in ,

அமிலக் குப்பி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இரவு முழுவதும் யோசனை செய்து அதிகாலையில் முடிவுக்கு வந்தேன்.  

“எத்தனை நாளைக்குத்தான் இப்படியே வாழ்க்கையை ஓட்டுவது?… ஒரு நாள் சாப்பிட்டு… ஒன்பது நாள் பட்டினி கிடந்து?… ஹும்.. ஒரு வீராப்புல  ‘பட்டணம் போய் பிழைத்துக் காட்டுறேன் பாரு’ன்னு சினிமா பாணில அப்பன்கிட்ட சவால் விட்டுட்டு வந்தாச்சு… இங்க வந்து பார்த்தா… பெருசா நினைச்சிட்டிருந்த என்னோட இளங்கலை பட்டப்படிப்புச் சான்றிதழை எந்த நிறுவனத்தானும் ஏறெடுத்துக் கூடப் பார்க்கலை…. ஆபீஸ் பாய் வேலைக்குக் கூட உதவாத அந்த டிகிரி சர்ட்டிபிகேட்டை தலையைச் சுற்றிக் குப்பை தொட்டியில் வீசி விட்டு நேரே அறைக்கு வந்து படுத்து,  “வாழ்வதா?… சாவதா? என்று யோசிக்க ஆரம்பித்து… இறுதியில் சாவது” என்கிற முடிவோடு மறுநாள் விடியலைச் சந்தித்தேன

      “எப்படிச் சாவது?”.

       “ரயில்….?”.

       “தூக்கு…?”.

       “விஷம்….?”.

       “கரெக்ட்… விஷம்தான் சரி… சத்தமில்லாமல் குடிச்சிட்டு… சத்தமில்லாமல் செத்துடலாம்!”.

       மெல்ல எழுந்து ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன். என்னைத் தவிர உலகத்தில் எல்லோருமே மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருப்பது போல் தோன்றியது எனக்கு.  சோகமாய் சட்டை பையினுள் தேடினேன்.  காலியாயிருந்தது.

      “ச்சை… விஷம் வாங்கக் கூட வக்கில்லை!”

       சட்டென்று அந்த யோசனை உதித்தது.  “சரி….  அதுதான் ஒரே வழி”.

      கதவைத் திறந்து கொண்டு வெளியேறி நேரே கழிவறையை அடைந்தேன். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உள்ளே நுழைந்து சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த அமிலக் குப்பியை எடுத்து லுங்கிக்குள் மறைத்துக் கொண்டு அவசர அவசரமாய் வெளியேறி அறைக்கு வந்தேன்.

      “அப்பாடா…” நிம்மதியாயிருந்தது.  ஆனாலும், ஒரு சந்தேகம் உள்ளுக்குள் நிரண்டியது.

     “இதைக் குடிச்சா சாவோமா?… இல்லை அரையும் குறையுமாய்ச் செத்து… ஏடாகூடமாய் ஏதாச்சும் ஆகி, இப்ப இருக்கிறதை விட அதிகமாய்ச் சீரழிவோமா?….ப்ச்… ஆனது ஆகட்டும்!”

     மெல்ல பாட்டிலைத் திறந்து அதை வாயில் ஊற்றப் போனவனைத் தடுத்து நிறுத்தியது கதவைத் தட்டும் சத்தம்.

      “ச்சை!… நிம்மதியாய் சாகறதுக்குக் கூடத் துப்பில்லை” எரிச்சலோடு சென்று கதவைத் திறந்தேன்.

      தோளில் பெரிய பேக்குடன், கூரியர் சர்வீஸ் இளைஞன் நின்றிருந்தான்.

      “வேல் முத்தரசு… நீங்களா?”.

      “ஆமாம்” என்றேன் கடுப்புடன்.

      “உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கு” பேக்கிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்து, கையெழுத்தையும் பெற்றுக் கொண்டு அவன் செல்ல, ஆச்சரியமாய் இருந்தது எனக்கு.

“எனக்குக் கடிதமா?… அதுவும் கூரியர்ல?”.

      அசுவாரஸியமாய்ப் பார்த்தேன்.  “வெற்றி ஊதுபத்தி நிறுவன”த்திலிருந்து வந்திருந்தது.

“என்னவாயிருக்கும்?” யோசனையுடன் பிரித்தேன்.

      “மிஸ்டர் வேல்முத்தரசு அவர்களுக்கு,

 எங்களுடைய வெற்றி ஊதுபத்தி பாக்கெட்டுடன் நாங்கள் இணைத்திருந்த சுலோகன்  பரிசுக் கூப்பனை பூர்த்தி செய்து அனுப்பி முதல் பரிசு பெற்ற தங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.   இன்று மாலை ஐந்து மணிக்கு “சோழா” ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் சிறப்பு விருந்தில்   கலந்து கொண்டு பரிசினை பெற்றுக் கொள்ளவும்.

 லட்சுமி நரசிம்மன்,

 நிர்வாக இயக்குனர்

      நான்கைந்து மாதங்களுக்கு முன்பு ஊதுபத்தி வாங்கிய போது அதில் இருந்த பரிசு கூப்பனை விளையாட்டாய் பூர்த்தி செய்து அப்போதைக்கு மனதில் தோன்றிய ஏதோ ஒரு வாக்கியத்தினை கிறுக்கி அனுப்பி இருந்தது எனக்கே கூட மறந்திருந்தது.

 
     “சாகப் போகிற நேரத்தில் இப்படி ஒரு சந்தோஷமா?.. என்ன பண்ணலாம்?” யோசித்தேன்.

      வாழ்க்கையில் சோழா போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குள் கனவில் கூட நான் நுழைய முடியாது.  அந்த வாய்ப்பை உதறி விட விருப்பமில்லாமல்,  “சரி… எப்படியும் சாகுறதுன்னு முடிவு பண்ணியாச்சு!… பகல்ல செத்தாலென்ன? ராத்திரியில செத்தாலென்ன?… மாலையில் போய் நல்லா சாப்பிட்டுட்டு… என்ன பரிசு கொடுக்கிறார்கள்?னு பார்த்துட்டு வந்து ராத்திரி சாகலாமே?”.

      அமிலக் குப்பியை எடுத்து கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு குளிக்கப் போனேன்.

      மாலை 5 மணி வாக்கில் சோலா 5 நட்சத்திர விடுதியின் முன் நின்று அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டத்தையும் பணக்காரத்தனத்தையும் அண்ணாந்து பார்த்து எனக்கு அதற்குள் நுழையவே தயக்கமாய் இருந்தது.

      கையில் கடிதம் இருக்கின்ற தைரியத்தில் மெல்ல நுழைந்தேன்.  என்னை வித்தியாசமாய் பார்த்த காவலாளிடம் கடிதத்தை காட்டி அவன் குறிப்பிட்ட திசையில் நடந்து விழா அரங்கை அடைந்தேன். சிறிய இடம்தான் ஆனாலும் அலங்காரமாய் இருந்தது. கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு மேல் அமர்ந்திருக்க, ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார்.

      காலி நாற்காலியொன்றைத் தேடிப் பிடித்து அமர்ந்தேன். வரிசையாக ஆளாளுக்கு மைக்கைப் பிடித்து, அறுத்தெடுக்க நெளிந்தேன்.  “அய்யய்ய… இதுக்கு பேசாம செத்தே போயிருக்கலாம்!”

       “அடுத்த நிகழ்ச்சி இரவு உணவு முடிந்த பின்… அப்போது… போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும்!… அத்தோடு நமது நிர்வாக இயக்குனர் முதல் பரிசு பெற்ற நபருக்கு அதிரடியாய் ஒரு சிறப்பு பரிசினை அறிவிக்கவுள்ளார்… அது என்னவென்றால்…” சொல்லி விட்டு நிறுத்தி, கூட்டத்தைப் பார்த்து புன்முறுவல் பூத்து, “தட் ஈஸ் சஸ்பென்ஸ்” என்று ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு நகர்ந்தார்.

     எனக்குக் குழப்பமாய் இருந்தது.  “அதிரடி சிறப்புப் பரிசு என்னவாயிருக்கும்?” யோசித்தவாறே என் வாழ்நாளில் இதுவரை சுவைத்தேயிராத அதி அற்புதமான உணவை அருந்தி விட்டு முன்னதாக வந்தமர்ந்து பரிசு அறிவிப்பிற்காகக் காத்திருந்தேன்.

     பதினைந்து நிமிடத்தில் மேடை மீண்டும் களை கட்டியது. அறிவிப்பாளர் ஆரம்பித்தார்.

     “சுலோகன் போட்டியில் முதல் பரிசு பெற்ற வேல்முத்தரசு மேடைக்கு வரவும்!”

     எழுந்து சென்றேன்.  கை குலுக்கி வரவேற்ற அந்த அறிவிப்பாளர், “திரு வேல்முத்தரசு அவர்களுக்கு நமது  “விக்டரி ஊதுபத்தி நிறுவன”த்தின் நிர்வாக இயக்குனர் பரிசுத் தொகையான ரூபாய் இருபதாயிரத்தை வழங்கி… அத்தோடு அதிரடி சிறப்பு பரிசினை அறிவிப்பார்” என்றார்.

     நிர்வாக இயக்குனர் எழுந்து வந்து சிரித்த முகத்துடன் பரிசுத் தொகையினை என்னிடம் நீட்ட, பல “பளிச்…பளிச்”களுக்கு மத்தியில் அதைப் பெற்றுக் கொண்டேன்.

      என் தோள் மேல் கை போட்டு என்னை மைக் வரை அழைத்துச் சென்ற நிர்வாக இயக்குனர், “வழக்கமாக எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு ஏஜென்ஸி கொடுக்க நாங்கள் லட்சக்கணக்கில் பணம் வாங்குவோம்!… செக்யூரிட்டி டெபாசிட் கூட வாங்குவோம்! ஆனால் நம்ம வேல்முத்தரசுக்கு அதிரடி பரிசாக விக்டரி ஊதுபத்திக்கான வடகோயமுத்தூர் விநியோக உரிமையை வழங்குகிறோம்!… நாளையிலிருந்து அவர் தொழிலை ஆரம்பிக்கலாம்… அவருக்குத் தேவையான வாகனம் மற்றும் வசதிகளை நிறுவனமே செய்து கொடுக்கும்!… அவர் எவ்வளவு சரக்கு வேண்டுமானாலும் கடனாக பெற்றுக் கொள்ளலாம்” என்று உரத்த குரலில் அறிவிக்க கரகோஷம் அரங்கை அதிர வைத்தது.

       “வாழ்த்துக்கள்” மீண்டுமொரு முறை என் கையை குலுக்கி, முதுகில் தட்டிக் கொடுத்தனுப்பினார் நிர்வாக இயக்குனர்.

      எனக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று பிரமிப்பாக இருந்தது. ஆறு மாசமா இந்த ஊர்ல நாய் படாத பாடுபட்டு சீரழிந்து… சின்னா பின்னப்பட்டு… கடைசியில் சாகப் போன எனக்கு மரண வாசலில் இப்படியொரு அதிர்ஷ்டமா?… ஐயோ… அந்த கூரியர்க்காரன் மட்டும் ஒரு அஞ்சு நிமிடம் தாமதமாக வந்திருந்தால்… இந்நேரம் நான் பரலோகம் போய்ச்  சேர்ந்திருப்பேன்.  தலையை உதறி உடம்பை சிலிர்த்து கொண்டேன்.

      விழா முடிந்ததும் நிர்வாக இயக்குனர் என்னை தனியே அழைத்து மறுநாள் அலுவலகத்திற்கு வந்து விநியோக உரிமைக்கான சான்றிதழையும் மற்ற விபரங்களையும் பெற்றுக் கொள்ளச் சொல்லி விட்டுச் செல்ல, உடலெங்கும் ஒருவித புத்துணர்வு ரத்தம் ஓட, உள்ளமெங்கும் ஒருவித புளகாங்கித ராகம் ஒலிக்க, தெருவில் இறங்கி நடந்தேன்.

      “சந்தர்ப்பம் என்பது கடைசி வினாடி வரை நம்மை தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும்!… நாம்தான் அதை இடம்… பொருள்…. ஏவல்… பார்த்து சரியான தருணத்தில் சரியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்” என்கிற உண்மையை அனுபவத்தில் புரிந்து கொண்ட நான்  “அறைக்குப் போனதும் முதல் வேலையாக அந்த அமிலக் குப்பியை எடுத்த இடத்திலேயே வெச்சிடனும்!” என்று முடிவு செய்தேன்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சைக்கிள் கனவுகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை