2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அன்று என்னவோ ஜானகிக்கு தன் வீட்டு வேலைகள் எல்லாம் சீக்கிரமே முடிஞ்சது போலவே தோன்றியது. நீண்ட நாளாகத் தள்ளித் தள்ளிப் போட்டு வந்த வேலை ஒன்று அவள் நினைவுக்கு வரவே, தனது அறைக்குள் நுழைந்தாள்.
பீரோவில் உள்ள தனது பட்டுப்புடவைகளை எல்லாம் எடுத்து, உதறி நன்றாக மடித்து வைக்கத் தொடங்கினாள். அப்போது ஐந்தாவதாக அவளோட கைக்கு வந்த அந்தப்பட்டுப் புடவையைத் தொட்டதுமே, கண்ணீர் பெருகி அவள் கன்னங்களில் நீர்க்கோலம் போட ஆரம்பிக்க, அவள் மனசிலோ கடந்த கால சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கோலம் போடத் தொடங்கியது.
“அம்மா.!, அம்மா.! உங்க கடைசிப் பேரனோட கல்யாணத்தன்னைக்கு நீங்க கட்டிக்க வேணும்னு இந்தப் புடவைய எடுத்துட்டு வந்திருக்கேன் மா. புடவை நல்லா இருக்கா? உங்களுக்கு இது பிடிச்சு இருக்கான்னு கொஞ்சம் பாருங்கம்மா” தொண்ணூறு வயதான என்னோட அம்மாவுக்கு கேட்கவேண்டுமேன்னு கொஞ்சம் சத்தமாகவே கத்திக் கேட்டேன்.
அம்மா, அந்தப் புதுப்பட்டுப் புடவையைத் தன்னோட விரல்களால் தொட்டுத் தொட்டுத் தடவித் தடவிப் பார்த்தபடியே, “எதுக்கும்மா இத்தனை பெரிய பார்டர்ல எடுத்து இருக்கே? ரொம்ப விலையோ? எங்க எடுத்தே? முதல்லே இது என்ன விலைன்னு சொல்லு?” என்று கேள்வி மேல் கேள்விகளாக அடுக்கினார்.
“எவ்வளவானால் என்னம்மா, உங்க கடைசிப் பேரன் கல்யாணத்துக்கு இதை நீங்க கட்டாயம் கட்டிக்கணும்மா”
“சரி, சரி, நான் வேண்டாம்னு சொன்னா மட்டும் நீ விடவா போற. ஆனா ஒண்ணு, நான் ஒரு தடவை கட்டிட்டு உனக்கே திருப்பித் தந்துருவேன். நீயே இந்தப் புடவையை என் நினைவா உங்கிட்ட வச்சுக்கணும் சரியா?”
“சரிம்மா, இப்போ அதுக்கென்ன அவசரம். இந்தாங்க, இதை வாங்கி வச்சுட்டு, முதல்லே நீங்க கல்யாணத்திலே கட்டுங்க. அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம். நான் ஊருக்குப் போயி அங்கே உங்க பேரனுக்குச் சோறாக்கித் தரணுமில்ல. டிராவல்ஸ்லே ராத்திரியே திரும்பப் போகணும்மா. நான் வரட்டுமா. அடுத்த மாசத்திலிருந்து இங்கேயே இருந்து திருமண அழைப்பு பத்திரிகை எல்லாம் போய் கொடுக்க ஆரம்பிக்கணும். இப்போ நான் போய்ட்டு அடுத்த மாசம் வரேன்மா.” என்று விடைபெற்றுக் கொண்டு சென்றேன்.
இரண்டு வாரம் கழித்து மதியம் போல அக்கா மகள் ரம்யாவிடம் இருந்து போன் வந்தது “சித்தி.!, உடனே கிளம்பி வாங்க. தாத்தி பாத்ரூம்லே கீழே விழுந்திட்டாங்களாம். அம்மா உங்களை உடனே புறப்பட்டு இங்கே வரச் சொன்னாங்க” குரலில் பதட்டத்துடன்.
“என்னடா சொல்றே. டேய் ரம்யா, ப்ளீஸ்டா, எங்கிட்ட எதையும் மறைக்காம, அங்கே என்ன நிலமைன்னு கரெக்டா சொல்லேன்” என்றேன் குரல் தழுதழுக்க
“ஆமாம் சித்தி. தாத்தி நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போய்டாங்க. நீங்க தம்பியைக் கூட்டிட்டு உடனே வாங்க சீக்கிரம்” பேச்சில் அழுகையும், அவசரமும் தெரிந்தது.
பயணம்…. நெஞ்சு கனக்க, பாதை நீண்டு கொண்டே போக, நேரம் முன்னேறி நகர மறுப்பதாகவும், நாங்க பயணம் செய்யும் பஸ் ஏனோ நத்தை போலவே ஊர்வதாகவும் எனக்குத் தோன்றியது.
அதிர்ச்சியில் உறைந்து போய்விட்ட மனதால், எனது கண்களிலுள்ள கண்ணீரும் உறைந்து தான் போயிற்றோ என்னவோ. அம்மா தன் கண்களைப் பாதியளவு திறந்தபடியே படுத்து இருந்தார்கள். அப்படி அவங்களைப் பார்க்கும் போது, அவங்க என்னையே பார்ப்பது போலவே இருந்தது எனக்கு.
எனக்கு முன்பே வந்துவிட்ட என்னோட உறவுகள், “என்ன முயன்றும் அவங்க கண்களை முழுமையாக மூடவே முடியலயே” என்று சொல்லி வருத்தப்பட்டார்கள்.
‘நான் உங்ககிட்ட என்ன சொல்லிட்டுப் போனேன், ஆனா இப்போ நீங்க என்ன செஞ்சு வச்சிருக்கீங்க மா’ என்றெல்லாம் என்னோட மனசு, அசைவே இன்றிப் படுத்துக் கிடக்கும் என் அம்மாவுடன் மல்லுக்கு நின்றபடி அவங்க கூட சண்டை போட்டபடியே இருந்தது.
இதற்கிடையே என்னோட முதுகுக்குப் பின்னாடி, ஏதோ கசகசவென்று யார் யாரோ எல்லாம் பேச, முடிவு தெரிந்தது இடியாய்.
அதாவது, தன் வீட்டில் கல்யாணம் வைத்து இருக்கும் கடைசிப் பெண்ணும் மாப்பிள்ளை ஆகப்போகிற கடைசிப் பேரனும் இங்கே எந்தச் சீரும் செய்ய வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.
உறைந்து போய் இருந்த கண்ணீர், உடனே பொங்கி பெருக்கெடுத்து ஓடியது. கடைக்குட்டி செல்லம் நான்.கடைசி செல்லப் பேரன் என் மகன். அவங்க செய்த முடிவுக்கு ஏற்றாற்போல் சாங்கியம், சம்பிரதாயம் என்று ரொம்பவே பார்க்கும் என் கணவரின் வீடு.
அப்புறம் என்ன, நிற்காத அழுகையுடனே தொடர் போராட்டம். ‘இப்போ என்னாச்சு, கல்யாணம் நடக்கிறதுக்குத் தான் இன்னும் மூணு மாசம் இருக்கே’ என்று புலம்பி பிணாத்திக் கொண்டே, அழுதபடியே, காலில் விழாத குறையாக எல்லோரிடமும் நீண்ட நேரம் கெஞ்சல்கள்.
அதற்கு இரங்கிய வீட்டுப் பெரியவங்க, “எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் உன் புகுந்தவீடு பத்திக் கொஞ்சம் யோசி” என்று கருத்தும் சொல்லி விட்டு, “எதற்கும், தீட்டுக்காரியம் செய்வதால் உன்னுடைய கணவரை எங்களின் முன்பாகவே அனுமதி கேள், அவருக்குச் சம்மதம் என்றால், எங்களுக்கும் பூரண சம்மதமே” என்று இறுதி முடிவு சொல்லி விட்டனர் .
கணவரிடம் நான் ஏதாவது வாக்குவாதம் செய்து கூட கேட்கும் வாய்ப்பில்லாமல், அவர்கள் எதிரிலேயே ஒரே கேள்வி. அதற்கு அவரிடம் இருந்து கிடைக்கும் ஒரே பதில், அது எந்த மாதிரி இருந்தாலுமே அதுதான் இறுதி முடிவு என்றானது.
அனைவரின் எதிரிலேயே அவரிடம், “என்னங்க. இத்தனை வயது வரை வாழ்ந்த என் அம்மாவிற்கு நானும், நம்ம பையனும் எங்களோட கடமையைச் செய்வதற்கு, நீங்க எங்கள விடுவீங்களான்னு” மனசிலே பயத்துடனே கேட்டேன் .
உடனே, “நான்தான் இங்கே இருக்கிறேனில்ல. எங்க வீட்டு ஜனங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க இப்ப ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க.” அதிர்ச்சி தரும் வகையில் அவரோட அதிசயமான பதில்.
பிறகென்ன, சடங்குகள் ஒன்றுகூட விடாமல் நாங்க பங்கேற்றுச் செய்தோம். அதற்குள் ஹாலினுள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்த என் பெரிய சகோதரிகள், என்னைக் கண்டதும் அருகில் அழைத்தனர்.
‘மறுபடியும் என்ன புதிய பிரச்சனையோ!’ என்று பயந்தபடியே அவர்களை நெருங்கினேன். என்னிடம், “அம்மாவுக்கு நீ இப்போ வாங்கி இருக்கும் புதுப் புடவையையே மேலே போர்த்தி விட்டறலாம். பின்னர் டோபிகிட்ட அலசி வாங்கி, அம்மாவுக்கென வருஷாவருஷம் சாமி கும்பிடறதுக்கு அப்படியே வச்சுக்கலாமாங்கறது எங்களோட அபிப்பிராயம். நீ என்ன சொல்லறே?” என்றனர்.
அம்மா என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் எனக்குள் அலை மோதவே, நான் “வேண்டாங்க்கா. நீங்க வேறு பட்டுப்புடவையை எடுத்து அம்மாவிற்குப் போர்த்தி விடுங்கள்னு” சொல்லவும், என்னை அவங்க ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
ஆனால், அம்மா என்னிடம் கடைசியாகச் சொன்ன போது, என்னுடன் கூடவே இருந்த எனக்கு நேர் மூத்த சகோதரி, அம்மா என்னிடம் சொன்னதை அப்படியே சொல்ல, அதைக் கேட்ட, அனைவரும் “அம்மா அப்படியா சொன்னாங்க! அப்போ, அந்தப் புடவை உன்னிடமே இருக்கட்டும். நாம் சாமி கும்பிட எடுத்து வச்சிட்டா, அதை உனக்கு கொடுக்க முடியாமல்தான் போகும்” என்று யோசித்து தீர்மானமாகச் சொல்லவே வேறு பட்டுப் புடவையைப் எடுத்துப் போர்த்தி விட்டு, அம்மாவின் காரியங்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
அதன் பின்னர் ஒருநாள் வீட்டில் கணபதி ஹோமம் செய்து மகனின் கல்யாண வேலைகளை கவனிக்கத் தொடங்கிட. அம்மாவை நினைத்து மனதார துக்கம் தீரும் வகையில் முழுசா அழக்கூட நேரமும், வீட்டின் கல்யாண சூழலும் இடம் கொடுக்கவே இல்லை எனக்கு.
திருமணத்தன்று காலையில் முகூர்த்தம் நடைபெறும் சமயம், எனக்கென்று எடுத்த பட்டுப் புடவையை நான் கட்டாமல், என்னுடைய அம்மாவுக்கென எடுத்த பட்டுப் புடவையைக் கட்டி வந்து, என் பையனுக்கு மணமேடையில் நான் ஆசீர்வாதம் பண்ணும் போது, எனக்கு என் தாயும் கூடவே இருந்து மனதார வாழ்த்தியது போல ஒரு நிறைவான உணர்வு. என் சகோதரிகளும் அந்த சமயம் அம்மாவின் அந்தப் புடவையையே நான் கட்டி இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் காலங்கள் ஓட, அன்று ஒரு முறை அவள் வீட்டிற்கு வந்த அவளோட அக்காக்கள், “ஜானகியின் சிறுவயதில் எங்க அம்மா அவளை விட்டுவிட்டு எங்காவது உறவுகளின் திருமண விசேஷங்களுக்காக வெளியூருக்குச் சென்றால், நாங்க முதல் இரண்டு நாட்களுக்கு அம்மாவின் புடவையைக் கொடுத்துத் தான் அவளோட தொடர் அழுகையைக் கொஞ்சம் சமாளிப்போம். என்ன செய்தாலுமே, அம்மாவைப் பிரிந்த இரண்டே நாளில் அவளுக்கு காய்ச்சல் வந்து, அம்மாவை உடனே அங்கிருந்து கிளம்பி வரச்செய்த நாட்கள் தான் அதிகம்” என்றெல்லாம் வீட்டில் அனைவரிடமும் சொல்லிச் சிரித்தனர்.
ஆனால் ஜானகிக்கு மட்டும், ‘அம்மா, அதை மனதில் வைத்துத் தான், தான் மரணிக்கும் முன்னாடியே தன்னோட புடவையை என்னிடம் விட்டுச் சென்றாங்க போல’ என்றே தோன்றியது.
சிக்கிமுக்கிகல் உரசியது போல ஜானகியின் நெஞ்சில் நினைவுகள் என்னும் தீப்பொறியைக் கிளப்பி விட்டு, நீண்ட கதை சொன்ன களைப்பில் அவளுடைய கைகளிலே துவண்டு உறங்கியது அவளோட அம்மாவின் புடவை. இப்பவும் அந்த மெரூன் கலரில் கோல்டன் ஜரிகை பார்டர் போட்ட பட்டுப் புடவையை அம்மாவின் புடவை என்றே அடையாளமாகச் சொல்லி வருகிறாள் ஜானகி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings