in ,

ஆன முதலில் அதிகம் செலவானால் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வழக்கமாக தொணதொணவென்று பேசிக்கொண்டு வரும் ராகவி, அன்று வாய்மூடி மௌனியாக பைக்கில் வந்தது ஜவஹருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

அவனுக்கும் காலையில் இருந்து ஒரே டென்ஷனாகத்தான் இருந்தது, காரணம், அவனுடைய நெருங்கிய நண்பனாகிய விஸ்வம் ஓட்டிச் சென்ற டூவீலர் மேல் ஒரு லாரி வந்து இடித்து ஆக்ஸிடன்ட் ஆனது.

நல்லவேளையாக அவன் மேல் லாரி ஏறாமல் அவனைத் தூக்கி அடித்திருந்தது.  வீசிய வேகத்தில் பக்கத்து நிலத்தில் உள்ள வைக்கோல் கட்டு மேல் விழுந்து இருக்கிறான். அதனால் அவன் லேசான அடியுடன் தப்பி இருக்கிறான்.

அப்படியும் வலது தோளில் ‘பால் அண்ட் சாக்கெட்‘ ஜாயின்ட்டில் அடி பட்டிருக்கிறது போலும். இன்னும் எக்ஸ்ரே, ஸ்கேன் ரிஸல்ட் எல்லாம் பார்த்துத் தான் எவ்வளவு சேதாரம் என்று சொல்ல முடியும் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

இன்னும் மயக்கம் தெளியவில்லை . ஆனால் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று டாக்டர்கள் உறுதி அளித்து விட்டார்கள்.  ஜவஹரும் ராகவியும் அங்கேயே அவனுக்கு மயக்கம் தெளியும் வரை காத்திருந்தனர்.

மயக்கம் தெளிந்தவுடன் அவன் முதலில் அனிதாவைப் பார்த்து, “பயப்படாதே” என்றான்

மிகவும் பலஹீனமான குரலில் .அவள் கண்களில் வழிந்த கண்ணீருடன் ஆறுதலாக அவனது வலது தோளில் கை வைத்து லேசாக அழுத்தினாள்.

அப்போது அவன் முகம் சுளித்து ‘ஆ’ என்று கண்களை மூடித் திறந்தான். அவன் வலது காலிலும் முட்டி எலும்பில் மிகவும் வலிக்கிறதென்று கூறவும் அவரது கையிலும் காலிலும் எலும்பு முறிவு இருக்கலாம். ௭க்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுக்க வேண்டும் என்றார்கள் மருத்துவர்கள்.

”ராகவி, நீங்கள் இருவரும் வீட்டிற்குப் போங்கள். குழந்தை மஹிமா உங்களை நீண்ட நேரம் பார்க்கவில்லையென்றால் அழுவாள்“ என்று தொந்தரவு செய்து இவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பினாள் அனிதா.

விஸ்வம், ஜவஹருக்கு மிகவும் நெருங்கிய நண்பன். ராகவியின் டீம் லீடர். விஸ்வத்தின் மனைவி அனிதா, ராகவியின் ஒரு நல்ல தோழி. நால்வரும் திருச்சி ஆர்.ஈ.சி.யில் ஒன்றாகப் படித்தவர்கள், அப்போதே நல்ல நண்பர்கள். திருமணமாகியும், சென்னையில் குடியேறி ஒரே கம்பெனியில் ஐ.டி.யில் பணிபுரிகிறார்கள். இரண்டு தம்பதிகளுக்கும் ஆளுக்கொரு குழந்தை பிறந்த பிறகும் அந்த நட்பு அப்படியே தொடர்கிறது. 

ஏதோ யோசனையாக இருவரும் அமைதியாக வரும் போதே அவர்கள் அபார்ட்மென்ட் வந்து விட்டது. காலிங்பெல் அழுத்தியவுடன் கௌசல்யா வந்து கதவைத் திறந்தாள். கௌசல்யா அவர்கள் வீட்டு சமையல்காரி, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஆயா . ஐம்பது வயது போல் இருக்கும். நல்ல நம்பகமான பெண்மணி. உள்ளே வந்தவுடன் குழந்தை மஹிமா ஓடி வந்து அணைக்க வந்தாள்.

