in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 5) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்...(அத்தியாயம் 5)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வானவில் வாழ்க்கை

ரியாக.. வந்தது வைகாசி ஒன்று..! குடியாத்தம் நகரை இரண்டாகப் பிரிக்கும் கெளண்டன்ய நதியின் கரையில் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் அமைந்திருக்க, கோயிலின் முன் மக்கள் கூட்டம் கடலலைப் போல காட்சியளித்தது. அம்மனின் சிரசு ஊர்வலம் காண, விடியற்காலையிலேயே வந்து காத்திருந்து காண்போர் சிலர். குளித்து முடித்து, அப்போது வந்திருக்கும் சிலர். பெண்கள், குழந்தைகள் என ஜனக்கடலுக்கு நடுவே, அம்மன் சிரசை சுமந்தபடி ஒருவர் நீந்திக் கொண்டே செல்கிறார். சிரசைத் தொட்டு ஆசிர்வாதம் பெற நினைத்து, மக்கள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டனர். கூட்டமே “தாயே.. கங்கம்மா..! கங்கம்மா..!” என்று பக்தி பரவசம் அடைந்திருந்தது. 

சிரசு மெல்ல மெல்ல ஆடிக்கொண்டு வரும் போது, ஒரு பெண்மணிக்கு சாமியருள் வந்தது. பாதிக்கடல் அப்படியே அந்தப் பக்கம் திரும்பி, “கங்கம்மா..” என்று வணங்கத் தொடங்கியது. இப்படியாக சிரசு ஊர்வலம் நிறைவு பெற்று, கோயிலுக்குள் வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒரு மாத காலம், ஊரில் திருவிழா களைகட்டும். 

வான வேடிக்கைகள், கடைகள் எனக் கூட்டம் எங்கும் அலையலையாய் ஆங்காங்கே பொங்கி வழிந்து கொண்டிருந்தது. கடைகளில் சீப்பு, க்ளிப், கரண்டி எனத் தன்னிடம் இருப்பதையே தேடித்தேடி வாங்கும் மங்கையர் கூட்டத்தைப் பற்றி மறவாமல் குறிப்பிட வேண்டும்.

இளம் பருவத்து பெண்கள், தங்கள் வீட்டு அலமாரிகளைத் திருவிழா கடைகளில் மலிவாக விற்கப்படும், பீங்கான் பொம்மைகளைக் கொண்டு வருடாந்திரம் அலங்காரம் செய்யத் தவறவே மாட்டார்கள்.

குழந்தைகளுக்குத் தனி லிஸ்ட். ரங்க ராட்டினம், சுத்தும் குதிரை, பொம்மை கார், பஸ், ரயில் எனப் பயணம் நீண்டு கொண்டே போகும். கிருஷ்ணன் இந்த முறை இதையெல்லாம் ரொம்பவும் ரசித்தான்.

‘அடுத்த வருஷோ உன்னப் பாக்குற குடுப்பன இருக்குமா தாயே?’ என்று மனதிற்குள் அடிக்கடி கேட்டுக் கொண்டான்.

பத்து நாட்கள் பத்து நிமிடங்களாய் கரைந்தும் விட்டன. காலேஜுக்கு அவன் தயாராகி விட்டான், ஆனால் காசு தயாராக வில்லை. பார்வதியும் வட்டிக்கு விட்ட பணத்தையெல்லாம் புரட்டிக் கொடுத்தாள். 

இப்படி பல பண நெருக்கடிகளுக்குப் பின்பு, ஒரு கனத்த இதயத்தோடு நண்பர்களுக்கும் தன் சொந்த ஊருக்கும் பெற்றெடுத்த குடும்பத்திற்கும் விடை கொடுக்க வேண்டிய நாளும் வந்தது.

**********************************************************

சென்னை – பச்சையப்பன் கல்லூரி..!

ஆம்..! அவன் பச்சையப்பன் கல்லூரியில் பாதம் பதித்து விட்டான். எத்தனையோ கலைஞர்களை வளர்த்து விட்ட பெருமைக்குரிய இந்தக் கல்லூரி தன்னையும் நல்ல நிலையில் உயர்த்தி வைக்கும் என்ற நம்பிக்கையோடு காலேஜ் பெயர்ப் பலகையைப் பார்த்தான்.

பெருமூச்சு விட்டபின், மேலே வானத்தைப் பார்த்தான். ஏனோ மேகக் கூட்டங்கள், அப்பாவின் முகம் போலத் தன்னைச் சேர்த்துக் கொண்டு, அவனுக்குப் போக்குக் காட்டின. கனத்த இதயத்துடன் உள்ளே சென்றான். ஓரிரு நாள் எல்லோரும் போல் நண்பர்கள் இல்லாமல் தவித்தான். செட்டு சேர்க்க ஒரு வாரம் பிடித்தது. அதற்குப் பிறகு, கவலையானது அவனை விட்டுப் பறவை போல பறந்து சென்று விட்டது. 

காலமும் நேரமும் தங்களுக்குள் பேசிக்கொண்டு, அவனுக்குச் சோதனைகள் வைத்தன. சில நாட்கள் அதில் அவனுக்குத் தான் வெற்றி. ஆனால் சோதனை அதிகம் ஆக ஆக, காலம் அவனை வென்று நின்று, வெறிக்க வெறிக்கப் பார்த்தது.

படிக்க வந்தது கணிதத்தில் மேல்படிப்பு. ஆனால், அவன் கற்றுக் கொண்டதோ சினிமா பற்றித் தான்.

1990 – அப்போதிருந்த பெரிய பெரிய டைரக்டரின் காண்டாக்ட் உள்ள ஆசிரியர்களைத் தேடி, பின் ஒவ்வொருவராக போய்ச் சந்தித்தான். சந்திக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு பாடவேளையைக் கட் அடித்தான். 

கதை, திரைக்கதை, வசனம், பாடல் என நான்கைப் பற்றியும் அத்துப்படியாகக் கற்றுக் கொண்டான். கதையை வைத்துக் கொண்டு, ஆசிரியர்களைத் துரத்தினான். முதலில் யாரும் பிடிகொடுக்கவில்லை.

ஒரு சில நாள், “அப்பா சொன்னது போலவே படிப்புல தட வந்துருச்சு. ஆனா, இது நல்ல தடையா இருக்கணும்னு வேண்டிக்கிறேன்” என்று நேர்மறையாகவே சிந்தித்தான். அவ்வப்போது விதியை நினைத்து நொந்தும் கொண்டான். 

ஒரு நாள் வந்தது. அவன் எண்ணங்கள் வண்ணமும் பெற்றது. ஆனால், அது வானவில்லைப் போல ஒரு சில நிமிடங்களே நீடித்ததா? இல்லை அதைத் தாங்கி நிற்கும் வானம் போல நிரந்தரம் பெற்றதா? அவன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம்…

அவன் சென்னை வந்து ஒரு வருடம் ஆறு மாதம் நிறைவு பெற்று விட்டது. ஆனால், அவன் இதுவரை ஒரு பருவத் தேர்வு கூட எழுதவில்லை. அவன் கதையே என்ன என்று தெரியாத நிலையில், கற்பனை கதைக்குள் தொலைந்து போயிருந்தான்.  இன்னும் ஆறு மாதத்தில், தான் எப்படியும் ஒரு பாடலாசிரியராகவோ, அசிஸ்டன்ட் டைரக்டராகவோ, வசன கர்த்தாவாகவோ ஆகிவிடுவேன் என்ற நினைப்பு அவனுக்கு மேலோங்கி இருந்தது. 

அன்று காலை 10 மணிக்கு, ஆசிரியர் வந்து சொன்ன மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

பிரபல இயக்குனர் ஒருவரின் பெயரைச் சொல்லி, “இன்னிக்கு வாத்தியாரு என்ன அவருகிட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக்காருடா. எப்படியு ஒரு  பாட்டாவது ஓகே ஆயிரும்” என்று கைகளை உற்சாகமாகக் குத்தினான்.

வேகமாகக் கிளம்பி, ஆசிரியர் வழக்கமாக இருக்குமிடம் நோக்கிச் சென்றான். அவன் கையில் ஒரு லெட்டரைக் கொடுத்த ஆசிரியர், “வாழ்த்துக்கள்” என்றார்.

அவன் ஆர்வத்துடன் பிரித்துப் பார்க்க நினைத்த அந்த நொடி, ஓ.ஏ ஒருவர் ஓடி வந்தார். “டேய் கிஸ்னா.. உங்க நைனாவுக்கு ஒடம்பு முடியலையாமே… அம்மா போன் போட்டுருக்குது..” என்று பரபரத்துச் சொன்னார். 

அவ்வளவு தான். அந்த லெட்டரைச் சுருட்டி அப்படியே பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஆசிரியரிடம் விடைப்பெற்றான். அவனுக்கு அப்போது தெரியுமா? அந்த லெட்டரைப் போலவே அவன் சினிமா கனவும் சுருங்கி விட்டதென்று..?

காலம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் காசு பணத்தோடு சொந்த ஊருக்குப் புறப்பட்டான். வழியெங்கும் முதல் நாள் போலவே, மேகங்கள் அப்பாவின் முகத்தைக் காட்டின. அவனுக்குள் அவர் சொன்ன வார்த்தைகள் மின்னி மின்னி மறைந்தன.

“இந்தப் பழனி கணக்கு முடிஞ்சிடும்..” என்பது தான் அவை.

அவன் கண்களிலும் கூட ஏதோ மின்னியது. “அட…! என்ன இது? நைனாக்கு ஒன்னுல..” என்று தானே சமாதானம் சொல்லி, வந்த நீரை அடக்கிக் கொண்டான்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து, சொந்த ஊரான குடியேற்றத்திற்குப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் அவன் நினைத்திருப்பானா? இதற்குப் பிறகு, இந்த பச்சையப்பன் கல்லூரி வாசல் அவனை அழைக்கப் போவதில்லை என்று. இத்தோடு அவனின் சினிமாவை நோக்கிய பயணம் முடிவடையப் போகிறது என்று.

முன்பு போலவே, காலம் அவனை வென்று காட்டி விட்டு, ஒரு ஏளனச் சிரிப்புடன் குடியேற்றத்துப் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றது.

*********************************************************

குடியேற்றம் – வீடு..!

பேருந்திலிருந்து இறங்கி, ஆட்டோ பிடித்து, நேரே வீட்டிற்குச் சென்றான். அப்பா படுத்துக் கொண்டிருந்தார். அவர் காலில் பெரியதாக ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. அவன் அதைப் பார்த்தவாறே நின்றான்.

கிருஷ்ணனைக் கவனித்த பார்வதி, “வாடா..எப்படி இருக்க? என்ன உடம்பு இவளோ இளைச்சிட்ட?” என்று அவன் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். 

கிருஷ்ணன் ஏதும் பதில் சொல்லாமல், அப்பாவிடம் சென்றான். “என்னா நைனா? என்ன ஆச்சு காலுக்கு?” என்று கேட்டான்.

“ஒன்னுல டா. லேசா கால்ல புண்ணு வந்துச்சு. டாக்ட்ராண்ட போனதுக்கு சுகரு கிகருன்னு சொல்லி, கால்ல கட்டுப்போட்டு அமிஸ்ட்டாங்கடா” என்று வெள்ளந்தியாகச் சொன்னார்.

இந்த விவரத்தைக் கேட்ட பின்பு தான், கிருஷ்ணனுக்கு நிம்மதி பிறந்தது. “நைனா.. இனிமே வேலைக்கு எங்கேயு போவாத.. கொஞ்ச நாள் நான் இங்கேயே இருக்கே..” என்று சொல்லும் போது, அவன் விழிகளில் பொறுப்பு தெரிந்தது. 

உள்ளேயே பார்வதி இவ்வாறு நினைத்துக் கொண்டாள். “தகவல் வந்தவுடனே சிட்டா பறந்து வந்த கடக்குட்டி தான்,  இனிமே இந்தக் குடும்பத்தோட எதிர்காலம்..!”

கிருஷ்ணன் கொஞ்ச நேரம் ஈஸி சேரில் படுத்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அண்ணன் ராதா வந்தான். கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு, “இப்போதா வந்தியா? எதுனா துன்னியா…?” என்று கேட்டு, விறுவிறுவென்று இரண்டு வாழைப்பழத்தை வாங்கிவந்து கொடுத்தான். 

கிருஷ்ணனுக்கு மனதில் ஒரு நெருடல். “ணா… பெரியவரு வரல?” என்று ராதாவிடம் கேட்டான்.

“அ…. அவரு. வரல. தகவல் சொன்னோம். ஆளக்காணோம்..” என்று கச்சிதமாக பேச்சை முடித்தான் ராதா.

ஜோதிடம் பார்த்துவிட்டு வந்த காசில் கொஞ்சத்தைக் கிருஷ்ணனிடம் கொடுத்து மகிழ்ந்தான். அம்மகிழ்வைத் தடுக்கும் பாணியில், “அம்மா…” என்ற அலறல் சத்தம். அது பழனியின் குரல்.

கிருஷ்ணன் வெடுக்கென்று எழுந்தான். ராதாவும் என்ன ஏது என்று தெரியாமல் பின்னாலேயே சென்றான். அப்பா கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடந்தார். ராதாவும் கிருஷ்ணனும் அவரை மெல்ல மேலெழுப்பினர். கீழே சிதறிக் கிடந்த, இலைகளைப் பார்த்த கிருஷ்ணனுக்கு, கோபத்தில் மூக்கு நுனிகள் துடித்தன.

“நைனா.. இனிமே இதெல்லாம் பண்ணிட்டு இருந்த.. ஒரு நாள் இல்ல ஒரு நாள்.. எல்லாத்தையு தூக்கிப்போட்டு ஒடச்சி புடுவ.. அதான் காலுக்கு முடிலல.. அமைதியா உட்காரக் கூடாதா?” என்று வைதான். அந்தக் கோபத்தில் அக்கறையும் தான் கலந்திருந்தது.

மதியவேளை…! 

கிருஷ்ணன் பயணச்சோர்வில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். “வாழ்த்துக்கள்..! என்றொருவர் கை குலுக்க” கனவு கலைந்து அவன் திடுக்கென்று எழுந்து கொண்டான். குபீர் என்று வியர்த்திருந்தது.

சட்டை பாக்கெட்டில் சுருட்டி வைத்த லெட்டர் நியாபத்திற்கு வந்தது. அவன் அதைப் பிரித்துப் படிக்கையில் மணி 4.00 இருக்கும். அதில், 

“அன்பு கிருஷ்ணனுக்கு, 

உங்கள் பாட்டு ஒன்று, திரைப்படத்திற்குத் தேர்வாக இருக்கிறது. இதைப் பற்றிப் பேச வேண்டும். கீழ்க்கண்ட முகவரிக்கு மதியம் 1 மணிக்குள் என்னை வந்து சந்திக்கவும். வாழ்த்துக்கள்!!” என்று எழுதியிருந்தது. 

கிருஷ்ணனின் மொட்டு விழிகளில் நீர் முத்துக்கள் முட்டிக்கொண்டு நின்றன. ‘இந்தக் காலம் தான் எத்தனை கோரமானது’ என்று நினைவுகளில் வெந்து கொண்டான்.

அதற்குப் பிறகு, கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பும் அந்த ஆசிரியரைப் பார்க்கும் வாய்ப்பும் அவனைத் தள்ளி வைத்தன. முயற்சி செய்து செய்து, அயர்ந்து போய் ஓரிடத்தில் அந்தப் பயணத்தை அப்படியே முடித்துக் கொண்டான்.

ஒரு நாள் மதராஸ் சென்று, அவன் துணிமணிகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களையெல்லாம் அள்ளிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அதற்குப் பின், முப்பது வருடங்கள் கழித்தே அவன் மெட்ராஸ் மண்ணில் கால்பதிக்கப் போகிறான் என்று அவனும் அறிந்திருக்க மாட்டான்…….!

(தொடரும் – வெள்ளி தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மரபணு (சிறுகதை) – ✍ சரத், கடலூர்

    கசாருகன் யார்? (சிறுகதை) – ✍ லட்சுமி பாலா, சிவகாசி