in , ,

இதயமடி நீ எனக்கு (அத்தியாயம் 3) – பு.பிரேமலதா, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கயல்விழி தாமதிக்காமல் ஆசிரியரிடம், “நான்தான், கவனக்குறைவால் கையில் இட்டுக் கொண்டேன்” என்றாள்.  

எனக்கு ‘பக்’ என்று இருந்தது. ஒரு மனம் நல்லவேளை நம்மை மாட்டி விடவில்லை என்று சொல்லியது. மறுமனம் “தவறு செய்தது நீதானே, அதை ஒப்புக் கொள்ளாமல் இவ்வாறு கோழை போல் பதுங்கி நிற்கிறாயே” என்று சொல்லியது.

          ஆசிரியர் “என்ன பிள்ளைமா நீ, இவ்வளவு கவனக்குறைவாகவா செய்வது எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் கவனமாக செய்வதற்கு. காயம் சரியாகிவிடும். ஆனால் தழும்பு மறையாது என்று நினைக்கிறேன்” என்றார்.  

அதன்பிறகு வகுப்பு முடிந்ததும் இடைவேளையில் கயலை சந்தித்து மன்னிப்பு கேட்டேன். என் முகம் வாடி இருந்தது கண்டு, நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறாய், தெரியாமல் தானே நடந்துவிட்டது, வேண்டுமென்றே யாராவது செய்வார்களா என்ன” என்று கேட்டு விட்டு சிரித்தாள்.

          வீட்டிற்கு சென்றதும், வகுப்பில் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தேன். நான் கயல் இடத்தில் இருந்திருந்தால் எப்படி செயல்பட்டு இருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக கயல் போல் சமயோசித அறிவோடு செயல்பட்டு இருந்திருக்க மாட்டேன் என்று தோன்றியது.

          எவ்வளவு நல்ல மனம் படைத்தவளாக இருக்கிறாள். அவளுடைய வலியை கூட பொருட்படுத்தாமல் எனக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறாள். அவளை அன்றிலிருந்து எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

          அவளோடு அதிக நேரம் செலவிட ஆசைப்பட்டேன். என்னோடு இயல்பு நிலையிலிருந்து மாறி நானும் கலகலப்பாக இருக்க முயன்று கொண்டிருந்தேன்.

          திடீரென்று, கைபேசி சிணுங்க நினைவு கலைந்தவனாய், எடுத்து காதில் வைத்தேன். மலர் தான் பேசினாள். ஹாய் மதி, எப்படி இருக்கின்றாய் என்றாள். நன்றாக இருக்கிறேன் என்றேன்.

          நீ கயிலையே மறந்துவிட்டாய் என்னை எல்லாம் எங்கே ஞாபகம் வைத்திருக்கப் போகிறாய், என்றாள். தொடர்ந்து, என்ன விஷயமாக போன் செய்தாய் என்று கேட்டாள்.

          நான் சற்று தயங்கியவனாய், கயலைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான் அழைத்தேன் என்றேன்.

          அப்பாடா, இப்போதாவது அவள் நினைப்பு உனக்கு வந்ததே என்று என்னை சீண்டினாள்.

          “சொல்லு மதி உனக்கு கயலைப் பற்றி என்ன தெரிய வேண்டும்.”

          “கயல் சந்தோஷமாக இல்லை என்று கேள்விப்பட்டேன் அதான்.”

          கயலின் அப்பா ஐந்து வருடத்திற்கு முன் தவறிவிட்டார். அதிலிருந்து அவள் மிகவும் மனமுடைந்து போனாள். அவளின் கலகலப்பு தன்மை குறைய ஆரம்பித்துவிட்டது. பேசுவதையே குறைத்துக்கொண்டாள். நட்பு வட்டாரங்கள் சுருங்கிவிட்டன. இப்போது அவள் என்னோடு தொடர்பில் இல்லை.

   பள்ளிப்படிப்பை நாம் முடித்தபின், கல்லூரி படிப்பிற்கு இதழியல் (Journalism) எடுத்துப் படிக்கப் போவதாக கூறிக் கொண்டிருந்தாள். Commerce group-ல் நாம் படிக்கும் போது படித்த அறிவழகி கயலோடு, கல்லூரியில் ஒன்றாக Journalism எடுத்துப் படித்தாள். அறிவழகி எண்ணை உனக்கு அனுப்புகிறேன். தெரியாத நபர்களுடன் பேச அவள் கொஞ்சம் சங்கடப்படுவாள். இருப்பினும் உன்னை அறிமுகப்படுத்திவிட்டு பேசிப்பார் என்றாள்.

          நான் மலருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்தேன்.

          தந்தையின் இழப்பு கயலுக்கு எவ்வளவு துயரமாக இருந்திருக்கும். அவளுக்கு ஆறுதல் சொல்ல கூட நான் அந்நேரத்தில் இல்லையே என்று என்னை நானே நொந்து கொண்டேன்.     

          பள்ளியில் படிக்கும்போது இடைவேளை நேரத்தில் அவளைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.  கலகலவென்று எதையாவது பேசி, புன்னகையோடு வலம் வருவாள்.

          நாங்கள் படித்த பள்ளியில், தினமும் மாலை (study time) படிக்கும் நேரம் என்று 4 மணியிலிருந்து 5 மணி வரை இருக்கும். ஒவ்வொரு நாளும், ஒரு ஆசிரியர் வந்து கவனித்துக் கொள்வார்.  சந்தேகம் எதுவும் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பள்ளி ஆண்டுவிழாவிற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததால் அன்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் யாரும் study time கவனிக்க வரவில்லை.

          கயலைச் சுற்றி நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவள் கையை ஆட்டி, ஆட்டி உடல் மொழிகளோடு, உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி ஏதோ கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் சற்று தொலைவில் உட்கார்ந்து கொண்டேன். படிப்பதைப் போன்று புத்தகத்தை மடியில் விரித்து வைத்துக் கொண்டேன். படிப்பின் மேல் கவனம் செல்லவில்லை. என் முழுக் கவனமும், கயலின் பேச்சின்மீதே இருந்தது.

          எங்கள் கிராமத்தில் வேப்பூர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் (NSS Camp) என்.எஸ்.எஸ்.முகாம் போட்டு இருக்கிறார்கள். பத்து நாட்கள் முகாம் என்று நினைக்கிறேன். ஏழு நாள்களாக ஊரைச் சுத்தப்படுத்துதல், சிறு குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தல், முதியவர்களுக்கு கையெழுத்து போட சொல்லிக் கொடுத்தல் என்று ஒரே சமூக சேவை தான்.

நேற்று மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் கொடுத்தார்கள். அதை நான் பார்க்க சென்றிருந்தேன். ‘நவீன இராமாயணம்’ என்று ஒரு நாடகம் நடித்தார்கள். மிகவும் நன்றாக இருந்தது. அதுவும், அதில் இராமனாக நடித்த பையன், அழகாக இருந்தான்.  

நடிப்பில் மட்டுமல்ல, வீரத்திலும் அவன் சிறந்தவன் என்று நாடகத்திலே நிரூபித்துவிட்டான்.  என்ன நடந்தது தெரியுமா? நாடகத்தில் ஒரு காட்சியில் அனுமனின் வாலில் தீ வைத்து விடுவார்கள். அனுமனாக நடித்தவர் மேடை முழுவதும் சுற்றி வருவார். உண்மையாகவே அனுமனின் வாலில் தீ வைத்து விட்டார்கள்.

அனுமான் மேடையை சுற்றி வரும்போது, திடீரென்று வால் கழன்று நெருப்போடு, மேடையின் கீழே இருந்த குழந்தைகளின் பக்கத்தில் விழுந்துவிட்டது.

          குழந்தைகள் கூச்சலிட, பெரியவர்கள் நிலைத்து நிற்க, மேடையில் இருந்து குதித்தான் நம் ஹீரோ. வேகமாக நெருப்பு பற்றியிருந்த வாலை எடுத்து கைகளாலே அணைத்து விட்டான். பாவம் கையில் தான் சிறிது காயமாகிவிட்டது என்று உணர்ச்சி பொங்க சொல்லி முடித்தாள் கயல்.

          இதை கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவன்மேல் சிறிது பொறாமை ஏற்பட்டது. கயல் அவனைப் பற்றி ஏன் இவ்வளவு ரசித்து, ரசித்து பேசி கொண்டிருக்கிறாள் என்று அவள்மேல் கோபம் கோபமாக வந்தது.

          இருக்கட்டும். நாமும் ஏதாவது சிறப்பாக செய்யலாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

          ஒரு மாதத்திற்கு பிறகு, வேப்பூர் அரசுப் பள்ளியில் நடக்கவிருந்த விளையாட்டு விழாவிற்கு எங்கள் பள்ளிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். நாங்கள் விளையாட்டுகளில் சேர எங்கள் பெயரையும் பதிவு செய்து கொண்டோம்.

          நான் கயலிடம் கிண்டலாக, ஏன் கயல், உன் ஹீரோவை பார்க்க வேப்பூர் பள்ளிக்கு வரவில்லையா? என்றேன். கயல் சிரித்துக் கொண்டே

அப்போ, அன்றைக்கு, நல்ல பையன் போல் புத்தகத்தை பார்த்துக்கிட்டு நான் சொன்ன கதையை தான் கேட்டுக்கிட்டு இருந்திருக்க.

          நானே அவனை மறந்துவிட்டேன். பரவாயில்லை. நீ ஞாபகத்தில் வச்சுருக்க. நான் அன்னைக்கு ஏதோ ஜாலியா கதை சொல்லிக்கிட்டு இருந்தேன். மற்றபடி அவன் யாரோ? எவரோ எனக்கு எப்படி தெரியும். இப்போ வரைக்கும் அவனை நினைச்சிட்டிருந்தா, அவன் மேல காதல் வந்துராதா எனக்கு என்று சொல்லி சிரித்தாள். 

          இந்த வயசில எல்லாம் பிடித்த மாதிரி தான் தோணும். எது தேவையோ அதில் தான் அதிகமாக கவனம் செலுத்தனும். இப்போ நமக்கு படிப்பு தான் முக்கியம், என்று என் அப்பா எப்பவும் சொல்லுவாங்க. நீயும் அதை பின்பற்று சரியா என்று எனக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றாள்.

          கலகலப்பாக பேசுவதை வைத்து, அவளை நான் தவறுதலாக எடை போட்டுவிட்டேன்.

          அவள் தன் தந்தை மேல் வைத்திருக்கும் அன்பு, மரியாதை எல்லாம் என்னை கவர்ந்தது.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இதயமடி நீ எனக்கு (அத்தியாயம் 2) – பு.பிரேமலதா, சென்னை

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை