“என்ன முகில், பேச்சுப் போட்டிக்கு நாம டிஸ்கஸ் பண்ணி எழுதினதை, பேசி பிராக்டிஸ் பண்ணிக்கிட்டியா?” என்றபடி மகன் அருகில் வந்து அமர்ந்தார் தமிழரசி
“மத்ததெல்லாம் ஒகேம்மா, இந்த ‘மாத்ரு தேவோ பவ’னு ஆரம்பிக்குதே, அதான் மறந்து மறந்து போகுது” என சலித்தான், ஆறாம் வகுப்பு பயிலும் முகிலன்
“அர்த்தம் புரிஞ்சு படிச்சா மறக்காது முகில்”
“அதுக்கு என்ன அர்த்தம்மா?” என கேள்வியாய் பார்த்தான்
“சொல்றேன் கேளு முகில். மாத்ரு தேவோ பவ’னா நமக்கு உயிர் கொடுத்த அம்மாவை தெய்வமா போற்றணும்னு அர்த்தம். அப்புறம் பித்ரு தேவோ பவ’னா, நம் வாழ்வு மேம்பட செய்யும் அப்பாவை தெய்வமா மதிக்கணும்னு அர்த்தம். அதே போல ஆச்சார்ய தேவோ பவ’ன்னா…”
“நான் சொல்றேன், நான் சொல்றேன், ஆச்சார்ய’னா டீச்சர் தானேம்மா” என்றான் முகிலன் உற்சாகமாய்
“ரெம்ப சரி முகில். அம்மா அப்பாவுக்கு அடுத்து, நமக்கு பாடம் சொல்லி தர்ற ஆசிரியர்களை கடவுளுக்கு நிகரா நினைக்கணும்னு அர்த்தம்”
“ஓ… சரிம்மா. அடுத்தது அதிதி தேவோ பவ’னு எழுதியிருக்கயே. நம்ம பக்கத்து வீட்டு பாப்பா பேரு தானேம்மா அதிதி, அவளையும் தெய்வமா மதிக்கணுமா?” என குறும்பாய் வினவினான் முகிலன்
செல்லமாய் மகனின் தலையில் குட்டிய தமிழரசி, “அது அப்படி இல்லடா. அதிதிங்கற வார்த்தைக்கு, விருந்தினர்கள்னு அர்த்தம். நம்ம வீட்டுக்கு வர்ற கெஸ்ட் நமக்கு ரெம்ப முக்கியம் தானே, அவங்களை மதிச்சு பேசி உபசரிச்சு விருந்தோம்பல் செய்யணும் அப்படிங்கறது தான் அதுக்கு அர்த்தம்”
“ஓ… அதிதி’னா கெஸ்ட்டா?”
“ஆமா… வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்கும் போது அவங்கள கண்டுக்காம டிவி பாக்கறது, போன்ல விளையாடறது, ரூமுக்குள்ள போய் உக்காந்துக்கறது, இதெல்லாம் அவங்களை அவமதிக்கற செயல். அவங்களுக்கு வேணுங்கறதை செஞ்சு, அவங்கள சந்தோசமா வழியனுப்பி வெக்கறது தான் நம்ம பண்பாடு”
“அதனால தான் லாஸ்ட் வீக் சித்தப்பா வந்தப்ப, நான் டிவி பாத்ததுக்கு அப்பா திட்டினாரா?” என முகில் வருத்தமாய் கூற
“ஆமா முகில், சித்தப்பா ஏதோ கேட்டதுக்கு கூட பதில் சொல்லாம நீ டிவி பாத்தது தப்பு தானே கண்ணா?” என மகனுக்கு கனிவாய் புரிய வைத்தார் தமிழரசி
“கரெக்ட் தாம்மா, இனிமே யாராச்சும் கெஸ்ட் வந்தா ஒழுங்கா பேசறேன், டிவி பாக்க மாட்டேன்” என உணர்ந்து சொன்னான் பிள்ளை
“குட் முகில்” என மகனை அணைத்து கொண்டார் தமிழரசி
