யவில்லை. அவ்வாறு, இரவு நேரம் போன் செய்திருந்தால் போலீஸ் ஸ்டேஷன் வாசலில்தான் நாம் நிற்க வேண்டும் போல.
சரி, சரி வேலைக்கு சென்று விட்டு பிறகு இதை பற்றி யோசிக்கலாம்.
நாள் முழுவதும், நிறைய வேலை இருந்தது. இரவு அறைக்கு வருவதற்கு 10 மணி ஆகிவிட்டது. வரும் வழியிலே சாப்பாடு எல்லாம் முடித்துவிட்டு வந்தேன். நான் வருவதற்கு முன்பே, இன்று சிவா அறையில் இருந்தான். சிவா தான் முதலில் பேசினான்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings