in

ஆயிரங் கவனமிருந்தும்… (சிறுகதை) – ✍ இளவல் ஹரிஹரன், மதுரை

ஆயிரங் கவனமிருந்தும்... (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ராசேந்திரன் ஒரு கவனகர்.  அதாவது அவதானி, இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

அஷ்டாவதானி, தசாவதானி, சோடசாவதானி, சதாவதானி என. ஒரே நேரத்தில் பல அவதானங்கள், கவனங்கள் செய்பவர்.

ராசேந்திரனும் ஒரு தசாவதானி. எனது நீண்டகால நண்பர்.  ஆனால் அதிகம் சந்திக்க வாய்ப்புகள் இல்லை. எப்போதாவது எதிர்பாராதவிதமாக ஏதேனும் விழாக்களில் பார்த்துக் கொள்வது தான். பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு, பழைய நினைவுகள் சிறிது நேரம் அசைபோட்டுக் கொண்டிருப்போம். மற்றபடி வேறேதும் தொடர்புகள் இருக்காது.

ஒரே நேரத்தில் பத்துச் செயல்களைத் தொடர்ச்சியாகக் கவனங்கொண்டு முடிவில் அதை அத்தனையையும் வரிசையாக, சரியாகச் சொல்வார்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாடங்களையே ஒழுங்காகக் கவனிக்காதவர், இன்று தசாவதானியாய் இருப்பது எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அவதானமே அவரது பிழைப்புக்கான வேலையாகப் போய்விட்டது. ஊர்ஊராக, பள்ளி பள்ளியாக மாணவர்களிடையே இந்த அவதானங்களைச் செய்து காட்டி, அதில் வரும் வருமானத்தில் தான் வாழ்க்கையே நடக்கிறது.

இந்தமுறை தற்செயலாய் வில்லாபுரம் வளைவில் சந்தித்தபோது, வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில தமது நிகழ்ச்சி இருப்பதாகச் சொன்னார். நிகழ்ச்சிக்கு அவசியம் வருமாறு என்னை அழைத்தார்.

வெள்ளிக்கிழமை காலையில் முதல் போன் அழைப்பே ராசேந்திரனுடையதாய்த் தான் இருந்தது. அவசியம் கலந்துகொள்ள வேண்டுமெனச் சொன்னார்.

நினைவூட்டியதற்கு நன்றி தெரிவித்து விட்டு யோசனையில் ஆழ்ந்தேன்.

எதிலுமே கவனம் செலுத்தாத ராசேந்திரனுக்கு இந்த கவனகக்கலை எப்படி கவனமானது என்று ஒரு சந்திப்பில் கேட்டிருந்தேன்.

அதற்கு ராசேந்திரன் அளித்த பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

“வேற ஒன்னுமில்லே……பொழுது போகாம ஒரு நா மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனேன். ஆத்தாவுக்கு ஒரு வினயமான கும்பிடு போட்டு, அப்படியே முக்குறுணி விநாயகர் சன்னிதியிலேநெடுஞ்சாண்கிடையா விழுந்து நல்ல புத்தி குடு பிள்ளையாரப்பா என வேண்டிக்கிட்டேன். அப்புறம் சோமசுந்தரர் சன்னிதியில் வேண்டிக்கிட்டு, ஆடி வீதியிலே இருக்குற திருவள்ளுவர் கழகத்திலே உட்கார்ந்திருந்தேன்

அப்ப ஒரு சாமியாரு ரொம்ப நேரமா, குறுகுறுன்னு பார்த்துக்கிட்டிருந்தார்.

என்ன சாமி …..அப்படிப் பாக்குறீங்கன்னு கேட்டேன்

அதுக்கு அந்தச் சாமியார் உன்கிட்ட ஒரு அசாதாரண ஒளிவட்டம் இருக்குதே…..நான் சில பயிற்சிய உனக்கு சொல்லித் தர்றேன்…..ஆனா அதை உன்னோட நல்லதுக்குத் தான்  பயன்படுத்தனும், கெட்டதுக்குக் கூடவே கூடாது….அதை இந்தக் கையிலடிச்சி உறுதி சொன்னா உனக்குச் சொல்லித்தாறேன்னார்.

எனக்கு ரொம்ப ஆச்சர்யமாப் போச்சி. சரிங்க சாமின்னு சொல்லி அவர் பக்கத்திலே போயி உட்கார்ந்துட்டேன்.

தட்சணையா என்ன கொடுப்பேன்னு கேட்டாரா, பையத் துழாவுனதிலே ஒத்த ரூபாக் காசு மட்டும் இருந்திச்சா… அதை அப்படியே இந்தாங்க சாமின்னு கொடுக்க ரொம்ப சந்தோசமா வாங்கிட்டாரு. அப்றம் அவரு சொல்லிக் கொடுத்தது தான் இந்த கவனகப் பயிற்சி

ஒன்னுந் தெரியாத ராசேந்திரனுக்கு அந்த ஆத்தா மீனாட்சி சாமியார் மூலமாப் போட்ட பிச்சை தான் இந்த அவதானங்கள். ஒரு வாரந் தான் சொல்லிக் கொடுத்தாரு,

கடைசி நாளன்னிக்கி திருவள்ளுவர் கழகத்திலேர்ந்து ஒரு திருக்குறள் நூலை வாங்கிக் கொடுத்து படிச்சி மனனம் பண்ணிக்கோ… அந்தத் திருவள்ளுவதேவன் உன்னைக் காப்பாத்துவாருன்னு ஆசி கூறிட்டுப் போனவர் தான், அதுக்குப் பின்னாடி அவர எங்கேயும் பார்க்கலே.

இந்த அவதானப்பயிற்சி தான் பல நேரம் சோறு போடுது, சில நேரம் பட்டினியும் போடுது, என்ன செய்ய…”

இப்படி அவதானியான கதையைச் சொன்ன ராசேந்திரன், படிப்படியா முன்னேறி தசாவதானியா மாறி வித்தையைக் காட்டிச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

சரி……இன்று அவரது அவதானக் கலையை எப்படியும் பார்த்தே தீருவது என முடிவு செய்தேன்.

அவனியாபுரம் அரசுப்பள்ளியைத் தேடி அடைந்த போது மணி நான்காகியிருந்தது. என்னைப் பார்த்ததும் தலைமை ஆசிரியர் எழுந்து வந்து வரவேற்றார்.

“ராசேந்திரன் சார் சொல்லியிருந்தார்……நீங்க வருவீங்கன்னு….” என்றபடி ஒரு நாற்காலியைப் போட்டு அமர வைத்தார்.

ஏற்கனவே கவனகக் கலை ஆரம்பமாகி இருந்தது. பள்ளியின் ஒரு விசாலமான அறையின் நடுவில் சிறிய மேடை மீதான நாற்காலியில் ராசேந்திரன் அமர்ந்திருந்தார்.

அவரது கண்கள் கருந்துணியால் கட்டப்பட்டிருந்தன. எதிரே ஒரு கரும்பலகையின் ஒரு புறம் ஆறு இலக்க எண்ணோடு மற்றொரு ஆறு இலக்க எண்ணால் பெருக்கி வரும் விடையை ஒவ்வொரு இலக்கமாக கால இடைவெளிவிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இரு மாணவர்கள் அவர்கள் பின்னால் நின்று கொண்டு ஒரு தட்டு நிறையப் பட்டு ரோசாக்கள் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ரோசாவாய் அவர் முதுகில் படுமாறு எறிந்து கொண்டிருந்தனர்.

எவ்வளவு ரோசாக்கள் முதுகில் பட்டது என முடிவில் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லவேண்டும்.

கள்ள என்ற முதற் சொல் ஆரம்பித்து அழகு என்ற ஈற்றுச் சொல் வருமாறு ஒரு நேரிசை வெண்பா தளை தட்டாமல் சொல்ல அதை கரும்பலகையின் இன்னொரு புறத்தில் ஒரு ஆசிரியர் எழுதலானார்.

குறளின் முதற் சொல் சொன்னால் அந்தக் குறள் முழுதும் சொன்னார் ராசேந்திரன்.

முதல் எழுத்து எடுத்துக் கொடுக்க பாரதியார் பாட்டு, சொல்வதாக ராசேந்திரன் சொல்ல, ஒரு மாணவன் எழுந்து, “….தேத்….தேத்….தேத்…தே….” எனத் திக்கியபடி சொல்ல

“தே….யா தம்பி” எனக் கேட்ட ராசேந்திரன், மறுகணம், “தேடிச் சோறு நிதம் தின்று…”  என்ற பாடலைக் கடகடவெனச் சொன்னதும், மாணவர்கள் எழுந்து நின்று கை தட்டினர்.

ராசேந்திரன் முகத்தில் ஒரு சின்ன மகிழ்ச்சி.

ஒரு மாணவன் ஒரு பாத்திரத்தில் கை நிறையக் காசுகள் வைத்துக் ஒவ்வொரு நாணயமாய்ப் போட்டான். காசு விழும் ஒலியை வைத்து எத்தனை நாணயங்கள் எனச் சொல்ல வேண்டும்.

இப்படி பத்து கவனங்கள் ராசேந்திரனைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்தன. நிகழ்ச்சி முடிவில் அத்தனை கவனச் செயல்களின் விடைகளை மிகச் சரியாகக் கூறினார்.

ஆசிரியர்களும மாணவர்களுமாய் கூடி நின்று கைதட்டி மகிழ்ந்தனர். என்னையறியாமல் என் கைகளும் தட்டிக் கொண்டிருந்தன.

ராசேந்திரனின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டதும், அவரது கண்கள் என்னைக் கண்டன. மிக்க மகிழ்வுடன் என் அருகே ஆவலுடன் வந்தார்.

பிறகு ஒரு சிறு கைத்தறித் துண்டை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்களிடம் நீட்டிக்கொண்டிருந்தார். அவரவர்க்கு விருப்பமான தொகையை மாணவர்கள் அதில் இட்டனர்.

எல்லா மாணவர்களும் தத்தம் தொகையை அளித்ததும், அதனை ஒன்று திரட்டி தலைமை ஆசிரியரிடம் கொடுத்ததும், அதை அப்படியே ராசேந்திரனிடம் வழங்கினார்.

மறுப்பேதும் சொல்லாமல் மகிழ்வுடன் வாங்கிக் கொண்ட ராசேந்திரன், எண்ணிப் பார்த்து பையில் வைத்துக் கொண்டே, “இன்னும் அதிகமா வரும்னு எதிர்பார்த்தேன்…” என்று என்னைப் பார்த்தபடி சொன்னார்.

“பாவலர் செய்குத் தம்பிப் புலவர்னு ஒருத்தர்….. நூறு அவதானங்களைச் செய்வார். சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர்னே பேரு. அசகாய மன்னரில்லே, அப்படி எல்லாம் செய்வதற்கு யார் இருக்கா இப்ப. அதுக்கெல்லாம் ரொம்ப ரொம்பப் பயிற்சி செய்யணும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சிரசாசனம் செய்யனும். அப்பத்தான் மூளைக்குள் உயிர்க்காற்று….அதான் ஆக்ஸிஜன் முழுசுமா நிறையும். நிறைய கவனங்கள் மூளையிலேயும் மனசிலேயும் நிக்கும்!’

அதற்குள் ஆசிரியர்கள் எல்லோரும் ஒரு அன்பளிப்பாய்த் திரட்டிக் கொணர, நான் என் கையில் இருந்த ஐந்தாயிரம் ரூபாயை அப்படியே அதில் சேர்த்துக் கொடுத்தேன்.

என் மகனுக்கான பள்ளிக் கட்டணம், மறுநாள் கட்ட வேண்டியது…..பார்த்துக் கொள்ளலாம் என மனதைத் தேற்றிக் கொண்டேன்

பணத்தாட்களைப் பார்த்ததும் ராசேந்திரன் முகம் மலர்ந்தது.

“ஒன்னுமில்லே… என் மனைவிக்கு வீஸிங் ட்ரபிள். மூச்சுவிடச் சிரமப் பட்றா, இன்னிக்கு டாக்டரோட அப்பாய்ண்ட்மெண்ட். போனா எப்படியும் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு பணத்தைப் பிடுங்கியிருவானுக. அவளும் பாவம் ரொம்ப நாளா அவஸ்தப்பட்டு டாக்டரிட்ட கூட்டிட்டுப் போகச்சொல்லிக் கேட்பா, இன்னிக்கு இந்த நிகழ்ச்சி அமைஞ்சதும் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டேன். ரொம்ப தாங்க்ஸ்டா… நீ வந்ததும் கேட்காம உதவி செஞ்சதுக்கும்”

என்னைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்ட ராசேந்திரன் கண்களில் நிறைந்திருந்தது கண்ணீர்.

ஆயிரந்தான் கவனமிருந்தாலும் ஒரு கலைஞனின் கவனம் முழுதும் பசியின் மீதும் பணத்தின் மீதும் குடும்பத்தின் மீதும் இருப்பதை என்றைக்கும் தவிர்க்க முடியாது. பத்தோடு, பதினொன்றாக அவன் கவனம் முழுதும் ஓடிக்கொண்டிருக்கும் என்பதை அன்று அறிந்து கொண்டேன்.

பிப்ரவரி 2022 மாதத்தின் சிறந்த படைப்பு போட்டிக்கு தேர்வாகி பிரசுரிக்கப்பட்ட படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. ஆயிரங்கவனமிருந்தும் அற்புதமான சிறுகதை. திறமைகள் போற்றப்படுவதில்லை நம் நாட்டில்.மாறாக கையேந்த‌ வைக்கின்றன என்பது பெருஞ்சோகமே! எதார்த்தம் பேசும் சிறுகதையை வாசித்ததில் மிகவும் மகிழ்கிறேன்.

குருத்துவாசனை (சிறுகதை) – ✍ சு.மு.அகமது, சென்னை

கங்கையா காவிரியா (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை