ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
கிருஷ்ணனின் கண்ணியம்
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு
குடியாத்தம்
பார்வதிக்கு மூச்சு பேச்சே இல்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு, “ஒன்னுமில்ல.. அரை மணி நேரத்துல எழுந்துருவாங்க.. நல்லா சாப்பிட சொல்லுங்க.. இப்போ ஒரு சத்து ஊசி மட்டும் போட்டிருக்கேன்..” என்றவுடன் ராதா பணத்தை நீட்டினான்.
டாக்டர் ஒருமுறை பார்வதியை உற்றுப் பார்த்துவிட்டு, “காசு வேணாம்யா.. நல்லா பாத்துக்கோ.. எங்க ஆத்தா கூட இப்படித்தான் அலைஞ்சி திரிஞ்சி என்ன படிக்க வெச்சிச்சு, அதுக்கு ஒரு வா சோறு போட முடில என்னால. எனக்கு வேல வரவும் அவ போய்ட்டா” என்று கண் கலங்கிச் சென்றார்.
இந்த முறையும் கிருஷ்ணனுக்குச் சேதி போகவில்லை. அதற்குப் பிறகு ராதா, பார்வதியைத் தனியாக எங்கும் அனுப்புவதில்லை. எங்கு போனாலும் ஒரு கண் வைத்துக் கொள்வான்.
ஒரு நாள் வந்தது. பார்வதி தனக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று நினைத்து, சி.எம்.சிக்கு தனியே பேருந்து ஏறி சென்று விட்டாள். ராதாவிற்கு இது தெரியவில்லை. காலையில் வெளியில் சென்றவளை ஊர் பூராவும் தேடினான். பஸ் நிலையம், திருவள்ளுவர் ரோடு, காமராஜர் பாலம், உலகா அக்கா வீடு, பிரமிளா அக்கா வீடு என்று ஊரையே ஒரு முறை சுற்றி, திரும்ப பேருந்து நிலையத்திற்கே வந்து நின்றான்.
மாலை மங்கும் நேரத்தில், மங்கிய கண்களோடு பார்வதி ஒரு பேருந்திலிருந்து இறங்கினாள். ஆனால், ஏனோ அவளுக்கு எந்த நினைவும் இல்லை. எதையோ பறிகொடுத்தவாறு இருந்தாள். ராதா அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அமைதியாகவே இருந்தாள். ராதா சிந்தித்தான்.
“பெரியவரு வரமாட்டாரு.. சின்னவனுக்கு அலைச்சல் ஆயிடுமே. கிருஷ்ணன் ரொம்ப பயப்படுற புள்ள வேற..” என்று நினைத்து “நம்மளே பாத்துக்குவோம்..” என்று முடிவு எடுத்துக் கொண்டான்.
அன்றிலிருந்து ஒரு வாரம், பார்வதியை ராதா குழந்தை மாதிரித் தான் பார்த்துக் கொண்டான். காலையில் எழுந்து, குழந்தை போலவே குளிப்பாட்டி, சோறு ஊட்டி, தூங்க வைத்து, அவள் துணிகளைத் துவைத்து, சமைத்து, சாமான் தேய்த்து என முழுமையாக “அம்மா” என்ற சொல்லுக்கு ஆண்பால் அர்த்தம் கொடுத்தது அவன் செயல்கள்.
சிதம்பரம் – சர்வோதய சங்கம்…
கிருஷ்ணனுக்கு லட்சுமியின் அண்ணன் வந்து பேசியது, ரொம்பவும் மனதிற்கு பக்கத்திலிருந்தது. அன்று இரவு முழுதும் லட்சுமி முகமும் அம்மா முகமும் மாறி மாறி அவன் நினைவில் நிழலாடியது.
“சே.. லட்சுமி சித்தி வீடு எங்க இருக்குன்னு விலாச கேக்காம போய்ட்டோமே?” என்று சலித்துக் கொண்டான். வடிவேலுவும் இவனும் மொட்டை மாடியில் கைகளைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருந்தார்கள்.
வடிவேலு அவன் தீவிர யோசனையைப் பார்த்து, “என்னடா.. இவளோ யோசன..?” என்று ஆரம்பித்தான்.
கிருஷ்ணன் சரக்கென்று விழித்து, “ஒன்னுல ண்ணே..” என்று திரும்பிப் படுத்தான்.
வடிவேலு பேச்சு கொடுத்தான். “ஆமா.. உங்க வூட்ல மத்தவங்களுக்கு கண்ணானம் முடிஞ்சிச்சா?” என்றதும், கிருஷ்ணன் திரும்பி, தலையசைத்தான்.
வடிவேலு உடனே ஜிக் கென்று எழுந்து, “அப்போ நீ தா பாக்கின்னு சொல்லு. உனக்கு இப்போ ஒரு 26க்கு மேல இருக்காது.. ஏன் இன்னும் பாக்கல வூட்ல..?” என்றான்.
கிருஷ்ணனுக்குச் சுருக்கென்றது. என்ன சொல்வது என்று அறியாமல், வார்த்தைகளை முழுங்கினான்.
வடிவேலு அதைப் புரிந்து கொண்டு, “சரி.. சரி வருத்தப்படாத.. நா எனக்கு தெரிஞ்சவன் கிட்டலாம் சொல்லி வரன் தேட சொல்றேன்..” என்றான்.
கிருஷ்ணன் அதற்குள் பதறிப்போய், “அதுலாம் வேணாம் னே..” எனவும், வடிவேலு சந்தேகித்தான். அவன் திருட்டு முழியிலேயே புரிந்து விட்டது வடிவேலுவுக்கு.
“யார்ரா..? உன்னையே கணக்கு போட்டு தூக்கிட்டாளா? ம்ம்..ம்ம்..” என்று அவனை உசுப்பினார்.
கிருஷ்ணனுக்கு வெட்கம் ஆளைத் தின்றது. “அட நீங்க வேறென்ன..! நாங்க இன்னு நேர்லயே பேசிக்கல. முகம் மட்டும் காலண்டர்ல இருக்குற லட்சுமி முகமாட்டம் என் மனசுல பதிஞ்சி நிக்குது. இனிக்கு வந்தாரே.. அவுரு அவங்க அண்ண தான். அந்தப் பொண்ணை மொத மொறை பாத்தப்போவே, பின்னாலே போய் வூட்ட பாத்துட்டேன். அப்டே உதவி பண்ற மாறி பழகிட்டேன்..” என்று சொல்லி, “ஆனா.. நா உண்மைய சொல்லாம கண்ணானம் பண்ண மாட்டேன். வூட்லலாம் சொல்லி, உட்காந்து பேசி, புரியவெச்சி தா பண்ணிக்குவே.. அந்தப் பொண்ணு மட்டுமில்ல. எனக்கு அவுங்க வீட்டு ஆளுங்களையும் பிடிச்சிருக்கு..” என்று கண்ணியமாகச் சொன்னான்.
அவன் பதிலைக் கேட்டு வடிவேலுவே ஆச்சரியப்பட்டுப் போனான். “எந்தப் பொண்ணுக்கு எவ்ளோ சொத்துன்னு பாக்குற இந்தக் காலத்துல.. நீ தங்கமுடா..! நெசமாவே அவ குடுத்து வெச்சிருக்கணும்” என்று சொன்னான். “சரி.. ரொம்ப நேரமாயிடுச்சு.. வா உள்ளே போய் படுப்போம்..” என்று வடிவேலு கூப்பிட்டான்.
கிருஷ்ணன் அங்கேயே கண்கள் மூட, திடீரென்று அந்தக் கோயிலில் இருந்த பெரியவர் முகம் மின்னி மறைந்தது……..
லட்சுமியின் சித்தி வீடு..!
வேலு கிருஷ்ணனைப் பார்த்து, நலம் விசாரித்தது அனைத்தும், லட்சுமியிடம் சொன்னான். லட்சுமிக்கு அப்படியே குளுகுளுத்தது.
‘படிக்கிற நேரத்துல.. இவர வேற நியாபகப் படுத்தி விட்டானே.. இனிமே எங்கேர்ந்து படிக்க? அவர் என்னைப் பார்க்க வந்ததும், கண்ணாலே விடைபெற்றுக் கொண்டதும் அல்லவா நினைவு வரும்..! ஐயோ அன்றொரு நாள் கொட்டும் மழையில் எனைக் காண வந்தாரே..! எத்தனை காதல் என்மேல் அவர்க்கு..’ என்று பூரித்துப் போனாள்.
‘ஆனால், அன்று அவர் முகமே சரியில்லை. எதையோ இழந்து விட்ட மாதிரி இருந்தார்…’ என்றெல்லாம் மனக்கோட்டை கட்டி, அந்த சிம்மாசனத்தில் அவன் பிம்பத்தை நிறுத்த முயலுகையில், அண்ணன் குறுக்கிட்டான்.
“அப்ரோ லச்சு.. அவுங்க அப்பா தவறிட்டாரமே.. அத சொல்லும் போது தம்பி ரொம்ப வருத்தப்பட்டுது..” லட்சுமிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘என்ன.. எப்படி?’ என்று கேட்க வந்தவள், வார்த்தைகளோடு தன் சோகத்தையும் அப்படியே விழுங்கி, ‘வரம்பு மீறினால், வம்பு தான்..’ என்று நினைத்துக் கொண்டாள்.
உடனே மனம் நடராஜனை நினைக்க, ‘அப்பா நடராஜா.. என்ன இது சோதனை? பாவம்.. தவிச்சிருப்பாரே…! அவுரு நல்லாயிருக்கணும். இதுக்கு மேல ஒரு கஷ்டமும் அவுரு தனியா அனுபவிக்க வேணாம். நானு அவரோட சேர்ந்து, சந்திக்கிறேன். அவரை சந்தோசமா வெச்சிக்க எந்த தடையையும் எதிர்த்து நிப்பேன்..! சாமி.. நல்ல வழிகாட்டு ப்பா’ என்று தாரமாகவே மாறி யோசித்தாள்.
மனம் அவரைக் காண ஏங்கியது. ‘சரி.. இன்னு ஒரு எக்ஸாம் தன.. அனிக்கு சாயங்காலமே, கோயிலுக்குப் போவோம்.. என் நல்ல நேரம்.. அவரு அங்க வரனுமே..! சரி கடைக்கு வெளிய கண்ல படுற மாறி நிப்போம்.. வந்தா என் அதிஷ்டம்..’ என்று நினைத்து அப்படியே உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலை, சீக்கிரமாகவே எழுந்து, நன்கு படித்து, பத்திரமாய் அவளே எக்ஸாம் சென்டருக்கு போய் விட்டாள். தோழியிடம் முன்னமே கோயிலுக்குப் போக வேண்டும் என்பதைச் சொல்லி, சூசகமாகத் தன் காதலையும் விவரித்திருந்தாள்.
இருவரும் சொல்லிக் கொண்டபடி, எக்ஸாம் முடித்து, வீடு சென்று, சரியாக மீண்டும் மாலை 5.00 மணிக்குச் சந்தித்தனர். வீட்டில், “கோயிலுக்கு போய்ட்டு வர சித்தி..” என்று சொல்லிவிட்டு தோழியின் கைப்பிடித்து நகர்ந்தாள்.
இருவரும் ஓட்டமும் நடையுமாய் கிருஷ்ணனின் கடைக்கு எதிரே நின்றனர். அவளின் தேடல் நிறைந்த குறுகுறு கண்கள், தோழிக்கு கண்ணனைத் தேடும் ராதையின் கண்களை நினைவூட்டின.
6.00 மணி இருக்கும். கிருஷ்ணன் மெதுவாக, கீழிறங்கி வந்தான். அங்கும் இங்கும் பார்த்தானே ஒழிய, லட்சுமி நின்ற இடத்தைப் பார்க்கவில்லை.
ஓரிரு நிமிடங்கள் கழித்து, வடிவேலு அவனை சைகையில் அழைத்து, “டேய்.. அங்க ஒரு பொண்ணு உன்னையே பாத்துட்டு இருக்குது.. பாரு..” என்றவுடன் கிருஷ்ணனின் கண்கள் லட்சுமியை நோக்கின. உடனே அவள் தலை, கவிழ்ந்து கொண்டது.
கிருஷ்ணனுக்கு அந்த நொடியை நம்ப முடியவில்லை. ஒருமுறை கனவா நினைவா என்ற நிலையில் இருந்தான். உடன் அவன் உதட்டில் சிறிய புன்முறுவல் பூத்து பூத்து குலுங்கியது.
அதே பதட்டத்துடன் வடிவேலுவிடம், “ண்ணே..! நா சொன்ன பொண்ணு இவதான்னே.. என்னிய பாக்க தா வந்திருக்கு போலயே.. தெகிரியம் தான்னே.. எனக்கு என்னன்னு தெரில..! இப்போன்னு பாத்து கைலாம் ஒதறல் எடுக்குது..” என்று படபடவென்று சொன்னான்.
வடிவேலு மெதுவாய் யோசித்து, “டேய்.. இனிக்கு செகரெட்ரி கூட இல்ல. ராமலிங்கம்மு லீவு.. வேம்பு கூட ஊருக்கு போயாச்சு.. அந்தப் புள்ளைக்கு சம்மதம்னா, நம்ம உள்ள கூப்பிடுவோம்..” என்று தயங்கி தயங்கி சொன்னான்.
“ஹா.. நல்ல ஐடியா தா..” என்று கிருஷ்ணன் கொஞ்சம் படபடப்புடன் செயல்படத் தொடங்கினான். அங்கிருந்த யார்க்கும் தெரியாதவாறு, லட்சுமியைப் பார்த்து சைகையிலேயே கடை உள்ளே வரச் சொன்னான்.
அவளும் தோழியின் கையை விடாது பிடித்துக் கொண்டு உள்ளே சென்றாள். ஏற்கனவே ஒரு குடும்பம், புடவை எடுத்துக் கொண்டிருக்க, இவளும் சேர்ந்து கொண்டாள்.
கிருஷ்ணன் வழக்கம் போல், உள்ளே செல்வது போல் சென்று, “சொல்லுங்க என்ன பாக்கணும்..” என்று அவளிடம் கேட்கவும் லட்சுமிக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது.
“ம்ம்.. கொஞ்ச அதிக ரேட்ல காட்டுங்க. என் ஃபிரண்ட்கு கல்யாணம். கிஃப்ட் பண்ற மாறி வேணும்..” என்றாள்.
அவனும் அதைப் புரிந்து கொண்டு தனக்குள் சிரித்தவனாய், “ம்.. மாப்ள எந்த ஊரு..?” என்று வினவ, லட்சுமியும் இதழில் புன்னகையை வரவைத்துக் கொண்டு, “இதே ஊருலதா வேலை செய்றாரு.. சொந்த ஊர் வேலூருங்க..” என்று சொன்னாள். அப்படி உரைக்கையில் அவள் அதரங்கள் வெட்கத்தில் விளையாடின.
கிருஷ்ணனும் அதைக் குறுகுறுப்போடு ரசித்தான். பின் சிரித்துக் கொண்டே, “காதல் கண்ணானமா?” என்று வெடுக்கென்று கேட்டான். லட்சுமி கொஞ்சம் அமைதியாகி, பின் தீர்க்கமாகச் சொன்னாள்.
“இல்லீங்க. வீட்ல சொல்லிட்டோம். நேர்மையா நடந்துக்கிட்டதால, ரெண்டு பேர் வீட்லயு ஒத்துகிட்டாங்க..” இந்த வார்த்தைகளை உதிர்க்கும் போது, அவள் கண்களில் தான் எத்தனை தெளிவு..! அப்படி சொல்லியவள், வந்த வேலை முடிந்து விட்டது என்று விடைப் பெற எத்தனித்தாள். கிருஷ்ணனுக்குப் புரிந்துவிட்டது.
‘நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்களும் என்னை காதலிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும். ஓடிலாம் வரமாட்டேன். வீட்ல சொல்லி, கல்யாணம் பண்ணிக்கலாம்..’ என்பதை ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள்.
பின் ஏதோ நியாபம் வந்து, தோழியிடம் சொல்வது போல் கிருஷ்ணனிடம் சொன்னாள். “இங்க பாருடி.. பையனோட அப்பா தவறிட்டாங்கன்னு கஷ்டப்பட வேணாம். பொண்ணுன்னா அம்மா மாறி தா பாத்துக்கணும்னு இல்ல..! நீ அந்தப் பையனுக்கு அப்பா மாறி இருந்தும் பாத்துக்கலாம்….! சரி… வா எக்ஸாம் தா முடிஞ்சி போச்சுல.. ஊருக்கு போவோம்..,” என்று கண்ணாலே கிருஷ்ணனிடம் விடைப்பெற்றாள்.
கிருஷ்ணனுக்குத் தன் அப்பாவைப் பற்றி பேசியதும், விழிகளில் நீர் நின்றது. துடைத்துக் கொண்டு, “உங்க தோழிக்கு கண்ணான வாழ்த்துக்கள் ங்க..” என்று கடை வெளியே போய்க் கத்தினான். அவளும் திரும்பிப் பார்த்து, அர்த்தமாகச் சிரித்தாள்
(தொடரும் – வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings