“ஹலோ வாங்கோ வாங்கோ” என ஸ்ரீதர் எங்களை வரவேற்றார்
“என்ன கமகமவென்று வாசனை? தீபாவளியா?” என்று நான் கேட்க
அதற்குள் அவர் மனைவி கீதா சமையலறையிலிருந்து இரண்டு தட்டுகளில் முறுக்கும் இனிப்பும் எடுத்துக் கொண்டு வந்தார்
“நிஜமாகவே பட்சணமா?” என்று நான் கேட்க
“ஆமாம்” என்றார்
நாங்கள் இருவரும் பட்சணம் சாப்பிட்டு முடித்தோம்.
திரும்ப எங்கள் பேச்சு தீபாவளியைப் பற்றி திசை திரும்பியது.
“தீபாவளிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று ஸ்ரீதர் கேட்க
“கங்கா ஸ்நானம் செய்ய காசிக்கு போலாமா?” என்று சிரித்துக் கொண்டே நான் கேட்டேன்
“ஓ… போகலாமே” என்றார் என் கணவர்
இதைக் கேட்ட நான், “Very good idea” என்று கூவ, அனைவரும் அதை ஆமோதித்து கைதட்டி வரவேற்றார்கள்.
ஸ்ரீதர் என்னைப் பார்த்து “மேடம், நீங்கள் தான் யாத்ரா டிராவல்ஸ் பற்றி நன்கறிந்தவர், எனவே காசிக்கு போக ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
என் சிறு வயது முதல் கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று தீபாவளியன்று கூறுவதை கேட்டு கேட்டு, கட்டாயம் வாழ்நாளில் ஒருமுறையேனும் தீபாவளியன்று காசிக்கு போக வேண்டும், கங்கையில் குளிக்க வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறுவது என்றால் சும்மாவா?
உடனே நான் சென்னையில் உள்ள அனைத்து டிராவல்ஸ் கம்பெனிகளுக்கும் போன் செய்தேன். அனைவரும் ஒரே பதில் “ஏற்கனவே பதிவு முடிந்து விட்டது” என்பது தான்
எங்கள் அனைவரின் முகமும் காற்று போன பலூன் போல் தொங்கி விட்டது. நான் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை! சிறிது நேர யோசனைக்குப் பின் “ஆ.…..…. ஒரு ஐடியா” என்றேன்
என் கணவர் “ரயிலை பிடித்துக் கொண்டே ஒடலாமா காசிக்கு?” என்றார். மற்றவர்கள் இதைக் கேட்டு சிரித்தனர்.
“அட கேலி செய்தது போதும் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கோ. நம்ப பிரெண்டு கமலாவின் தம்பி ரயில்வேயில் பெரிய பதவியில் இருக்கிறான், அவரிடம் கேட்டு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்ய சொல்லலாம்” என்று நான் சொல்ல
“அடடே உனக்கு கூட மூளை இருக்கே” என்று என் கணவர் கேலி செய்ய, நான் உடனே கமலாவுக்கு போன் செய்தேன்.
அவர் தன் தம்பியிடம் டிக்கெட் விஷயம் பற்றி கேட்க, நாளை காலை எட்டு மணிக்கு ஆபிசுக்கு அனைத்து விவரங்கள் மற்றும் பணத்துடன் வரும்படி கூறினார்.
இதைக் கேட்டதும் என் மனம் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது காசிக்கே போனதுபோல்!!
மறுநாள் காலை எட்டு மணிக்கு ஆபிசுக்கு சென்றோம். அன்று ரிசர்வேஷன் கடைசி நாள், எட்டு டிக்கெட் என்பது கொஞ்சம் கஷ்டம் என்றார்.
மறுபடியும் எங்களுக்கு பயம் வந்தது ஆனால் அன்னபூரணியின் அருளால் டிக்கெட் கைக்குக் கிடைத்தது, விஸ்வநாதரே அவர் வடிவில் வந்ததாகத் தோன்றியது.
அதற்கப்புறம் கேட்க வேண்டுமா எங்கள் சந்தோஷத்திற்கு? காசி போவதற்கு முன் ராமேஸ்வரம் சென்று செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடித்தோம்.
