ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
காலை வேளை. மரங்களில் குயில்கள் கூக்கூ என்று ராகம் பாடியது. பறவைகள் இரைகளை தேடி படபடத்து பறந்து கொண்டிருந்தது. .
கொண்டையம்மா – அலுமினிய அகல பாத்திரத்தில் பால் பாக்கெட்டுகளை அடுக்கி சுமந்து வீடு வீடாக பால் பாக்கெட் போட்டு விட்டு முறைவாசல் செய்துக் கொண்டிருந்தாள்.
அந்த தெருவில் மார்கழி மாதத்தின் கோலங்களால் ஒவ்வொரு வீட்டு வாசலும் கொள்ளை அழகு கொண்டு காட்சியளித்தது. அழகான வண்ண வண்ண கோலங்களால் அசத்துவாள் கொண்டையம்மா.
இவள் எல்லோர் வீட்டின் முறைவாசல் செய்பவள். பொழுது விடியும் போதே வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டு அலங்கரித்து விடுவாள்.
கடைசியாக ஒரு வீடு பாக்கி இருந்தது. சோர்ந்து போனதால் குளிரால் நடுங்கியது அவள் உடம்பு. சூடாக காபிக் குடித்தால் இதமாய் இருக்கும் என்று எண்ணினாள். சரோமாவின் வீட்டு கதவை தட்டினாள்.
“அம்மா…… அம்மா…..“
“நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன் காலங்காத்தாலே உன் அவலட்சணம் பிடித்த முகத்தை காட்டாதேனு. உன் மூஞ்சியை பார்த்தா இன்னிக்கு பொழுது நல்லா போகும் போ……” என்றாள் சரோமா.
“இல்லைமா ஒரு வாய் காப்பி தண்ணி தாயேன்” என்று கெஞ்சினாள் கொண்டையம்மா.
“காபியா? பில்டர்லே டிக்கஷன் இறங்குதோ இல்லையோ நீ வந்துடாறே. இன்னும் அய்யாக்கே காபிக் கொடுக்கலே” என்று சொல்லி விட்டு கதவை மடார் என்று சாத்தி விட்டாள் சரோமா.
கொண்டையம்மா, 65 வயது, கருமையான நிறம். பல வருடங்களாக எண்ணெய் விடாத செம்பட்டையான முடி. அழுக்கடைந்த தேகம், கீழிசலான புடவை, முன் பற்கள் ஆறு தாவக்கட்டை வரை நீட்டியிருக்கும்.
தோய்ந்து போன கண்கள், ஆயிரம் சுருக்கங்கள் முகத்தில் தெரிந்தன. ஆனால் ஊருக்கு உழைப்பவள், பொறுமைசாலி, அன்பான குணம். எவ்வளவு ஏசினாலும் எதிர்த்து பதில் சொல்லத் தெரியாத அப்பாவி இந்த கொண்டையம்மா.
எல்லோரும் இவளை முதுகுக்கு பின்னால் அவலட்சணம் என்றே அழைப்பார்கள். அதில் சிலரே “கொண்டம்மா” என்று சுருக்கமாக அழைப்பார்கள்.
கொண்டம்மாவுக்கு ஊரு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. இந்த தெருவில் இருக்கும் பள்ளிக்கூடத்துல ஒரு நாள் மழைக்கு படுத்துக் கொள்ளவே அந்த பள்ளி நிர்வாகி பாவம் பார்த்து ஆயாவாக வேலைக்கு வைத்துக் கொண்டார்.
ஆயா வேலை மட்டுமில்லை பால் போடுவது, முறைவாசல் செய்வது, மின்சார கட்டணம் காட்டுவது, மார்க்கெட் போவது என்று எல்லா வேலைகளும் செய்வாள். அதுக்கு மாறாக இவளுக்கு வீட்டுக்கு ஐம்பது ரூபாயும், பழையதும் தருவார்கள். மறுபேச்சு இல்லாமல் வாங்கி கொள்வாள்.
புதிதாக குடிவந்தாள் ரேவதி. இந்த பள்ளிக்கூடத்தில் டீச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வந்த முதல் நாள் விடியல் வேளையில் கொண்டம்மாவைப் பார்த்து பயந்தே போனாள் ரேவதி டீச்சர். அவங்க பேசும் விதம், செய்யும் வேலை எல்லாம் பிடித்துப் போகவே கொண்டம்மாவுக்கு சாப்பிட மீச்சமான உணவை வீணாக்காமல் கூப்பிட்டு தட்டில் வைத்து கொடுத்து விடுவாள்.
பள்ளியில் வேளைக்கு சரியாக மணியடித்து விடுவாள். குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்கும் வரை நகரமாட்டாள்.
ஒருநாள் ரேவதி டீச்சர் அவளின் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடத்திற்கு அந்த தெருவில் இருக்கும் அனைவரையும் அழைத்தாள். எல்லோருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது.
அப்போது கொண்டையம்மா உள்ளே வரவும், “ஆயா, இங்கே எதுக்கு வந்தே நாங்க சாப்பிட்ட பிறகு இலை எடுக்கற வேலை தான். இப்போ போ” என்று அதட்டினாள் சரோமா.
“ஆயா வா… இந்தா நீங்களும் உட்காருங்க” என்றாள் ரேவதி.
“டீச்சர் இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. இந்த அவலட்சணம் புடுச்ச மூஞ்சிய எங்களோடு சமபந்தியில உட்கார வைக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லை. முதலே இங்கிருந்து போக சொல்லு இவளை” என்றாள் சரோமா.
“பாவம் அவங்கள நான் தான் கூப்பிட்டேன். அவங்களும் மனுசிதானே. எவ்வளவு வேலை செய்யறாங்க, ஒரு வாய் சுடு சோறு தரக்கூடாதா?” என்றாள் ரேவதி.
“சாப்பாடு யார் தரக்கூடாதுனு சொன்னா, இங்கே எங்க முன்னாடி உட்கார வைக்க வேண்டாம்னு தானே சொல்றேன். அவளை விரட்டியடி” என்றாள் இரக்கமின்றி சரோமா.
தன் வீட்டு விசேஷம் என்று அமைதியாக இருந்தாள் ரேவதி. பசியோடு வந்த ஆயாவுக்கு வெறும் வயிற்றோடு போனதை பார்த்த ரேவதிக்கு மனது சங்கடமானது. எவ்வளவு சொல்லியும் கொண்டம்மா உட்காரவில்லை.
“ஆமா ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்றார்கள் சிலர். பந்தி முடிந்ததும் ரேவதி இலையில் சோற்றை போட்டு பதார்த்தங்கள் வைத்து எடுத்துச் சென்றாள் கொண்டம்மாவை தேடி.
கொண்டம்மா பசியால் வயிறும் உடலும் சுருண்டு போய் படுத்துக் கொண்டிருந்தாள்.
“ஆயா……இந்தா சாப்பிடுங்க……”
“எதுக்குமா நீங்களே எடுத்துட்டு வந்தீங்க? நான் அப்புறம் வரலாம்னு தான் இருந்தேன்மா”
“இருக்கட்டும் நீங்க முதல சாப்பிடுங்க. ஆயா, உங்களுக்கு யாரும் உறவுகாரங்க இல்லையா?”
“எனக்கு குழந்தை இல்லை புருஷன் சிறுவயசில செத்துட்டார். சொந்தம் சொல்லிக்க யாருமில்லை. கோயில் கோயிலா சுத்திட்டு இருந்தேன். இந்த ஸ்கூல ஆயா வேலை செய்யறியானு கேட்டாங்க. நானும் தலையாட்டினேன்” என்று சொல்லிக் கொண்டே இலையில் இருந்த பலக்காரங்களை ருசித்தாள்.
“இவ்வளவு வேலை செய்யறீங்க அப்புறம் ஏன் உன்னை இப்படி பேசறாங்க?”
“அது என்னோட அவலட்சணாமாக முகத்தை பார்த்து திட்டறாங்க. நான் லட்சணமா இருந்தா இப்படியெல்லாம் பேச மாட்டங்க. எனக்கு ஊரும் இல்லை உறவும் இல்லை முகத்துல லட்சணத்தையாவது கொடுக்கலாம்லே, அதுலேயும் குறைய வச்சான் அந்த கடவுள்” என்று அவளின் குறையையும் நிறையவாக புன்னகையோடு சொன்னாள்.
“முகத்துல லட்சணமில்லைனா என்ன? உங்க உடம்புல இந்த வயசுலேயும் தெம்பையும், சுறுசுறுப்பையும் கொடுத்திருக்கிற கடவுளுக்கு நன்றி சொல்லுங்க”
“ஆயிரம் பேச்சு இவங்க பேசினாலும் ஏசினாலும் என் சொந்தம் உறவு எல்லாம் இவங்க தான்” என்ற கொண்டாம்மாவின் குணத்தை நினைத்து ஆச்சரியப்பட்டாள் ரேவதி.
மறுநாள்
“ஏய் கொண்டம்மா, இங்கே வா. இந்த பையிலே பலகாரங்கள் இருக்கு, என் மகள் வீடு தெரியும்லே, அவளுக்கு போய் கொடுத்துட்டுவா”
“இப்பவா மா? நேரமாச்சு இருட்டிடுமே, எனக்கு மாலையில் கண் சரியா தெரியாது”
“இருட்டறதுகக்குள்ளே போய்ட்டு வா, அவளுக்கு பலகாரம் கொடுத்து விடறேனு சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டு பத்து ரூபாயை கையில் கொடுத்தாள் சரோமா.
கொண்டம்மா மெல்ல மெல்ல சென்று நடுவில் வந்த ரயில் தண்டவாளத்தை கடந்து சென்றாள். பலக்காரங்களை கொடுத்துவிட்டு திரும்பும் போது நல்லாவே இருட்டி போனது.
கொண்டம்மாவின் கண்கள் வெளிச்சத்தால் கூசிப் போனது. மெல்ல தடவி தடவி நடந்தாள். தண்டாவளத்தை கடக்கும் போது ரயில் வருவதை அறியாமல் நடந்தாள். அந்த விபரீதம் நடந்தது. ரயில் மோதியதால் தூக்கி எறியபட்டாள்.
ரயில்வே போலீஸ் வந்து விவரத்தை அறிந்து அந்த ஸ்கூலின் தலைமையிடம் விஷயத்தை சொன்னது.
“பாடியை வாங்கிறீங்களா இல்லை அநாதை பிணமா” என்றது போலீஸ் தரப்பில்.
“ஆமா அநாதை தான், இந்த ஸ்கூல ஆயா வேலை பார்க்கறா” என்றார் ஸ்கூல் தலைமை ஆசிரியர்.
“ஆமாம்மா, ஏற்கனவே அவலட்சணம், இதுல ரயில் மோதின உடலை வேற பார்க்கணுமா?” என்று மனதிற்குள் முணுமுணுத்தாள் சரோமா
“நமக்கு ஏன் ஊர் வம்பு எங்களுக்கும் அந்த ஆயாவுக்கும் சம்பந்தம் இல்லை” என்று அக்கம்பக்கம் இருந்தவர்கள் சொல்லிவிட்டு நழுவினார்கள்.
“ஒண்ணு பண்ணலாம், நாங்க கொஞ்சம் பணம் தர்றோம், அவளை அங்கேயே அடக்கம் பண்ணிடுங்க” என்றார் சிலர்.
“நீங்க எதுவும் செய்ய வேண்டாம், சொன்னதே போதும். அவங்கள நான் அடக்கம் பண்ணிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் ரேவதி.
எல்லா காரியங்களையும் நின்று செய்து விட்டு வீட்டுக்கு வந்து தலைமுழுகி கண்ணீர் விட்டு அழுதாள், ஈவு இரக்கமில்லா மனிதர்களை நினைத்து.
மறுநாள் பொழுது விடிந்தது. வீட்டு வாசலில் கோலங்கள் இல்லாமல், அந்த தெருவே அவலட்சணமாய் காட்சியளித்தது.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
Arumaiyaana poruL athigam uLLadakkiya kathaiyaagum. Kathaiyin aasiriyar…”Yaasmin Begam” avarGaLukku miguntha paaraattukkaLkku uriyavar. ‘REvathiyin’ uLmanaththiliruntha ezhumbiya choRkaL avaL mananilaiyaith thulliyamaaga prathibalikkinRathu. ‘BEgam’ avarGaLukku miguntha paaraattukkaLaich cholvathil maghizhchchi adaiGinREn.
“M.K. Subramanian.”
100, Juliet Court:
Chapel Hill, N.CarOlina,
USA.