in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 16) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 16)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

 வேலுவின் வரவு

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

 

சிதம்பரம் நடராஜர் கோவில்…

மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அந்தப் பெரியவர், என்று அவர் தங்கையைப் பார்த்தாரோ அன்றிலிருந்து உடம்பைக் கட்டுக்குள் வைப்பதற்குத் தவறினார். நித்ய யோகத்தை மறந்து, நித்திரையில் ஆழ்ந்தார்.

மீண்டும் மீண்டும் அந்தக் காட்சி அவரைக் கனவில் துரத்தியது. அதற்குப் பிறகு, ஒரு சில நேரங்களில், தூக்கத்தில் அந்தக் காட்சி வந்தால், உடனே ஒரு குடம் தண்ணீரை ஊற்றிக் கொண்டு, அப்படியே நேரே போய், ஏதாவது ஒரு சுவாமி சந்நதியில் அமர்ந்து கொள்வார்.  அந்த சுவாமியைப் பார்த்து மனதிற்குள் ஆயிரம் கேள்விளை எழுப்புவார்.

‘வெளியில் சொல்லலாம் என்றால், யார் இதை நம்புவார்கள்? என்னை அல்லவா பைத்தியக்காரன் என்பார்கள்? காலம் இப்போது ரொம்பவும் மாறி விட்டது. வானில் கோள்கள் மிதக்கிறது என்று பாடம் எடுக்கிறவர் கூட கிரக சஞ்சாரங்களை நம்புவதில்லையே.! நம்பினாலும் நம்பாவிட்டாலும் கால நேரத்தில், அதன் ஆதிக்கமின்றி என்ன நடந்து விடுகிறது. இங்கு….? பத்தாததற்கு ஒருவனின் முகம் வேறு அடிக்கடி வந்து செல்கிறது. பற்றுதல் இல்லாமல் வாழலாம் என்றால், அவன் முகத்தைப் பார்த்தவுடனே கண்கள் ஆறாகி விடுகிறது. நடராஜா..! இது என்ன எனக்கு சோதனை..! என்னை சீக்கிரம் உன்னோடு அழைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று மனம் குமுறினார். 

நைனாவின் காரிய நாட்கள் வரையில், கிருஷ்ணனுக்கு லட்சுமி நினைப்பே இல்லை. திரும்ப அம்மா அவனை ஊருக்கு வழியனுப்பும் போது, சிநேகிதன் நியாபகப்படுத்தித் தான் லட்சுமியின் நினைவு வந்தது. ஆனால் முன்பைப் போல் குதூகலம் இல்லை. 

சைக்கிளை மிதித்துக் கொண்டே சிநேகிதன் கேட்டான்.

“ஏண்டா அந்தப் புள்ளைய அப்டே மறந்துட்டே..?” கிருஷ்ணனுக்குக் கண்கள் கலங்கிற்று.

“இல்லடா.. இப்ப எனக்கு என்ன இருக்குன்னு சொல்லி, அவளே என்னோட கூட்டினு வருவேன் சொல்லு? அவள பாத்தா நல்ல வீட்ல வளர்ந்த பொண்ணு போல இருக்கா.. இங்க வந்து இந்த ஓட்டு வீட்டுக்குள்ள ஏன் கஷ்டப்படனும்..? என்ன ரெண்டு முறை தான பாத்திருக்கா, அதெல்லாம் மறந்துட்டிருப்பா. இந்நேரம் அவளுக்குக் கண்ணானம் கூட ஆயிருக்குமோ என்னவோ?” என்றபடியே நட்சத்திரங்கள் விடைபெறும் அதிகாலையில் அவனும் சிநேகிதனிடம் விடைப்பெற்றான். 

சிதம்பரம் – சர்வோதய சங்கம்..! 

ஊருக்கு வந்த கையுடன் வேம்பு நிலைமை தெரியாமல், கிருஷ்ணனைக் கோயிலுக்கு அழைத்தார். அவன் தன் அப்பா தவறிவிட்டதைச் சொல்லி, வரவில்லை எனத் தவிர்த்தான். வேம்பு அவனிடம் அன்போடு சொன்னார்.

“அடடே..! அன்னிக்கே செகரெட்ரி சொன்னாருப்பா. எனக்கு வயசாயிடுச்சுல்ல.. மறதி..! சரி வா இனிக்கு நானு உன்னோட கோபுர தரிசனம் மட்டும் பண்ணிக்கிறேன்..” என்று வாஞ்சையோடு அழைத்துச் சென்றார்.

கிருஷ்ணனும் ஏதும் சொல்லாமல் அவர் பின்னாலேயே போனான். அப்பாவை நினைவில் வைத்துக் கொண்டு, பழகும் ஒவ்வொருவரிடமும் அப்பாவைத் தேடுகிறான் அவன்.

