#ads – Deals in Amazon👇
மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)
வெகுதூரம் பறந்து சென்ற பின், ஒரு முறிந்த மரத்தின் கிளைக்கு அடியில் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்தவனைச் கண்டாள் சாமினி
உடனே பதறிப் போய் அவனருகில் விரைந்தவள், கடும் முயற்சி செய்து அந்தக் கிளையினை அர்னவ் மீதிருந்து விலக்கித் தூர தள்ளி விட்டு அர்னவைப் பார்த்தாள்
நம் உயிர் கொண்டவரின் விழியில் நீர் வழிந்தால், நம் இதயம் கீறி இரத்தம் வரும். இங்கோ தன மன்னவன் உடலெங்கும் இரத்தக் கோலமாய் இருக்கக் கண்டவளது கண்கள், கண்ணீருக்குப் பதிலாய் உதிரத்தையே வடித்தன
“ருத்ர தேவரே… சிறிது விழி திறவுங்கள். நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா? ஹையோ என் ஈசனே… எம் மக்களுக்கு உதவும் பொருட்டு எம் மன்னவனின் உயிருக்கு ஆபத்து வந்து விட்டதே” என அரற்றியவள், அவனை வன்னியின் மீதேற்றி தானும் உடன் அமர்ந்து தம் மக்கள் இருக்கும் இடம் நோக்கிப் பறக்கத் தொடங்கினாள்
அங்கு ஓம்கார வனத்திலோ… அத்தனை மக்களும் மூச்சும் கூட விட மறந்து அர்னவிற்காகவும் சாமினிக்காகவும் காத்துக் கொண்டிருந்தனர்
அப்பொழுது முழு உடலும் காயமாக, முகமெங்கும் பதட்டமாக ஓடி வந்தாள் சாமினி. பதறிப் போன அனைவரும் என்ன ஏதென்று வினவிட, தாங்கள் புயலில் மாட்டிக் கொண்டு மீண்டதையும், உடலெங்கும் பலத்த அடிபட்டு உணர்வின்றி அர்னவ் மயங்கி இருப்பதையும் கூறினாள்
உடனே அதிர்ந்து போன அனைவரும், வெளியே இருந்த அர்னவைத் தூக்கி வந்தனர். உடலை விட்டு உயிர் பிரியும் அறிகுறியாக, அவனின் உடலின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து கொண்டிருந்தது
அனைவரின் மனமும் “ஐயோ ஐயோ”வென அரற்றிக் கொண்டு இருந்தது. தங்கள் சாபத்தினைக் களையும் திறன் படைத்தவன் மாண்டு விடப் போகிறான் என்பதை விட, தங்களுக்கு உதவி புரிவதற்காக வந்த நல்லுள்ளம் கொண்ட இவ்வுயிர் இம்மண்ணை விட்டுப் பிரியப் போகிறதே என்றெண்ணியே, அனைவரின் விழிகளிலும் உவர்நீர் சுரந்தது
கொட்டும் இடியுடன், அண்டம் அதிரச் செய்த மின்னல் ஒளியுடன் அங்கு ஆயிரம் ஆயிரம் மலர்களுடன் வந்த சேர்ந்தார் மூப்பர். தாய்மடி சேர்ந்த அடிபட்ட குழந்தையாய், மூப்பரைக் கண்டதும் அவர்களின் ஓலம் அதிகரிக்கத் துவங்கியது
அர்னவின் அருகினில் வந்த கயாகரர், அவனின் நாடி பிடித்துப் பரிசோதித்து விட்டு, சில பல மந்திரங்களை உச்சாடனம் செய்தார். பின்பு தன் கழுத்தினில் இருந்த ஒரு முகம் கொண்ட 108 ருத்திராட்சங்கள் கொண்ட மாலையினை அர்னவ் கழுத்தினில் அணிவித்து விட்டு, ஈசனின் திருவடியில் இருந்து திருச்சாம்பல் கொண்டு அவன் உடல் முழுதும் பூசினார்
பின்பு, தான் ஏற்கனவே தனது பையினுள் சேகரித்து வைத்திருந்த சில பல மூலிகைகளை எடுத்துச் சாறு பிழிந்து, அதனை அர்னவிற்கு அளித்தார்
இறுதியில் பஞ்சாட்சரம் ஜபித்து அவர் தியானத்தில் அமர்ந்திட, அங்கிருந்த அனைவரும் தீட்டி வைத்த ஓவியமென அசையாது இருந்தனர்
வெகுநேரம் கழித்துக் கண் விழித்தவர், அவர்களை அமைதிப்படுத்தி, “கவலை கொள்ள வேண்டாம் மக்களே, ருத்ர தேவரை இவ்வளவு நாட்கள் நான் புரிந்த தவத்தின் வலிமையால் என் ஈசன் எனக்களித்த வரம் கொண்டு சரி செய்து அவரின் உயிர் பிழைக்க வைத்து விட்டேன். இனி இந்தக் காயங்கள் அவரை எதுவும் செய்யாது. இந்தக் காயங்களினால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று அவர் கூறி முடிக்கையில், அர்னவின் கண்மணிகள் இரண்டும் மெல்ல அசைவது அவன் இமை வழியே நிழலாய்த் தெரிந்தது
தனது உயிர் சக்தி அனைத்தையும் திரட்டி, தான் செய்த தவத்தின் பலனை அர்னவ்விற்கு அளிக்க, அவனைப் விட்டுப் பிரிந்து கொண்டிருந்த உயிர்ப்பறவை மீண்டும் அவனைத் தொட்டுத் தொடர்ந்தது
மெல்லக் கண் விழித்த அர்னவை விக்ரம் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொள்ள, மற்றவர் அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தனர். பின்னர் அர்னாவிற்கு அவன் உயிர் பிழைக்கக் காரணாமாயிருந்தவர் மூப்பர் தான் என எடுத்துரைக்க, அவர் பதம் பணிந்து தனது நன்றியை தெரிவித்தான்
இறுதியாக அனைவரும் அந்திவேளை பூஜைக்குத் தயாராயினர். அர்னவும் விக்ரமும் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக் கொண்டு கடலினுள் செல்லப் புறப்பட்டனர்
மற்ற அனைவரும் கடலினுள் பாதுகாப்பான அவரவர் இருப்பிடத்திற்குச் செல்ல, அர்னவ் விக்ரமுடன், சாமினி, கயா, எல்லாளன் ஆகிய மூவரும் வர, அவர்களைக் கேள்வியை நோக்கிய அர்னவ், “நீங்க எங்க வரீங்க? நீங்க உங்க இடத்துக்குப் போங்க, நாங்க பார்த்துக்கறோம்” எனக் கூறினான்
“என்ன ருத்ர தேவரே? எமக்காக நீர் உம் உயிர் விடத் துணிகையில், யான் இங்குக் கைகட்டி நின்றிருக்க இயலுமா? யாமும் எம்மால் இயன்ற உதவி புரிவோம்” என சாமினி கூற
“எம்மைத் தடுக்க வேண்டாம் ருத்ர தேவரே, உறுதியாக உமக்கு உதவி புரிந்து துணை நிற்போம்” என்று கூறினான் எல்லாளன்
கயாவிடம் “ஏன் நீயும் வருகிறாய்?” என்று அர்னவ் காரணம் வினவவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக விக்ரம் கேட்டான்
“இங்க பாரு கயா, நீ உன் இடத்துக்குப் போ, நா பார்த்துக்கறேன்” என்று கூறியதும்
“நீர் இவ்வளவு ஆபத்தான காரியம் புரியத் துணிகையில், நான் கடலினுள் முத்துகுளித்துக் கொண்டிருப்பேன் என்று எண்ணினீரா விக்ரமரே? யாம் உமக்காக மட்டுமே அங்கு வரவில்லை, எம் மக்களுக்காகவும் தான்” என்று கூறுபவளிடம், அதற்கு மேல் என்ன கூறுவதெனத் தெரியாது அமைதி காத்தான் விக்ரம்
எனவே அர்னவ், விக்ரம், எல்லாளன், சாமினி, காயா ஆகிய ஐவரும் சமுத்திராவின் இருப்பிடத்தை நோக்கி செல்ல, மூப்பரும் குருநாதனும் ஓம்கார வனத்தினுள் ஈசனின் திருவடியில் இருக்க, மற்றவர் அனைவரும் தத்தமது இருப்பிடத்தில் இருந்தபடியே இறைநினைவில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்திலும் ஈசன் மீதிருந்த நம்பிக்கையிலுமாக இருந்தனர்
அர்னவ் குழு கடலினுள் சென்று சமுத்திராவின் இருப்பிடத்தை அடைவதற்கும், அவள் யட்சிணி கோவில் விட்டு திரும்ப அவ்விடத்தை அடைவதற்கும் சரியாக இருந்தது
“அட யட்சிணி தன் இரையைத் தானே அனுப்பி விட்டாளா? எமக்கு வீண் அலைச்சல் இன்றி எம் காரியம் நிறைவேறிவிடும். இப்பொழுது எப்படி, அதாவது யார் முதலில் தமது இன்னுயிரை அளிக்க முன் வருகிறீர்கள்?” எனச் சற்று இளக்காரமாகவே வினவினாள் சமுத்திரா
“இன்னுயிரை முதலில் தியாகம் செய்யப் போவது வேறு யாருமல்ல சமுத்திரா, அது நீதான்” என சாமினி கூறியதும்
“ஆகா என்ன ஆணவம்? எல்லாம் இந்த ருத்திர தேவர் இருக்கும் திமிர் தானே. அப்படியானால் உம் திமிரை அடக்கி விடலாம், அதுவும் உமது ருத்ர தேவரின் உயிர் பறித்து” என கூறி முடித்தவள், தன் இந்திராயுதத்தை எடுத்து சுழற்ற ஆரம்பித்தாள்
அந்த இந்திராயுதமானது, தனி ஒரு பொருளாகவே தோன்றவில்லை. அது அவளது உடலின் ஒரு அங்கமெனவே தோன்றியது. அவ்வளவு இலாவகமாக அதைச் சுழற்றினாள் சமுத்திரா
அவள் முதலில் அர்னவைத் தான் தாக்க வருவாள் என அனைவரும் நினைத்திருக்க, அவள் முதலில் தாக்கத் துவங்கியது விக்ரமை
அதாவது அவள் அர்னவைத் தாக்க முனைந்து இருக்கும் நேரம் கருங்குளத்தின் நுழைவாயிலான சுரங்கத்தினுள் உட்புக நினைத்திருந்தான் விக்ரம்
ஆனால் அவர்களது முதல் திட்டத்தையே தவிடு பொடியாக்கும்படி இருந்தது சமுத்திராவின் முதல் வினை
சமுத்திரா தங்களது திட்டத்தினை அறிந்து விட்டாள் என்றுணர்ந்த அர்னவும் விக்ரமும், மிகுந்த ஆக்ரோஷமாக அவளுடன் போர் புரியத் துவங்கினர். அர்னவ் ருத்ர கடகத்துடன் அவளை வீழ்த்திவிட எத்தனிக்க, சமுத்திராவோ தன் முழுக்கவனத்தையும் விக்ரம் மீதே வைத்திருந்தாள்
எனவே அவளது முழுத்தாக்குதலும் விக்ரமை நோக்கியே வந்தது. இப்படியே அவளது தாக்குதலைத் தடுக்க மட்டுமே செய்து கொண்டிருந்தால் விக்ரமால் கருங்குளத்திற்குச் சென்று மகுடத்தினை எடுக இயலாது என்று உணர்ந்த அர்னவ், தனது ருத்ரவாளினை மிக வேகமாகச் சமுத்திராவை நோக்கிச் செலுத்தினான்
அந்த ருத்ர கடகம் வந்த வேகம் கண்டு, சுமுத்திரா சற்று தடுமாறித் தான் போனாள். இருப்பினும் இதற்கெல்லாம் அசரும் ஆளா அவள்? தன்னை வலிவுபடுத்திக் கொண்டு அந்த ருத்ரகடகத்தை எதிர்க்கத் துணிந்து நின்றாள்
ஆனால் அவளே எதிர்பாராத விதமாக, அந்தக் கடகத்தின் வலிமையையும் வேகமும் அதி ஆக்ரோஷமாக இருந்தது
அந்தக் கடகம் மோதி, அவளைத் தூக்கி வெகு தொலைவு எறிந்தது. இதற்கெனவே காத்திருந்த அர்னவ், விக்ரமிற்குச் சைகை காண்பிக்க அவனும் சரியெனத் தலையசைத்தவாறே அந்தச் சுரங்கத்தினுள் நுழைந்தான்
அதை அறியாத சமுத்திராவோ, வாயு வேகத்தில் மீண்டு அவ்விடத்திற்கு வந்தவள், அங்கு விக்ரம் இல்லாததைக் கண்டு சீறும் பெண்சிங்கமென அந்த ஆழியே அதிரும் அளவிற்குக் கர்ஜித்தாள்
இதற்கெல்லாம் அசறாத மற்ற நால்வரும், அவளைச் சுற்றி வளைத்துத் தாக்கத் துவங்கினர். ஆனால் ஒரு விடயத்தில் சமுத்திராவை பாராட்டியே ஆக வேண்டும், தானே ஒப்புக் கொள்ளும் வரை தான் வீழ்ந்ததாய் அவள் ஒப்புக் கொண்டதே இல்லை
நால்வரின் வாள் வீச்சிற்கும் சற்றும் சலிக்காது, தனது இந்திராயுதத்தால் பதிலளித்துக் கொண்டே வந்தாள்
ஒரு கட்டத்தில் எல்லாளன் அவள் இந்திராயுதத்தினைக் கீழே தட்டி விட முயல, மிகுந்த சினங்கொண்டவள் ஒரே வீச்சில் அவன் கரங்களைத் துண்டித்தது. அதனைப் பொருட்படுத்தாத எல்லாளன், தனது ஒரு கரத்தினாலேயே போர் புரிந்து கொண்டிருந்தார்
கைகளிரண்டும் அர்னவுடன் வாட்போர் புரிந்து கொண்டிருக்க, சுழலும் தன் வாலினால் பின்புறமிருந்து அர்னவை சுற்றி வளைக்க முனைந்தாள் சமுத்திரா
அதனைக் கண்ட சாமினி அதிவிரைவாகச் சென்று அவள் வாலில் தன் வாளினைப் பதித்தாள். ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை சமுத்திராவிற்கு
அவள் சாமினியின் வாளினை சிறுதூசு போல் உதறித் தள்ள, வாளுடன் சேர்ந்து தானும் நிலை குலைந்தாள் சாமினி. உடனே சாமினியின் உதவிக்கு வந்த எல்லாளனும் கயாவும் மாறி மாறி தங்கள் சொர்ண கடகம் கொண்டு அவளைத் தாக்க முற்பட, அதற்கெல்லாம் ஈடு கொடுத்து வந்தாள் சமுத்திரா. எனவே கொஞ்சம் கொஞ்சமாகச் சமுத்திராவின் கை ஓங்கத் துவங்கியது
அங்குச் சுரங்கத்தினைக் கடந்து கருங்குளத்தின் ஆழத்தினை அடைந்த விக்ரமிற்கும், பிராண சக்தி குறையத் துவங்கியது
ஆனால் மன உறுதியை மெருகூட்டி பெரும் முயற்சி செய்து மயனின் மகுடத்தின் அருகே சென்றவன், அங்கு அதற்குக் காவலாய் இருந்த ஆன்மாக்களைக் கண்டு திகைத்தான்
விக்ரம் ஒவ்வொரு முறை அந்த மகுடத்தினை எடுக்க முயலும் போதும், அந்த ஆன்மாக்கள் அவன் உயிரினைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சத் துவங்கின. இறுதியில் மிகுந்த பிரயாசை கொண்டு மகுடத்தினை எடுத்தவனது உடலில் எஞ்சி இருந்ததுசொச்சம் உயிரே
அந்தக் கடலினை தாய் மடியெனக் கருதியவனை, நிஜமாகவே தன பிள்ளையெனக் கொண்ட கடலன்னை, அவனை மெல்ல மெல்ல அந்தச் சுரங்கத்தினை விட்டு வெளியே இழுத்து வந்தாள்
அப்பொழுது தான் அர்னவ், சமுத்திராவின் கை ஓங்குவதைக் கண்டு, தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி அதி வேகமாக ஆக்ரோஷமாக சிவ நாமத்தினை ஜெபிக்கும் ருத்ரனாய்ச் சென்றான்
அர்னவ் தன்னருகே வருவதைக் கண்ட சமுத்திரா, தனது முழுப்பலத்தினையும் பிரயோகித்துத் தனது இந்திராயுதத்தை வீசினாள்
ஆனால் அடுத்த நொடி, ருத்ரனின் கடகம் அரக்கியின் தேகம் தொட்டது. ஆம் ருத்ரதேவனின் ருத்ர கடகம் ஒரே வீச்சில் சமுத்திராவின் உடல் கிழித்தது
அதைக் கண்ட அனைவரும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லாது போனது. அவளருகே வந்த அர்னவ், கீழே கிடந்த சமுத்திராவைப் பார்த்தான். ஆனால் அவளது முகம், வலியை வெளிப்படுத்தாது மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது
உடனே அர்னவிற்குச் சந்தேகம் வந்து விட, சுற்றும் முற்றும் பார்த்தான். மற்ற மூவரும் அங்கிருக்க, மகுடம் எடுக்கச் சென்ற விக்ரம் இன்னும் வர வில்லையாவென்று சந்தேகம், அப்பொழுது தான் அவனுக்கு உதித்தது
அங்கிருந்து அதிவேகமாக நீந்திச் சென்று சுரங்கத்தினுள் புகுந்து விக்ரமைத் தேட எத்தனித்தவனை, உயிரற்ற விக்ரமின் உடல் தான் வரவேற்றது
அதைக் கண்ட அனைவரும் திக்பிரமை பிடித்து நிற்க, சாமினியோ தம் உடன் பிறந்தவனையே இழந்து விட்டோம் என்றெண்ணி துயரத்தில் கரைந்தாள்
எல்லாளனோ… தன் உயிர் கொடுத்தும் ஏற்ற இலட்சியத்தை அடைந்தவனைத் தன் முழு முதற் கடவுளெனவே போற்றினான்
கயாவைப் பற்றியோ கேட்கவே வேண்டியதில்லை. தனது வாழ்வே முடிந்ததென, தன் மன்னவன் வீரத்தையும் தியாகத்தையும் எண்ணி அரற்றினாள். தன் உயிரினை விடத் துணிந்து இருந்தாள்
இவர்களெல்லாரையும் விட அர்னவோ, தன் உயிர் தன்னை விட்டுச் சென்று விட்டதென, தனது கண்களின் மீதே சந்தேகம் கொண்டான்
உடனே அனைவரும் அவனைத் தூக்கிக் கொண்டு வெளியே வர, அவனைக் காப்பாற்றும் வகையறியாது திகைத்தான் அர்னவ்
விக்ரமைத் தூக்கிக் கொண்டு ஓம்கார வனத்திற்குச் சென்றான் அர்னவ். அங்கு செல்கையில், முதன் முதலில் தானும் விக்ரமும் அங்கு வந்தது அர்னவின் நினைவில் வந்தது
விக்ரமின் சிரித்த முகம் கண் முன் தோன்றி, அவனது நினைவுகளின் வலி கண்ணீராய்க் கீழிறிங்கியது. இருந்தும், மனத்தினைத் திடப்படுத்திக் கொண்டு, வெகுவிரைவாய் ஓடோடி மூப்பரிடம் விக்ரமை கொண்டு சென்றான் அர்னவ்
அங்கு நடந்ததை அறிந்த மூப்பர் செய்வதறியாது திகைத்தார். எனினும் விக்ரமை சோதித்தவர் தலை தாழ்ந்தது
“இல்லை ருத்ர தேவரே, எல்லாம் முடிந்து விட்டது. யாம் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று கண்ணீரைக் கட்டுப்படுத்திய குரலில் உரைத்தார் மூப்பர்
இவ்வாறு அவர் கூறி முடித்ததும், பெருந்துக்கம் வந்து தொண்டையைக் கவ்வ, “ஐயோ விக்கி…” என பெருங்குரலில் அலறினான் அர்னவ்
மூப்பரோ அல்லது குருநாதனோ அவனை சமாதானப்படுத்த விழையவில்லை. விழையவில்லை என்பதை விட, இயலவில்லை. ஏனெனில், அவர்களும் விக்ரம் அவர்களை விட்டுப் பிரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது தவித்தனர்
சிறிது நேரத்தில் தன்னைத் தானே தேற்றிக் கொண்ட அர்னவ், இன்னும் கண்களில் கண்ணீருடன் விழி மூடி இருந்த மூப்பரைப் பார்த்து, “போதும் மூப்பரே, இப்பொழுது நாம அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம். இரவு பூஜைக்கு நேரமாகிடுச்சு, சாமினி எப்படி இந்தப் பூஜையில் கலந்துக்கப் போறா?” என்று கேட்கவும்
“ருத்ர தேவரே, தாங்கள் எவ்வளவு துக்கத்தை மனதுள் அடக்கி வைத்துள்ளீர்கள் என்பது எமக்குப் புரிகிறது ஐயா. உங்களிடமும் உங்களின் மற்றோர் உயிர் விக்கிரமரிடமும் நாங்கள் மனம் விட்டு தலை தாழ்ந்து எங்களது மன்னிப்பை யாசிக்கிறோம் ஐயா. எம்மை மன்னித்தருக்க ஐயா” என சிறு பிள்ளை போல வாய் விட்டுக் கதறினார் மூப்பர்
“போதும் மூப்பரே, ஏற்கனவே நேரம் நிறைய ஆகிடுச்சு. நாம இதுக்கு மேலயும் காலம் கழிக்க முடியாது, ஈசனுக்குப் பூஜை சரியான நேரத்துல நடக்கணும். ஏன்னா, உயிர் போற நேரத்திலும் கூட என் விக்கி தன்னோட கையில இருந்த மகுடத்தைக் கீழ விடல. அதனால அவனோட தியாகத்துக்கு மதிப்பிலாம போயிடக் கூடாது” என அர்னவ் கூறியதும், மூப்பர் சட்டென அர்னவின் பாதம் பணிய விழைந்தார்
“வேண்டாம் மூப்பரே, என் விக்கி செஞ்ச தியாகத்துக்கு நன்றி செலுத்தணும்ன்னா, அதுக்கு உங்க இனத்தோட சாபம் தீரணும். அதற்கான வேலையைத் தான் நாம இப்போ பார்க்கணும்” என்று அர்னவ் கூறியதும், அங்கு வந்தாள் சாமினி
தரையில் தவிக்கும் மீனினைப் போல மச்ச ரூபம் மாறாமலே தன் சுவாசத்திற்காகத் துடித்துக் கொண்டே வந்தவள், விழிகளில் உவர் நீர்ச் சுரப்பது மட்டும் வேலை நிறுத்தம் செய்யாதிருந்தது
அவள் நிலை உணர்ந்த மற்ற மூவரும், வேக வேகமாகப் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர்
சரியாகச் சுனை நீர் கொண்டு ஈசனின் திருவடிக்கு அர்னவும் சாமினியும் பூஜை செய்ய எத்தனிக்கையில், எங்கிருந்தோ வந்த ஆயுதம் ஒன்று அவர்கள் கைகளிலிருந்த சுனை நீர் கொண்ட கும்பத்தினைத் தட்டிப் பறந்து சென்றது
அவர்கள் கும்பத்தினைத் தட்டியது வேறெதுவும் அல்ல, இந்திராயுதம் தான். அனைவரும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கையில், அங்கு அகங்காரச் சிரிப்புடன் நின்றிருந்தது… சமுத்திரா
“உன் ஒரே வீச்சில் மடிவதற்குத் தான் யாம் பதினாயிரம் மனிதர் தலை கொய்து.. அவர் முதுகெலும்பு கொண்டு எம் யட்சிணிக்குப் பூஜை செய்தேனா ருத்ர தேவரே?” என்றவள் அகோரச் சிரிப்பு உதிர்க்கையில், மெல்லிய அதிர்வினைப் பதிவு செய்தாள்
மீண்டும் அதிகப் பலத்துடன் தன் முன் வந்து நின்ற அந்தக் கடல் அரக்கியைத் தனது கைகளாலேயே கிழித்து உயிர் குடிக்க வேண்டுமென்ற ஆத்திரம் வந்தது அர்னவிற்கு
தன் உற்ற நண்பன், தனது மறு உயிர், அவனது உடலில் சிறு கீறல் கூட விழாது காக்க வேண்டுமென எண்ணி இருந்தவன் கண் முன்னே, அவனது உயிரையே பறித்தவளை, மீண்டும் ஆசை தீர கொன்று வஞ்சம் தீர்க்க வேண்டுமென அவளை நோக்கி ஆவேசத்துடன் தனது ருத்ர கடகத்தினை ஓங்கியவாறு சென்றான் அர்னவ்
அவனுக்கு எதிரில் நிற்பவள் மட்டும் சாதாரணமானவளா என்ன? அந்த மரணத்தின் மறு உரு, காலனின் காரிகை வடிவம், சமுத்திரத்தையே தன் ஒற்றை அசைவால் வற்றி போகச் செய்திடும் மரணச் சாசனத்தின் பெண் வடிவம் அல்லவா?
அப்படிப்பட்டவள், இப்பொழுது ஒருமுறை தோற்ற அவமானத்தைத் துடைத்திடவும், அதற்கும் மேலாக உலகையே ஆளத் துடிக்கும் வெறியுடனும் அர்னவைத் தாக்க முன் வர
அர்னவோ, தனது உயிர் நண்பனின் மரணத்திற்குப் பழி முடிக்க, பற்றி எரியும் பெரு நெருப்பாய், சுட்டெரிக்கும் சூரியனாய், மரணத்தின் ராணிக்கே மரணச் சாசனம் எழுதும் எமனேஸ்வரனாய், தீய சக்திகளைக் கண்டால் தனது நெற்றிக்கண் திறந்து அதனைக் கருவறுக்கும் ருத்ர தேவனாய், உடம்பெல்லாம் சினத்தில் பற்றி எரிய.. அதிவேகமாய்ச் சீரும் ஏவுகணை என அவளை நோக்கிச் சென்றான்
“உன்னோட யட்சிணிக்கு இன்னிக்கு உன் இரத்தால தான் அபிஷேகம்” என்று கூறி, அர்னவ் சமுத்திராவை நோக்கிச் செல்ல
மெல்ல ஏளன நகையை உதிர்த்தவாறே, “என்ன சவாலா? அதுவும் சமுத்திராவிடமேயா? என்னைக் கண்டால் உன் நெஞ்சம் இன்னும் நிமிர்ந்து உன் முதுகுத்தண்டு விறைத்து என்னை அச்சம் கொள்ள வைக்கிறதோ? அதே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போகும்படி உன்னைப் பயம் கொள்ள வைத்து, எம் தாள் பற்றி உயிர் பிச்சை உனைக் கேட்க வைத்து, உந்தன் ஓலம் எந்தன் செவிப்பறையைக் கிழிக்க, அப்பொழுது பறிப்பேன் உமது இன்னுயிரை” என சவால் விட்டாள் சாமினி
“என்ன? என் முதுகு வளைந்து, பயந்து நடுங்கி உன்கிட்ட உயிர் பிச்சை கேட்பேன்னு சொல்றியா? என்னோட விக்ரம கொன்னதுக்காகவே உன்னோட உடம்பச் செதில் செதிலா அறுத்து, நீ வலியில அலறி என்ன தயவு செஞ்சு கொன்னுடுன்னு கதற, உன்னோட உயிர் போகற அந்த நிமிஷம் நானும் சாமினியும் ஒண்ணா சேர்ந்து அந்த ஈசனுக்குக் கருங்குளத்தோட தண்ணீரால் அபிஷேகம் செஞ்சி, நீ வலியால் அதைப் பார்க்கவும் முடியாம சாகவும் முடியாம, உன் உடம்போட ஒவ்வொரு அணுவும் வேதனையிலயும் என் கிட்ட தோத்துப் போன அவமானத்துலயும் துடிக்க, உன் கண் முன்னாடியே இவங்களோட சாபம் தீர, அதைப் பார்த்து நீ உயிரோட வேக, என் விக்ரம் கை கொண்டே உன் உயிர் பறிப்பேண்டி” என வானம் இடி இடிக்க, அந்தத் தீவே நடு நடுங்க கர்ஜித்தான் அர்னவ்
அவனது கர்ஜனையில் மனதில் பயமும் ரௌத்திரமும் ஒருங்கே பிறக்க, வேக வேகமாய் வந்து அர்னவைத் தாக்கினாள் சமுத்திரா
என்ன தான் ருத்ர கடகம் இருந்தும், விக்ரமைப் பிரிந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருந்த அர்னவினால், சமுத்திராவைச் சமாளிக்கவே இயலவில்லை
அதுவும் நீர் விட்டு வந்த பின்பும், ஒவ்வொரு கணமும் அவளது பலம் பெருகி க்கொண்டே இருந்தது
மறுபுறமோ… சிவ ராத்திரி முடிவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது. ஆனால் எதைப் பற்றியும் யோசிக்காத சமுத்திராவோ, தனது ஒரே குறிக்கோளாய்.. அர்னவைக் குற்றுயிராய்க் கொண்டு சென்று யட்சிணியின் திருப்பாதத்திற்கு முன்பு அவனைக் கிடத்தி, அதன் பின்பே அவன் உயிர் பறிக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் இருந்தாள்
வெகுநேரம் கழித்து அர்னவின் தலை தாழ, அவன் கரத்திலிருந்து ருத்ர கடகம் மண்ணைத் தொட்டது
இது தான் சமயமென்று கண்டுணர்ந்த சமுத்திரா, சில பல அதர்வண மந்திர உச்சாடனங்கள் கூறி, தனது இந்திராயுதத்தினை அர்னவை நோக்கி வீசினாள்
அரக்கியின் கரத்திலிருந்து விடுபட்ட அந்த இந்திராயுதமானது, அதி ஆக்ரோஷமாக விரைந்து, குறி தவறாது அர்னவைத் தாக்கி தூக்கி வீசி எறிந்தது
அந்த ஒரு அதிரடித் தாக்குதலில் நிலை குலைந்த அர்னவ், வான் தொட்ட முக்கண்ணோன் விக்கிரகத்தின் மீது விழுந்தான்
அவன் விழுந்த அதிர்ச்சியிலோ என்னவோ, நீறணிக்கடவுளின் கரத்தினில் இறுக்கப் பற்றி இருந்த கோடாலி, நேரே அர்னவை நோக்கி கீழே வந்து கொண்டிருந்தது.
அந்த ஈசனின் திருக்கரங்களால் அர்னவின் மரணம் நிகழ போவதை எண்ணி மகிழ்ச்சிப் பெருக்கில் இருந்தவளது எண்ணத்தைப் பொய்ப்பிக்க வேண்டுமென, ஒரு வினாடியில் எழுந்தான் அர்னவ்
விழுந்த போது வெறும் ருத்ர தேவனாக விழுந்தவன், மண்ணிலிருந்து எழுகையில் ருத்ராவேசம் கொண்ட ஈசனாய் எழுந்தான்
தன்னை நோக்கி கீழே விழுந்து கொண்டிருந்த கோடாலியை இலாவகமாகப் பற்றியவன், தன் முன்னே நின்றிருந்த சமுத்திராவின் தலையை ஒரே வீச்சில் வீசியே எறிந்தான்
அவள் உடல் கொண்ட உதிரம் அர்னவின் வதனத்தை நனைக்க, “விக்ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…” என ஆவேசம் வந்தவனாய் கத்தியவாறே, மயங்கிச் சரிந்தான்
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(அடுத்த வெள்ளியன்று, இந்த தொடரின் இறுதிப் பகுதி வெளியிடப்படும்)
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings