in ,

அவர்கள் சிரிக்கட்டும் (சிறுகதை) – ஜெயந்தி.M

தொடர்ந்து வரும் கூட்ட மிகுதியால் அந்தப் பேருந்து அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. எதற்கெடுத்தாலும் அவசரம், எங்கும் எதிலும் அவசரம்! நின்று கேட்கவோ, ஏன் என்று விசாரிக்கவோ நேரம் இல்லாத வாழ்க்கை விநோதங்கள்.

இன்டர்நெட்டைப் போலவே சுற்றும் இதயங்களே தவிர மனித நேயத்திற்கு இடமில்லா துடிப்புகளின் சப்தம். மணிப்பூர் கலவரம், பக்கத்து வீட்டுப் பிரச்சனை, குடிநீர்க் குழாய் குழப்பங்கள், சின்னத்திரையில் வரும் கதைகளுக்கான பெரிய பெரிய விமர்சனங்கள் என்று அந்தப் பேருந்துப் பயணம் பிஸியாகிக் கொண்டு இருந்தது.

“நான் தான் முதலில் எடுத்தேன் எனக்குக் கொடு”

“இல்லை, இல்லை நேற்று அம்மாதான் எனக்கு இதை வாங்கித் தந்தார்கள் இது எனக்குத் தான்” எனும் அடுத்த குழந்தையின் அழுகை என்று இரு குழந்தைகளும் போட்டி போட்டுக் கொண்டு அழுவதும் பிறகு சிரிப்பதும் என்று அந்தப் பேருந்துப் பயணிகளின் பார்வையை  ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.

“சரி சரி விடுங்க கண்ணுங்களா பிறகு வாங்கிக்கலாம்” என்று ஆசுவாசப்படுத்தும் பக்கத்து சீட் பாட்டி என்று பயணிகளைச் சுமந்து தூரத்தைத் தன் புகையினால் துரத்திக் கொண்டிருந்தது அந்தப் பேருந்து.

அடுத்த நிறுத்தம்  சேரன்மகாதேவி.

கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு மேலே ஏறினாள் பிரகாசினி. எப்படியோ நிற்பதற்கு இடம் கிடைத்தால் போதும் என்பதே அவளின் தேவையாக இருந்தது.

பத்து நிமிடங்களில் அந்தப் பேருந்துச் சூழல் அவளுக்கும் பழகி விட்டது. எவ்வளவு கஷ்டப்பட்டு அவள் ஜெயனைப் பிரசவித்திருப்பாள்! அன்னிக்கு மட்டும் அந்த டாக்டரம்மா மகிழினி இல்லேன்னா இன்னிக்கு நான் தான் ஏது? என் மகன் தான் ஏது? என்று பேருந்தின் பிற குழந்தைகளைப் பார்த்த போது தன் வீட்டு வாலு ஜெயனையும் நினைத்துக் கொண்டாள் பிரகாசினி.

கூடவே டாக்டர் மகிழினியையும் மனதில் நினைத்து நன்றி சொல்லிக் கொண்டாள் அவள். அந்த அம்மாவுக்கு இப்படி ஒரு நிலையா என்று பதட்டமும் வேதனையும் அவளின் மனதை ஆட்கொண்டிருந்தது.

சற்று நேரத்தில், எல்லோரையும் போலவே அவளது கவனமும் அந்தப் பேருந்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்த இரு குழந்தைகள் மீது படர்ந்தது. என்ன ஒரு தொல்லை பிடிச்ச பசங்க, கண்டிக்க யாரும் இல்லை போல்! ஐந்தில் வளையாதது எப்படி ஐம்பதில் வளையும் என்று அவளும் பிற பயணிகளைப் போலவே முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

ஏன் சார் உங்க பிள்ளைகளைக் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணக் கூடாதா? எவ்வளவு ஆட்டம் போடுறாங்க? கேட்ட பயணிகளிடம் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துக் கொண்டிருந்தார் பிரகாசன்.

‘இதுங்கள எல்லாம் வீட்டிலேயே அடக்கி வளர்க்கணும்’ என்று ஆளாளுக்கு நீதிபதியாக மாறி அந்தக் குழந்தைகளின் தந்தைக்கும் தாய்க்கும் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள் பயணிகள்.

அவர்கள் சிரிக்கட்டும் விளையாடட்டும் பரவாயில்லை என்று கண்டு கொள்ளாமல் இருந்தான் பிரகாசன். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது.

குழந்தைகளோடு எப்போது இந்த ஆள் இறங்குவான்னு பார்த்துக் கொண்டிருந்த பயணிகளின் மத்தியில் அவர்களை எல்லாம் விலக்கி விட்டு முன்னேறிச் சென்றாள் பிரகாசினி. மெல்ல அவள் பிரகாசனிடம் பேச்சுக் கொடுக்க எத்தனித்தாள்.

ஏற்கெனவே காலையில் கேட்டிருந்த செய்தியால்  பாதிக்கப்பட்டிருந்த அவளால் இப்போது எதுவும் பேச முடியவில்லை தான். தன் மகனைத் தனக்கு மீட்டுத் தந்த டாக்டரம்மாவுக்கா இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று மனதிற்குள் அங்கலாய்த்தாள். மருத்துவர் மகிழினியின் மரணம் அவளின் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது.

“சார் உங்க குழந்தைகளைக் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணலாம் தானே! எல்லோரும் தொல்லையா  நெனெக்குறாங்க இல்லையா?” என்று கேட்டவளிடம்

“நீ சொல்றது சரி தான் மா, அவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். என் மனைவி  இறந்து விட்டாள். என் குழந்தைகளுக்கு அது தெரியாது. அவர்களிடம் இந்தச் செய்தியை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு அந்த மனவலிமை இல்லை” என்று அழுதார். “இவர்கள் இன்று மட்டும் தானே சிரிப்பார்கள். சிரிக்கட்டும் என்று தான் நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக வருகிறேன்” என்று சொல்லிக் கண்களைக் கசக்கி அழுகையை மறைத்தார் அந்தக் குழந்தைகளின் தந்தை பிரகாசன்.

இப்போது பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அந்தக் குழந்தைகளின் மீது பரிதாபம் வந்தது. பிரகாசினி அவர்களோடு சேர்ந்து அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க விழைந்தாள்.

அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது.

“மூன்றுலாம்பு எல்லாம் கீழே இறங்குங்க” என்ற நடத்துநரின் குரல் கேட்டுக் கீழே இறங்கினாள் பிரகாசினி. இறங்கியவள் திரும்பினாள். அவளோடு சேர்ந்து அந்தப் பிரகாசனின் குடும்பமும் கீழே இறங்கியது.

எப்படியோ விசாரித்துத் தனக்கும் தன் மகனுக்கும் உயிர்ப்பிச்சை அளித்த மருத்துவர் மகிழினியின் வீட்டைக் கண்டுபிடித்து விட்டாள் பிரகாசினி. எப்படி இப்படி இறந்தார் மருத்துவர் மகிழினி என்ற பிரகாசினியின் கேள்விக்கு விபத்தில் தான் என்பது பதிலாக வந்தது.

மனதில் வலி கூடியது. அழுது கொண்டே இருந்தாள். திடீரென்று அழுகுரல் அதிகமாகியது. அவள் அங்கே  கண்ட காட்சி அதிர வைத்தது. அங்கே பேருந்தில் அவளோடு பயணம் செய்த பிரகாசன் அவனது பேருந்தின் தொல்லைக் குழந்தைகளோடு கதறி அழுதபடியே வீட்டை அடைந்தான்.

பிரகாசன் மற்றும் அந்தக் குழந்தைகளின் வீடு தான் அது எனவும் மருத்துவர் மகிழினி தான் அந்தப் பிள்ளைகளின் அம்மா மற்றும் பிரகாசனின் மனைவி என்பதையும் புரிந்து கொண்டாள் அவள்.

மருத்துவர் மகிழினி மற்றும் அவர்களின் குடும்பம் பிள்ளைகளின் நிலை எண்ணி மனம் வருந்தினாள் பிரகாசினி. மனதின் சுமை கூடியது.

“அம்மா பாரு” என்று தன் இரண்டாவது மகளிடம் மகிழினியைக் காட்டிய பிரகாசனின் குழந்தையை அவன் கையில் இருந்து வாங்கிக் கொண்டாள் பிரகாசினி. இப்போது அவள் மீண்டும் அழுதாள். சின்னப் பிள்ளைகள் தானே அவர்கள் அழ வேண்டாம். சிரிக்கட்டும்” என்று சொல்லி அழுதாள் பேருந்தில் தொல்லை என்று முகம் சுளித்த அந்தக் குழந்தைகளை அள்ளி அணைத்த படியே!

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆன முதலில் அதிகம் செலவானால் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

    சவுண்டம்மா… (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.