மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மதியம் உணவு முடிந்தவுடன் தனது சட்டையை எடுத்து கைகளை தேடினான் சேகர்.
“சாப்பிட்டு முடிந்தவுடன் எங்கடா போற” – சேகரின் அம்மா.
“கட்டபிள்ளை கடைக்கு மா” என்று விரைந்தான் சேகர்
தனது அம்மா ஏதேதோ வசைபாட எதையும் காதில் வாங்காதவாறு நிக்கோடினும் ஹார்மோனும் அவனை கட்டைப்பிள்ளை கடைக்கு வழிகாட்டியது.
சேகர் வீட்டுக்கு எதிர்வீடு தான் கட்டபிள்ளை கடை. கடையும் வீடும், ஒன்று சேந்தார் போல் இருக்கும். அது ஒரு சவுண்ட் சர்வீஸ் கடை. கட்டபிள்ளை ரேடியோ ரிப்பேர் செய்வதில் கை தேர்ந்தவன். கடை முழுவதும் பழைய ரேடியோக்கள் நூற்றுக்கணக்கில் கிடக்கும், எந்நேரமும் சால்ரிங் மற்றும் டிரைவருடன் காட்சி தருவான் கட்டபிள்ளை.
குடும்பம் சற்று பெரியது, இவன் இரண்டாவது மகன். படிப்பு வரவில்லை, தனது 14 வயது முதல் வேலைக்கு சென்று விட்டான். இப்போது இந்த கடை வைத்து இரண்டு வருடமாகிறது, பெரிதாக ஒன்றும் ஓட்டம் இல்லை. புதுபட கேசட்டுகள் ரெக்கார்ட் செய்து தருவான், மேலும் பாடல் எழுதிக் கொடுத்தால் பழைய புதிய பாடல் என்றாலும் ரெக்கார்ட் செய்து தருவான், அதில் கொஞ்சம் வருமானம் வரும். பெரிய வருமானம் இல்லை என்றாலும், கடையைக் காட்டி திருமணம் செய்து விடலாம் என்பது இவனது பெற்றோரின் கணக்கு.
கட்டபிள்ளை கடையில் பாடல்கள் என்னேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் கோர்வையாக பாடல்களை கேட்க முடியாது டெஸ்டிங் என்ற பெயரில் விட்டு விட்டு பாடல் கேட்கும். எஸ்பிபி ஜானகி ஒன்று சேர்ந்தாற் போல் பாட மாட்டார்கள். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிப்பார்கள்.
அந்த பகுதி மக்களுக்கு கட்டபிள்ளை என்றால் தான் பரிச்சயம். அந்த பெயர் ஏன் அவனுக்கு வந்தது என்று அவனுக்கேத் தெரியாது பள்ளியில், இல்லை சொந்தக்காரர்கள், இல்லை செல்லமாக கட்டைபிள்ளை என்று அழைத்தார்களா என்று அவனுக்கே தெரியாது. கட்டை பிள்ளை என்கிற அடையாளம் அவன் மேல் சிறுபிள்ளை முதல் கூடவே வளர்ந்தது. எவ்வளவு முறை அதை மாற்ற முயற்சி செய்தும் தோற்றுப் போய் அதன் உடனே வாழ பழகி விட்டான் கட்டபிள்ளை.
கட்டபிள்ளை தாய்மாமன் முருகேசன் பக்கத்து வீட்டிலேயே இருக்கிறார், அதாவது கட்டபிள்ளையின் அம்மாவின் அண்ணன். இருவருக்கும் சொத்து தகராறு பிரிந்த இருக்கிறார்கள், அடிக்கடி தகராறு வரும் சில சமயம் கைகலப்பில் முடியும். தாய்மாமனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு.
சட்டையை மாற்றிய சேகர் கட்டபிள்ளை கடையை அடைந்ததும், அங்கு மறைத்து வைத்திருந்த வில்ஸ் சிகரெட்டையும் இரட்டைக்குருவி தீப்பெட்டி எடுத்து பற்ற வைத்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.
கட்டைபிள்ளை சால்ரிங்கால், சூடுவைத்த ரேடியோ போர்டை கீழே வைத்துவிட்டு, “தேவ் பண்றது ஒண்ணுமே சரியில்லை” என்றான்.
“என்னடா பண்ணினா, எந்த பொண்ணையாவது சத்தாச்சிடான?” என்றான் சேகர்.
“இரண்டு வீடு தள்ளி புதுசா ஒரு குடும்பம் வந்து இருக்கு”
” ஆமாம் முஸ்லிம் குடும்பம்” என்றான் சேகர் .
“அவர்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு. அந்த பொண்ணு வெளியே வரும்போதெல்லாம் பாட்ட மாத்தி மாத்தி போடுறன், சவுண்டு ஜாஸ்தியா வைக்கிறான், அது பாக்குதா முறைக்கு தானே தெரியல” என்றான் கட்டபிள்ளை.
“இவனுக்கு எதுக்குடா இந்த வேலை” என்று வில்ஸ் சிகரெடை கட்டபிள்ளையிடம் கொடுத்தான் சேகர்.
“இல்லை சாப்பிட போறேன், நீ கடையை பார்த்துக்க வந்துடுறேன்” என்றபடி வீட்டினுள் சென்றான் கட்டை பிள்ளை.
சற்று நேரத்தில் தேவ் கடைக்கு வந்தான். வந்தவன் விடுவிடுவென கரகாட்டகாரன் கேசட் எடுத்து ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலை போட்டு சவுண்ட் ஏற்றி வைத்து செட்டியார் கடை பஸ் நிறுத்ததையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இரண்டு பெண்கள் கட்டபுள்ள கடையை கடந்த பிறகு பெருமூச்சு விட்டு வில்ஸ்யை எடுத்து பற்ற வைத்தான் தேவ்.
” என்ன சேகர் எப்ப வந்த?” என்றான் தேவ்.
“ஏண்டா நான் இருக்கிறது தெரியாத அளவுக்கு பாட்டு போட்டு சிக்னல் குடுக்குறியா? அந்த அளவுக்கு ஆயிடுச்சு. இதெல்லாம் நல்லா இல்ல தேவ்…. ஏற்கனவே வாங்கிய அடி ஞாபகம் இல்லையா?” என்ற போதே கட்ட பிள்ளை உள்ளே வந்தான்.
“நல்லா சொல்லுடா, இவன் பண்ற வேலைல கடையை காலி பண்ணி விடுவான் போல “என்று பயந்தான் கட்டபிள்ளை.
“டேய் சும்மா இருங்கடா கண்டதை பேசிக்கிட்டு. செங்கம் தியேட்டரில் இங்கிலீஷ் படம் போட்டு இருக்கான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குதாம் நைட்ஷோ போகலாம், என்ன சொல்றீங்க?” என்றான் தேவ்
“நாம என்ன சொல்கிறோம் அவன் என்ன சொல்கிறான் பாரு” என்றான் சேகர் .
இப்படியே போக, மூவரும் இரவுகாட்சி செங்கம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர். காலை விடிந்ததும் ஒரே இரைச்சலாக இருந்தது, என்னவென்று பார்த்தால் தனது மாமா வீட்டிற்கும் தனது அம்மாவிற்கு மறுபடியும் சண்டை. வழக்கம் போல் தான் என்று கடையைத் திறந்தான் கட்ட பிள்ளை.
ரேடியோ புதிதாக வந்ததால் அதற்கு பாகங்கள் வாங்க பக்கத்து ஊருக்கு போக வேண்டும், யாரை கடையை பார்த்துக்க சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே தேவ் வந்தான். தேவ்வை பார்த்து சொல்ல சற்று தயங்கினாலும், வேறு வழியில்லாமல் தேவ்யிடம் கடையை பார்க்கச் சொல்லி விட்டு ஐந்தாம் நம்பர் பஸ்ஸை பிடிக்க செட்டியார் கடை பஸ் நிறுத்தம் சென்றான் கட்டபுள்ள. அங்கு அவனது மாமா பெண்ணும் பஸ் ஏற காத்துக் கொண்டிருந்தாள்.
கட்டபுள்ள கடை: வழக்கம் போல் ரேடியோகளுக்கு இடையே உட்கார்ந்துக் கொண்டு வில்ஸ் சிகரெட்டை பற்ற வைத்தான் தேவ். சற்று நேரத்தில் சேகரும் வர, இருவரும் நேற்று பார்த்த இங்கிலீஷ் படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வழியாக வந்த போஸ்ட் மாஸ்டர் யாரோ ஒருவர் பெயர் சொல்லி கட்டை பிள்ளை கடையில் உள்ள தேவ்வையும் சேகரையும் விசாரித்தார்.
போஸ்ட் மாஸ்டர் கிருஷ்ணனுக்கு அங்கு உள்ள அனைவரும் பரிச்சியம். கவரில் உள்ள பெயரை அவர் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.
“ஏன்பா இப்படி யாராச்சும் கேள்விப்பட்டு இருக்கீங்களா?” என்றார் போஸ்ட் மாஸ்டர் கிருஷ்ணன்.
“உங்களுக்கு தெரியாமல் யாராச்சும் இருக்க முடியுமா?” என்றான் சேகர்.
“கட்டபுள்ள வீட்டு முகவரிதான் போட்டு இருக்கு. எனக்கு தெரிந்து யாரும் அப்படி இங்க இல்லை, அதான் உங்களுக்கு தெரியுமா கேட்டேன்” என்றார் போஸ்ட் மாஸ்டர்.
“இங்கு யாருமில்லை, திரும்பி அனுப்புங்க” என்று மடமடவென்று, உன் மனசுல பாட்டுதான் என்ற பாடலை ஒலிக்கவிட்டான் தேவ்.
போஸ்ட் மாஸ்டர் ஒவ்வொரு வீடாக கடக்க மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. கட்டபிள்ளை வந்தான், அவன் பின்னாடியே அவன் மாமா பெண்ணும் அழுத முகத்துடன் கடந்து சென்றாள்.
கட்ட பிள்ளை கடைக்குள் வந்ததும் வில்ஸ்சை பற்ற வைத்தான்.
” என்னடா, மாமா பொண்ணு முகம் நல்லா இல்ல” என்றான் தேவ்.
“வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்களாம் பயப்படுறா….. ஓ’னு ஒரே அழுகை….. என்ன சொல்றதுன்னு தெரியல” என்றான் கட்டபிள்ளை.
“எவ்வளவு காலம் தான் பிரச்சனையே பேசிகிட்டே இருப்பீங்க, உங்க காதல சொல்லி சேர்ந்துக்கோங்க” என்று மட்டமான ஐடியா கொடுத்தான் சேகர்.
கட்டபிள்ளை ஒரு முறை முறைத்து விட்டு வில்ஸை நன்றாக இழுத்து புகையை உள்ளுக்குள்ளேயே சிறிது நேரம் வைத்திருந்தான்.
“அடேய் எங்கேயாவது போய் கல்யாணம் பண்ணிக்குங்க, கொஞ்ச நாள் கழிச்சு வாங்க எல்லாம் சரியாயிடும்” என்றான் தேவ்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தது அந்த இடம். வில்ஸ் முடிந்ததும் “யாராச்சும் வந்தார்களா?” என்று கேட்டான் கட்டபிள்ளை.
“யாரும் வரல, போஸ்ட் மாஸ்டர் தான் வந்தார் யாரோ பெயரை கேட்டு இங்கு வந்தார். இங்கு இல்லை என்று அனுப்பி விட்டோம்” என்றான் தேவ்.
“அப்படி என்ன பெயரடா கேட்டாரு, அவருக்குத்தான் இங்கு உள்ள எல்லா பேருமே தெரியுமே” என்றான் கட்டைபிள்ளை.
“அதைத்தான் நாங்களும் சொல்லி அனுப்பி விட்டோம்” என்றான் சேகர்.
இப்படியே சிறிதுகாலம் சென்றது. கட்டைப்பிள்ளை அம்மாவிற்கும் மாமாவிற்கும் சண்டை ஓய்ந்தபாடில்லை. அவனது மாமா மகள் அவனை விடுவதாக இல்லை. பாட்டு போடுவதை தேவ் நிறுத்துவதாக இல்லை.
இன்று மாலை தேவ் கட்டபிள்ளை கடைக்கு வந்து கேசட் தேடினான்.
“என்னடா இப்ப என்ன படம் கேசட் தேடுற?” என்றான் கட்டபிள்ளை.
“அபூர்வ சகோதரர்கள் எங்கடா இருக்கு?” என்று அபூர்வ சகோதரர்கள் எடுத்து ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ என்ற பாடலை தட்டினான் தேவ்.
அந்த முஸ்லிம் பெண்ணும் அவளது தோழியும் கடையை கடக்க தேவ் கடையில் உள் இருந்து குரல் கொடுத்து கூப்பிட்டான். சற்றும் திரும்பாத அந்தப் பெண் வேகமாக நடந்தாள். இவனும் திரும்பத் திரும்ப குரல் கொடுத்தான். கடையினுள் இருந்ததால் பின்னே சற்று தள்ளி வந்த அந்த முஸ்லிம் பெண்ணின் அப்பாவைத் தேவ் கவனிக்கவில்லை.
கட்டைபிள்ளையும் தேவ்வும் ஒரு கணமும் உலகம் நின்றது போல அசையாமல் நின்றார்கள். கடையை பார்த்தபடி அந்த முஸ்லிம் பெண்ணின் அப்பா, கடையை கடக்காமல் இவர்களையே பார்த்தபடி அப்படியே நின்றார். சேகர் காதுக்கும் விஷயம் பறந்தது.
சேகர் வீடு:
நள்ளிரவு ஒரே கூச்சல் பெரிய சண்டை என்று சேகர் வாரிசுருட்டி எழுந்தான். வாசலுக்கு போக வேண்டாம் என்று அப்பாவும் அம்மாவும் சேகரை அடக்கினார்கள். மேலும் கட்டபிள்ளையின் கடையை அடித்து நொறுக்கப்படுவதை உணர்ந்தான் சேகர்.
பிரச்சனை பெரிதாகிவிட்டது போல கட்டபிள்ளை என்ன ஆனான் என்று தெரியவில்லை என்று பதற்றம் சேகருக்கு தொற்றிக் கொண்டது. கதவின் ஓரமாக நின்று ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தான், கடை முழுவதும் நொறுங்கியது.. இவனுக்கே இந்த கதி என்றால் தேவ் நிலைமை என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் போலீஸ் வந்தது பதற்றம் சற்று குறைந்தது. இன்னும் சேகர் கதவை திறக்கவில்லை.
சற்று நேரத்தில் கட்டைப்பிள்ளை மாமாவும் சில ஆட்களும் வண்டியில் வந்து இறங்கினார்கள், போலீஸ் பார்த்ததும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்டபுள்ளை அப்பாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
சேகரும் ஒன்றும் புரியவில்லை, ‘என்ன நடக்குது, இவர்கள் ஏன் அடித்துக் கொள்கிறார்கள்?’ என்று விளங்கவில்லை.
போலிஸ் இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பிறகு கொஞ்ச நேரம் கழித்து சேகர் வீட்டை நோக்கி நடந்தனர்.
“சேகர், சேகர்” என்று இரண்டு முறை தட்ட சேகர் கதவைத் திறந்து வெளியே வந்தான். தூரத்தில் தேவ்வை அழைத்து வருவதும் தெரிந்தது.
போலீஸ், “உங்க கூட்டாளி கட்டபிள்ளை, மாமா மகளை கூட்டிட்டு ஓடிட்டான். உங்களுக்கு தெரியாமல் இருக்காது, அவங்களை அனுப்பி வைத்துவிட்டு கம்முனு வீட்டுக்குள் புகுந்து விட்டால் எங்களுக்கு தெரியாதா? ஒழுங்கா சொல்லுங்க இல்லைனா நடக்குறதே வேற” என்று மிரட்டினார்கள்.
இருவருக்கும் அப்போதுதான் உண்மை தெரிந்தது. சேகரின் அப்பா அந்த ஊர் பெரிய தலைக்கட்டு. தேவ்யின் அப்பா மிலிட்டரி என அந்த இரவை சமாளித்து வெளியே வந்தனர் இருவரும்.
கட்டபிள்ளையின் பெற்றோரும் அவன் மாமாவும் தனித்தனியாக சேகரிடம் தேவ்விமுடம் எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இருவரும் எங்கெங்கேயோ தேடியும் விசாரித்தும் பார்த்தும் கட்டபிள்ளையும் அவன் மாமா மகளும் கிடைக்கவில்லை.
மூன்று நான்கு மாதங்கள் இப்படியே போயின. இப்போ வெல்லாம் சேகர் சிகரெட் பிடிக்க செட்டியார் பஸ் நிறுத்தம் தாண்டி செல்ல வேண்டியதாய் இருக்கிறது.
அப்படி ஒரு முறை வில்ஸை திருப்தியாக அடித்து முடித்த பின் நிமிர்ந்து பார்த்தான் சேகர். சற்று தள்ளி போஸ்ட் மாஸ்டர் கிருஷ்ணன் இவனை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
“என்ன சார் என்னையே பார்த்துக் நிக்கிறீங்க?” என்றான் சேகர்
“உனக்கு ஒரு கடுதாசி வந்திருக்கு, நீ எப்ப முடிப்ப அதை கொடுக்கலாம்னு நிற்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.
“யார் கிட்ட இருந்து சார்?” என்று கேட்டான் சேகர்.
“உன் நண்பன் கட்டபுள்ள கிட்ட இருந்துதான்” என்றார் கிருஷ்ணன்.
“என்ன சார் சொல்றீங்க” என்று அதிர்ச்சி ஆனான் சேகர்.
“பொறு எனக்கு தான் கடுதாசி போட்டான். திருப்பூர்ல பனியன் கம்பெனியில் வேலையாம். விலாசம் அனுப்பி இருக்கான். யாருக்கும் தெரியாம உன்கிட்ட குடுக்க சொன்னான், இந்தா விலாசம் போய் பாரு யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ” என்று நகர்ந்தார் கிருஷ்ணன்.
சேகர் மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும், கட்டைபிள்ளை இருக்குமிடம் தெரிந்தது சற்று திருப்தியாக இருந்தது. உடனே தேவ்யிடம் கதையை சொல்லி அன்றிரவே திருப்பூருக்கு விரைந்தனர் இருவரும்.
பேருந்து விடியற்காலை திருப்பூர் பஸ் நிலையம் அடைந்தது. விடியற்காலை என்பதால் சற்று நேரம் ஆகட்டும் என்று ஒரு டீக்கடையில் வில்சை பற்ற வைத்தனர் இருவரும் டீ குடித்து முடித்த பிறகு ஒரு ஆட்டோவில் கையிலிருந்த விலாசத்தை காட்டி ஏறி அமர்ந்தனர்.
அது ஒரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு. ஒரே மாதிரியான வீடுகள் இருந்தன, எனவே ஆட்டோகாரர் “இதுதான் நீங்க சொன்ன இடம், வீட்டை நீங்கள் தேடிக்கோங்க” என்று இறக்கி விட்டார்.
விலாசத்தில் D பிளாக் ஹவுசிங் போர்டு என்றுதான் இருந்தது. வீட்டின் எண் இல்லை, சரி விசாரிப்போம் என்று இருவரும் கட்டபிள்ளை பெயரை கூறி விசாரித்தனர்.
அங்கு யாருக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு மாடியாக ஏறி இறங்கி விசாரித்தனர், கட்டைபிள்ளை என்று யாருக்கும் தெரியவில்லை, அப்படி யாரும் இல்லை என்று பதில் வந்தது.
மணி 10 ஆனது, தேவ்வுக்கு பசி வயிற்றை கிள்ளியது. சரி சாப்பிட்டு விட்டு தேடுவோம் என்று பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு இருவரும் சென்றனர். இட்லி தீர்ந்து போனதால் இருவரும் தோசை ஆர்டர் செய்தனர்.
கல்லாப் பெட்டிக்கு அருகில் ரேடியோ ஒலித்துக் கொண்டிருந்தது. திடீரென நின்றது, உடனே முதலாளி “டேய் தம்பி அந்த ரேடியோவை என்னன்னு பாரு அடிக்கடி நின்று விடுகிறது” என்றார்.
இரண்டு தடவை தட்டி பார்த்த சர்வர் பையன் “சரியா வரல முதலாளி” என்றான்.
“உனக்கு ராஜேந்திரன் வீட்டு தெரியுமா?” என்றார் முதலாளி
“அந்த புதுசா நம்ம கடைக்கு பார்சல் வாங்க வருவாரே அவரா?” என்றான்.
“ஆமாண்டா பையா, அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் ரேடியோ ரிப்பேர் பண்னுவேனு சொன்னாரு. வந்தால் இந்த ரேடியோவை காட்டு” என்றார் முதலாளி
முதலாளியை திரும்பி பார்த்தனர் சேகரும்,தேவும். முதலாளியிடம் விவரத்தை சேகரித்து கொண்டு அங்கிருந்து விரைந்தனர்.
மேடு திரும்பியவுடன் பூ விற்கும் அம்மாவிடம் “ராஜேந்திரன் வீடு ஏதுமா?” என்றதும்
“அந்த புதுசா கல்யாணம் ஆன ஜோடி வீடா? அது… ஒரு ரெண்டு வீடு தள்ளி மாடியில்” என்றாள்.
கட்டை பிள்ளைதான் ராஜேந்திரன் என்று மாடி ஏறினர் இருவரும். ஒரு வீட்டின் கதவை தட்டினர். கட்டைபிள்ளை அடையாளத்தை முழுவதுமாக துறந்த ராஜேந்திரன் கதவைத் திறந்து இவர்களைப் பார்த்ததும் சந்தோசத்தில் கட்டிப் பிடித்தான்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings