in ,

சைக்கிள் கனவுகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தந்தை ஆபீஸிற்கு சென்ற பின்தான் உறக்கத்திலிருந்தே கண் விழித்தான் பாபு. பெரியதொரு கொட்டாவியை வெளிப்படுத்தியவாறே வாசலுக்கு வந்தவன் அங்கு அப்பாவின் சைக்கிள் நிற்பதைக் கண்டு குழப்பமானான்.

“என்னது?… அப்பாவோட சைக்கிள் நிக்குது!… அப்படின்னா அப்பா இன்னிக்கு ஆபீஸ் போகலையா?”.

     நேரே சமையலறைக்குச் சென்று அம்மாவிடம் கேட்டான்.  “ம்மா… அப்பா எங்கேம்மா?”

   “ஆபீஸுக்குப் போயிட்டார்” என்றாள் அவன் தாய் கலா, மிக்ஸியில் சட்னிக்கான பொருட்களை நிரப்பியபடியே.

    “ஆனா அப்பாவோட சைக்கிள் இங்கியே இருக்கே?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.           

    “ஓ… அதுவா?… உங்க அப்பா இன்னைக்கு  புது பைக் டெலிவரி எடுக்கப் போறார்…. அதனாலதான் சைக்கிளை வெச்சிட்டுப் போயிருக்கார்” புன்னகைத்தபடி சொன்னாள்.

ஒரு நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக பணியாற்றும் தன் கணவர் திவாகரின் நீண்ட நாள்  “பைக்” கனவு இன்று நிறைவேறப் போகின்றதென்பதில் கலாவிற்கும் உள்ளூர சந்தோஷம்.

     “ஹேய்ய்ய்ய்ய்ய்” என்று இரு கைகளையும் மேலே தூக்கியவாறு கத்தினான் பாபு.

     கலா மிக்ஸியை ஆன் செய்து “கொர்ர்ர்ர்ர்ர்ர்” என்று சப்தமெழுப்ப, அடுத்த கேள்வியைக் கேட்க வாயெடுத்த பாபு மிக்ஸி நிற்பதற்காகக் காத்திருந்தான்.

     மிக்ஸி நின்றதும். “அம்மா… அப்பா பைக் வாங்கிட்டா இந்த சைக்கிள் யாருக்கும்மா?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான்.

     அவன் கண்களில் எதிர்பார்ப்பு.

     “இதென்னடா கேள்வி?.. நிச்சயம் உனக்குத்தான்… நீ இனிமேல் ஸ்கூலுக்கு நடந்து போக வேண்டிய அவசியமில்லை!” சொல்லியவாறே மிக்ஸியிலிருந்து சட்னியை சிறிய பாத்திரத்திற்கு இடம் மாற்றினாள்.

     அவசரமாய் சமையலறையை விட்டு வெளியே சென்ற பாபு, ஒரு துணியைத் தேடிக் கண்டுபிடித்து சைக்கிளைத் துடைக்க ஆரம்பித்தான். பின்னர் அம்மாவிடம் வந்து, “ம்மா… சைக்கிளை நல்லாத் துடைச்சிட்டேன்!… கொஞ்சம் ஆயில் குடுத்தேன்னா… ஆயில் போட்டு  “பள…பள” ன்னு ஆக்கிடுவேன்!” என்றான்.

     அவன் ஆர்வத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட கலா ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாய் தேங்காய் எண்ணையை ஊற்றிக் கொடுத்தாள்.

     சைக்கிளைத் துடைக்கும் போது அவன் மனத்தில் ஆயிரம் கேள்விகள், ஆயிரம் பதில்கள்.  “அப்பா என்ன கலர் பைக் வாங்குவார்?”

      “அநேகமா சிவப்புக் கலர்தான் வாங்குவார்… அவருக்கு எப்போதுமே சிகப்புக் கலர்தான் பிடிக்கும்”

      “ஸ்ப்லெண்டர் பைக்கா?… பல்ஸர் பைக்கா?”

      “ம்ம்ம்… ஸ்ப்லெண்டராய்த்தான் இருக்கும்… ஏன்னா அப்பா மைலேஜ் கணக்குப் பார்ப்பார்!… அதுதான் அவரோட சாய்ஸா இருக்கும்”

      “அது செரி… நாளைக்கு நான் ஸ்கூலுக்கு சைக்கிளை எடுத்திட்டுப் போன பசங்களெல்லாம் ரவுண்டு கேட்பானுகளே…. என்ன பண்றது?… குடுக்கலேன்னா… என்னைக் கழட்டி விட்டுடுவானுகளே?”

      “காத்து கம்மியாயிருக்குன்னோ… எங்கப்பா திட்டுவார்ன்னோ சோலிட வேண்டியதுதான்!”  

     இருபது நிமிடங்களுக்கு மேலாய் வேலை செய்து, சொன்னது போலவே அப்பாவின் பழைய சைக்கிளை புதுசு போல் பளபளப்பாக்கி விட்டு பள்ளிக்கு ஓடினான். “இந்த ஓட்டமெல்லாம் இன்னியோட சரி… நாளைக்கு அய்யா சைக்கிள்லதான் வரப் போறேன்!” தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

     மதிய உணவு இடைவேளையின் போது, “டேய்… இன்னியோட கடைசி… நாளையிலிருந்து நான் உங்களோட உட்கார்ந்து சாப்பிட மாட்டேன்” என்றான் பாபு.

      “ஏண்டா… ஒட்டு மொத்தமா எங்க எல்லார் கூடவும் காய் விட்டுட்டியா?”

      “அதான் இல்லை!… நாளையிலிருந்து நான் ஸ்கூலுக்கு சைக்கிளில் வரப் போறேன்… அதனால மதியம் சாப்பாடு கொண்டு வராம வீட்டுக்குப் போய் சுடச் சுட சாப்பிட்டுட்டு வருவேன்” என்றான்.

      “டேய்… புது சைக்கிளா?” மொட்டைத்தலை மாணவன் கேட்க,

      “இல்லை… எங்கப்பாவோட சைக்கிள்… அவர் இன்னிக்கு ஈவினிங் புது பைக் டெலிவரி எடுத்திட்டு வரப் போறார்… அதனால அவரோட சைக்கிள் எனக்குன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க!… காலையிலேயே அதை ஆயில் போட்டு சும்மா “பள…பள”ன்னு துடைச்சு வெச்சிட்டு வந்திருக்கேன்” என்றான் பாபு வெகு சந்தோஷமாக.

      “டேய் பாபு… எப்படியும் நீ எங்க வீட்டு வழியாய்த்தானே உங்க வீட்டுக்குப் போவே?… அதனால தெனமும் என்னை உன் கூட டபிள்ஸ் கூட்டிட்டுப் போடா ப்ளீஸ்” இப்போதே தன் கோரிக்கையை வைத்தான் ஒல்லிக் குமாரசாமி.

      “ம்… பார்க்கலாம்!… பார்க்கலாம்” என்றான் பாபு.

     மாலை பள்ளியிலிருந்து திரும்பியதும் பைக்கில் வரப் போகும் அப்பாவை எதிர் நோக்கி வாசலில் நின்று தெருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

      “டேய்… பாபு!… ஹோம் வொர்க் முடிக்காம அங்க போய் ஏண்டா நின்னுட்டிருக்கே?” கலா வாசலுக்கு வந்து சொல்ல,

      “அப்பா வந்ததும்… புது பைக்கைப் பார்த்திட்டு… அப்பா கூட ஒரு ரவுண்டு போயிட்டு வந்துதான் ஹோம் வொர்க் செய்வேன்” தீர்மானமாய்ச் சொன்னான்.

      “எனக்கென்ன?… ஹோம் வொர்க் பண்ணாமப் போயி நாளைக்கு அடி வாங்கப் போறே நீ!… அது நிச்சயம்”.

     அப்போது, வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, தாயும், மகனும் முகத்தில் கேள்விக் குறியோடு பார்த்தனர்.

     ஆட்டோவிலிருந்து தளர்வாய் இறங்கினார் பாபுவின் தந்தை திவாகர்.

    “என்ன அப்பா பைக்ல வருவார்ன்னு பாத்தா ஆட்டோவுல வர்றார்!” பாபு முகம் வாடினான்.

     கணவரின் சோக முகத்தை வைத்தே அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட கலா, வாசலில் வைத்தே அவரிடம் எதுவும் கேட்காமல் அமைதி காத்தாள்.

     வீட்டிற்குள் நுழைந்த திவாகர் தளர்வாய் சோபாவில் அமர, ”காபி சாப்பிடறீங்களா?” கலா கேட்டாள்.

     அவன் “சரி”யென்று தலையாட்ட சமையலறைக்குச் சென்று அவசரமாய் ஒரு காபி போட்டுக் கொண்டு வந்தாள்.

     அவன் பாதி பருகி முடியும் வரை காத்திருந்து விட்டு, மெல்லக் கேட்டாள் கலா.. “ஏங்க… என்னாச்சு?… இன்னிக்கு பைக் டெலிவரி எடுக்கலையா?”.

       உடனே பதில் சொல்லாமல் சில விநாடிகள் யோசனை செய்த திவாகர், “ஒரு சின்னப் பிரச்சினை… முன்பணம் கொஞ்சம் பத்தலை… ஒரு சின்ன அமௌண்ட்…. சரி பண்ண முடியலை…. அதான் இன்னிக்கு டெலிவரி எடுக்க முடியாமல் போச்சு!” என்றார் திவாகர்.

       “பரவாயில்லைங்க…. இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு எடுத்திட்டாப் போச்சு”

     மெலிதாய்ச் சிரித்த திவாகர், “நாளைக்கு மட்டும் எங்கிருந்து பணம் கிடைக்கும்!… இதே பிரச்சினைதான் தொடரும்!” என்றான்.

     “முன் பணமெல்லாம் எவ்வளவுன்னு கேட்டுட்டுத்தானே புக் பண்ணுனீங்க?… அப்புறம் எப்படி குறைஞ்சுது?”

     “அன்னிக்கு அந்த அமௌண்ட் இருந்ததாம்… இப்ப மாறிடுச்சாம்”

     “அப்ப…. என்னதான் பண்ணப் போறோம்?.”

      அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் திவாகர் யோசனையுடன் தாடையைத் தேய்த்தார்,

      தாய்க்கும் தந்தைக்கும் நடைபெறும் உரையாடலைக் கூர்ந்து கவனித்தவாறு நின்றிருந்தான் பாபு.

     “ஒரு சின்ன அமௌண்ட்… ஆபீஸ்ல எல்லோர் கிட்டேயும் கேட்டுப் பார்த்திட்டேன்… மாசக் கடைசியாச்சா… எல்லோருமே டிரை கண்டிஷன்லதான் இருக்காங்க” சங்கடமாய்ச் சொன்னார் திவாகர்.

      “அப்பா…. ஒரு ஐடியா” என்றபடி அந்த உரையாடலுக்குள் நுழைந்தான் பாபு.

     “என்னப்பா?… என்ன ஐடியா?”

     “பேசாம சைக்கிளை வித்திடுங்கப்பா…. நீங்கதான் பைக் வாங்கப் போறீங்கல்ல?… அப்புறம் எதுக்கு அது?… அதை வித்து வர்ற பணத்துல பைக்குக்குஅட்வான்ஸ் கட்டிடுங்க!” தெளிவாய்ச் சொன்னான் பாபு.

     திவாகர் மேலும், கீழுமாய்த் தலையாட்ட,

     கலா இடையில் புகுந்து, “இல்லைடா… அப்பா அதை உனக்குத் தந்திடலாம்னு சொல்லியிருக்காரு!” என்றாள்.

     “எனக்குத்தானே?… அடுத்த வருஷம் வாங்கிட்டாப் போச்சு!” சாதாரணமாய்ச் சொன்னான் பாபு.

      திவாகர் மகனையே பார்த்துக் கொண்டிருக்க, “அப்பா உங்க சைக்கிளைப் போய்ப் பாருங்க…. ஆயில் போட்டுச் சும்மா ‘பள…பள’ன்னு துடைச்சு வச்சிருக்கேன்!… இப்பவே நம்ம சைக்கிள் கடை சுயம்பு அண்ணாவை வரச் சொன்னீங்கன்னா அவரு கையோட பணத்தைத் தந்து சைக்கிளை எடுத்துட்டு போயிடுவார்” என்றான் பாபு.

     தன் ஆசையை அழகாய் மறைத்துக் கொண்டு, பெரிய மனுஷன் போல் பேசும் மகனை கலா நெகிழ்ச்சியோடு பார்க்க, அவன் தன் சைக்கிள் கனவை மனத்திரையிலிருந்து அழித்து விட்டு, தன் அப்பாவின் பைக் கனவை காட்சிப்படுத்த ஆரம்பித்தான்.. 

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என்பும் உரியர் பிறர்க்கு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    அமிலக் குப்பி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை