எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பாஸ்கரன் என்னவோ தீவிரமாகத்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் காமாட்சி ஒருபுறம் சந்தேகம். பயமும் கூட இருந்தது, காரணம், ஒவ்வொரு செமஸ்டரிலுமே அவன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் அரியர்ஸ் வைத்துக்கொண்டுதான் வந்திருக்கிறான். ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அடுத்த செமஸ்டரில் அந்த சப்ஜெக்டுகளில் பாஸாகி விடுவான். ஆனால் அவனது துரதிர்ஷ்டம் வேறு புதிய பேப்பர்களில் கோட்டை விட்டுவிடுவான்.
இப்போது எழுதப்போவது கடைசி செமஸ்டர். ஏற்கனவே இரண்டு பேப்பர்களில் அரியர்ஸ் வைத்திருக்கிறான் அவன். புத்தகங்களைத் திறந்து வைத்துக்கொண்டு படிக்கிறேன் பேர்வழி என்று கடைசி செமஸ்டரிலும் ஏதாவது புது அரியர்ஸ் வைத்துவிட்டால் எப்படி என்பதுதான் அவளது பயம்.
காமாட்சி பிளஸ் டூதான் படித்திருக்கிறாள். அவளது கணவரும் டிப்ளோமா படித்துவிட்டுதான் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறார்.. குடும்பத்தில் இவனையாவது முதல் பட்டதாரியாக்கிவிடவேண்டும் என்று ஒரு ஆசை அவர்களுக்கு..
எல்லோரும் பட்டம் வாங்கும்போது மேடையில் நின்றுகொண்டு அவன் பட்டம் வாங்குவதை கண்குளிர பார்க்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள் காமாட்சி. ஒவ்வொரு செமஸ்டரிலுமே அரியர்ஸ் வைத்து வைத்து பாஸாகிக் கொண்டிருப்பவனை எப்படி நம்புவது. யோசித்தாள்… யோசித்தாள்.
ஒரு தடவை அவளது நண்பி சுந்தரியிடம் சொல்லி புலம்பும்போதுதான் அவள் மூலம் ஒருவரது தொடர்பு கிடைத்தது. அவரை வைத்து பாஸ்கரின் பேப்பர்கள் யார் கைக்கு போகிறது என்று பார்த்து பணம் கொடுத்து பாஸ் போடச் சொல்லி விடலாம் என்றாள் காமாட்சி.
குறுக்கு வழிதான், ஆனாலும் மகன் நிலுவை வைக்காமல் பாஸாகி மேடையில் பட்டம் வாங்குவதை கண்குளிர பார்க்க வேண்டுமே என்ற கவலைதான் அவளை அப்படி யோசிக்க வைத்தது.
ஒருநாள் கணவரிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னாள் அவள் மணிமாறனோ முறைத்தார். கூடவே சத்தமும் போட்டார்.
‘ யாரோ ஏதோ சொன்னால் எல்லாவற்றையும் நம்பிவிடுவதா… எந்த ஆளிடம் எந்த பேப்பர் போகும் என்று எப்படி கண்டுபிடித்து சொல்லுவார்கள். எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது. யாருடைய பேப்பர் யார் கைக்கு போகிறது என்றெல்லாம் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். அவரை மடக்குவது, பணம் கொடுத்து பாஸ் போடுவதெல்லாம் சுத்த ஹம்பக். நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை யாரோ தின்ன நான் சம்மதிக்க மாட்டேன்… அவன் ஒழுங்காய் படித்து ஒழுங்காய் பரீட்சை எழுதட்டும். எல்லலம் பாஸாகிவிடுவான். அவனிடமும் இது பற்றி நீ எதுவும் சொல்லவும் சொல்லாதே… அப்புறம் அப்பா அம்மா பணம் கொடுத்து பாஸ் போடச் செய்துவிடுவார்கள் என்று நம்பிக்கொண்டு படிக்காமல் விட்டுவிட்டு, கடைசியில் முதலுக்கே மோசமாகிவிடக் கூடாது, பார்த்துக் கொள். ‘ என்று பயமுறுத்தி வைத்தார்.
காமாட்சிக்கும் தெரியும், அவர் இந்தமாதிரி குறுக்கு வழிகளுக்கெல்லாம் போகமாட்டாரென்று. யாருக்கும் பார்த்து பார்த்துதான் செலவு செய்வார். பத்து ரூபாய் கூடுதலாக கொடுக்கமாட்டார்.
கணவனிடம் அழுதாள். ‘ நீங்கள் பணம் கொடுக்காவிட்டால் பரவாயில்லை. என் வளையல்களை கொடுக்கிறேன்… அடமானம் வைத்து பணம் வாங்கிக்கொண்டு வாருங்கள். சுந்தரியிடம் கொடுத்து அந்த ஆளிடம் பணத்தைக் கொடுத்துவிடலாம். ஐம்பதினாயிரம் கொடுத்தால் எல்லா பேப்பரையுமே பாஸ் போட்டுவிடுவார்களாம்… என் பிள்ளை மேடையில் பட்டம் வாங்குவதை நான் கண்குளிர பார்க்கவேண்டும் ‘ என்றவள், ‘ நம் பிள்ளையின் எதிர்காலமே இப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது ’ என்று சொல்லிவிட்டு மூக்கைச் சிந்தினாள்.
அவரோ சிரித்தார். ‘ சரி சரி… உடனே கண்ணைக் கசக்காதே… வளையலை அடமானம் வைத்து பணத்தை கொண்டுபோய் நானே காமாட்சியிடம் கொடுக்கிறேன். அது என் பொறுப்பு… ஆனால் இந்த விஷயம் எந்தக் காரணம் கொண்டும் பாஸ்கருக்குத் தெரியக் கூடாது… காமாட்சியிடமும் நீ எதுவும் இதுபற்றி பேசவேண்டாம். யாரிடமும் வாய் திறந்தும் விடாதே. ரகசியமாக இருக்கட்டும்….’ என்றார் அவர்.
மகனையும் கூப்பிட்டு தனியாகச் சொல்லிவிட்டார், ‘ பாரடா… உங்க காலேஜ்ல கேம்பஸ் செலக்ஷன் முதல் தடவையா வருதாம். நீ ஒழுங்கா, கண்ணும் கருத்துமா படிச்சி பாஸாகனும்… உன்னை விட்டுடக்கூடாதுன்னு கம்பெனிக்காரன் யோசிக்கனும்… யார்கிட்டேயாவது ட்யூஷன் போகனுமா போய்க்கோ… பணம் தர்றேன்… நல்ல படிக்கற பையன்களோட க்ரூப் டிஸ்கஷன் பண்ணு… மாடி ரூமை வேணுமானா தயார் பண்ணிக்கொடுத்துடறேன்… உன் மொபைலுக்கு இனிமே ரீசார்ஜ் கிடையாது. டி.வி. ஆப் பண்ணிடுவேன். கேபிள் கட் பண்ணிடுவேன். படிப்பு… படிப்பு… படிப்புதான் இனிமே உனக்கு. அம்மா சொல்லியிருக்கா, நீ மேடைல பட்டம் வாங்கற போட்டோவை பெரிய சைஸ்ல பிரேம் போட்டு ஹால்ல மாட்டனுமாம். இது எங்களோட ஆசை மட்டுமில்லை, கட்டளையும் கூட… ’
மாடி ரூம் தயாரானது. நன்றாக படிக்கும் இன்னும் மூன்று மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டான். டீ.வி. மொபைல் எல்லாவற்றையும் விட்டு தூரமானான்.
