in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 14) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 14)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

14. கண்ணணுக்கு வந்த கடுதாசி

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

 

குடியாத்தம் – ராதா அறை..! 

ராதாவின் கதை சொல்லும் பணி, அந்த இரவு தொடர்ந்து கொண்டே இருந்தது. கிருஷ்ணனிடம் அன்று ஏனோ அப்படி ஒரு ஆர்வம்..!

அவனும், “இம்.. ம்..” என்று கேட்டுக்கொண்டே இருக்க, ராதாவும்,  “நீ பொறந்தப்போ ஊர்ல கொஞ்சம் பரவால்ல. அரிசி இலவசமா போட்டாங்க. அப்ப கூட அம்மா உனக்கு அது ஒத்துக்காதுன்னு கடைல போய் வாங்கியாந்து ஆக்குவாங்க. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னென்னா, பெரியவருக்கு முன்னாடி ஒரு கொழந்த நின்னிருக்கு. எனக்கு தெரிஞ்ச வரையில அது செத்துப் போச்சுன்னு தா கேள்வி. ஆனா.. நைனா வாண்டா ஜோசியம் கத்துக்குறப்ப இத பத்தி விரிவா சொன்னாரு. நம்ம வம்சத்துல ரெண்டு கொழந்தங்க செத்து பொழக்கணும்ங்குறது விதியாம். அப்படி பாக்குறப்போ நீ அதுல ஒன்னு. இன்னொன்னு அந்த முதல்ல பொறந்த கொழந்தயாத்தான் இருக்கணும்னுங்குறது நைனாவோட ஊகம். ஒருவேளை முன்னமே ஜோசியம் கத்து வெச்சிருந்தா அந்தக் கொழந்த உயிர் பிழைக்கும்ங்குற விஷயம் முன்னாலேயே தெரிஞ்சிருக்கும்னு சொன்னாரு..” என்று விறுவிறுவென்று ஓடும் வார்த்தை ரயிலைச் சரக்கென்று நிறுத்தி, “சரி நீ போய் தூங்கு. நாளைக்கு லேட்டாய் போது பாரு. விடியறப்போ கிளம்பரியா..?” என்று கேட்டார்.

அதற்குக் கிருஷ்ணன் “இல்லல நா சாயங்காலம் போறேன். நேர் பஸ் உண்டு. அப்டே தூங்கினே போயிடலாம்..” என்று சொல்லி, “அப்போ..! விதிப்படி பாத்தா அந்த கொழந்த எங்கேயோ வளரணும்ல? அதுக்கு தா பொழச்சிகணும் விதி இருக்கே. எங்கேயிருந்தாலும் பொழச்சிக்கும்ல?” என்று தன் நியாயமான சந்தேகத்தை முன் வைத்தான்.  ராதாவும் அந்தக் கேள்வியை ஆமோதித்தான்.

“ஆமாம்மா..! பாப்போம். எங்கேயாவது இருக்கணும். இந்த வீட்ல யாரு ஜாதகத்துலயு சகோதரக்காரகனான அங்காரகன் உடனிருக்குற அம்சம் இல்ல. உன்னோட ஜாதகத்தை தவிர்த்து…..” என்று புதிரொடு முடித்தான்…

குடியாத்தம் – லட்சுமி வீடு..!

லட்சுமிக்கு இரவு பூராவும் தூக்கமில்லை. புரண்டு புரண்டு படுக்கிறாள். ‘அம்மாவிடம் எப்படி சொல்வது? இனிமே நம்ம இங்க தான் இருப்போம். அந்தக் கோயில்ல இருக்க பெரியவர் சொன்னபடி பாத்தாலு ‘அவரு’ தா எனக்கு….’ என்று யோசித்து வெட்கப்பட்டுக் கொண்டாள். கணவன் என்று தானே சொல்லிப் பார்த்து, அப்படியே உறங்கிப் போனாள். 

காலையில் எழும்போதே ஒரு கலக்கம். எதையோ நியாபகப்படுத்த எண்ணியவள் அம்மா குரல் கேட்கவும், சரியாகச் சொன்னால், அம்மா சுப்ரபாதம் கேட்கவும் அப்படியே மறந்து விட்டாள்.

கிருஷ்ணனைப் பார்த்த பிறகு, அவள் செய்த வீட்டு வேலைகள் எல்லாம் முழுமையடைந்தது போல் உணர்ந்தாள். வாசல் கோலத்தை ரசித்துக் கொண்டே போட்டாள். அவள் போட்ட தேநீர் அன்று அற்புதமாக வந்தது. இவ்வளவு நாள், எத்தனை முறை முயற்சித்தும் வராத வட்ட தோசை, அன்று அவ்வளவு அழகாக நிலா போல வந்தது.  துணி துவைப்பது கஷ்டமாகவே தெரியவில்லை. பாட்டு பாடிக் கொண்டே அந்த வேலை முடிந்தது.

பம்பரம் போல சுழன்று வேலை செய்யும் லட்சுமியைப் பார்த்து, புனிதவதி ஆச்சரியப்பட்டாள். அவள் பெண்ணை நினைத்து நிறைவு அடைந்தாள். லட்சுமியின் வேலையிலும், புனிதவதியின் எண்ண அலையிலும் குறுக்கிட்டு அலைபேசி ஒலித்தது. புனிதவதி போய் எடுத்தாள்.

இங்கிருந்து காலி செய்து கொண்டு போனவரைக் கேட்கவும் அவள் தகவல் சொல்லி, போனை வைத்தாள். லட்சுமிக்கு அப்போது தான் கிருஷ்ணனின் நினைப்பு வந்தது.  உடனே அவள் மறந்த ஒரு நிகழ்வும் நியாபகத்தில் எழுந்தது.

‘அம்மா எனக்கு எத்தனை அழகான புல்லாங்குழல் வாங்கிக் கொடுக்கிறாள்..! கொள்ளை கொள்ளும் அழகு அது..! நல்ல பொன்னிறம், துளைகள் கண்ணைப் பறிக்க, குழலின் முனையில், பட்டுச் சேலையில் வெட்டி எடுத்த சரிகை மின்னி மின்னி கவர்கிறது. வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து எடுத்த அந்த நொடி, அம்மா அதைப் பிடுங்கி வைத்துக் கொண்டாள்..!’

‘இந்த கனவிற்கு அர்த்தம் என்னவாக இருக்கும்..?’ என்று யோசித்துக் கொண்டே கீரை ஆயந்தாள். பின் அவளே, ‘ஓ… ஒருவேளை  அவரைத்தான் எனக்கு கட்டி வைக்க போகிறார்களோ..? அப்படியென்றால் அதைப் பிடுங்கி கொண்டதன் அர்த்தம் என்னவாக இருக்கும்..?’ என்று மோட்டுவாயை முட்டியில் வைத்து முட்டுக் கொடுத்து, ஆழ்ந்து சிந்தித்தாள். ஒன்றும் மட்டுப்படவில்லை.

மழை வருவதைப் பார்த்ததும் உடனே தாவாரத்தில் இருந்த துணியை எடுக்கப் புறப்பட்டாள். தாவாரத்துக்கு நேரே வாசல். அவள் மனம் ஏனோ அங்கே பார்க்கச் சொன்னது. அவளும் பார்த்தாள். வாசலுக்கு நேரே எதிர் வீட்டுத் திண்ணையில் அவனும் சிநேகிதனும் அமர்ந்திருந்தார்கள். தன்னைப் பார்த்தவுடன் கிருஷ்ணன் எழுந்து நிற்பதையும் அவள் கண்டாள். 

வெட்கம் வந்தது. ஆசை வந்தது. ‘ஆசை மானமறியாது…’ என்று புத்தி உரக்கச் சொல்லவே, வெளியே வந்தவள், அவர்களை கண்டு கொள்ளாதது போல உள்ளே சென்று விட்டாள். துணியைப் போட்டு விட்டு, தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு சிரித்தாள்.

‘ப்பா.. எத்தனை தெகிரியம் இவருக்கு? நிச்சயம் இது காதல் தான். கல்யாணத்தில் முடிய அந்த பொன்னம்பலத்தான் தான் வழி செய்ய வேண்டும்..’ என்று மனமுருகி வேண்டினாள். 

வெளியே மழை லேசாக விடவும், கிருஷ்ணன் கிளம்பினான். சிநேகிதன் கிருஷ்ணனிடம் கேட்டான்.

“வீட்ல எல்லார்கிட்டையு சொல்லிட்டியாடா ஊர்க்குப் போறேன்னு..?” என்று கேட்க

“சொல்லிட்டு தாண்டா வந்த. மாமா வரென்னாரு.. நாந்தா லட்சுமியப் பாக்கணும்னு உன்னோட வந்துட்டேன்..” என்று சொல்லிய கிருஷ்ணன், அங்கிருந்து கிளம்பி நேரே பேருந்து நிலையத்திற்குச் சென்று (குடியாத்தம்-சிதம்பரம்) நேர் பஸ்ஸைப் பிடித்தான்.

வழி நெடுகும் ராதா சொன்ன வார்த்தைகள் தான் எதிரொலித்தன. ‘ராதா சொல்ற மாறி பாத்தா.. நான் தான் அந்த செத்துப் போச்சுன்னு நினைச்ச, குழந்தய உயிரோட பாக்கப் போற ஒரே ஆள். எனக்கும் ராதாவுக்கும் 10 வருஷம் வித்தியாசமுண்டு. அப்போ பெரியவருக்கு முன்னாடில்ல இந்த கொழந்த பொறந்திற்கு. கண்டிப்பா மாமா வயசு இருக்கும். இல்ல..! மிச்சமா கூட இருக்கும்…’ என்று தலையைத் தேய்த்து உறங்கச் சென்றான்.

சிதம்பரம் சர்வோதயா..!

கிருஷ்ணன் விடியற்காலையில் சிதம்பரம் சேர்ந்து விட்டான். காலாற நடந்தே கடைக்குப் போனான். கடை பூட்டியிருந்தது. சரி என்று அப்படியே வாசற்படியில் படுத்துக் கொண்டான்.

6.00 மணி ஆனதும், ரவி வந்து பார்த்து, அவனை எழுப்பி அறையில் சேர்த்தான். அறைக்கு வந்த பத்து நிமிடங்களில் நண்பர்கள் பேச்சைக் கேட்டு, உறக்கம் தெளிந்தான் கிருஷ்ணன்.

ராமலிங்கம் ஆரம்பித்தார். “என்ன கிருஷ்ணா.. ஆடிட்டிங் செக்ஷனாம்.. கேள்விப்பட்டேனே” என்றதும்

கிருஷ்ணன் அண்ணார்ந்து பார்த்து, “வணக்கம்னே.. நேத்து எந்த ஊருக்கு அனுப்புனாரு செகரெட்ரி? நைட் வீட்டுக்குப் போலயா?” என்று கேட்க

“அட ஆமாய்யா..! வீட்டுக்கு போகல. யமுனா வேற கத்தும்.. மதிய சாப்பாட்டுக்கு போலனா இருக்கு சங்கதி எனக்கு” என்று சொல்லிக் கோவிலுக்குக் கிளம்பினார். 

கிருஷ்ணன் வந்தது தெரிந்ததும், குளியல் துண்டோடு அப்படியே வந்து மூச்சிரைக்க நின்றான் வடிவேலு.

கிருஷ்ணன் என்ன ஏது என்று கேட்பதற்குள், “உன்ன.. வேலைய விட்டு தூக்க தான் கிஸ்னா.. அந்த ஆளு உனக்கு காஸ் கொடுத்திருக்கான். நீ நூறு ரூவாய திருடிட்டேன்னு மேலிடத்தில கம்பிலேண்ட் போயிருக்கு. இதை பத்தி முன்னாடியே சொல்லலாம்னு பாத்தா என்கிட்ட ஏது செல்லு?” என்று தலையில் அடித்துக் கொண்டான். 

கிருஷ்ணனுக்கு அவன் அக்கறை ரொம்பவும் பிடித்திருந்தது. வடிவேலுவைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, “என்ன பண்லாம்னு நீங்களே சொல்லுங்களேன்” என்றான்.

வடிவேலு மெல்ல யோசித்து, “மீசக்கார மேல ஏற்கனவே நிறைய கம்பிலேண்ட் இருக்குது. எனக்கென்னமோ இவர இங்கிருந்து மாத்திருவாங்கன்னு தோணுது. இப்போதைக்கு 100 ரூவாய கட்டிட்டு பேசாம இருந்துரு.. யாராவது எதுனா சொன்னா காதுல போட்டுக்காத..” என்று சுமுகமான முடிவைச் சொன்னான்.

கிருஷ்ணனும் குளித்து முடித்து நேரே ஆபீசுக்குச் சென்றான். போனதும், மீசைக்காரர் நட்ட நடு ஹாலில் கிருஷ்ணன் மேல் எறிந்து விழுந்தார். அவன் ஏதும் பேசாமல், 100 ரூபாயைக் கட்டிவிட்டு செக்ஷனுக்குச் சென்று விட்டான். அவன் அமைதியாக இருந்ததால், ஆடிட்டிங் வேலையும் மிஞ்சியது.

தினமும் ராமலிங்கத்தைப் போலவே ஒவ்வொரு ஊருக்கும் திரிவான். சாப்பாடெல்லாம் அந்தந்த சங்கத்திற்குப் பொருத்தவாறு இருக்கும். கிருஷ்ணன் வேலை முடிந்து பணம் வாங்குவதை விட, அந்த ஊரின் நினைவாக ஏதேனும் பொருள் வாங்குவதைப் பழக்கமாக்கிக் கொண்டான்.

ஆடிட்டிங் வேலை பார்த்தாலும், அலட்டிக் கொள்ளாமல், சங்கத்தில் இருக்கும் கடைநிலை ஊழியரிடமும் சமமாக நடந்து கொண்டான். இந்தப் பண்பே அவனைத் தூக்கி மேலே அமர்த்தியது. போகிற இடமெல்லாம் இதைப் பற்றி பெரிதாகப் பேசினர். 

இந்த சேதி தெரிந்த பின், அவன் போகும் ஒவ்வொரு இடத்திலும் அவனுக்கு ராஜமரியாதை. அவனுக்குக் கொடுப்பதற்காக, பொருளை, முன்பே எடுத்து வைத்திருந்தார்கள் செகரெட்ரிகள். இப்படியே அவனுக்கு சங்கத்தில் மரியாதை கூடிக் கொண்டே போக, இங்கே மீசைக்காரரின் நிலை கேட்பாரற்று இருந்தது. 

ஒருநாள் அவரே எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டுவிட்டு, வேலையைச் சுயமாக ராஜினாமா செய்து, கிளம்பி விட்டார். அன்று மீசைக்காரருக்குக் கிடைத்த மதிப்பு. “எத்தன நாள்.. என்ன பண்ணாலும், பொசுக்குன்னு மன்னிப்பு கேட்டானே.. கொழந்த மனசு பா அவருக்கு…” என்று பலரும் அவரை நினைத்து வருத்தப்பட்டனர். கிருஷ்ணனுக்குக் கூட ஒரு மாதிரி தான் இருந்தது.

புது செகரெட்ரி….

ரஜினி, கமல் போன்ற நட்சத்திர நடிகர்களைத் திரைப்பட உலகிற்கு அறிமுகப்படுத்திய பாலச்சந்தரைப் போல, கிருஷ்ணனுக்கும் அவன் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒரு பாலச்சந்தர் வந்தார். அவரின் முதல் கோரிக்கையே, “அடுத்தவன் பணத்தை திருடாதே..” என்பது தான்.

மேலும், “இதனால் கணக்கும் ஒழுங்கா காட்ட முடியும். வீண் மனக்கசப்புகளும் இருக்காது. அப்படி ரொம்பவும் அவசியமாக பணம் தேவப்படுறதுன்னா என்னிடமே கேளுங்க. என் சொந்த செலவில் நானே தரேன்னே..” என்று சொன்னார்.

இதனால் மட்டும் புது செகரெட்ரியை எல்லோருக்கும் பிடித்த விடவில்லை. வீட்டில் கல்யாணம் காட்சி என்றால், தூண் போல வந்து நிற்பதும், சோகமென்றால் ஒரு நண்பனைப் போல தோள் கொடுக்கிற பண்பும் தான் ஊழியர்களை வெகுவாகக் கவர்ந்தது. கிருஷ்ணனையும் தான். 

ஆடிட்டிங் என்றாலே, கிருஷ்ணனுடன் அவரும் கிளம்பி விடுவார். அவனுடனே இருந்து, கணக்கு எழுதி முடிக்கும் வரை காத்திருந்து நடுஜாமமாக இருந்தாலும், ஒன்றாகவே சாப்பிட்டு ஊர் திரும்புவார். அவர் ஊர் திருக்கோவிலூர். அந்த ஊரில் ஆடிட்டிங் இருந்தால், நேரே அவர் வீட்டிற்கே அழைத்துச் சென்று விடுவார். 

கிருஷ்ணன் அந்த வீட்டுப் பொங்கலை உயிருள்ள வரை மறக்க மாட்டான். அப்படி ஒரு கைப்பக்குவம். சில நேரங்களில் இரவு நேரங்கழித்து, வீட்டிற்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் இவரே முட்டை உடைத்து, அதில் மிளகு போட்டு அசத்தி விடுவார். 

கிருஷ்ணன் எப்போது ஊருக்குப் போக வேண்டுமென்றாலும் அவர் காரி(சி)ல் தான் போவான். அதை அந்த மனிதர் ஒரு முறை கூட திருப்பியும் கேட்டதில்லை. யாரிடமேனும் இதைப் பற்றி அவர் சொல்லியும் பார்த்ததில்லை.

காலம் இரண்டு மாதங்களை தன் வாயில் விழுங்கியது. ஒரு நாள் கிருஷ்ணனுக்குக் கடிதாசி ஒன்று வந்தது. அதை ரொம்பவும் உரிமையோடு பாலச்சந்தர் படித்தார். 

“அன்பு கிருஷ்ணாவுக்கு மாமா எழுதுவது,

நல்லா இருப்பனு நம்பிக்கை இருக்கு. உன் நண்பர்களை எல்லாம் கேட்டதா சொல்லு. அப்பாவுக்குக் கால் என்னமோ பண்ணுதுன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போனோம். போன இடத்திலே கால் எடுத்துட்டாங்க. அவசரமா பண்ணதால, உனக்கு சொல்ல முடில. அதுக்கு பொறவு நேத்து வரிக்கும் அவரு எதுவும் சாப்பிடல. இனிக்கு காலம்பற……

அவருக்கு செய்ய வேண்டியது நீ தான் முன்ன இருந்து செய்யனும்.! 

அன்புடன்,

மாமா”

இதைப் படித்துவிட்டு, கிருஷ்ணனுக்குக் கடுதாசி வந்ததாக காட்டிக் கொள்ள வேண்டாம் என்று பாலச்சந்தர் கேட்டுக் கொண்டார். அவர் நெஞ்சில் ஓரிரு நிமிடம், கனத்த மெளனமே சத்தமாய் ஒலித்தது..!

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆகாயப் பூக்கள் (சிறுகதை) – ✍ மலர் மைந்தன், கல்பாக்கம்

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 2) – ✍ விபா விஷா, அமெரிக்கா