வேம்புவும் கிருஷ்ணனும் பேசிக் கொண்டே போகிறார்கள். “கோபுர தரிசனம், கோடி புண்ணியம் தம்பி..” என்று பேச்சை ஆரம்பித்தார் வேம்பு.

அவனும் அதை ஆமோதித்து, “அன்னிக்கு ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே.. அதுக்கு பொறவு உங்களோட கோயில்கு வர வாய்ப்பே கிடைக்கல. கோயில் பத்தி வேற என்னெலாம் உங்களுக்கு தெரியும்? சொல்லுங்களேன்.. கேட்டுட்டே அப்டே கொஞ்ச தூரம் காலாற போவோம்..” என்றான்.

அவருக்கும் அது பிடித்திருந்தது. ஆறு மணி.. கோயில் சப்தம் கேட்டதும், இவர் கோயில் புராணம் தொடங்கியது.

“பொதுவாவே.. கோயில் எல்லாமே ஒரு அதிசயம் தாம்பா.. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு வரலாறு உண்டு. அதுபோல இந்தக் கோயிலுக்கும் உண்டு. தஞ்சை பெரிய கோவில்லெல்லாம் ராஜராஜ சோழன் கட்டினதா பேரு இருக்கு. ஆனா, சிதம்பர கோயில நிறைய ராஜக்கள் புதுப்பிச்சிட்டே இருந்திருக்காங்க. மொதல்ல இதுவும் காடு மாறி இருந்ததா தா சொல்றாங்க. பொறவு கோயிலாயிடுச்சு. கோயில் இருக்குற சிற்பங்கள நல்லா பாத்தோம்னா, அதுல பண்டைய கால மக்களோட வாழ்வியல்ல பத்தி நம்ம ரொம்பவு தெரிஞ்சிக்கலாம்..” என்று சொல்ல, கிருஷ்ணனுக்குக் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது.

“ஐயா… இந்த சித்தர்கள்லாம் பத்தி உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

அவர் ஒரு புன்சிரிப்புடன், “எல்லாத்தையு விட்டுட்டா அவரு தா சித்தர் ஒரு கருத்து இருக்கு நம்மூர்ல. ஆனா, அப்டி கெடையாது. சித்தர்கள்ல சில பேரு கடவுள நம்பவே மாட்டாங்க.. அவுங்களுக்குள்ளேயு கருத்து வேறுபாடு உண்டு. ஒரே ஒத்தும, எல்லாரும் மனசு அடக்கி, உட்கார்ந்திருவாங்க. ஐம்பூத உடலை தன் கட்டுக்குள்ள கொண்டு வந்து, தான் நினைக்கிற படி, அந்த ஒடம்ப வெச்சிக்கிட்டாங்க” என்று சொன்னார். 

இதில் கிருஷ்ணனுக்கு ஏனோ சந்தேகம் எழுந்தது.

“ஆமா.. ஏன் இவுங்க இப்டிலாம் கஷ்டப்படுறாங்க? சித்தர்னாலும் அவுங்களு மனுஷங்க தான்.. பிறப்பு இறப்பு அவுங்களுக்கு சமம் தானங்கயா..?” என்று புத்திசாலித்தனமாகக் கேட்டுவிட்டதாக நினைத்து, காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

அதற்கும் வேம்பு சரியான பதில் வைத்திருந்தார் தான். “அப்டி இல்லையா. ஆறு அறிவுள்ள நம்மால மட்டுந்தான் பேசமுடியும், சிரிக்க முடியும், அழுவ முடியும். மத்த ஜீவராசிகள் பேசாது. ஆறாம் அறிவு என்பது சிந்தனைய குறிக்குது. மனுஷங்க நம்ம பாவமோ புண்ணியமோ பண்ணிட்டு, அந்தக் கடனை முடிஞ்ச வரிக்கும் கழிச்சிட்டு, மிச்சத்துக்கு இன்னொரு பிறப்பு எடுக்குறோம்.

ஆனா, சித்தர்கள்.. இதுவரிக்கு அவங்க பண்ண பாவத்தை நேர் பண்ணிட்டு, தவம், தியானம்னு அந்தப் பிறவியோட முடிச்சிக்க நினைக்குறாங்க. அதுக்கப்பறோம் அவுங்க அவங்களுக்கான சூட்சம உருவுல இருந்து, நமக்கெல்லாம் வழிகாட்டுறதா சொல்லுவாங்க..” என்று முடிக்கையில் கிருஷ்ணன் ஆழ்ந்த சிந்தைக்குள் மூழ்கினான்,

பின் எழுந்து, “பா..! நீங்க நிறைய படிப்பீங்க போல..! நீங்க சொல்ற மாறி பாத்தா, சதுரகிரியில, அப்ரோ திருவாண்ணாமலை லாம் சித்தர்கள் சூட்சம உருவத்துல இருக்குறது உண்மை தான் போலயே..!” என்று ஆச்சரியப்பட்டான்.