“என்ன அம்மாவும் புள்ளையும் ஒரே கொஞ்சலா இருக்கு? எப்பவும் படிக்கும் போது வீடு போர்க்களமா தான இருக்கும்” என்ற கேலியுடன் வீட்டினுள் நுழைந்தார் முகிலனின் தந்தை மகேந்திரன்
“நான் பேச்சு போட்டிக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன்’ப்பா” என்றான் முகிலன் உற்சாகமாய்
“ஓ… அப்படியா? சூப்பர். எப்ப போட்டி?” எனவும்
“இன்னும் த்ரீ டேஸ் இருக்குப்பா. எப்படியாச்சும் அந்த ஆதர்ஷ தோக்கடிக்கணும்” என்றவனின் முகம் சட்டென கோபமாய் மாறியது
“அவன் மேல உனக்கென்ன கோபம் முகில்?” என்றார் மகேந்திரன், மகனின் கோபத்திற்கான காரணம் புரியாமல்
“அவன் எப்பவும் என் கூட போட்டிக்கே வர்றான்’ப்பா” என்றான் முகிலன் எரிச்சலாய்
“போட்டி இருந்தாத்தானடா நீ பெஸ்ட்டா குடுக்கணும்னு இன்னும் நல்லா பண்ணுவ. அதனால போட்டி இருக்கறது நல்லது தான், பொறாமை தான் தப்பு” என மகனுக்கு புரிய வைக்க முயன்றார்
“ஏதோ ஒண்ணு, அவன் தோக்கணும், எனக்கு அதான் வேணும்” என்றான் முகிலன் இன்னும் கோப முகம் மாறாமல்
“இது தப்பு முகில். நீ ஜெயிக்கணும்னு நினைச்சா அது நல்ல விஷயம், அடுத்தவன தோக்கடிக்கறதுக்காக நீ ஜெயிக்க நினைக்கறது நல்ல வெற்றி இல்ல கண்ணா”
“எனக்கு புரியலப்பா, அவன் தோத்தா தான நான் ஜெயிக்க முடியும்?” என்றான் குழப்பமாய்
“வெற்றி தோல்விங்கறது மாறி மாறி வரும் முகில். எப்பவும் ஒருத்தரே ஜெயிச்சுட்டு இருக்க முடியாது. அதோட, தோல்விங்கறது தப்பான விஷயம் இல்ல, அது வெற்றிக்கான முதல் படி. நம்ம அணுகுமுறை சரியா இருந்தா, தோல்வியும் வெற்றியா மாறும். அடுத்தவங்க மேல காழ்புணர்ச்சியோட இருந்தா, அந்த வெற்றியும் தோல்வி தான். புரிஞ்சுதா முகில்”
“புரிஞ்சதுப்பா, இனிமே அப்படி நினைக்க மாட்டேன்” என புன்னகைத்தான் முகிலன்
“தட்ஸ் மை பாய்” என மகிழ்வுடன் பிள்ளையை அணைத்துக் கொண்டார் மகேந்திரன்
அணுகுமுறை சரியாய் இருந்தால், வாழ்வில் வெற்றி நிச்சயம். அது இல்லையெனில், எந்த வெற்றியும் உண்மையான வெற்றி ஆகாது, அது நிலைக்கவும் செய்யாது
இது சிறு பிள்ளைகளுக்கான பாடம் மட்டுமல்ல, வளர்ந்த பிள்ளைகளான நமக்கும் தான் 🙂
(முற்றும்)
Amazon.com (US Site) Deals 👇
Amazon.in (India Site) Deals 👇
நல்லாச் சொல்லி இருக்கீங்க! ஆனால் எல்லாப் பெற்றோரும் இப்படி இருப்பதில்லை. குழந்தைகளைத் தூண்டித்தான் விடுகின்றனர். 🙁
Correct தான் மாமி, சில பெற்றோர்களும் இந்த தவறை செய்கிறார்கள்