“சின்ன குட்டி, மம்மியும், டாடியும் இப்போது தான் ஆபீஸிலிருந்து வருகிறார்கள். அவர்கள் குளித்து விட்டு உன்னை எடுத்துக் கொள்வார்கள். அதுவரையில் ஆயாகிட்ட வாடா கண்ணு“ என்று கௌசல்யா ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். சமயோசிதமாக அவள் நடந்து கொள்வது ராகவிக்கும், ஜவஹருக்கும் மிகவும் பிடிக்கும்.

இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து வந்ததால் குளித்து விட்டு ஹாலில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்தனர். ராகவி குழந்தை மஹிமாவை எடுத்து அணைத்துக் கொண்டு முத்தங்களைப் பரிசாக அளித்துக் கொண்டு இருந்தாள்.

கௌசல்யா இருவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தாள். அது வரையில் அமைதியாக இருந்த ஜவஹர், “அனிதாவிற்கும், அவர்கள் குழந்தைக்கும் இரவு சாப்பாடு நான் வேண்டுமானால் கொண்டு போய் கொடுத்து விட்டு வரட்டுமா?“ என்று கேட்டான்.

“வேண்டாம், அனிதா வீட்டில் உள்ள சமையல்காரம்மாவே சாப்பாடும் எடுத்துக் கொண்டு அவர்கள் குழந்தையையும் கொஞ்ச நேரம் அனிதாவுடன் இருக்கவிட்டு பிறகு அழைத்துக் கொண்டு போவாள் என்று அனிதா தான் சொன்னாள்” என்றாள் ராகவி.

“நீ ஏன் ராகவி ரொம்ப வருத்தமாக இருக்கிறாய்?“ என்று கேட்டான் ஜவஹர்.

“நீங்களும் தான் வருத்தமாக இருக்கிறீர்கள். இந்த விஸ்வம் ரூல்ஸை கவனித்து வண்டியை ஓட்ட மாட்டானா? எப்போது பார்த்தாலும் ஓவர் ஸ்பீட். நல்லவேளையில் அனிதா அன்று அவனுடன் வரவில்லை.  வந்திருந்தால் அவனுக்கு அடுத்த ’பெட்‘டில் அவளும் கட்டுப் போட்டுக் கொண்டு படுத்திருப்பாள்“ என்றாள் எரிச்சலுடன்.

“இப்போது தான் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. கையிலும், காலிலும் தான் எலும்பு உடைந்திருக்கும் என்றும் எக்ஸ்-ரே, ஸ்கேன் எல்லாம் பார்த்த பிறகு ட்ரீட்மென்ட் தொடங்கிவிடலாம் என்றாரே டாக்டர், இன்னும் உனக்கு என்ன பயம்?” என்றான் ஜவஹர் அவள் கைகளைத் தன் கையில் எடுத்துக் கொண்டு.

“எனக்கு அதைப் பற்றியெல்லாம் பயமில்லை, கவலையுமில்லை. இருவரும் ஒரு மாதத்திலேயே லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் மருத்துவமனையில் அட்மிஷன் செய்யும் போது ஐந்து லட்சம் கேட்டால் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள் அனிதா. இருவருக்கும் காதல் திருமணம், அதனால் இவர்களுக்கு உதவ இரண்டு பக்கத்திலிருந்தும் யாருமில்லை.

இவர்களும் உறவினர் யாருக்கும் பணம் தருவதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் கணக்கில் ஐம்பதாயிரம் கூட தேற்ற முடியவில்லை. உண்டியல் குலுக்குவது போல் நம் ஆபீசில் எல்லோரிடமும் கையேந்தி தான் அந்த பணத்தை நாம் கட்டினோம். நம்மாலும் இரண்டு லட்சத்திற்கு மேல் கொடுக்க முடியவில்லை. நம் நிலமையும் ஏறக்குறைய அவர்களைப் போலத்தான். ஏன் இந்த அவல நிலை? ரொம்ப வெட்கமாக இருக்கிறது ஜவஹர்“ என்றாள் தலையைக் கவிழ்ந்து கொண்டு.

சமையலறைக்குள் ஓடிய மஹிமா கௌசல்யாவின் போனில் சினிமா பாட்டை வைத்து விட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது. கௌசல்யா எப்போதும் பழைய பாட்டுத் தான் கேட்டுக் கொண்டிருப்பதால். அப்போது ஓடிய பாட்டு வரவு எட்டணா செலவு பத்தணா என்ற மிகப் பழைய பாடல்.

“மிகவும் பழைய பாட்டு, ஆனால் பொருள் நிறைந்த பாட்டு என்றான் ஜவஹர்.

“நமக்கு புத்தி சொல்லும் பாட்டு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்“ என்றாள் ராகவி.

“என்ன சொல்லுகிறாய்?” என்றான் ஜவஹர்.

“இந்தப் பாட்டு என்னவோ நமக்காகவே எழுதியதைப் போல் இருக்கிறது” என்றாள் தயக்கத்துடன்.

“நாம் அனிதாவைப் பற்றிப் பேசுகிறோமே! நம்முடைய நிதி நிலையும் இதே தானே! திடீரென்று எனக்கு ஏதாவது ஒன்று ஆனால், நம் இருவர் வீட்டாரும் எந்த உதவிக்கும் வர மாட்டார்கள். நானாவது மற்றவர்களிடம் தாராளமாக எந்த உதவியும் கேட்பேன். ஆனால் நீங்கள் வாயைத் திறந்து யாரிடமும் எதுவும் கேட்க மாட்டீர்கள். அப்போது என்ன செய்வதாம்?” என்றாள் ராகவி.

“நீ என்ன நினைக்கிறாயோ அதையேதான் நானும் நினைக்கிறேன்.  நாம் வேலை செய்வது போன்ற தனியார் கம்பெனிகள், ‘ஆக்ஸிடென்ட்‘ பண்ட் என்று ஏதாவது ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பணம் கொடுத்து நமக்கு உதவலாம் இல்லையா?“

“ரொம்ப அழகு தான்! ஏற்கனவே ஐ.டி.யில் வேலை செய்பவர்களுக்குத்தான் கொள்ளை சம்பளம், அப்படியெல்லாம் பணத்தை வாரி இறைத்தால் கம்பெனி திவாலாக வேண்டியது தான். நாம் தான் சம்பளமே லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறோமே, ஆனால் அவ்வளவு பணமும் நமக்கு உதவாமல் எங்கே போகிறது?

எல்லாம் கடனுக்கு இன்ஸ்டால்மென்ட் கட்டவே சரியாகி விடுகிறது. வீடு, கார் போன்ற முக்கியமான பெரிய செலவுகள் மட்டும் வங்கிக் கடனில் வாங்க வேண்டும், அதைவிட ஒரு முக்கியமான விஷயம் நம் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை கட்டாயம் சேமிக்க வேண்டும். இல்லையென்றால் நாமும் ஒரு எமர்ஜென்சி என்றால் எல்லோரிடமும் கையேந்த வேண்டியதுதான்“ என நீண்ட பெருமூச்சுடன் முடித்தாள்.

ஜவஹருக்கு அப்போது அவன் அப்பா பாடும் “ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் இழந்து,மதி கெட்டு’ என்ற ஔவையார் பாட்டு தான் மனதில் ஓடியது. அதை அப்படியே ராகவிக்குப் பாடி காட்டி, “அந்தக் காலத்தில் ஔவைப் பாட்டியே அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்” என்றான் லேசான புன்னகையோடு.

“அப்படியா, அப்ப பாட்டி சொல்லைத் தட்டாதே” என்ற ராகவி கலகலவென்று சிரிக்க, ஜவஹரும் சேர்ந்து சிரித்தான்.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அனுப்பப்படாத கடிதம் (சிறுகதை) – முனியப்பன் பாஸ்கர்