ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
தீபிகாவின் மொபைல் ஒலித்தது, தூங்கிக் கொண்டிருந்த தீபிகா மொபைலை பார்த்த போது, சென்னையிலிருந்து அம்மா கால் செய்வது தெரிந்தது.
“என்னம்மா, காலையிலேயே போன் பண்ற?” எனக் கேட்டாள்
“இன்னமும் நீ எழுந்துக்கலயா? மணி 7.30 ஆயிடுச்சு?”
“இல்லம்மா, ராத்திரி வரும்போதே ரொம்ப லேட்டாயிடிச்சி., அப்புறம் சாப்பிட்டுவிட்டு தூங்க 1 மணி ஆயிடுச்சு, சரி எதுக்கு போன் பண்ணினேன்னு சொல்லும்மா?” என கேட்டாள் தீபிகா,
“நம்ம தரகர் மாமா ராமசாமி மூலமா உனக்கு ஒரு வரன் வந்துருக்கு, பையன் பிரைவேட் கம்பெனியில சென்னையிலேயே மேனேஜர் ஆக வேலை பார்க்கிறானாம். வரும் ஞாயிற்றுக்கிழமை உன்னை பார்க்க வருவதாக ராமசாமிகிட்ட சொல்லி விட்டுருக்காங்க. அதனால நீ வெள்ளிக்கிழமை மதியமே புறப்பட்டு வந்துடு” என சொல்லி முடித்தாள் அம்மா.
“இந்த வாரம் சில முக்கிய வேலையெல்லாம் முடிக்க சனிக்கிழமை ஆபீஸ் வர சொல்லியிருக்கிறார்கள், நான் சனிக்கிழமை இரவு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து விடுகிறேன்” என்றாள் தீபிகா.
அம்மா உடனே அவசரமாக, “இல்லை தீபிகா, ஞாயிற்றுகிழமை அவங்க எப்போ வருவாங்கனு தெரியல. காலையிலேயே வர்றேன்னு சொல்லிட்டாங்கன்னா உனக்கு கஷ்டமாயிடும், அதனால எப்பிடியாவது சொல்லிட்டு வெள்ளிக்கிழமையே கிளம்பி வந்திடு” என்றாள்.
“சரிம்மா, சனிக்கிழமை காலையில் அங்கு வந்துடுறேன்” என்றாள் தீபிகா.
தீபிகா, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். நகரின் மத்தியில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு சென்று வருகிறாள்.
ஓரே பெண். அப்பா இறந்துவிட்டார். பெரும்பாலும் வார விடுமுறையில் அம்மாவை பார்க்க சென்னை சென்று வருவாள். அம்மாவும் தீபிகாவை சென்னைக்கு மாற்றிக் கொண்டு வந்துவிடு, அல்லது சென்னையிலேயே வேறு வேலை தேடிக் கொள் என வற்புறுத்தி வருகிறாள்.
ஆனால், தீபிகாவிற்கு பெங்களுருவில் வேலை பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது. அதனால் அம்மாவின் புலம்பலுக்கு பதிலே சொல்ல மாட்டாள்.
தீபிகா தனது குழு மேலாளர் அருணிடம் விஷயத்தை கூறி அனுமதி வாங்கிக் கொண்டு வெள்ளி இரவே பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தாள். அம்மாவுக்கு தீபிகா சொன்னபடியே முன்கூட்டியே வந்தது குறித்து மிகவும் சந்தோஷம்.
தீபிகா குளித்து, காலை டிபன் சாப்பிட்டபின் அவள் அருகில் அமர்ந்து மாப்பிள்ளை கணேஷின் போட்டோவை காட்டினாள் அம்மா. தீபிகா போட்டோவை பார்த்தாள், கணேஷ் போட்டோவில் அழகாகவே தெரிந்தான்.
“பையனை உனக்கு பிடிச்சிருக்கா?” என அம்மா கேட்டாள்
“உனக்கு பிடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும்” என்றாள் தீபிகா.