தேவையான பொருட்களை வாங்கி சேர்த்தோம். வீடு கல்யாண களை கட்டியது. என் கணவரிடம் ஒரு பறை தான் இல்லை, ஊர் முழுக்க தீபாவளிக்கு நாங்கள் காசிக்கு போக போகிறோம் என்று சொல்லி சொல்லி மகிழ்ந்தார்
அந்த நாளும் வந்ததே. வந்ததே!!!
8.11.2004 – என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்!!!
அன்றுதான் எங்கள் காசி பயணம் தொடங்கியது. என் பையன் பேத்திகள் இருவர் அனைவரும் ஏதோ சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டில் போவது போல் வழியனுப்ப வந்தார்கள்.
ரயிலில் ஏறிய பிறகு தான் தெரிந்தது, இது பயணிகள் ரயில் இல்லை, பஜனை கோஷ்டி ரயில் என்று
பயணம் செய்த 35 மணி நேரமும் பஜனையும் பாட்டு ஸ்லோகம் என்று சந்தோஷமாக கழிந்தது. இரண்டு நாளும் வேளா வேளைக்கு கட்டுசாத கூடையை பிரித்து, அவர் அவர் பெயர் போட்ட பார்சலை காலி செய்தோம்.
10.11.2004 அன்று காலை நான்கு மணிக்கு அலகாபாத் வந்து இறங்கினோம். அங்கு எங்கள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு திரிவேணி சங்கமம் புறப்பட ஆயத்தமானோம்,
நாம் பிறக்கும் போதே ஆத்மரிணம், தேவரிணம், பித்ருருணம் என்ற 3 கடன்கள் உடன் பிறப்பதாக ஐதீகம். பிரயாகையில் நீராடுவதால் ஆத்மரிணம் நீங்குகிறது. கங்கையில் நீராடுவதால் தேவரிணம் நீங்குகிறது
பல்குணி நதியில் நீராடி பித்ரு காரியங்களை செய்து விஷ்ணு பாதத்தை தரிசித்தால் பித்ருரிணம் நீங்குகிறது, அதன்பின் தான் முக்தி பெறும் வாய்ப்பை பெறுகிறோம்
திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சேருமிடம். ஆஹா அதன் அழகே அழகு!!!
யமுனை பச்சை நிறத்திலும், கங்கை மண் நிறத்திலும், சரஸ்வதி அந்தர் வாகினியாக கலக்கிறது இங்கே. வேணி தானம் மற்றும் எல்லா பூஜைகளையும் செய்து விட்டு, வாரணாசி என்னும் காசிக்கு சென்றோம்
இங்கு அசி என்ற நதியும், வாரணா என்ற நதியும் கூடுவதால் வாரணாசி என்ற பெயர்.
தீபாவளிக்கு முதல் நாள் ஆனதால் அன்று தன திரயோதசி கொண்டாடப்படுகிறது. அன்று அன்னபூரணியை சென்று பார்த்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்றும், அங்கு பணம் பெற்று கொள்ள கூட்டம் அலைமோதியது. அதில் நாங்கள் மாட்டிக்கொண்டு பட்ட அவதி வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று!!!!!
11.111.2004 அன்று தீபாவளி, எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்!!! அன்று காலை மூன்று மணிக்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு, அனுமன் காட் இடத்திற்கு சென்றோம். நாங்கள் தான் இவ்வளவு விடியற்காலை சென்று உள்ளோம் என்று நினைத்தால், ஆயிரக்கணக்கான பேர் குழுமியிருந்தார்கள்.
ஒரு படகில் பெரிய மலர் மாலையை எடுத்துச் சென்று கங்கையின் நடுவில் அதை அணிவித்தார்கள் கங்கைக்கு செய்யும் மரியாதையாக இருந்தது.
அதன்பின் அனைவரும் விளக்கேற்றி கங்கையில் விட, அனைவரும் கங்கா மாதா கி ஜே என்று கோஷமிட்டு வணங்கினார்கள். கங்கை முழுவதும் விளக்குகள் வரிசை வரிசையாக செல்வதே மிக அழகாக இருந்தது, இதுதான் உண்மையான தீபாவளி!
இதுதான் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என நினைத்தேன் நான் இதுவரை எண்ணிய ஆசை நிறைவேறுவது, நான் பண்ணிய புண்ணியம் என்று ஆனந்தப்பட்டேன்
நானும் என் கணவரும் அன்று தான் திருமணம் செய்த தம்பதிகள் போல், இருவரும் கைகோர்த்துக் கொண்டு, கங்கையில் இறங்கி கங்கா மாதாவிற்கு ஜெ என்று கூறிக் கொண்டு நீரில் மூழ்கி ஸ்நானம் செய்தோம்
விடியற்காலை மூன்று மணி ஆக இருந்தாலும், அந்தத் தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்த உணர்வு, எங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. இதுவன்றோ உண்மையான கங்கா ஸ்நானம்!!!! இதற்கு என்ன பாக்கியம் செய்தோமோ என்று மனமார கடவுளை பிரார்த்தித்தோம்
சிறு வயது முதல் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய வேண்டுமென்ற என் பிரார்த்தனை நிறைவேறியது கண்டு சந்தோஷம் அடைந்தேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தீபத்திருநாள்!!!!
ஆம் கங்கை முழுவதும் தீபங்களை மிதக்க விட்டு, அதன் ஒளி நீரில் விழ, கங்கை தகதகவென ஜொலிக்க, அதைக் கண்டு பரவசமடைந்தேன். இதை காண கண் ஆயிரம் வேண்டாமோ? என்று பாடி மகிழ்ந்தேன்
புதிய ஆடைகளை அணிந்து, கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம். இனிப்புகளை வைத்து நைவேத்தியம் செய்து, கங்கைக்கு நமஸ்காரம் செய்தோம்
அதன்பின் தங்க அன்னபூரணியை காண சென்றோம். தீபாவளி சமயம் மூன்று நாட்கள் மட்டும் தங்க அன்னபூரணி பார்க்க முடியும் மற்ற நாட்களில் ரிசர்வ் வங்கியில் அதை வைத்து விடுவார்கள், இதுவும் எங்கள் பாக்கியம்
அன்னபூரணி தங்க கிண்ணத்தை ஒரு கையிலும் தங்க கரண்டியை வலதுகையிலும் பிடித்தபடி உட்கார்ந்து இருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சி!!!
“அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய வித்தியார்த்தம் பிக்ஷாம் தேஹி. ச. பார்வதி!!” என்று ஆதிசங்கரர் கூறிய ஸ்லோகத்தை கூறி அன்னபூரணியை நமஸ்கரித்தேன்.
காசியில் தீபாவளி அன்று மெய்யாகவே நீராடி, உள்ளமும் உடலும் குளிர்ந்து, ஈசனையும் பார்வதியையும் தந்தையாகவும் தாயாகவும் நினைத்து தரிசிக்கும் பாக்கியம் எப்படிப்பட்டது?
கங்கா ஸ்நானம் ஆயிற்றா என்று தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்கிறோம். அது நேரடியாக தீபாவளியன்று எனக்கு கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் என்று நினைத்தேன்
என் வாழ்நாளில் ஏன் இந்த ஜென்மத்தில் மறக்க முடியாத தீபாவளி இதுதான்!!!
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
வெகு அருமை ஷ்யாமளா வெங்கடராமன் Mam. உண்மையான தீபாவளி கங்கா ஸ்நாநம் மன நிறைவாக இருந்தது .
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இந்த கங்கா ஸ்நானமும், அன்னபூரணி தரிசனமும் படிக்கவென்றே எனக்கு சஹானா இதழ் திறந்திருக்கிறது. நாங்களும் காசி, கயா, பிரயாகை போனோம். ஆனால் 22/23 வருடங்கள் முன்னர். தீபாவளியில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அதைத் தேர்வு செய்யவில்லை. ஆனால் இவர் எழுதி இருப்பதைப் பார்த்தால் தீபாவளிக்குப் போயிருக்கலாமோ என்னும் எண்ணம்!
Welcome back maami,nice to see your comments after a long while ❤️