இனி புத்தாண்டு, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு என்று பண்டிகைக் காலம் தான். நம் பண்டிகைகளில் இனிப்புக்கு பெரும் பங்குண்டு. நம் மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதில் இனிப்புக்கு சிறப்பான இடம் உண்டு.
தென்னிந்திய விருந்துகளில் பாயசம் கட்டாயம் இடம்பெறும் அல்லவா? அதில் வழக்கமான சேமியா பாயசம், பால் பாயசம், பருப்பு பாயசம் என்று செய்வதற்குப் பதிலாக, இம்முறை சற்றே வித்தியாசமாக கேரமல் பாயசம் செய்து பாருங்களேன். செய்வது மிகவும் எளிது. சுவையோ அபாரம்.
வாங்க! எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
- பால் – 1/2 லிட்டர்
- சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
- கண்டென்ஸ்டு மில்க் – 4 ஸ்பூன்
- அரிசிமாவு (அ) ரவை – 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
- முந்திரி, திராட்சை – சிறிதளவு
- நெய் – 1 ஸ்பூன்
செய்முறை:-
1) 1/2 லிட்டர் பாலை முதலில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
2) அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும்
3) அடுப்பை நிதானமான தீயில் வைக்கவும். இந்த சர்க்கரையில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.
4) நிதானமாக சர்க்கரையை கிளறி விட்டுக் கொண்டே இருந்தால் சர்க்கரை இளகி தேன் போல மாறி விடும்..
5) அதில் இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும், இது தான் கேரமல்
6) இந்த கேரமலில் காய்ச்சிய பாலை சேர்த்து, அதனுடன் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் மற்றும் மீதியுள்ள 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
7) அடுத்து இதில் சிறிதளவு அரிசிமாவை பாலில் கரைத்து கட்டிகளில்லாமல் விடவும்.
8) அரிசிமாவுக்கு பதில் ரவை சேர்ப்பதாக இருந்தால் ரவையை வறுத்துச் சேர்க்கவும்.
9) அரிசிமாவோ (அ) ரவையோ சேர்த்ததும் கேரமல் பாயசம் சற்றே கெட்டியாக மாறிவிடும்.
10) பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கி நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
சுவையான, எளிதான கேரமல் பாயசம் தயார். உங்கள் வீட்டிலும் கட்டாயம் செய்து பாருங்கள்.
அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நட்புடன்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்
GIPHY App Key not set. Please check settings