வேம்பு கொஞ்சம் புன்னகைத்து, “நா கொஞ்ச ஆன்மீக புத்தகங்கலாம் விரும்பிப் படிப்பேம்பா. அதுவும் இல்லாமா நான் பிராமணன்கிறதுனால குடும்பத்துலேர்ந்தே கத்துகிட்டது சில விஷயங்கலாம்..” கிருஷ்ணனிடம் ஒரு வித தலையசைப்பு.

இருவரும் நான்கு வீதிகளை நடந்தே ஒரு சுற்று சுற்றி, தேர் நிலைக்கும் வரும்போல, அவர்களும் கடைக்கு வந்து சேர்ந்தார்கள்….

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்..! 

கல்லூரி வாசலில் லட்சுமியும் அவள் அண்ணனும் ஆட்டோவில் வந்திறங்கினர். காசுகடத் தெரு பாட்டி வீடு தான் புனிதவதியின் தங்கை வாக்கப்பட்டிருக்கும் வீடு.

அதாவது லட்சுமிக்கு சித்தி முறை வேண்டும், அங்கே குளித்துவிட்டு, நேரே பரிட்சைக்கு வந்தாயிற்று. லட்சுமியை நல்லபடியாக தேர்வறைக்குள் இருத்திவிட்டு, அண்ணன் மூன்று மணிநேரம் வெளியில் காத்திருந்தான்.

சித்தி, கையில் கொஞ்சம் லெமன் ஜூஸ் குடுத்து விட்டிருந்தாள். அரைமணி நேரத்துக்கு ஒரு முறை அதை “மொடக் மொடக்” என்று குடித்துவிட்டு, காத்திருந்தான் அண்ணன். 

கடைசி மணி அடித்ததும் மாணவ மாணவிகள் வெளியே வந்தனர். லட்சுமியும் அண்ணனைக் காக்க வைக்காமல், சீக்கிரமாகவே வந்தாள். இருவரும் ஒன்றாக வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டனர். இன்னும் இரண்டு நாட்கள் தேர்வு இருப்பதால், லட்சுமி படிப்பதில் கவனம் கொண்டாள். அண்ணன், தனது நண்பனோடு கோயிலுக்குப் புறப்பட்டான். 

மெதுவாக நடந்தே சென்றார்கள். சூரியன் முழுவதுமாக வானத்திற்கு விடைகொடுத்து விட்டிருந்தான். ஜில்லென்று காற்று வீசி கொண்டிருந்தது. லட்சுமியின் அண்ணனுக்கு சட்டென்று கிருஷ்ணனின் நினைவு.

“டேய்.. இங்க எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் சர்வோதயத்துல வேலை பாக்குறாரு.. அங்க கீரை வட.. அருமயா இருக்குன்னு சொல்லிருக்காரு.. வா..! போய் அப்படியே அவரப் பாத்துட்டு, ரெண்டு கீரவடைய உள்ள தள்ளுவோம். பொறவு அப்டே கோயில்கு போய்ட்டு வூட்டுக்குப் போயிருவோம்..” என்று சொல்ல, நண்பனும் சம்மதித்தான். 

இருவரும் சர்வோதய சங்கத்திற்குச் சென்றார்கள். உள்ளே சென்று, ஒருவரிடம் கிருஷ்ணனைப் பற்றி சொல்லி, “குடியாத்துல லேர்ந்து வந்திருக்கோம்னு சொல்லுங்கோ.. அவுரு வருவாப்டி..” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

தகவல் தெரிந்து, கிருஷ்ணன், “அண்ணன் வந்திருப்பாரோ?” என்று யோசித்துக் கொண்டே போனான். கீழே லட்சுமியின் அண்ணனைப் பார்த்ததும், அவன் மனம் கல்பட்ட குளம் போல் குழம்பிப் போனது.

‘இவரு எதுக்கு இங்க? ஒருவேல அந்தப் புள்ள என்ன விரும்புறேன்னு சொல்லிபுடுச்சா..? என்ன அடிச்சி இழுத்துட்டு போவ வந்திருக்காங்களோ? அடக் கடவுளே..! இதென்ன சோதனை.. ஊரு விட்டு ஊரு வந்து..’ என்று தலையில் அடிக்காத குறையாய் லட்சுமியின் அண்ணன் முன்னே நின்றான்.

கிருஷ்ணன் நினைத்தற்குத் தலைகீழாக அவர் பேசினார். “என்னப்பா.. நல்லா இருக்கியா..? இங்க லட்சுமி எக்ஸாமுக்காக வந்தேன். அப்டே உன் நினைப்பு வரவும், நேரா இங்க வந்துட்டேன். இன்னு ரெண்டு நாள் இங்கதான்..” என்று வலிய வந்து சொன்னார்.

கிருஷ்ணனும் ஒரு கொக்கியைப் போட்டான். “நல்லதுங்க.. பரவால்ல..! இந்தக் காலத்துல பொண்ணுங்கள எங்க படிக்க வைக்குறாங்க.? வயசு வந்தா கண்ணானம் முடிச்சி, வேலைய முடிக்கலாமான்னு பாக்குறாங்க. நீங்க அப்டி இல்ல.. படிக்க வெச்சிட்டா நல்லதுன்னு நினைக்குறீங்களே.. சூப்பருங்க..” என்றான். 

கிருஷ்ணனின் கொக்கியில மாட்டியவராய், “ஆமாம் பா. ஊருக்குப் புதுசா போய்ட்டு, இன்னு வரன் ஏதும் பாக்கல. நேத்திக்கு தா ஒரு ஜோசியரு நாங்க கிளம்பரேச்சே வந்தாரு. சரி.. படிப்ப முடிக்கட்டும்னு நாங்களு உட்டுட்டோம்..” என்று சொன்னார்.

கிருஷ்ணனும் சந்தோஷம் ஆனவனாய், “வாங்களேன்.. கீர வடை சாப்பிட்டுனே பேசுவோம்..” என்றபடி “அண்ணே.. 5 கீர வட கட்டு..” என்றான்.

அவன் உபசரிப்பு லட்சுமியின் அண்ணனுக்குப் பிடித்திருந்தது. சாப்பிடும் நேரம் வரை பேசிவிட்டு, “அப்ரோம் தம்பி.. அப்டே கோயில்கு போய்ட்டு.. வூட்டுக்குப் போறோம். சித்தி தேடும்..” என்று விடைபெற்றுக் கொண்டனர்……

குடியாத்தம்..! 

கணவன் சொர்க்கம் சென்றதிலிருந்து பார்வதிக்கு மனம் நரகமாய் எரிந்தது. தனியாக இருந்து வேலை செய்வதில் எல்லாம் கஷ்டம் இல்லை. எப்படியோ தன் வலுவுக்கேற்ற வகையில், ராதாவுக்கு கல்யாணம் முடித்து விட்டாள்.

கிருஷ்ணனைப் பற்றித்தான் அவளுக்குக் கவலை. ஓடி ஓடி படித்தான். இப்போது ஊர் தாண்டி சம்பாத்தியம் தேடுகிறான். அவனுக்குத் தான் எப்படி, எங்கு பெண் பார்ப்பது என்ற கவலை பார்வதிக்கு.

தினமும் யார் வீட்டிலாவது போய் உட்கார்ந்து கொண்டு, “எம் பையனுக்கு பொண்ணு பாருங்களேன்..” என்று அந்த வயதிலும் ஓடாய்த் திரிவாள். ஊரில் இருக்கும் மூத்த பிள்ளைக்கு எத்தனை எத்தனை கடுதாசி போடுவாள். 

கடைசியில், தன் மருமகனிடம் தஞ்சம் அடைந்தாள். கிருஷ்ணன் வாயார, “மாமா..மாமா” என்று கூப்பிட்டு வந்தவன் தான். மாமாவும் நல்ல வரன் வரட்டும். நிச்சயம் சொல்கிறேன் என்று முடிந்த வரையில் தெகிரியம் கூறி அனுப்பினார்.

இருப்பினும் பார்வதி வாரம் ஒரு முறையாவது அங்கு ஆஜராகி விடுவாள். இப்படி உடல்நிலையைப் பற்றி கவலைப்படாமல், இங்கும் அங்கும் திரிந்து, காய்ச்சல் ஏற்பட்டு விட்டது. அதை ராதா கவனித்து, வெளியில் எங்கும் போகாதவாறு பார்த்துக் கொண்டான்.

இருப்பினும், ஒரு நாள் ராதா குளிக்கும் போது, பார்வதி எங்கோ போய் விட்டாள். திரும்ப வருவாள் வருவாள் என்று காலை உணவையே ராதா தயார் செய்து வைத்து விட்டான். வாசலேயே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சியாய் ஒரு சேதி வந்தது.

“டேய்.. பம்புசெட்டாண்ட அம்மா மயக்கம் போட்டுருச்சு டா.. கொஞ்ச வாடா ராதா..” என்று ஒருவன் பரபரத்தான். உடனே ராதா உதறிக்கொண்டு எழுந்து ஓடிப்போய் அம்மாவைக் கைத்தாங்கலாகத் தூக்கி வந்து, வீட்டில் கிடத்தினான்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆழம் ❤ (சிறுகதை) – ✍ ரெங்கபார்வதி

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 4) – ✍ விபா விஷா, அமெரிக்கா