டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பன்னிரண்டு வருடங்கள் கழித்து அந்த இடத்தில் கால் வைத்த நிஷாவிற்கு, உடம்பு ஒரு வித அச்சத்துடன் சிலிர்த்தது
இதே இடத்தில் தான் பன்னிரண்டு வருடங்கள் முன்பு அவள் அக்கா சந்திரா பெருக்கல் குறி போல் இரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கிடந்தாள். பல போலீஸ் வண்டிகள் அருகில் நின்றிருந்தன. அவள் உடம்பைச் சுற்றி சாக் பீஸால் கோடு போடப்பட்டிருந்தது
நிஷா அப்போது பத்து வயதுப் பெண். வீட்டில் இருந்து போலீஸ் ஜீப்பில் அவள் அக்காவின் உடலை அடையாளம் காட்ட அங்கு வந்த அம்மா அப்பாவுடன் நிஷாவும் வந்திருந்தாள்.
ஆனால் அவர்களுடன் வந்திருந்த குடும்ப நண்பர், அவசரமாக அருகில் இருந்த ஆட்டோவை அழைத்து நிஷாவை அதில் உட்கார வைத்து இறுக அணைத்து, அவள் கண்களை இறுக மூடியிருந்தார்
ஆனாலும் இரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியமான சந்திரா அக்காவின் உருவம் பச்சை குத்தியது போல் ஆழமாகப் பதிந்து விட்டது நிஷாவின் உள்ளத்தில்.
பள்ளி மாணவியாக அந்த ஊரை விட்டுப் போன நிஷா, இப்போது அரசாங்க மருத்துவராக அதே ஊரில் பணிபுரிய வந்திருக்கிறாள். மீண்டும் தன் காரில் ஏறி தனக்கு அரசாங்கம் கொடுத்திருந்த வீட்டிற்கு வந்தாள்.
வீட்டில் அம்மாவும் அப்பாவும் இவள் வருகைக்காக் காத்திருந்தனர்
“நிஷா ஏன் இவ்வளவு நேரம்? இந்த ஊரில் போஸ்ட்டிங்கே வேண்டாம் என்றேன். நீ மருத்துவமனையிலிருந்து வர கொஞ்சம் நேரமானாலும், எங்களுக்கு உயிரே போய்விடும் போல் இருக்கிறது. மோசமான ஊர் அம்மா இது” என்றார் அப்பா
அம்மா சூடான காபி கொண்டு வந்து அருகில் இருக்கும் டேபிள் மேல் வைத்தாள். இருவர் முகத்திலும் அச்சத்தின் ரேகைகள்
“மெடிக்கல் லீவ் ஒரு மாதம் போட்டு விட்டுப் பிறகு இந்த ஊரில் இருந்து மாற்றிக் கொள்ளலாமா?” என்றாள் அம்மா.
எந்த பதிலும் சொல்லாமல் நிஷா தன் அறைக்குள் சென்று விட்டாள். அப்பா இந்த ஊர் மோசம் என்கிறார். ஊர் என்ன செய்யும்? அரசியல்வாதிகளுக்கு ஊரே பயப்படுகிறது.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு இருக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம். அப்போது அப்பா இங்கே பாரஸ்ட் ஆஃபிஸில் ஹெட் டிராப்ட்ஸ்மேனாக வேலை செய்து கொண்டிருந்தார்
நிஷா அப்போது ஏழு வயது சிறுமி. சந்திராவோ பதினேழு வயது கல்லூரி மாணவி. இருவருக்கும் இடையில் பத்து வருட வித்தியாசம். சந்திரா அவளைத் தங்கையாகவே நினைப்பதில்லை, ஒரு தாயின் பாசம் தான் காட்டுவாள்.
அவளைப் பாசத்துடன் அணைக்கும் போது கூட ஒரு மலரைப் போல் மென்மையாகத் தான் அணைப்பாள். நிஷாவைப் பொறுத்தவரை சந்திரா அவளுக்கு ஒரு அழகு தேவதை, காட் பாதர் என்ற சொல்வார்களே அதைப் போலத் தான்
அவள் அழகைப் பார்த்து மெய் மறந்து போவாள். மாலை நேர மஞ்சள்வெயில் பொன் போல் மின்னுமே, அதைப் போல் ஒரு ஜொலிக்கும் நிறம். அலை அலையாக சுருண்ட கருங் கூந்தல், பெரிய அழகிய கண்கள்.
அதிலும் அவள் அவளுக்குப் பிடித்த வெளிர் நீல நிற தாவணியும். அடர்த்தியான நீல நிற ஜரிகைப் பட்டுப் பாவாடையும் அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து அந்தத் தெரு வழியே சென்றால், மேகங்கள் சூழ முழு நிலவு பவனி வருவது போலவே தோன்றும்.
அவள் அழகும், அறிவும், பண்பும் எல்லோரையும் வியக்க வைத்தன.
அந்த சமயத்தில், அப்பா ஒரு வாரமாகவே மிகவும் டென்ஷனாக இருந்தார். வீட்டிலும் ஏதும் சொல்லவில்லை.
சந்திரா வற்புறுத்தி கேட்க, “ஆபீஸில் ஒரு சின்ன தகராறு” என்றார்.
“காட்டில் வேண்டாத மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியை மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் எரியூட்டுவதுண்டு. காட்டில் அந்தப் பகுதியைக் கான்ட்ராக்ட் எடுத்த ஒப்பந்தக்காரர், எரிக்க வேண்டிய பகுதியை பிளானில் இரண்டு அங்குலம் அதிகம் காட்ட வேண்டும் என்றும், அதற்காக ஐந்து லட்சம் தருவதாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்” என்றும் சொன்னார்
“இரண்டு அங்குலம் தானே… பணம் வாங்காமல் அவர் கேட்டபடி வரைந்து கொடுத்து விடுங்களேன், இதில் உங்களுக்கு என்ன நஷ்டம் ?” என்றாள் அம்மா, பிரச்சனை வராமல் இருந்தால் போதுமென்ற மனநிலையுடன்
“உனக்கு என்ன தெரியும்? ஒரு அங்குலம் என்பது பத்து மைலுக்கு சமம். எரிக்க வேண்டிய பகுதியில் இருந்து இரண்டு பர்லாங்க் தூரத்தில் அடர்த்தியான சந்தன மரக் காடுகள் தொடங்குகிறது. அவன் எரிப்பதாகச் சொல்லி விட்டு சந்தன மரங்களை பல கோடிக்கு விற்று விடுவான், அது தான் அவன் திட்டம். என் இலாகாவிற்கு செய்யும் பச்சை துரோகம், அதெல்லாம் அவன் விருப்பப்படி செய்ய முடியாது. அதற்குத் தான் அவன் என்னை வேறு மாதிரி பயமுறுத்துகிறான்” என்றார்
சின்னப் பெண்ணான நிஷாவிற்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. அப்பா காட்டில் வைக்க மறுத்த நெருப்பு, அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் தன் மகனைக் கருவியாக்கி, சந்திராவை நாசமாக்கி நடுத்தெருவில் போட்டு, இவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷத்திலும் நெருப்பு வைத்தான்
அதை அறிந்த நாளில் இருந்தே, அக்கினிக் குஞ்சாய் மாறினாள் நிஷா. அவள் நெஞ்சில் அன்று கனன்ற கோபம், இதயம் என்னும் காட்டின் பொந்தில் ஒளிந்து நின்றது
தன் சிரிப்பு சொந்தம் பந்தம் எல்லாம் மறந்தாள், உள்ளே கனன்ற தீ அவள் சந்தோஷத்தை அழித்தது. வெளியே கொழுந்து விட்டு வரத் துடித்தது
படிப்பைத் தவிர வேறு எதிலும் மனம் செலுத்தாமல், வெற்றிகரமாக டாக்டராக வெளியே வந்தாள். சில வருட அனுபவத்திற்குப் பிறகு, இந்த ஊருக்கு மாற்றப்பட்டாள்
ஒரு நாள் நிஷா தன் அம்மாவிடம், “அம்மா இன்று என்னுடைய பழைய நண்பன் பிருத்வி தன் அம்மாவை நம் வீட்டிற்கு அழைத்து வருகிறான், அவன் இப்போது ஒரு ஐ.பி.எஸ் ஆபீஸர்” என்றாள்
“மூன்றாம் வகுப்பில் எப்போது பார்த்தாலும் உன்னுடன் சண்டை போட்டு என்னிடம் வந்து உன்னைப் பற்றி ரிப்போர்ட் செய்வானே அந்தப் பையனா?” என்றார் அப்பா ஆச்சரியமாக
‘ஆமாம்’ என்று தலையசைத்தாள் நிஷா
ஆனால் இப்போது அவன் நல்ல நண்பன். அவனுக்கு சந்திரா அக்காவை மிகவும் பிடிக்கும். அவள் இறந்த விதம் அவனை மிகவும் மாற்றி விட்டது
சந்திராவின் இறப்பிற்குப் பிறகு அவர்கள் குடும்பமே காலி செய்து கொண்டு போனது வேறு அவனுக்கு கோபத்தைக் தூண்டியது
‘ஒருவேளை அந்த கோபம் தான், கொடூரங்களைக் கண்டு கொதித்ததோ? தீயவர்களிடமிருந்து நல்லவர்களைக் காக்க வேண்டும் என்று ஐ.பி.எஸ். ஆக்கியதோ?’ என்று கூட நிஷா நினைத்தாள்
ஆனால் பிருத்வியோ, அந்த ஊரில் முதன் முதலில் நிஷாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ஆச்சரியம் அவளைப் பார்த்தது மட்டுமல்ல, இயல்பான அவளது குணங்களும் மாறியது தான்
எப்போதும் குழந்தை போல் சிரிக்கும் அவள் சிரிப்பு காணாமல் போனது தான் அவனுக்குப் பெரிய வயிற்றெரிச்சல். சோழியை குலிக்கிப் போட்டது போல் சிரிக்கும் அந்த சிரிப்பை மீண்டும் அவள் முகத்தில் காண அவனுக்கு மனம் துடித்தது
பிருத்வி ஒரு நாள் ஆபீஸ் சம்பந்தமாக ஏதோ மெடிக்கல் ரிப்போர்ட் வாங்க நிஷாவைத் தேடி வந்தான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு அரசியல்வாதி பெரிய பென்ஸ் காரில் வந்து இறங்கினான்.
“இந்த ஆளை உனக்கு அடையாளம் தெரிகிறதா நிஷா?” என பிருத்வி கேட்க
“இவர் யாரென்று எனக்குத் தெரியாது, ஆனால் ஆளும் கட்சியில் பெரிய ஆள் என்றும் அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறிக் கொண்டு அடிக்கடி இங்கே வருகிறார்” என்றாள் நிஷா
அதற்குள் அந்த ஆள் வந்து விடவே, இவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டனர்.
“டாக்டரம்மா, நீங்கள் ரொம்பவும் சின்ன வயசாக இருக்கிறீர்கள், உங்களுக்கு எது வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் தயங்காமல் கேட்கலாம். இனிமேல் உங்கள் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், பழம், மளிகைச் சாமான்கள் எல்லாம் நானே அனுப்பி வைக்கிறேன். நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள்” என்றான்.
நிஷாவிற்கு கோபம் வந்து விட்டது
“ஹலோ, நீங்கள் அதற்கு சிரமப்பட வேண்டாம். நான் தான் முன்பே உங்களிடம் சொல்லியிருந்தேனே, எனக்கு அரசியல் கட்சி ஆட்களின் தொடர்பே பிடிக்காது என்று. உங்களுக்கு டாக்டரின் உதவி தேவையென்றால் மட்டும் இங்கே வரலாம். நான் அரசாங்க மருத்துவர், சட்டப்படி எந்த கட்சியுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது” என்றாள் முகத்தில் அடித்தது போல
அரசியல்வாதி கோபத்துடன், “என்னிடம் யாரும் இப்படி மரியாதைக் குறைவாகப் பேசியதில்லை, நான் வருகிறேன்” என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வேகமாகப் போய் விட்டான்
அவன் போன பிறகு, “நிஷா, அவன் யாரென்று உனக்குக் கொஞ்சமும் நினைவு வரவில்லையா?” என பிருத்வி மீண்டும் கேட்க
‘இல்லை’ என தலையாட்டிய நிஷா, ” உனக்குத் தெரியுமா பிருத்வி?” எனக் கேட்டாள்
“தெரியும், இந்த ஊரில் இந்த ஆளைத் தெரியாதவர்களே இருக்க முடியாது, அவ்வளவு நொடேரியஸ்”
“அப்படியா?” என்றாள் ஆச்சரியமாக.
“இன்னும் உனக்குத் தெரியவில்லையா நிஷா?”
‘இல்லை’ என்று உதட்டைப் பிதுக்கினாள்
“இவன் தான் உன் அப்பாவை மிரட்டியவன், இவன் பிள்ளை தான் நம் சந்திரா அக்காவை அழித்தவன்” என்றான் ப்ரித்வி கோபமாய்
திடுக்கிட்டு சிலையாக உதடுகள் துடிக்க நின்றாள் நிஷா, முகம் பாறையாக இருந்தது.
“கவலை வேண்டாம் நிஷா. பிள்ளை புல் டைம் குடிகாரன், அவன் அடிக்கிற தண்ணிக்கு சீக்கிரம் மேலே டிக்கெட் வாங்கி விடுவான். நீ உன் வீட்டிற்கு கிளம்பு, நேரமாகி விட்டது நானும் வருகிறேன்” என்று டேபிள் மேல் இருந்த தன் தொப்பியை எடுத்துத் தலையில் சரியாக வைத்துக் கொண்டு கிளம்பினான்.
சில மாதங்கள் கழித்து நிஷா திடீரென்று பிருத்விக்குப் போன் செய்தாள்.
“பிருத்வி, நீ சொன்னது நூறு சதவீதம் சரியாகப் போனது. அந்த குடிகாரன் இப்போது என் மருத்துவமனையில், மிகவும் ஆபத்தான நிலையில். கிட்னி மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி, மாற்று கிட்னி கிடைக்கும் வரை அவன் உயிரை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்” என்றவள் ஒரு மாதிரி உரக்க சிரித்தாள்.
“ஹலோ நிஷா, என்ன ஆயிற்று உனக்கு? உன் சிரிப்பே ஒரு தினுஸாக இருக்கிறதே, ஏன்?” என்றான் பிருத்வி கவலையுடன்.
“பிருத்வி, இந்த பாரதியார் பாடல் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்… அதை ஆங்கோர் காட்டிடை பொந்தினில் வைத்தேன்… வெந்து தணிந்தது காடு” என்றாள்.
“நிஷா என்ன ஆயிற்று? ஏன் அடுத்த வரி பாடவில்லை?” என பிருத்வி கேட்க
அதற்குள் அவனுக்கு ஆபீஸில் இருந்து ஒரு போன் கால்.
கூட்டு ரோடில் பைக்கில் சென்ற ஒரு வாலிபனை லாரி இடித்துத் தள்ளி விட்டதென்றும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸில் மருத்துவமனையில் சேர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்கள்.
போலீஸ் விசாரணையில் தான் உண்மை வெளியானது. வேண்டும் என்றே நடந்த ஆக்ஸிடன்ட் என்றும், இறந்த அந்த வாலிபனின் கிட்னி அந்த குடிகாரனுக்கு எல்லா வகையிலும் பொருந்தும் என்றும், அதனால் தான் ஆக்ஸிடன்ட் என்றும் தெரிந்தது.
சுயநலத்திற்காக ஒருவனைக் கொன்று, கிட்னி அறுவைச் சிகிச்சைக்கு தயாரான அந்த அரசியல்வாதியின் மகனைப் பார்க்கப் பார்க்க கோபம் பொங்கியது நிஷாவிற்கு. எப்படியும் அவனுக்கு அந்த டிரான்ஸ்பிளேன்டேஷன் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.
அந்த மருத்துவமனையில் சேர்ந்த சீனியர் நெப்ராலஜிஸ்ட் டாக்டர் ஷர்மிளா இவளைத் தேடி யோசனையுடன் வந்தாள்.
“நிஷா, உன்னிடம் ஒரு யோசனை. இந்த கட்சிக்காரன் எல்லோரிடமும் திமிர் செய்கிறான். அநியாயமாக லாரி ஏற்றி ஒருத்தனைக் கொன்று தன் மகனுக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறான். அதற்கு டி.எஸ்.பி. பிருத்வி தனியாக அவசர நடவடிக்கை எடுக்கிறார். இந்த கிட்னியை ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ஒருவருக்குப் பொருத்தலாம். அப்போது தான் இந்த மாதிரி கொலைகளைத் தடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”
“நீங்கள் சொல்வது மிகவும் சரி. இந்த குடிகாரன் நீண்ட நாள் வாழ்ந்து நாட்டிற்கு என்ன நல்லதா செய்யப் போகிறான். ஆனால் இந்த மாற்று அறுவை சிகிச்சை உடனடியாக ரகசியமாக முடிய வேண்டும்” என்றாள் நிஷா
அடுத்த ஆறு மணி நேரத்தில், தேவையான வேறு ஒருவருக்கு மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது.
பிருத்வியும் கட்சிக்காரன் மேல் டிபார்ட்மெண்ட் ஆக்ஷன் எடுத்து எப்.ஐ.ஆரும் போட்டு விட்டான்.
அவனுடைய மகனுக்கு இரத்தக் கொதிப்பும், சர்க்கரையின் அளவும் அதிகமாக இருப்பதால் அதெல்லாம் நார்மலுக்கு வந்த பிறகு சர்ஜரி என்று சொல்லி விட்டார்கள்.
‘அவன் பிழைப்பது கடினம்’ ஆதலால் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடச் சொன்னார்கள்.
“உங்கள் மருத்துவ மனையில் என்ன தான் நடக்கின்றது?” என்றான் பிருத்வி.
அவனை உற்றுப் பார்த்த நிஷா, “எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கும்” என்று சிரித்தாள். மேலும் அவள் பாடினாள் “வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்” என்றாள்.
“நீ பேசுவதும், பாடுவதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் உன் முக மலர்ச்சியைப் பார்த்தால் இப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றான் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
அக்னி குஞ்சொன்று கண்டேன்.நல்லதை.
பிரித்வி நிஷா நல்ல பதிலடி கொடுத்து விட்டார்கள்.
இந்த மாதிரி பதில் அடி கொடுக்க நிஜத்தில் முடியுமா என்ற கேள்வி என்னுள் தொக்கி நிற்கிறது.
கதை எழுதிய விதம் சிறப்பு.கதையின் கரு அருமை.அழகாக எழுதி சமர்ப்பித்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
Most welcome and thanks to the comments expressed by Madam Aarthy. These comments are encouraging and just like tonic to the beginning writers like me. Thank you so much .
‘மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டு பாப்பா ‘ என்றான் பாரதி . ஏதோ நம்மால் முடிந்தது .
Very relevant quote , matched well 👏💐
அருமையான கருத்துடன் அழகான நடை , படித்ததும் என்னை அறியாமல் கை தட்டினேன்.ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்.
Banumathy Aunty congratulations, admiring your good work and inspiring us