in

டாக்டர். ஊசீஸ்வரனும், ஊர்வசியும் (சிறுகதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா

டாக்டர். ஊசீஸ்வரனும், ஊர்வசியும் (சிறுகதை)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

நான் தான் டாக்டர் ஊசீஸ்வரன்…!

தொட்டதெற்கெல்லம் “ஊசி போடுங்க! ஊசி போடுங்க!” என ஊசிக்காகவே உவகையுறும், பாமரமக்களின் விருப்பம் நிறைவேற்ற, “எல்லோர்க்கும் ஊசி” என பொதுவுடமை நல்வாழ்வு வைத்தியராக நான் மாறியதன் பலனாய்… மக்கள் எனக்கு அளித்த பட்டம்தான் ‘ஊசீஸ்வரன்’

ஆனால் என் இயற்பெயரோ காசீஸ்வரன் ..!

எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று, திரிசூலம் பல்லாவரம் இடையே ‘அன்னம்பேடு’ எனும் ஒரு குக்கிராமத்தில் என் மருத்துவத் தொழிலை தொடங்கினேன்! (1980களில், அவை பொட்டல் காடுகளாய் பரிமளித்த பொன்னான காலம்)

என்னை பற்றி சிலபல வரிகள்… மிகவும் பயந்தாங்கொள்ளி, எந்த வம்பு தும்புக்கும் போகாம; நாம உண்டு நம்ம வேல உண்டு என்று இருப்பவன்…!!

சிறுவயதில் தந்தையை இழந்த நான் அவர் விருப்பப்படி டாக்டர் ஆக… பல துன்ப துயரங்கள் தாங்கி இன்று கடவுள் அருளால் கஷ்டப்பட்டு படித்து அவர் கனவை நிறைவேற்றியதில் சந்தோஷிப்பவன்! 

கல்லூரியில் பல “பளபள” மாணவிகளை யாருக்கும் தெரியாமல் சைட் அடித்ததோடு சரி.. மற்றபடி , என்னை சினேகிதர்கள் “எம்.ஜி.ஆர்” என்று அழைத்து கிண்டலடிப்பதுமுண்டு!

 (புரட்சி தலைவரின் பரம ரசிகனான நான், டைட்டாக கலர் கலர்  சட்டையும், வலது கையில் வாட்ச்சும் கட்டுவதால் இந்த கேலி கிண்டல்)

அதை நினைத்து பெரும்பாலும் பெருமைப்படுவதும், அவர்கள் கிண்டல் அதிகமானால், தாங்கமுடியாமல் சிற்சில சமயங்களில் சிரமப்படுவதும் உண்டு!

சரி! சரி! என் சுய புராணத்தை இத்தோடு நிறுத்தி கொண்டு… கதைக்கு வருவோமா…?

அப்பா தன் கடைசிகாலத்தில் என்னிடம் ஒப்படைத்த பழைய டி.வீ.எஸ். 50யை, ஓவர் ஆயிலிங் செய்து, ஒப்பேற்றி , தினமும், திரிசூலம் மலைக்கு 10 கீ.மீ உள்ளே, சவுக்குதோப்பு பாதையில், கல்குவாரி வெடிசத்தம்  கேட்டுக் கொண்டே உயிரை ஹான்ட்பர்க்கில் பிடித்த வண்ணம் என் தொழில்கூடத்திற்கு (அதாவது கிளினிக்) செல்வேன்.

ஜமீன் பல்லாவரம் வழியே ஒரு நல்ல பாதுகாப்பான பாதையும் உண்டு, ஆனால் அது முன்னதை விட இரு மடங்கு அதிக தூரம் என்பதால், பெட்ரோல் செலவை மிச்சம் பிடிக்க, முதல் பாதையை தேர்ந்தெடுத்தேன்.

நோயாளிகளை நான் பார்க்கும் நேரம்,  தினமும் காலை 9மணி முதல் இரவு 9மணி வரை. மதிய இடைவேளை என்று எதுவும் கிடையாது. ஞாயிறு விடுமுறையும் கிடையாது.

என் அருமை நண்பன் ஒருவன், “அங்கு பிராக்டீஸ் போட்டால், பணம் கொட்டோ கொட்டுண்ணு கொட்டும்” என  புரடா விட்டதை நம்பி அங்கு டேரா போட்டேன்!..

ஆனாலும் பரவாயில்ல.. ஓரளவுக்கு பேஷண்ட்டுகள் வரவே செய்தனர்.

தினமும் போகும் போது எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை! (என் வீடு பல்லாவரம் தாண்டி பம்மலில் இருந்தது). ஆனால் இரவு வீடு திரும்ப மணி ஒன்பதை தாண்டுவதால், சவுக்கு தோப்பை தாண்டும் போது மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எரியும் (சில நேரங்களில் எரியாத) தெருவிளக்குகளால் இருள் கவ்வி ஒரு அமானுஷ்ய அமைதி நிலவும்.

போதாதகுறைக்கு, சற்று தொலைவில் ஒரு சுடுகாடு வேறு இருப்பதால், சிற்சில சமயங்களில் பிணம் எரியும் ஜுவாலையும் நாற்றமும் அனுபவித்ததுண்டு… !

அந்த அபாய பாதை, சுமார் ஒரு 5கிமீ தூரமே என்பதால், என் வண்டிக்கு “த்ராட்டில்” கொடுத்து அதிகபட்ச வேகமான.. மணிக்கு 25கிமீ, என்ற “அசுர?” வேகத்தில் அதை கடக்க முயல்வேன்…

ஒருநாள் இரவு 9மணி வரை பொறுமையாய் பேஷண்டுகளின் வருகைக்காக காத்திருக்க, என் கிளினிக் பெண், “சார்! இனிமே கேஸ் எல்லாம் வராது சார்!” என பொறுமை இழந்து கூற, அவள் அவசரம் கருதி நான் கிளம்ப எத்தனித்தபோது…

ஒரு “அப்சரஸ்”… இல்லை! இல்லை! அதைவிட அழகான இளம்பெண் ஒருத்தி, “சார்! வயித்துவலி தாங்க முடியல சார். ஏதாவது பண்ணுங்க சார்” என வலயால் துடித்தபடி கெஞ்ச, கிளினிக் பெண் முகம் சுளிக்க…

இனி அவள் தாங்க மாட்டாள் என்பதால், “நீ போம்மா நான் பாத்துக்கறேன்” என அவளை அனுப்பிவிட்டு… அந்த பெண்ணுக்கு ஊசி மருந்து கொடுத்து, சொஸ்தமாக்கி..  கிளம்பும்போது… மணி பத்தை தாண்டியிருந்தது.

ஆனால் அவள், “இப்போ கொஞ்சம் பரவாயில்லை சார்.. நீங்க போகும் வழியில் திரிசூலம் மெயின் ரோட்டில் என்னை கொஞ்சம் இறக்கி விட்டுடுங்க சார்! எனக்கு தனியா போக பயம்மா இருக்கு சார்!” என வார்த்தைக்கு வார்த்தை “சார்” போட்டு கெஞ்சி கூத்தாட…

“அம்மா! நா உன்ன இதுவரைககும் இங்க பார்த்ததே இல்லையே.. நீ இந்த ஊர்க்காரி மாரி தெரியல்லையே?” என நான் சந்தேகத்துடன் கேட்க

“இல்ல சார்! இங்க ஒரு வேலையா வந்தேன் சார்.. வயித்து வலி வரவே, கடைசி பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்!” என மேலும் மேலும் கெஞ்சினாள்.

எனக்கு சந்தேகம் அதிகரிக்க, இவளை எப்டி கழட்டி விடுவது என யோசிப்பதற்குள் அவள், “சார் என்ன நம்புங்க சார்… என் பேரு ஊர்வசி. நா! பி.ஏ. படிச்சிர்க்கேன் சார். பிளீஸ் பிளீஸ்” என விடாமல் கெஞ்ச, அவள் மேல் பரிதாபப்பட்டு… சரி என ஒப்புக்கொண்டு அவளை பின் சீட்டில் அமர வைத்து கிளம்பினேன்.

‘இவள் என்னை ஏதாவது சிக்கலில் மாட்டி விடுவாளோ?’ என மீண்டும் அவளை பற்றி எண்ணியபடியே, அச்சத்துடன் வண்டியை ஓட்ட, வண்டி  அதன் சாதாரண வேகத்தில் கூட போகாமல் மெல்ல நகர்ந்ததை கண்டு அவள், “என்ன சார் வண்டி ரிப்பேரா?” என கலகல என்று சிரித்த படி கிண்டலாய் கேட்க

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை.. கம்முனு வாய மூடிட்டு பேசாம வாம்மா” என்று கடுப்புடன் கூறியபடி ஓட்டினேன்.

வண்டி சவுக்குத்தோப்புக்குள் நுழைந்த அடுத்த நொடி… தெருவிளக்குகள் அனைத்தும் அணைந்து ஒரே கும்மிருட்டு.

வண்டியின் மங்கலான ‘ஹெட் லைட்’ ஒளியில் நான் அச்சத்துடன் செல்ல, அவள் என் தோளை இருக பற்றியபடி, “சார்! பயப்படாதீங்க! நா இருக்கேன்! யாரும் உங்கள ஒண்ணும் பண்ண விடமாட்டேன்!” என்று ஒரு வித்தியாசமான உரத்த சிரிப்புடன் கூறினாள்.

அதை கேட்ட எனக்கு ஏனோ பகீர் என்றது.

அந்த இரவின் தனிமையில், அவள் காட்டிய நெருக்கமும், ஜாதிப்பூவின் வாசமும் என்னை ஏதேதோ செய்ய, நான் சுதாரித்துக் கொண்டு, “ஏம்மா இப்டி பலமா அழுத்தனா நான் எப்டி வண்டி ஓற்றது?” என கண்டிப்புடன் கூற நினைத்தும், சொற்கள் ஏனோ குழைந்தது.

“நான் எங்க சார் அழுத்தறேன்? உங்கள பூப்போல மென்மையாத் தானே சார் பிடிச்சிருக்கேன்!” என கொஞ்சலான குரலில் கூற, அவள் பிடி மேலும் இறுகி, அவள் என்னுடன் நெருங்குவது போன்ற உணர்வு என்னுள் ஏற்பட்டபோது, நாங்கள் அந்த மயானத்தை நெருங்கி கொண்டிருந்தோம்.

இன்னைக்கீன்னு பார்த்து.. அங்கு ஒரு பிணம் வேறு தீ ஜவாலையுடன், துர்நாற்றத்துடன் எரிந்து கொண்டிருந்தது ! 

அதை கண்டு  நான் மேலும் மிரண்டு போக, அவள், “சார் சார் கொஞ்சம் வண்டிய நிறுத்துங்களேன்!.. எனக்கு, இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிக்கணும்!” என்று கூற, நான் வண்டியை சட்டென தயக்கத்துடன் நிறுத்தினேன்.

அவள் டக்கென்று குதித்து இறங்கி, அந்த ‘எரியும் பிணத்தை’ நோக்கி திபு திபு வென  பேய்த்தனமான வேகத்துடன்.. எனக்கு டாட்டா  காட்டிக் கொண்டே, “ரொம்ப தாங்ஸ் சார்!, நீங்க ஓஹோன்னு ரொம்ப நல்லா வருவீங்க சார்!” என்று ஏதோ அசரீரி போல கூறியபடி, தலைதெறிக்க எரிகின்ற பிணத்தை நோக்கி ஓடினாள்.

அதைக் கண்டு அரண்டுபோய் பயத்தால் என் இரத்தம் உறைய, முடிந்த அளவுக்கு “த்றாட்டில்” கொடுத்து வண்டியை உசுப்பினேன்.

என்ன ஆச்சர்யம் வண்டியின் ஸ்பீடாமீட்டர் 80தை தாண்ட, வண்டி பறந்தது..! எப்படி இவ்வளவு வேகமாக வண்டி ஓடுது? என நான் பிரம்மிக்க, ஒரிரு நிமிடங்களில் திரிசூலம் இரயில் நிலையம் ஓட்டிய “ஹைவேசை” அடைந்து ஒளி வெள்ளத்தில் புகுந்தும்கூட, என் பயமும் பதட்டமும் படபடப்பும் எள்ளளவும் அடங்கிய பாடில்லை. 

மெல்ல ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தி, பன்னீர் சோடா ஒன்றை  வாங்கி முகத்தில் அந்த நுரைக்கும் சோடா நீரை பீச்சி அடித்து கழுவி, கடகட வென்று சோடா முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்து… கடை பெஞ்சில் அரைமயக்கத்தில் வெகு நேரம் அமர்ந்து கொண்டேன்.

அடுத்த நாள் காலை தினத்தந்தி பேப்பரில், “இளம் பெண் திரிசூலம் சுடுகாட்டில் இரவு நேரத்தில் எரித்து கொலை, மெட்ராஸ் புறநகரில் பயங்கரம். குற்றவாளிகளை போலீஸ் வலைவீசி தேடுகிறது” என கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை  படித்து அரண்டு போனேன்.

இரவில் நிகழ்ந்ததை நான் ஒருவரிடமும் மூச்சு விடவில்லை, இப்போதெல்லாம் நான் குறுக்கு பாதையில் செல்லாமல் நேர் பாதையில் சீக்கிரமே கிளம்பி வீடு திரும்புகிறேன்.

ஆனால் ஒரு ஆச்சரியமான பேரதிசயம் என்னன்னா, அப்பொலேர்ந்து எனக்கு  பிராக்டீஸ் நன்கு அதிகரித்து  பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட ஆரம்பித்தது விட்டது.

பணம் எக்கச்சக்கமா புரளத் துவங்க, புது கார் ஒன்றும் வாங்கி டிரைவரும் போட்டு கொண்டேன்…! 

அந்த பெண்ணின் முகம் மட்டும் இன்றுவரை என் நெஞ்சில் நிறைந்து, அவள் “சார்… நீங்க நல்லா ஓஹோன்னு வருவீங்க” என வாழ்த்துவது போல் அடிக்கடி கனவு வந்து, தூக்கத்திலும் என் கண்களில் விழிநீர் ஆறாய்ப் பெருகும்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 13) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    நீதி தவறாத நெடுஞ்செழியன் (சிறுகதை) – ✍ ஹேமலதா