இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘அடிப்பாவி உன்னோட யட்சிணி தேவிக்கு என்ன பலி குடுக்கறதுக்குத் தான் இவ்ளோ அக்கறையா பேசினியா? நான் கூட ஒரு நிமிஷம் உன்ன நம்பிட்டனே’ என மனதிற்குள் புலம்பினான் அர்னவ்
சட்டென எல்லாளன் புறம் திரும்பிய அர்னவ், “யட்சிணி தேவிக்குத் தான பிரம்மச்சரியத்தோட இருக்கணும், அப்ப பிரம்மச்சரியம் போயிடுச்சுனா யட்சிணிக்கு எங்களை அவள் பலி கொடுக்க மாட்டாளே..” என்று சற்று குதூகலத்துடன் கூறியவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள் சாமினி
“ஐயா தாங்களே அவருக்கு விளக்கி அனைத்தையும் எடுத்து மொழியுங்கள். இதற்கு மேல் யான் இவ்விடம் இருப்பின் அது எமது மரியாதைக்கு இழுக்காகும்.. யாம் வருகிறோம்.” என எல்லாளனிடம் கூறியதுடன், அங்கிருந்து பறந்தோடி விட்டாள் சாமினி
‘நாம நல்ல ஐடியா தான கொடுத்தோம்? அப்பறம் ஏன் இவ இப்படி அலறி அடிச்சுக்கிட்டு ஓடறா?’ என புரியாமல் விழித்த அர்னவ், “நீங்களே என்னோட கேள்விக்குப் பதில் சொல்லுங்கண்ணே” என எல்லாளனிடம் வினவினான்
‘அடேய் நான் வருங்காலத்தில் கயாகரரை போல ஒரு தவ முனியாக வேண்டுமென்று யோகங்கள் செய்து கொண்டிருந்தால், ஒரே வினாவில் என் வாழ்வின் இலட்சியத்தைச் சிதைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே’ என மனதிற்குள் எண்ணியவர், அசட்டுச் சிரிப்பில் அதை மறைத்தார். மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட முடியுமா என்ன? கேள்வி கேக்கறது ருத்ர தேவராச்சே (அர்னவ்)
“அது வந்து ருத்ர தேவரே, யட்சிணிக்கு மட்டுமல்ல, ஈசன் பூஜைக்கும் பிரம்மச்சரியம் அவசியம். அதனால் உங்களது காதல் கனவுகளை எல்லாம் சற்று ஒதுக்கி விட்டு அந்தக் கடவுளை மட்டும் நினைப்பீராக” என்றார் எல்லாளன்
“அய்யய்ய.. என்ன நீங்க? என்ன அவ்ளோ மோசமாவா நினைச்சுட்டீங்க? நான் சும்மா அவகிட்ட என்னோட மனச சொல்ல தான் போனேன், வேற எந்தக் காரணமும் இல்ல” என் அர்னவ் கூறவும்
“அதெப்படி எல்லா ருத்ர தேவரும் ஒரே மாதிரி தான் நடந்து கொள்ள வேண்டுமென்று வரம் வாங்கி வந்துள்ளீரா?” என் நக்கல் தொனியுடன் வினவினார் எல்லாளன்
“ஏன் அப்படிச் சொல்றீங்க?” என புரியாமல் கேட்டான் அர்னவ்
“பின் என்ன ருத்ர தேவரே.. இதற்கு முன்னாள் வந்தவரும் இதே போலத் தான் சமுத்திராவின் மீது மையல் கொண்டு அவளை மணம் புரியக் கேட்டார். எங்களுக்குச் சாப விமோச்சனம் ஆன பின்பு சமுத்திராவை மணமுடித்துக் கொள்ளலாம் என்று விட்டார் எங்கள் தலைவர். அதேப் போல் இப்பொழுது தாங்களும் சாமினியைக் கண்டு மையலுற்றிருக்கிறீர்கள். இதெல்லாம் எமக்குச் சரியாய் படவில்லை” என்று எல்லாளன் கூறவும்
‘ஐயோ இந்தப் பூமிக்குள்ளயே போயிட மாட்டோமா?’ என்றாகி விட்டது அர்னவிற்கு
‘அடக் கடவுளே… இப்பேற்பட்ட அவமானம் நமக்குத் தேவையா? ஐயோ இத விக்ரம் பார்த்துட்டா அவ்ளோ தான். ஓட்டியே சாகடிச்சுடுவானே’ என்று எண்ணியவாறே சுற்றும் முற்றும் விக்ரமை தேடினான் அர்னவ்
“சரி சரி எல்லண்ணே (எல்லாளனின் short form), இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். வேற யார்கிட்டயும் சொல்லி என் மானத்த வாங்கிடாதீங்க. ஆமா… இந்த விக்ரம் பய எங்க போனான்? அவனை நான் வர வரைக்கும் பார்த்துக்கச் சொல்லிட்டு தான போனேன்? எங்க தனியா விட்டீங்க அவனை?” எனக் கேட்டதும்
“ஆமாம் ருத்திர தேவரே… அவர் என்னவோ யாம் கூறுவதன் படி அடி பிசகாமல் நடப்பவர் போலக் கூறுகிறீர்களே. என்னைக் கண்டதும் இரண்டு வார்த்தை பேசி விட்டுக் கிளம்பி விட்டார். எங்கே சொல்லுகிறீர்கள் என்று யாம் கேட்டதற்கு என்னமோ கூறினாரே….ஹ்ம்ம்.. ஞாபகம் வந்துவிட்டது ‘மல்லாக்க படுத்து விட்டம் இல்லாத வானத்த பார்க்கறதுல என்ன சுகம் தெரியுமா? முடிஞ்சா நீங்களும் வந்து படுங்க.. இல்லாட்டி பாஸ் வந்ததும் என்கிட்ட அனுப்பி வைங்க.. அதுவரைக்கும் அங்க இங்க நகரக் கூடாது’ என்று எமக்கு உத்தரவு அளித்து விட்டு நீவிர் தங்கியிருந்த குகைக்குச் சென்றுவிட்டார் அவர்” என்றார் எல்லாளன்
‘அச்சச்சோ விக்ரம் பயங்கரக் கோபத்துல இருக்கான் போலயே, இருடா விக்கி செல்லம் உனக்காக ஓடோடி வந்துட்டேன்’ என மனதுள் எண்ணியவாறே, “மன்னிச்சுடுங்க அண்ணே. உங்க தூக்கத்தையும் சேர்த்துக் கெடுத்துட்டேன். நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்க” என எல்லாளனிடம் விடைபெற்று கிளம்பினான்
“உறக்கமா? எமக்கா? என்று யாம் என்று சபிக்கப் பட்டோமோ அன்றிலிருந்து எம் இனமே உறக்கமின்றித் தவிக்கின்றது. ஆம் பகலில் உணவுக்காக உழைத்தும், இரவில் மச்சமாக மாறியும் உறங்குதல் என்னும் வினையே அறியாது வாழ்ந்து வருகிறோம், முன்பு யாம் செய்த பிழையினால்” என்று எல்லாளன் தன்னிரக்கத்துடன் கூறியதும், அர்னவின் மனம் உருகியது.
“கவலைப்படாதீங்க எல்லண்ணே, கண்டிப்பா உங்களோட சாபம் கூடிய சீக்கிரம் தீர்ந்துடும்” என்று நம்பிக்கையுடன் கூறினான் அர்னவ்
அவன் இவ்வாறு உரைத்ததும், ஆனந்தப் பெருக்கில் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அங்கிருந்து உடனே நகர்ந்தார் எல்லாளன்
அந்தப் பக்கம் எல்லாளன் கிளம்பியதும், இந்தப் பக்கம் விக்ரமைக் காண விரைந்தோடினான் அர்னவ்.
அவர்கள் தங்கி இருந்த குகைக்கருகில் சென்றவன், அங்கே குகையினுள் அல்லாது வெட்ட வெளியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த விக்ரமின் அருகில் சென்றவன், “விக்கி.. விக்ரம்.. எழுந்திரு டா..” என்று மிக மெதுவாக அழைத்தான்.
“நான் ஒண்ணும் சாமினி இல்ல, இப்படி ஹஸ்கி வாய்ஸ்ல பேசறதுக்கு” என்றவாறே புரண்டு படுத்தான் விக்ரம்.
“என்ன விக்கி கோவிச்சுகிட்டியா? நீயும் கயாவும் தனியா பேசிட்டு இருக்கறத வேற யாராவது பாத்தா தப்பா நினைச்சுக்குவாங்க இல்ல, அதான் டா…” என அர்னவ் கூற
எழுந்து அமர்ந்த விக்ரம், “எப்படி எப்படி… நானும் கயாவும் பேசினா தப்பா நினச்சுக்குவாங்க இல்ல. நீங்களும் சாமினியும் பேசினா நல்லா பேசுங்கனு வாழ்த்திட்டு போவாங்களா?” என முறைத்தான்
“டேய் அதெல்லாம் விடு… நானே பயங்கர மொக்க வாங்கிட்டு வந்திருக்கேன். இங்க பாரு, நாம நினைக்கற மாதிரி அவ்வளோ ஈஸியா இவங்களோட சாபத்துல இருந்து இவங்கள காப்பாத்த முடியாது போலருக்கு. அது மட்டும் இல்லாம, இவங்கள காப்பாத்தினாலும் நாம எப்படி இங்க இருந்து நம்ம நாட்டுக்கு திரும்பி போக முடியும். நாளைக்கு முதல் வேலையா, நமக்கு முன்னாடி இங்க வந்த குருநாதன் சாரோட குரூப் என்ன ஆனாங்கனு கண்டுபிடிக்கணும்” என அர்னவ் கூற
“ஏன் பாஸ் அவங்கள பத்தி இவங்களுக்கு ஏதாவது தெரிஞ்சுருந்தா நம்ம கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்துருப்பாங்கள்ல?” என்றான் விக்ரம்
“ஹே அதெல்லாம் பேசறதுக்கு நமக்கு எங்க நேரம் இருந்தது?” எனக் கேட்டான் அர்னவ்
“ஆமாமா காதலிக்கறதுக்கு மட்டும் இவங்களுக்கு நேரம் இருந்துச்சு” என வாய்க்குள் முணுமுணுத்தான் விக்ரம்.
“ஹப்பா சாமி மன்னிச்சுடு டா… இந்தச் சாரி காதலிச்சதுக்காக இல்ல, கடமையை மறந்ததுக்காக. இப்பவும் காதல் இருக்கு, ஆனா அத வெளிக்காட்டுற நேரம் இது இல்ல. அப்படியே நான் என்னோட காதல அடையணும்னாலும், மொதல்ல நான் என் கடமையை முடிக்கணும்.. சரியா? நம்பறியா இப்ப?” என்று அர்னவ் கேட்க, ஆதரவாக அவனது தோளினைப் பற்றினான் விக்ரம்.
இரவெல்லாம் வெகுநேரம் விழித்திருந்து சமுத்திராவை அழித்து மயனின் மகுடத்தினைக் கைப்பற்றுவது எவ்வாறென நண்பர்கள் இருவரும் திட்டம் வகுத்துக் கொண்டிருந்தமையால், விடிந்து வெகுநேரம் ஆனதை உணராமல் மிகுந்த அயற்சியுடன் உறங்கி கொண்டிருந்தனர்
சுட்டெரிக்கும் சூரியனே கிட்ட வந்து எட்டி பார்த்த பின்பு தான், ஆழ்நிலைத் தூக்கத்திலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்தனர்
சட்டென்று எழுந்த விக்ரம், “எங்கே என் மகுடம்? எங்கே என் கயா? எங்கே என் குழந்தைகள்?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தான்
விக்ரமின் அலறல் கேட்டு விழித்த அர்னவ், அரைக்கண் திறந்து, “ஹ்ம்ம்… உன் முதல் பையன் ஸ்கூலுக்குப் போயிருக்கான், ரெண்டாவது பையனுக்கு இப்ப தான் அட்மிஷன் வாங்கணும் வரியா?” என கேலியாய் கூற, முழுவதுமாக விழிப்பிற்கு வந்தான் விக்ரம்
“ச்சே எல்லாம் கனவா…” என்று தலையை உலுக்கி விட்டுக் கொண்டிருந்த விக்ரமை
“ஆமாமா எல்லாம் கனவு தான்… சீக்கிரம் வாடா போய் குளிச்சுட்டு அடுத்த வேலைய பாப்போம்” என்று விக்ரமை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் அர்னவ்
குகையை விட்டு வெளியே வந்த இருவரும் திகைப்புடன் அப்படியே நின்றனர். ஏனென்றால் அந்தத் தீவின் மக்கள் அனைவரும் மொத்தமாகக் குழுமி, அவர்களின் குகை வாயிலில் காத்திருந்தனர்
அதைப் பார்த்த இருவருக்கும் பயப்பந்து ஒன்று தொண்டையில் சிக்கிக் கொண்டது. அதைக் கொஞ்சம் கஷ்டப்பட்ட விழுங்கிய விக்ரம், அர்னவின் காதைக் கடித்தான்
“என்ன பாஸ் நேத்து சாமினிய தனியா பாக்க போனது அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா? எல்லாரும் சேர்ந்து பொது மாத்து சாத்த வந்துருக்காங்களா?” என்றான்
“எனக்கும் அதான்டா சந்தேகமா இருக்கு, அங்க பாரு அந்த எட்டப்பன.. போட்டு குடுத்துட்டு எப்படி டூத் பேஸ்ட் விளம்பரத்துல நிக்கற மாதிரி சிரிச்சுக்கிட்டு நின்னுட்டு இருக்கான்னு” என்று எல்லாளனைச் சுட்டினான் அர்னவ்.
“இவர்கள் எதற்காக எம்மை இவ்வாறு கடுகடுவெனப் பார்க்கிறார்கள்?” எனத் தூய தமிழில் முணுமுணுத்தான் எல்லாளன்
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, அந்தக் கூட்டத்தினை விலக்கி முன்னேறி வந்தார் ஒருவர். அவரைப் பார்த்து திகைத்துப் போய் நின்றனர் அர்னவும் விக்ரமும்
(தொடரும்)
#ad
#ad
GIPHY App Key not set. Please check settings