“எனக்கு பிடிச்சிருக்கு, உன் போட்டோவை பாத்துட்டு அவங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்குன்னு சொன்னதா தரகர் சொன்னார்” என்றாள் அம்மா.
கணேஷ் வீட்டிலிருந்து பதினோரு மணிக்கு வருவதாக தரகர் ராமசாமி போன் செய்தார்.
அவர்கள் கூறியபடியே, 11 மணிக்கு கணேஷ், அவனது அப்பா, அம்மா, மற்றும் தரகர் ராமசாமியுடன் தீபிகாவின் வீட்டிற்கு வந்தார்கள்.
தீபிகாவின் அம்மா அவர்களை வரவேற்று அமரச் செய்தாள். பொதுவான விஷயங்களை சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தீபிகாவை வரச் சொன்னார்கள்.
தீபிகாவை, பார்த்த உடனேயே அனைவருக்கும் பிடித்துப் போயிற்று.
கணேஷுக்கும் தீபிகாவை மிகவும் பிடித்து போனது. அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தவன், அவளிடம் அவளது வேலை தொடர்பாக சில கேள்விகளை கேட்டான்.
பிறகு, கணேஷின் அப்பா,அம்மா தங்களுக்கு பெண்ணை பிடித்து விட்டதாகவும், மற்ற விஷயங்களை போனில் தெரிவிப்பதாகவும், பின்னர் நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்து புறப்பட்டு சென்றனர்.
அடுத்த வாரம் முடியும் வரையிலும் கணேஷ் பெற்றோரிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை.
தீபிகாவின் அம்மா தரகர் ராமசாமியிடம் போன் செய்து கேட்ட போது, அவர் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டு சொல்வதாக கூறினார் .
தீபிகா, மீண்டும் வார இறுதியில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தாள். அவளது அம்மாதான் பெண் பார்த்து சென்றவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை என கவலையுடன் பேசினாள்.
“அம்மா, அவங்களுக்கு பிடிச்சிருந்தா, அவங்களே போன் பண்ணுவாங்க. நீ அதற்காக கவலைப்படாதே” என அம்மாவிடம் கூறினாள் தீபிகா.
அப்போது தீபிகாவின் போன் ஒலித்தது, மறுமுனையில் பேசிய கணேஷ், தீபிகாவிடம் ஹாய் சொல்லிவிட்டு, தான் அவளிடம் பேச விரும்புவதாகவும், ஒரு குறிப்பிட்ட ஹோட்டலின் பெயரை சொல்லி மாலை 5.00 மணிக்கு வரமுடியுமா? என கேட்டான்.
அம்மாவிடம் கேட்டு சொல்வதாக கூறினாள். அருகில் இருந்த அம்மா, “போய்ட்டு வா” எனக் கூறினாள். உடனே, கணேஷிடம் 5 மணிக்கு வருவதாக தெரிவித்தாள் தீபிகா.
தீபிகா, ஹோட்டலுக்கு புறப்படும் சமயத்தில் அவளுக்கு தொடர்ந்து இரண்டு, மூன்று போன்கள் வந்தது. அந்த போன்களை பேசியவுடன் அவள் மிகவும் கோபமாக காணப்பட்டாள்.
அதை பார்த்த அவளது அம்மா, “தீபிகா ஏன் திடீர்னு மூடவுட் ஆகிட்டே? யார் போன்ல பேசினாங்க? என்னாச்சு?” என வரிசையா கேள்விகள் கேட்டாள்
“அம்மா, போயிட்டு வந்து விவரமா சொல்றேன்” சொல்லிட்டு கணேஷை பார்க்க ஹோட்டலுக்கு கிளம்பினாள் தீபிகா.
ஹோட்டலின் வரவேற்பு அறையில் காத்திருந்த கணேஷ், தீபிகாவை பார்த்ததும் புன்னகைத்தான், பின்னர் ஏற்கனவே பதிவு செய்திருந்த இருக்கைக்கு கூட்டி சென்றான். இருவரும் எதிர் எதிரே அமர்ந்தார்கள்.
கணேஷ், தீபிகாவை பார்த்து “என்ன சாப்பிடற சொல்லு?” என கேட்டான்.
அதற்கு ஏதும் பதில் கூறாமல், “எதுக்கு வர சொன்னீங்க?” என கேட்டாள் தீபிகா.
“இல்லை தீபிகா, கொஞ்ச நேரம் இருவரும் பெர்சனலா பேசி உன்னை, உன்னோட வேலையபத்தி தெரிஞ்சுக்கலாமுன்னு வர சொன்னேன்” என்றான் கணேஷ்.
“என்ன தெரியணும் உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
“நீ தினமும் ஆபீஸ்க்கு எப்பிடி போயிட்டு வரே? two wheeler வச்சிருக்கியா? எங்க தங்கியிருக்கே?” என கேட்டான்
“நான் லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன், கம்பெனியிலிருந்து கார் அனுப்புவாங்க, அதில போய்ட்டு திரும்பவும் cabல ஹாஸ்டெல்ல கொண்டு விட்டுருவாங்க” என்றாள்.
“கார்ல உன்கூட ஆண்களும் வருவார்களா?”
“ஆமாம், என்கூட வேலை பார்க்கிற ஆண்கள் சிலர் வருவார்கள்”
“ஏன், உங்க கம்பெனியில லேடீஸ்க்குனு தனியா கேப்ஸ் அனுப்ப மாட்டாங்களா?” என கேட்டான்,
“லேடீஸ்க்குனு தனியா கேப்ஸ் operate பண்ண மாட்டாங்க” என்றாள் எரிச்சலுடன்.
“நீ நைட் ஷிப்ட் போவியா?” என அடுத்த கேள்வியை கேட்டான் கணேஷ்.
“ஆமாம், சில நேரங்களில் தொடர்ந்து ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் nightshift போக வேண்டியிருக்கும். ஆமா, எதுக்காக இப்போ இந்த கேள்வியெல்லாம் கேட்டுகிட்டேயிருக்கீங்க?” என கோபமாக கேட்டாள் தீபிகா.
அதை கண்டுகொள்ளாமல், “பெங்களூருவில் வீக் என்டு பார்ட்டியெல்லாம் நடக்குமுன்னு சொல்லுவாங்களே? நீ அதிலெல்லாம் கலந்து கொள்வாயா?” எனக் கேட்டான்
“ஆமாம் கலந்து கொள்வேன், இதிலென்ன தப்பு இருக்கிறது?” எனக் கேட்டாள் தீபிகா,
இதை கேட்டவுடன் கணேஷின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும் கவனித்தாள் தீபிகா, பின்னர் தொடர்ந்து, “ஆனா நீங்க நினைக்கிற மாதிரியான பார்ட்டி இல்லை. எப்பவாது ஒரு முறை friends எல்லோரும் ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போயி நைட் டின்னெர் சாப்பிடுவோம்” என்றாள்.
கணேஷ் சாப்பிடுவதற்க்கு மெனு கார்டை பார்த்து ஏதோ ஆர்டர் செய்தான். தீபிகா, தனக்கு எதுவும் வேண்டாம் என பிடிவாதமாக மறுத்து விட்டாள்.
அவள் புறப்படும்போது வந்த போன் அழைப்புகளுக்கு பின்னர் மிகவும் கோபமாகவே இருந்தாள் தீபிகா.
பின்னர், கணேஷ் தீபிகாவிடம் “நான் சொல்றத கோபப்படாம கேளு? நம் திருமணத்திற்கு பிறகு நீ வேலைக்கு போகவேண்டாமுன்னு நான் நினைக்கிறேன். அப்பிடியே நீ வேலைக்கு போகணுமுன்னு விரும்பினால் இப்போ பார்க்கிற I.T. கம்பெனி வேலைய resign பண்ணிடு, சென்னையிலேயே I.T.கம்பெனி இல்லாம வேறு ஏதாவது நிறுவனத்தில் வேலை தேடிக்கலாம்” என்றான்.
“கல்யாணத்துக்கு பிறகும் நான் வேலைக்கு செல்லவே விரும்புகிறேன். இப்போ இருக்கற கம்பெனியிலேயே சென்னைக்கு மாறுதல் தருவதாக சொல்லியுள்ளனர்” என்றாள் .
“நான்தான் I.T.நிறுவனம் வேண்டாம் என்று சொல்கிறேனே?” என்றான் கணேஷ்.
“ஏன் வேண்டாமுன்னு சொல்றீங்க? காரணம் சொல்லுங்க” என்றாள் தீபிகா.
“எனக்கு ஏனோ பிடிக்கல, I.T. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களிடம் ஒரு ஒழுங்குமுறை கிடையாது. ஆடம்பரமாக செலவு செய்பவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நமது கலாச்சாரத்துக்கு எதிராக weekend party, dating போன்ற ஒழுக்கம் குறைவான செயல்களில் பலர் ஈடுபடுவதாக பலவாறு செய்திகள் வருகிறது. அதனால I.T. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பற்றி எனக்கு நல்லதொரு அபிப்ராயம் கிடையாது” என்றான்.
இதை கேட்ட தீபிகா, “ஓஹோ, அதனாலதான் என் பேர்லயும் சந்தேகப்பட்டு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி என்ன பத்தி விசாரித்து அறிக்கை கொடுக்க சொல்லி கேட்டீங்க போலிருக்கு” என்றாள் கிண்டலாக.
“அவங்க எங்க ஆபீஸ் மேனேஜர், என்னோட ஹாஸ்டல் வார்டன், என்னோட roommate எல்லார்கிட்டயும் விசாரிச்சிருக்காங்க, அவங்க எல்லாம் எனக்கு போன் செய்து கேக்கறாங்க” என்றாள்.
ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த கணேஷ், பின்னர் சமாளித்துக் கொண்டு, “ஆமாம், நான் உன்னை பற்றிய ரிப்போர்ட் தனியார் நிறுவனத்திடம் கேட்டது உண்மைதான், அதில் ஒன்றும் தவறில்லையே. இன்னும் சொல்ல போனா உன்னோட விர்ஜினிட்டி certificate கூட மருத்துவரிடம் வாங்கி கொடுத்தால் நல்லது” என்றான்.
இதை கேட்டவுடன் பொங்கியெழுந்த தீபிகா, கணேஷை பார்த்து ஆவேசமாக, “நீங்க உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? சாப்ட்வேர் நிறுவனத்துல வேலை பார்க்கிறவங்க எல்லாருமே ஒழுக்கம் இல்லாதவங்கன்னு சொல்ல வாரீங்களா? இல்ல கூட வேலை பாக்குற ஆண்கள் கிட்ட friendlyயா பழகறவங்க எல்லாம் தப்பான வழிக்கு போயுடுவாங்கன்னு சொல்றீங்களா?
சாப்ட்வேர் நிருவனத்துல வேலை பாக்குற பல பெண்கள் எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிகிட்டு வேலைக்கு வராங்கன்னு தெரியுமா? வேலைக்கு போகிற ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதாவது ஒரு கமிட்மென்ட் இருக்கும்.
வேலைக்கு வரும் பெண்கள் எல்லோருமே சந்தோஷப்பட்டுக்கிட்டு வேலைக்கு வரல, அவங்கவங்க குடும்ப சூழ்நிலை காரணமாவே வேலைக்கு வரங்கங்கறது உங்களுக்கு தெரியுமா?
பல பெண்கள், குடும்பம், ஆபீஸ், குழந்தைகள்ன்னு அனைத்தையும் சமாளிக்க மிகவும் கஷ்டப்படுறாங்க. ஆஃபீஸ்லயும், எங்க மேல நம்பிக்கை வைத்து ப்ராஜெக்ட்ஐ ஒப்படைத்த வெளிநாட்டு நிறுவனத்தின் பணியினை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நல்லவிதமா முடிச்சு கொடுத்து நல்லபெயர் வாங்கணும்கறதுக்காகத்தான் இரவும், பகலும், கஷ்டப்பட்டு உழைக்கிறோம்.
அதனால எங்களில் பலருக்கு மனஉளைச்சலும், சிலர் பலவிதமான நோய்களுக்கும் உள்ளாகின்றனர். சாப்ட்வேர் துறையில் வேலைப்பார்க்கும் ஆயிரக்கணக்கானோர்களில் ஏதோ ஒரு சிலர் தப்பா நடந்துக்கிறாங்ககறதுனால, எல்லோரையும் சந்தேகப்பட முடியுமா?
கலாச்சாரத்திற்கு எதிரா ஒழுக்க கேடா நடந்துகிறவங்க எல்லா துறையிலும் இருக்கத்தான் செய்யறாங்க, அதனால சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் ஒழுக்கம் இல்லாதவங்கன்னு சொல்லுவீங்களா?
உங்களை போலவே திருமணம் செய்து கொள்ளும் அனைத்து பெண்களும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆணிடம் ஆண்தன்மை சான்று, எந்தவித கெட்ட பழக்கமும் இல்லைனு ரிப்போர்ட் கொடுக்கணுமுன்னு கேட்டா என்ன பண்ணுவீங்க?” என ஆவேசமாக பேசினாள்.
தீபிகாவின் ஆவேசமான பேச்சை கேட்டு அசந்து போய் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தான் கணேஷ்.
“உங்களுக்கு ஓரு சகோதரி இருந்திருந்து, அவளுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது, மாப்பிள்ளை உங்க சகோகோதரியை சந்தேகப்பட்டு, நீங்கள் கேட்பதுபோல் வெர்ஜின் certificate கேட்டிருந்தால், உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?” என கேட்டாள் தீபிகா.
“ஆண்களுக்கு நிகராக தற்போதுதான் பெண்கள் ஓரளவு அனைத்து துறைகளிலும் தடம் பதித்து சாதனை படைத்து வருகிறார்கள், அதை உங்களைப் போன்ற ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால தான் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள்” என்றாள்.
நிமிர்ந்து பார்த்த கணேஷ், “Sorry தீபிகா, சும்மா ஒரு பார்மாலிட்டிக்காகதான் உன்னை பத்தி விசாரிக்க சொன்னேன்? அதை இவ்வளவு சீரியஸ் ஆக போகும்னு நான் எதிர்பாக்கவில்லை” என்றான்.
ஆனால் தீபிகா சற்றும் கோபம் குறையாமல், “கலியாணத்துக்கு முன்பாகவே இவ்வளவு சந்தேகப்படும் நீங்க, திருமணத்திற்கு பின் நான் யார்க்கூட பேசினாலும் சந்தேகப்படுவீங்க. அதனால என்னோட சந்தோஷமும் போயி, வாழ்க்கையே நரகமாகிவிடும். ஆகையினாலே எனக்கு உங்களை திருமணம் செய்து கொள்வதில் இஷ்டம் இல்லை.
நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த திருமணம் வேண்டாம். நான் என் அம்மாவிடம் கூறி விடுகிறேன். உங்கள் திருமணத்திற்காக இனி பார்க்க போகும் பெண்ணிடமாவது சந்தேகப்படாமல், பண்போடு நடந்து கொள்ளுங்கள் Goodbye” என்றபடியே எழுந்துசென்றாள் தீபிகா.
அவள் எழுந்து போவதையே அதிர்ச்சியுடன் பார்த்தபடி அமர்ந்து இருந்தான் கணேஷ் !?.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings