மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)
என் இரண்டாவது கர்ப்பத்தின் போது, எட்டு மாதங்கள் முடிந்து ஒன்பதாவது மாதத் தொடக்கத்தில் ஸ்கேன் எடுப்பதற்காக நானும் என் கணவரும் மருத்துவமனைக்கு சென்றோம்
ஸ்கேன் எடுத்துவிட்டு டாக்டரைப் பார்த்த போது, வயிற்றில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதாக கூறிய டாக்டர், “நீங்க ஏதாச்சும் நல்ல நாள் பார்த்து வச்சிருந்தீங்கன்னா சொல்லுங்க, அன்னைக்கே சிசேரியன் பண்ணிடலாம்” என்றார்
இரண்டு நாள் கழித்து நல்ல நாள் இருந்ததால், அந்த நாளிலேயே சிசேரியன் செய்யலாம் என்றோம்
குறித்த நாளில் காலை நேரமே எழுந்து குளித்து கடவுளை வணங்கி விட்டு, சில மாதங்களுக்கு முன் இறைவனின் திருவடியை அடைந்த என் அப்பாவையும் வணங்கி விட்டு, நல்லபடியாக குழந்தை பிறக்கணும் என வேண்டிக் கொண்டு, நானும் என் கணவரும் என் மகளும் மருத்துவமனைக்கு கிளம்பினோம்
மருத்துவமனைக்கு சென்றதும் நர்ஸ் எங்களை ஒரே திட்டு
“சிசேரியன் பண்ணனும் சொல்லியிருக்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா, இப்படி குளிச்சிட்டு வந்து நிக்க, அப்புறம் சளி பிடிச்சுனா நீதான் கஷ்டப்படுவ” என சொல்லி கோபப்பட்டார்
“குளிக்க கூடாதுன்னு எனக்கு தெரியாது” என்றேன்
அப்புறம் ஆப்ரேஷன் தியேட்டருக்கு என்னை கூட்டிட்டு போனாங்க. என்னை இருக்கச் சொல்லி குனிய வைத்து முதுகில் ஊசி போட்டார்கள். பிறகு காலை அசைக்க சொன்னார்கள். எனக்கு நன்றாக உணர்வு இருந்தது. அது தெரியாமல் டாக்டர் என் வயிற்றை வெட்டப் போனார். உடனே நான் பதறிக் கொண்டு, “ஐயோ வெட்டாதீங்க… எனக்கு வலிக்குது” என கத்தினேன்
மறுபடியும் என்னை இருக்கச் சொல்லி குனிய வைத்து இரண்டாம் முறை முதுகில் ஊசி போட்டார்கள். என் முகத்தை என் காலோடு சேர்த்து வைத்து அழுத்தினார்கள். அதில் நான் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டேன்
அருகிலிருந்த நர்சின் ஆடையைப் பிடித்து இழுத்து, “எனக்கு மூச்சு விட முடியல, கஷ்டமா இருக்கு” என்றேன்
“இப்போ முடிஞ்சிடும், கொஞ்சம் பொறுத்துக்கோங்க” என்றார் அந்த நர்ஸ்
ஒரு கட்டத்தில் என்னால் முழுவதுமாகவே மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டேன். டாக்டர் எனக்கு சிசேரியன் செய்ய ஆரம்பித்தார். இன்னொருபுறம் நான் தலையை மேலும் கீழுமாக அசைத்து மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். உடனே டாக்டர் எனக்கு ஆக்சிஜன் மாஸ்கை பொருத்தினார்
மாஸ்க் வைத்தும் கூட மூச்சு விட முடியாமல் திணற, “எனக்கு மூச்சு விட முடியல, மாஸ்கை எடுங்க ப்ளீஸ்” எனவும்,
அதற்கு டாக்டர், “உனக்கு வேண்டாம், ஆனா உன் குழந்தைக்கு வேணும்” என்றார்
‘அப்பாவும் சாகற நேரம் இப்படித் தானே மூச்சு விட முடியாம கஷ்டப்பட்டுருப்பாங்க, நான் செத்துப் போயிடுவேன் போலிருக்கு, எங்க அப்பாகிட்ட நான் போக போறேன், எங்க அப்பாவை பார்க்க போறேன், ஆனா என் குழந்தையை பார்க்காம சாகப் போறேன்’ போன்ற எண்ணங்கள் எல்லாம் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் போதே கண்கள் தானாக மூடியது
என்னால் கண்களை திறக்க முடியவில்லை. ஆனால் டாக்டர், நர்சுகள் பேசுவது எல்லாம் தெளிவாக என் காதில் விழுந்தது
சிறிது நேரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்க, என்ன குழந்தை என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. ஆனால் என்னால் வாய் திறந்து பேச இயலவில்லை
“ஆண் குழந்தை பிறந்திருக்கு, உங்க அப்பா தான் உனக்கு குழந்தையா பிறப்பாங்கன்னு உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல” என கனிவாக கூறினார் டாக்டர்
மெல்ல கண்களை திறந்து பார்த்தேன். என் அப்பாவே மறுஜென்மம் எடுத்து என் கண் முன்னால் வந்து நின்றது போல இருந்தது. இப்போது என்னால் ஓரளவு மூச்சுவிட முடிந்தது. மனம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது
பிறகு என்னை போஸ்ட் சர்ஜரி வார்டுக்கு மாற்றினார்கள். பத்து நிமிடம் கழித்து மகிழ்ச்சியுடன் என்னை பார்க்க வந்தார் என் கணவர்
“மாமாவே நமக்கு குழந்தையா வந்து பிறந்திருக்காங்க” என கூறும் போதே அவர் கண்கள் நிறைந்து விட்டது
“அழாதீங்க, இது நாம சந்தோசமா இருக்க வேண்டிய நேரம்” என்றேன் மகிழ்வுடன்
பிறகு நேரம் போகப் போக எனக்கு ஒரே சளியும், இருமலுமாக இருந்தது. வயிற்றில் தையலை வைத்துக் கொண்டு என்னால் இரும கூட முடியவில்லை, நரக வேதனையாக இருந்தது
இருமல் குறைவதற்காக மாத்திரை, ஊசி, டிரிப்ஸ் என மாற்றி மாற்றி போட்டு கொண்டே இருந்தார்கள். டிரிப்ஸ் ஏற்றி ஏற்றி என் இரு கைகளும் வீங்கிவிட்டது. என் கணவர் தான் முழுவதுமாக நீராகாரம், உணவு என ஊட்டினார்
அதுமட்டுமல்ல, வெந்நீர் போட்டு என்னை குளிப்பாட்டி விட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் உபயோகித்த நாப்கினை மாற்றி வைத்து தந்தார். கணவரை இப்படியெல்லாம் செய்ய வைக்கிறோமே என தர்மசங்கடமாக இருந்தது எனக்கு. நாப்கினை நான் மாற்றிக் கொள்கிறேன் என்று சொன்னாலும் அவர் கேட்கவில்லை
“வயிற்றில் தையலை வைத்துக் கொண்டு உனக்கு இதெல்லாம் பண்ண கஷ்டமா இருக்கும். உனக்கு சரியாகும் வரை நான் பண்ணி விடுறேன்” என்றார்
இப்படியெல்லாம் கூட ஒரு கணவர் தன் மனைவிக்கு செய்வாரா? என் கணவர் எனக்கு கிடைத்தது போன ஜென்மத்து புண்ணியம். எத்தனை பேருக்கு இப்படி ஒரு கணவர் கிடைப்பார் என்று தெரியவில்லை
அப்பா இறந்த வருத்தம் எனக்கு ஒரு துளி கூட இருக்கக் கூடாது என்று, எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார் என் கணவர்
‘என் குழந்தை என் அப்பாவின் மறுஜென்மம் என்றால், என் கணவர் என் அப்பாவின் மறு உருவம். என் கணவர் எனக்கு கடவுள் கொடுத்த வரமாக பார்க்கிறேன்’
எல்லாப் பெண்களுக்கும் கணவர் தான் முதல் குழந்தையாக இருப்பார்கள். ஆனால் என் கணவருக்கோ நான் தான் முதல் குழந்தையாக இருக்கின்றேன்
ஒரு குழந்தையைப் போல் என்னை பார்த்துக் கொள்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
என் கணவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. அவர் ஒரு ஆண் தேவதை என்றால் அது மிகையாகாது
#ads – Amazon Great Indian Festival Deals 👇
தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings