பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வருடம் 1976
‘ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி, மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி, முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி, அவளொரு பைரவி…’ என்ற பாடல் வானொலியில் ஒலிக்க, தன் மனதை திசை மாற்ற எண்ணியவளுக்கோ, மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வேலை முடிந்து வந்த ஈஸ்வரன், அவளின் மாறா தோற்றத்தை கண்டு ஒரு முடிவுடன் அவளிடம் சென்றான்.
திருமணம் முடிந்து தன் தாய் வீட்டிற்கே வந்த தம்பதிகளை திருப்தியாக ஆரத்தி சுற்றி வரவேற்றார் சௌந்தராம்பாள். எந்தவித சந்தோஷமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத மகளை இன்னமும் முறைத்துக் கொண்டு கண்களாலே பாஷை பேசினார்.
வசந்தி, சௌந்தராம்பாவின் ஒரே மகள். பெண்ணை வெளியார்க்கு கட்டிக்கொடுக்க விருப்பம் இல்லாதவர், தன் உடன் பிறந்த தம்பியான ஈஸ்வரனுக்கே திருமணம் முடித்து வைத்தார்.
சிறு வயதிலே பெற்றோரை இழந்த ஈஸ்வரனை அக்காவும் மாமாவும் வளர்த்து படிக்க வைத்தனர். அவர்களின் ஆதரவால் வளர்ந்தவன், நன்கு படித்து முடித்து இன்று அரசாங்க பணியில் வேலை புரியும் பொறுப்பான இளைஞன்.
சில வருடங்களுக்கு முன்பு அக்காவின் கணவரும் இறந்து விட, அக்காவின் குடும்பத்திற்கு தூணாக இருந்து வருகிறான்.
வசந்தி ஈஸ்வரனை விட பத்து வயது இளையவள் என்ற போதும், அக்காவின் கட்டளையை மீற மனமில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தான். பி.யூ.சி. படித்த கையோடு திருமணமும் முடிந்து விட்டது வசந்திக்கு.
மாமியார் என்ற ஸ்தானத்தில் பாட்டி இல்லாததால், நாத்தனாருக்கு நாத்தனார், மாமியாருக்கு மாமியார், அதை விட எப்பொழுதும் கண்டிப்பான அம்மா என்று மூன்று அவதாரத்தில் நின்று கொண்டிருந்தார் சௌந்தராம்பாள்.
இன்றோடு திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆயிற்று. ஆனால் வசந்தியின் கண்ணீரை மட்டும் அந்த இரவின் மொட்டை மாடியும் அவளின் இணைப்பிரியா தோழியான வானொலிப்பெட்டியும் எவ்வளவு சமாதானம் செய்தும் அவள் கேட்கவில்லை.
பிறந்தது முதல் வசந்தியை கொஞ்சி வளர்த்தவனின் மனதில், இன்னமும் அவள் ஒரு குழந்தையாகவே தெரிந்தாள். ஒரு மாதம் முன்பு வரை “மாமா மாமா” என்று சுற்றி வந்த துறுதுறு பெண்ணை, கல்யாணம் என்ற பந்தத்தில் அடைத்து அவளை தொலைத்துவிட்ட ஒரு குற்றஉணர்ச்சியும், அவள் இப்படி தினமும் அழுவதையும் காண முடியாமல் அன்று அவளிடம் பேச எண்ணினான்.
“வசந்தி” என்று மெல்ல அழைத்தவனின் முகம் பாராமல் கண்ணீரை துடைத்துக்கொண்டு நின்றவளிடம்
மீண்டும், “உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு தெரியும், அதுக்காக எவ்வளவு நாள் அழுதுகிட்டே இருப்ப. என்கிட்ட எதுவா இருந்தாலும் மனசை விட்டு பேசு, அப்பதான் என்னாலையும் உனக்கு உதவ முடியும். உனக்கே தெரியும் என்னால அக்கா பேச்சை மீற முடியாது, அவ எனக்கு அம்மாவும்’ என்று சொல்லிவிட்டு நகர முற்பட்டவனை
“மாமா ஒரு நிமிஷம்” என்றாள் வசந்தி.
ஒரு மாதத்திற்கு பிறகு இப்பொழுது தான் மீண்டும் ‘மாமா’ என்றைழைக்கிறாள்.
சில நொடி மௌனத்திற்கு பிறகு தயங்கிக்கொண்டே, “எ… எனக்கு மேல படிக்கணும் மாமா. அம்மாகிட்ட சொல்லி நீங்க தான் அனுமதி வாங்கித் தரணும்” என்றாள்.
அதை கேட்டவனின் இதழ் புன்னகைத்தது, “அவ்வளவு தானே, உன்னோட படிப்புக்கு நான் பொறுப்பு. டைப் ரைட்டிங் கிளாஸ் போயிட்டிருந்தியே, ஹையர் முடிச்சிட்டியா? ஷார்ட் ஹாண்ட் கிளாஸ்க்கும் வேணா சேர்ந்துக்கோ” என்றதும்
அவசரமாக, “இல்லை மாமா நான் டைப்பிங் பாஸ் பண்ணிட்டேன், டைலரிங் போறேன்” என்றாள் வசந்தி.
“சரி” என்றவன், அவளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய அக்காவிடம் பேசி சம்மதம் வாங்கியவன், மறுநாளே சென்னையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரில் ஒன்றில் சேர்க்கை படிவம் வாங்கி வந்து அவளிடம் கொடுத்து, விருப்பமான பட்டப்படிப்பை தேர்வு செய்ய சொன்னான்.
பி.ஏ. எகானாமிக்ஸ்-யை தேர்ந்தெடுத்தவள், மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷம் அடைந்தாள். அதற்காக அவள் மாமாவிடம் மனதார நன்றியையும் கூறினாள். நாட்கள் இப்படியே உருண்டு வருடங்கள் ஆயின. இருவருக்குள் நட்பு, தாமரை இலை தண்ணீர் போலவே இருந்தது.
“இங்க பாரு ஈஸ்வரா… நீ சொன்னியேனு தான் படிக்க அனுமதி கொடுத்தேன். அவளை இன்னும் நீ குழந்தையா பார்க்காம உன் மனைவியா பாரு. இந்த வருஷம் தான் படிப்பு முடியுதுல. அவளுக்கு நான் நல்லது சொன்னாதான் பிடிக்காதே. எனக்கும் வயசாகுது, ஒரு பேரனோ பேத்தியோ பார்த்துட்டா நிம்மதியா மேல போவேன்” என்று சௌந்திரம்பாள் புலம்பியது, அப்பொழுது வீட்டினுள் நுழைந்த வசந்தியின் காதுகளில் விழ, தன் மாமாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை கேட்க பயமும் எதிர்பார்ப்பும் வைத்து அவர்களின் பேச்சில் மீண்டும் கவனம் செலுத்தினாள் வசந்தி.
“சும்மா புலம்பாத அக்கா. அவகிட்ட கண்டிப்பாவே இருக்க, கொஞ்சம் மென்மையா தான் பேசு. உன்னை பார்த்தாலே பயப்படுறா. எனக்கு நீ அக்கா மட்டும் இல்லை அம்மாவும் தான் நானே சொல்லிருக்கேன், அதுக்காக மாமியாரா நடந்துக்கணும்னு அர்த்தமில்லை” என்று ஈஸ்வரனின் பதிலில் மனதில் குடைந்து கொண்டிருக்கும் விஷயத்தை இனியும் மாமாவிடம் மறைப்பது நல்லதல்ல என்றெண்ணினாள்.
அன்று ஞாற்றுக்கிழமை மதியம் வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த ஹிந்தி பாடல்களை கேட்ட வண்ணமாக, துணிகளை மடித்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் வசந்தி.
வார பத்திரிகையில் மூழ்கியிருந்தவனின் கவனம் வசந்தியிடம் படிய, புருவத்தை சுருக்கிக் கொண்டு அவளிடம் சென்றவன், இரு முறை அவளை அழைத்தும் அவளின் கவனம் திரும்பவில்லை.
மூன்றாவது முறை சற்று அழுத்தி அழைத்ததும், அதில் அதிர்ந்து “சொல்லுங்க மாமா” என்றாள்.
ஏதோ யோசித்தவன் பிறகு, “சாயங்காலம் கோயிலுக்கு போயிட்டு வரலாம், தயாரா இரு” என்று சொல்லிவிட்டு சென்றான்.
மாலை கோயில் செல்லவதற்கு தன் பஜாஜ் ஸ்கூட்டரை துடைத்துக் கொண்டிருந்தவனை சௌந்தராம்பா மகிழ்வுடன் பார்க்க, அவரின் பார்வையை புரிந்தவனாய், “அக்கா, நாங்க கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வந்துறோம். நீ எங்களுக்காக காத்திருக்காம சாப்பிட்டு படுத்துக்கோ” என்றான்.
குங்கும சிவப்பில் மெல்லிய தங்க சரிகை போட்ட தன் அம்மாவின் பழைய பட்டு புடவையை உடுத்தி, பாந்தமாக போர்த்திக் கொண்டு, தளர் கொண்டையில் பூச்சூடி, நெற்றியில் வட்ட வடிவில் குங்குமமிட்டு கையில் பூக்கூடை ஏந்தி படிகளில் மெல்ல இறங்கியவளை கண்ட அந்த நொடி, குட்டி வசந்தியாக இல்லாமல் இவள் என் மனைவி என்ற எண்ணம் எழுந்தது ஈஸ்வரனுக்கு.
கணவனின் முதல் காதல் பார்வையை அறியாதவளோ, அன்னை நிற்பதை கண்டு பயந்தவாறு, “கோயிலுக்கு போயிட்டு வரோம் மா” என்று குனிந்த தலை நிமிராமல் கூறினாள்.
சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தார் சௌந்திராம்பாள்.
மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரரை தரிசித்தவர்கள், பிரகாரத்தை வலம் வரும் பொழுது இருவரின் மனதில் வெவ்வேறு எண்ணங்கள்.
பிறகு வெளியே சென்றவுடன் ஈஸ்வரன் தனது ஸ்கூட்டரை மிதிக்க, “மாமா.. ஒரு நிமிஷம், கொஞ்சம் பேசணும். என்னை பீச்சுக்கு கூட்டிட்டு போறிங்களா?” என்று கெஞ்சி கேட்டவளை
“இப்போ எதுக்கு இந்த கெஞ்சல்? எதுவா இருந்தாலும் உரிமையா கேளுன்னு சொல்லிருக்கேன்ல, சரி வா” என்றான்.
காந்தி சிலை கம்பீரமாக நிற்க, அதை தாண்டி மணல் வெளியில் அமர்ந்தனர். கதிரவனின் மிச்சமுள்ள ஒளியும், கடல் அலையின் சப்தமும் அவள் மனதை நெருடியது.
ஒரு முறை சுற்றிப் பார்த்தவள், ஆங்காங்கே குடும்பமாக சிலரும் ஓரிரு சுண்டல் விற்கும் பாலகர்களும் தெம்பட்டனர்.
“என்ன பேசனமோ தயங்காம பேசு வசந்தி” என்று ஈஸ்வரன் நேரடியாக கேட்டார்.
“மாமா ரொம்ப நாளா என் மனசை போட்டு கொல்லுற விஷயத்தை உங்ககிட்ட இப்போ சொல்லிடறேன். அதை கேட்டு எனக்கு என்ன தண்டனை வேணாலும் கொடுங்க, ஆனா அம்மாகிட்ட மட்டும் நான் தான் இதையெல்லாம் சொன்னேன்னு காமிச்சிக்காதீங்க” என்று புதிராய் பேசினவளை, என்ன பேசப் போகிறாள் என்பது போல் பார்த்தான்.
“நான் பி.யூ.சி. படிச்சிருந்தபோ டைப்ரைட்டிங் கிளாஸ்ல தனசேகர்னு ஒருத்தரை வி.. விரும்பினேனேன் மாமா. அவரும் என்னை நேசிச்சார். அ.. அது.. அப்போ தப்புனு தெரியலை. இந்த விஷயம் அம்மாக்கும் தெரியும்” என்று சொன்னவள், ஈஸ்வரனை பார்க்க தைரியமில்லாமல் ஓரக்கண்ணால் அவனின் முக பாவத்தை பார்த்தாள்.
ஈஸ்வரனோ எந்தவித உணர்வும் இன்றி கேட்டுக் கொண்டிருந்தான். பேச்சை சற்று நிறுத்தியவளை, “ம்ம் சொல்லு” என்றான் மென்மையாக.
அந்த ஒற்றை வார்த்தையில், வசந்திக்கு அவன் முகத்தை பார்த்து பேச தெம்பு வந்தது.
“அம்மாவுக்கு அவரை பிடிக்கலை. அவரோட ஏழ்மையையும் குடும்ப சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக்கி அவரை மிரட்டி தன்னோட பண பலத்தால ஊரை விட்டு விரட்டிட்டாங்க. அம்மாவோட மிரட்டலுக்கு பயந்து என் வாழ்க்கைக்கு குறுக்க நிற்காம போயிட்டார். அதுக்கப்புறம் தான் என்னை கட்டாயம் பண்ணி உங்களை கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எவ்வளவு கெஞ்சியும் கேட்கலை.
முதல்ல என் காதலை நினைச்சு ரொம்ப அழுதுட்டே இருந்தேன். ஆனா என்னோட சோகம் உங்களையும் பாதிக்காதுன்னு நினைக்காம இருந்துட்டேன். என் மனசை மாத்திக்க தான் மேலே படிக்க ஆசைபட்டேன்.
நான் சுயநலமா பேசறேன்னு நினைக்காதிங்க. எனக்கு அப்போ வேற வழி தெரியலை. படிச்சி முடிச்சு ஒரு வேலையை தேடிக்கிறேன் மாமா. நீங்களும் அம்மாவோட கட்டாயத்துல என்னை கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறீங்க.
நான் உங்களுக்கு தகுதி இல்லாதவ. காதல்ங்கிற சாக்கிடையில விழுந்து எனக்கு ஏற்பட்ட கரையை துடைக்க முடியலை. நீங்க உங்க வாழ்க்கையை வீணாகிக்காதிங்க. நீ.. நீங்க வேற கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க” என்று சொல்லி முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
அவளின் அழுகை குறைந்து விசும்பல் வரும் வரை அந்த கடலின் அலை சப்தம் மட்டுமே நிலவியது.
“சரி பேசி முடிச்சிட்டியா? ராயர் கடைக்கு போய் டிபன் சாப்பிட்டு போகலாம்” என்று சொன்னவனை ஒன்றும் புரியாமல் விழித்து பார்த்தவள்
“மாமா.. நான் என்ன சொன்னேன்னு புரியலையா?” என்றாள்.
அதை கேட்டவன், “ஹ்ம்ம்… என்ன சொல்லணும் இப்போ? என்ன பொறுத்தவரைக்கும் நீ வருத்தப்படுற அளவுக்கு பெரிய விஷயமா எனக்கு தெரியல. உன் வயசுல சில பேருக்கு ஏற்படுற பருவக்கோளாறா தான் எடுத்துக்கறேன்.
உனக்கு தோணலாம் எனக்கும் தானே இது கட்டாய கல்யாணம்னு. நடந்த விதம் அப்படி இருக்கலாம் ஆனா எங்க அக்காவோட முடிவுல என்னைக்கும் நம்பிக்கை கொண்டவன் நான். அவ எது பண்ணாலும் அதுல நியாயம் இருக்கும். என் அக்காங்கறதால சொல்லலை.
உன்னோட காதல் தப்பு இல்லை, ஒருவேளை நீ தேர்ந்தெடுத்த ஆள் சரியில்லாம போயிருக்கும். என்னை பொறுத்தவரைக்கும் உன்னோட கடந்த கால காதல் ஒரு விஷயமே இல்லை. தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காத.
அப்புறம் எனக்கும் தான் கட்டாய கல்யாணம், ஆனா அது மூணு வருஷத்துக்கு முன்னால வரைக்கும். இப்ப நீ என்னோட சரி பாதி, நீ கேட்கலைனா கூட நான் படிக்க வெச்சிருப்பேன். அக்கா மாமாவுக்கு நான் என்ன கைம்மாறு பண்ணாலும் எடுபடாது. எங்க அக்கா பலாப்பழம் மாதிரி, வெளியே முள்ளானாலும் உள்ள இனிப்பு. அவளை புரிஞ்சிக்கோ” என்றதும், அவள் மீண்டும் அழத் துவங்கினாள்.
“என்ன வசந்தி… நான் ஏதாவது தப்பா பேசினேனா? ஏன் இந்த அழுகை?” என்று முதன் முதலாக அவளின் தோள்களை பற்றி சமாதானம் செய்தான்.
அவளின் அழுகையை கட்டுப்படுத்தியவன், அவள் கன்னம் பிடித்து முகத்தை உயர்த்தி, “எனக்காக எல்லாத்தையும் மறந்திடு. அதுக்காக இன்னிக்கே என் மனைவியா வாழ ஆரம்பிக்கணும்னு சொல்லலை. உனக்கா இந்த மாமா மேல எப்ப நம்பிக்கை வருதோ, அப்ப உன் மனசைக் கொடு” என்று சொல்லிவிட்டு எழுந்தவன், கைகளில் ஒட்டியிருந்த மணல்களை தட்டினான்.
“இதோ இந்த ஒட்டியிருந்த மணலை தட்டி விட்டா மாதிரி தான் உன்னோட கடந்த காலம், நான் உதறிட்டேன். இந்த மணலை இங்கே தட்டி விடுறதும் கையோட ஒட்டியே எடுத்து வர்றதும் உன் விருப்பம்” என்று சொல்லி, அவள் எழுவதற்கு தன் கையை நீட்டினான்.
அந்த முதிர்ச்சியான பேச்சில் கவர்ந்தவள், கண்களை துடைத்து அவனை பார்த்து புன்சிரிப்பை சிந்திவிட்டு, அவன் கையை பற்றி எழுந்தாள்
பின், தன் கைகளிலும் ஒட்டியிருந்த மணலை தட்டி விட்டு “ராயர் கடைக்கு போகலாமா மாமா?” என்றாள்.
ஒரு பக்க கவிதையாக அவனின் மனது வெளிப்பட, அதற்கு ஒரு வரி கவிதையாக அவளின் மனம் சம்மதம் தர, அன்று அவர்களின் வாழ்வை முழுதாக ஆரம்பித்தனர்.
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
Wonderful story,simple but super 👏👏👏