காமாட்சியும் அவனுக்குத் தேவையானவைகளை பார்த்து பார்த்து செய்து கொடுத்தாள். டீ காபி போட்டுக் கொடுத்தாள். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிவிட்டாள். வீட்டிற்காக எந்த வேலையையும் அவனை செய்யவிடாமல் பார்த்துக் கொண்டாள். பரீட்சை முடியும் வரை அவனுடன் எந்த சண்டை சச்சரவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று பிளஸ் டூ படிக்கும் தன் மகளுக்கும் அறிவுரை சொன்னாள்.
பரிட்சைக்கு ஒருமாதம் முன்பே கேம்பஸ் செலக்ஷன் நடந்தது. பாஸ்கருக்கு ஒரு கம்பெனியில் வேலைக்கான ஆர்டர் கொடுத்தார்கள். வருடத்திற்கு ஐந்து லட்சம் சம்பளம். ரொம்பவும் சந்தோசப் பட்டார்கள் காமாட்சியும் மணிமாறனும்.
‘ இது முடிவல்ல… உன் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆரம்பம்… பத்து நாளில் பரீட்சை. கவனமாய் படித்து பரீட்சை எழுதி எல்லாவற்றிலும் அதிக மார்க் எடுக்கவேண்டும்… ‘ என்றார்கள் அவர்கள்.
‘ நீ முழு மூச்சாய் படிக்கிறாய், நிச்சயம் பாஸாவாய், பட்டம் பெறுவாய்… ‘ என்று நல்வார்த்தைகள் சொல்லி தட்டிக்கொடுத்தார் மணிமாறன்.
கணவனிடம் காமாட்சி ரகசியமாய் சொன்னாள், ‘ பணம் கொடுத்தாச்சுல்ல, கண்டிப்பா பாஸ் போட்டுவாங்க, கவலையை விடுங்க… ‘ சிரித்துக் கொண்டார் அவர்.
ரிசல்ட் வந்தது. எல்லா பேப்பர்களிலுமே பாஸ். சென்னைக்குப் போய் வேலையிலும் சேர்ந்துகொண்டான்.
முதல் மாத சம்பளமாய் நாற்பத்தைந்தாயிரம் அப்பாவுக்கு அனுப்பினான் பாஸ்கரன். ‘ ஏங்க கையிலும் கொஞ்சம் பணம் இருக்குன்னு சொன்னீங்க. இருக்கற பணத்தைக் கட்டி, நகை மீட்டுக் கொண்டு வந்திடுங்க ‘ என்றாள். சிரித்துக் கொண்டே உள்ளே போனார் மணிமாறன். சிலநொடிகளில் திரும்பி வந்தார், கையில் இரண்டு கவர்கள். பிரித்துக் காட்டினார். ஆவலுடம் உற்று பார்த்தாள்.
ஒன்றில் அவள் அடமானம் வைக்க கொடுத்த வளையல். இன்னொன்றில் புது வளையல்கள்.
‘ இவ்ளோ பணத்துக்கு என்ன பண்ணுனீங்க… எப்படி நகையையும் மீட்டு, புது நகையும் வாங்குனீங்க… ‘ என்று வாய்பிளந்தாள்.
சிரித்தார் அவர். ‘ அடமானம் வைச்சாத்தானே திருப்பறதுக்கு. நான் அடமானமே வைக்கலை. அவன் பாஸாகிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதனால காமாட்சிக்கிட்டே பணமே தரலை. ஒருவேளை நீ கேட்டா பணம் கொடுத்தாச்சுன்னு மட்டும் சொல்லிடுங்கனு அவங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிட்டேன்… நீ பணத்து மேல நம்பிக்கை வைச்சே… நான் அவன் மேல நம்பிக்கை வைச்சேன்… இப்போ பணச் செலவும் இல்லை. புது வளையலும் வந்தாச்சு… ’ என்றார்.
முதலில் அவர் ஏமாற்றிவிட்டதாக கோபித்துக்கொண்டாலும் பிறகு மெல்ல மெல்ல கலகலப்பாகி விட்டாள் அவள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
Honesty is the best policy