in

எதுகை மோனை (சிறுகதை) – ✍ A.H.யாசிர் அரபாத் ஹசனி

எதுகை மோனை

டுநிசி இரவு. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது.  சுவர் கடிகாரத்தின் முள் அசையும் சப்தம் கூட பிசிறு தட்டாமல் அப்படியே கேட்டது. 

அன்பு, அவனது மனைவி, மற்றும் ஆறு மாத குழந்தை அந்த  அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம்,  சமையலறையில் பெரும் சப்தம் கேட்டது

அந்த சப்தம் கேட்டுப் பதற்றமாக எழுந்தாள் அன்பின் மனைவி. அவளை பயம் தொற்றிக் கொள்ள, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அன்பை எழுப்பினாள்

அவனோ, “போடி” என அவள் கூறியதை முழுதாய் காதில் கூட வாங்காமல், எச்சில் வழிந்த உதட்டைத் துடைத்தவாறு தூக்கத்தைத் தொடர்ந்தான்

வேறு வழியின்றி தானே எழுந்து, ஜீரோ வால்ட் பல்பின் மெல்லிய வெளிச்சத்தில் மெதுவாய் நடந்தாள் அன்பின் மனைவி

கடிகார முட்கள் மட்டும் தங்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. பயத்தில் கடவுளைத் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.

மெதுவாக சமையலறைக் கதவைத் திறந்து பார்த்தாள். ஜன்னல் வழியாகப் பூனை ‘மியாவ்’ என ஈனஸ்வரத்தில் சப்தமிட்டு வெளியேறியது தெரிந்தது 

குழந்தைக்கு வைத்திருந்த பால் பவ்டர் மற்றும் மசாலா சாமான்கள் அனைத்தும் சமையலறை முழுக்க சிதறிக் கிடந்தது

‘சனியன் புடிச்சப் பூனை,  காலைல  குழந்தைக்குப் பால் கொடுக்க பால் பவ்டர் வேணுமே, என்ன செய்ய?’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டே, சிதறிய டப்பாக்களை ஒன்று சேர்த்தாள்

பெட்ரூமில் தூங்கும் கணவனை உலுக்கி எழுப்ப, முணங்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தான் அன்பு. நடந்ததை விபரமாக அவனிடம் எடுத்துக் கூற, அவன்  பங்கிற்கு அவனும் பூனையைத் திட்டித் தீர்த்தான்

“சரி அந்த ஃபோனை எடு,  பால் பவுடர ஆன்லைன்ல ஆர்டர் செய்றேன்” என்றான். சிறிய பொருளாக இருந்தாலும் ஆன்லைனில்  ஆர்டர் செய்வது அன்பின் வழக்கம், ஆர்டர் செய்துவிட்டு இவரும் தூங்கி விட்டார்கள்

அன்பு வசிக்கும் வீட்டின் வாசலில் மளிகைக் கடை நடத்தும் பாய், கடைத் திறக்கும் சப்தம் அவர்களை எழுப்பியது

சிறிது நேரம் கழித்து வாடகை பணம் கொடுக்க அன்பின் வீட்டுக்குள் நுழைந்தார் பாய். கையில் பேக்குடன் ஒரு வாலிபனும் உள்ளே வந்தான். பார்க்க படித்தவன் போல் இருந்தான். ஆன்லைன் நிறுவனத்தின் ஊழியன்  அவன் அவன் என்பது, அவன் அணிந்திருந்த டீசர்ட் கூறியது

பாய் வாடகை பணம் நீட்டவும், அந்த வாலிபன் பால் பவுடரை நீட்டவும் இரண்டும் ஒரு சேர நடந்தது. அன்பின் வழக்கம் பாய்’க்கு தெரியும்.  ஆனால் மளிகைக் கடை பாயும், ஆன்லைன் பாயும் சந்திப்பது சந்திப்பு இதுவே முதல் முறை

‘அன்பு வூட்ல தான வாடகைக்கு கடை நடத்துறோம். நம்மகிட்ட சாமா வாங்காம வெளியாளுங்ககிட்ட வாங்குறாரே? இது நல்லாவா இருக்கு?’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டு கடைக்குள் சென்றார் பாய் 

அந்த பகுதி மக்களுக்கு பாய் கடை தான்  சூப்பர் மார்க்கெட். அனைத்து பொருட்களும் வைத்திருந்தார்

பொழுது நன்கு புலர, பொருட்கள் வாங்க மக்கள் வரத் தொடங்கினர். வேலையே இல்லாமல் பேப்பர் படிக்கும் பஷீரும், முனுசாமியும் வழக்கம் போல் வந்து, பாய் கடையில்  நாளிதழைப் பகிர்ந்துப் படிக்கத் தொடங்கினார்கள்

நான்காம் பக்கத்தின் ஐந்தாம் பத்தியில், சீனாவில் கொரோனா பரவும் செய்திகளை இருவரும் ஒரு சேரப் படிக்க, “அப்படின்னா  என்ன முன்னுசாமி” எனக் கேட்டார் பாய்

‘அதுவா பாய், ஏதோ கொரோனாவாம். அது வந்தவுடனே மனுசனுக எல்லாம் செத்துடுவாங்களாம். உலகம் பூரா பரவி வருதாம்”என்றார்

“யா அல்லாஹ்!  நீதான் மக்களை காப்பாத்தணும்” என இறைவனை வேண்டிக் கொண்டார் பாய்

பக்கத்து ஊரில் பணிபுரியும் அன்பு, தினமும் வேலையிலிருந்து திரும்பும் போது வேண்டிய மளிகைப் பொருட்களை வாங்கி வருவான்.  

நாட்கள் மேகங்களாய் கலைந்தன. கொரோனாவின் தாக்கம் நாட்டில் கடுமையானது. அரசு, மக்களைப் பாதுகாக்கும் முறைகளைப் பின்பற்றத் தொடங்கியது.  கொடிய நோயின் பரவல் கட்டுக்கடங்காமல் போனது 

அனைத்து மத ஆலயங்கள், திருமண மண்டபங்கள் அரசால் மூடப்பட்டன. மக்கள் கூடும் இடங்களில் சட்டங்கள் கடுமையாயின. நோயின் வீரியம் குறையவில்லை. ஆதலால், முழு லாக்டவுன் என அறிவித்தது அரசு

போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட, மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். பயம் மட்டுமே மக்களை ஆண்டது

ஒரு நாள் காலை குழந்தைக்குப் பால் கரைக்க அன்பின் மனைவி சமையலறை சென்ற போது, அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நல்ல தூக்கத்திலிருந்த அன்பை எழுப்பிக் அழைத்துச் சென்றாள்

‘இங்க பாருங்க, அந்த பூனை எல்லா சாமானையும் கீழ தள்ளிட்டு போயிருக்கு. அப்பவே அந்த சன்னல் கதவைச் சரி செய்ய சொன்னேன், நீங்க செய்யவே இல்ல. இப்ப என்ன செய்ய? குழந்தை எந்திரிக்கற நேரம் வேற ஆகுது” என புலம்பினாள்

“ஏய் சும்மா பொலம்பாத இரு” என்றவன், கைப்பேசியை எடுத்து இணையத்தில் பொருட்கள் வேண்டி விண்ணப்பம் அனுப்பினான். ஆனால், முழு அடைப்பு காரணமாய், “டெலிவரி கிடையாது” என பதில் தந்தது அந்த நிறுவனம்

அதைக் கேட்டதும் விழி பிதுங்கி போனான் அன்பு. குழந்தை எழுந்து அழத் தொடங்க, செய்வதறியாமல் இருவரும் தவித்தனர்  

நோய் தொற்று பயம், அக்கம் பக்கமுள்ள வீடுகளுக்கு செல்லத் தடுத்தது.குழந்தையின் அழுகையை நிறு‌த்தும் வழி தெரியவில்லை

“என்ன செய்ய, டெலிவரி இல்லேங்குறான்” என எரிச்சலாய் கத்தினான் அன்பு 

“நீங்க பாய்க்கு கால் செய்யுங்க, அவர் வந்து எடுத்துக் கொடுப்பார்” என்றாள் அவள் 

“எப்படி கேக்கறது? அவர் நம்ம வீட்ல தான்  கடை வச்சிருக்காரு. இதுவரைக்கும் ஒருநாள் கூட சாமான் வாங்கல, கேக்கறதுக்கு சங்கடமா இருக்கு. அவர் கண்ணு முன்னாடியே ஆன்லைனில் வாங்கினோம், எந்த முகத்தை வச்சிகிட்டு அவர்கிட்ட கேட்பேன்” என சோர்வுடன் அமர்ந்தான் 

“அதெல்லாம் பிரச்சனை இல்ல, ஆபத்துக்கு பாவமில்ல, பாய்கிட்ட நானே பேசுறேன்” என அழைத்து விவரம் கூறினாள் 

நிலைமையைப் புரிந்துக் கொண்ட பாய், “பதறாம இரும்மா, மக்க எப்படியும் சாமான் கேப்பாங்கனு எல்லா சாமானையும் வூட்ல தான் வச்சிருக்கேன். நான் கொண்டு வரேன்” என அழைப்பை துண்டித்தார் 

சொன்னது போல் சற்று நேரத்தில், தேவையான அனைத்து சாமானையும் கொண்டு வந்து கொடுத்தார்

“நல்லா இருக்கியா தம்பி?” என  பாய் அன்பிடம் நலம் விசாரிக்க, தலை குனிந்தான் 

‘ஒரு நாளைக்கு பத்து முறை ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும், அவசரமான காலக் கட்டங்களில் அருகில் இருப்பவன் தான் உதவி  செய்வான்’  என்பதை உணர்ந்தான் அன்பு 

அக்கம் பக்கம் பார்க்காமல், தன் பார்வை தூரமாய் போனதை தவறென்று உணர்ந்தான். உடனே, கைப்பேசியில் இருந்த ஆன்லைன் ஆப்பை டெலிட் செய்தான் 

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

#ad

      

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

ஆழியின் காதலி ❤ (பகுதி 14) -✍ விபா விஷா

இளமை எனும் பூங்காற்று (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர்