#ads – Deals in Amazon👇
மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தன்னை நோக்கி கீழே விழுந்து கொண்டிருந்த கோடாலியை இலாவகமாகப் பற்றிய அர்னவ், தன் முன்னே நின்றிருந்த சமுத்திராவின் தலையை ஒரே வீச்சில் வீசியே எறிந்தான்
அவள் உடல் கொண்ட உதிரம் அர்னவின் வதனத்தை நனைக்க, “விக்ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…” என ஆவேசம் வந்தவனாய் கத்தியவாறே, மயங்கிச் சரிந்தான்
அவனது ஆவேசக் குரல் கேட்டு அருகினில் வந்த மூப்பரும் குருநாதனும், அங்கு அவர்கள் கண்முன்னே இருந்த கோரக்காட்சியைக் காண சகியாது கண்களை மூடிக் கொண்டனர்
பின்பு மனதின் அருவருப்பை அடக்கிவிட்டு அவ்விடத்தைச் சுத்தம் செய்தவர்கள், அர்னவையும் மயக்கம் தெளிய வைத்து எழுப்பினர்
இறுதியாகச் சாமினியையும் அழைத்து வந்தவர்கள், பொற்கலசத்தில் கருங்குள நீர் கொண்டு ஈசனுக்கு அபிடேகம் செய்யக் கூறினர்
இருவரும் மனதில் அந்த முக்கண்ணோனை வழிபட்டு, ஒன்றாய் சேர்ந்து ஈசனின் திருப்பாதங்களில் அபிடேகம் செய்திட, கொஞ்சம் கொஞ்சமாய் மச்சத்திருந்து மனிதியாய் உருப்பெற்றாள் சாமினி
பின்பு சிறிது நேரத்திலேயே அங்கிருந்த மச்ச மாந்தர்களெலாம் மனிதர்களாய் உருமாறி, ஓம்கார வனம் வந்து ஓம்கார நாதனை தரிசித்தனர்
அங்கிருந்த எல்லோரும் மகிழ்ச்சியின் விளிம்பினில் நிகழ்ந்திருக்க, ஒரு மூலையில் அமர்ந்து தன் உயிர் நண்பனுக்காகக் கண்ணீரில் கரைந்தான் அர்னவ்
அவன் அவ்வாறு அழுகையால் கரைந்து கொண்டிருக்க, பின்புறமிருந்து ஒரு கரம் ஆதரவாய் அவன் தோள் தொட்டது
சாமினி தன்னைச் சமாதானப்படுத்த வந்திருக்கிறாள் என்று திரும்பிய அர்னவின் கண்கள், அதிர்ச்சியால் தெறித்து விடும் போல ஆனது
அர்னவின் கண்கள் மட்டுமா? அவ்விடம் இருந்த பலநூறு கண்களும் அதிர்ச்சியில் இருந்தன
அத்துனைக் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகி வழிந்தது. பேரதிர்ச்சியால் சமைந்திருந்தவரில் முதலில் நினைவு பெற்ற அர்னவ், “விக்கி..” என்றவாறு தன் முன்னே நின்றிருந்தவனைக் கட்டி கொண்டு கதறினான்
“விக்கி எப்படிடா? எப்படி நீ திரும்ப வந்த? இது நிஜம் தான? உனக்கு எதுவும் ஆகல இல்ல?” அர்னவ் கேட்க
“ஐயோ… இப்ப எனக்கு ஒன்னும் இல்ல பாஸ், நீங்க பதறாதீங்க. யாராவது இவருக்கு நீர் கொண்டு வரீங்களா?” என்று கேட்டு அர்னவை தண்ணீர் அருந்த வைத்து அவனைச் சமாதனப் படுத்திய பின்பே, தனக்கு என்ன நடந்தது என்பதைக் கூறத் துவங்கினான் விக்ரம்
“நான் அந்தக் கருங்குளத்து ஆழத்துல போய் மகுடத்தை எடுக்கும் போதே அங்கிருந்த ஆன்மாக்கள் என் பாதி உயிரை குடுச்சுருச்சி. எப்படியோ தட்டுத் தடுமாறி வெளில வந்தா, நான் வரதச் சமுத்திரா பாத்துட்டா. உடனே அவ இந்திராயுதத்தை என் மேல வீச, என் உயிர் போய்டுச்சு” என்று விக்ரம் கூறிக்கொண்டிருக்க
இடை புகுந்த அர்னவ், “ஹே விக்கி… அப்பறம் எப்படி மறுபடியும் உயிர் பிழைச்ச?” என்று கேட்டான்
“இருங்க இருங்க சொல்றேன், என் உயிர் கடல்லயே போனதுக்கு அப்பறம், நீங்க என்ன இங்க எடுத்துட்டு வந்துருப்பீங்க போலருக்கு. ஆனா சமுத்திராவோட தலை எடுத்துட்டு விக்கினு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கத்துனீங்க பாருங்க, அப்ப தான் எங்கயோ என்ன விட்டு பறந்து போயிட்டு இருந்த என்னோட உயிர் மறுபடியும் என் உடம்புக்குள்ள வந்துடுச்சு. ஆனா அப்போ நீங்க இன்னும் பூஜ முடிக்கலனு தெரிஞ்சுது. சரி நாம இப்போ நடுவுல புகுந்து பூஜைக்கு நேரம் ஆகிடக் கூடாதுன்றதால தான் பூஜை முடியவும் வந்தேன்” என விக்ரம் கூறி முடிக்கவும்,மீண்டும் அர்னவ் கட்டுப்படுத்தவியலாத கண்ணீருடன் விக்ரமை கட்டிக் கொண்டான்
பின்பு சாமினியும் விக்ரமின் கரம் பிடித்துக் கண்ணீர் உகுத்தவாறு நன்றி கூற, மெல்ல கயாவின் அருகில் சென்றான் விக்ரம்
அவன் அருகில் சென்றதும், இடம் பொருள் என எதையும் யோசியாத கயா, ஓடி வந்து அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்
சில வாரங்களுக்குப் பின்…
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தா என்ன? ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு கண்ணே” என பாடிக் கொண்டே அர்னவின் அலுவலக அறைக்குள் நுழைந்தான் விக்ரம்.
“என்ன விக்கி ரொம்பச் சந்தோசமா இருக்கப் போல இருக்கு? என்ன விஷயம்?” என அர்னவ் கேட்க
“இருக்கே… நா சந்தோசமா இருக்கக் காரணம் இருக்கே. நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்?” என்றான் விக்ரம்
“ஹ்ம்ம்ம்… என்ன காரணமா இருக்கும்? ஹே கண்டுபுடுச்சுட்டேன், நீ காலையில எழுந்ததுல இருந்து கயாகிட்ட அடி வாங்கல சரியா?”
“மைனஸ் 100 மார்க்ஸ், நான் அடி வாங்கிட்டேன் போங்க” என விக்ரம் கூறியதும்
சிரித்த அர்னவ், “அடேய் நீயே சொல்லுடா, வேற என்ன சந்தோசமான விஷயம்?” என்று கேட்க
ஒரு கோப்பில் இருந்து காகிதத்தை எடுத்து அர்னவிடம் நீட்டியவன், “நம்ம மீனுங்க எல்லாம் மனுஷங்க தான், அதாவது காட்டு வாசிங்க தான். இனி அவங்க நம்ப நாட்டுக்குள்ளேயே இருக்கலாம்னு நம்ம கவர்மெண்ட் பர்மிசன் குடுத்துடுச்சு. அதனால இனி எந்தப் பிரச்சனையும் இல்ல” என்று குதூகலத்துடன் கூறினான் விக்ரம்
“ஹே சூப்பர் டா விக்கி… இதுக்கு இன்னும் எவ்வளவு நாள் பிடிக்குமோனு ரொம்பக் கவலைப்பட்டேன். நீ சீக்கிரமா முடிச்சுட்ட, லவ் யூ செல்லக்குட்டி” என்று அர்னவ் கூறவும்
“மீ டூ பட்டுக்குட்டி” என விக்ரம் கூற, இருவருக்குச் சிரிப்புப் பீறிட்டுக் கொண்டு வந்தது
அவர்கள் இவ்வாறு சிரித்துக் கொண்டிருக்க, அங்கு வேலவமூர்த்தி ராகேஷுடன், இன்னொருவனும் உள்ளே நுழைந்தான்
“வாங்க அங்கிள், நேத்து நான் சொன்ன வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சா? அப்பா இவ்ளோ நாள் இல்லாம இன்னைக்கு ஆபிஸ் வந்ததும் பாத்தா, வேலை எல்லாப் பிச்சு போட்ட ஜிலேபி மாதிரி இருக்கு” என்று அர்னவ் கூற
உடனே அவசரமாக, “அதான் உனக்கு உதவறதுக்காக இவனை கூட்டிட்டு வந்திருக்கோம் அர்னவ்” என அங்கிருந்த மூன்றாம் நபரைப் பார்த்துக் கூறினார் வேலவமூர்த்தி
அவனைத் திரும்பிப் பார்த்த விக்ரம், முகத்தைச் சுளித்தவாறே, “பாஸ் இவன் யாரு? ப்ரெக்னன்ட் ஆன பன்னிக்குட்டி மாதிரி இருக்கான்” என கேட்க
“ஹே விக்கி, என்னதிது? இதான் புதுசா பாக்கறவங்க’கிட்ட நடந்துக்கற முறையா? அமைதியா இரு. அண்ட்… இவரும் இன்னொரு விக்கி தான், முழுப் பெரு விக்னேஷ். நாம ஊருல இல்லாதப்ப அங்கிள் ஹெல்ப்புக்காக இவரை நம்ம கம்பெனியில நியமிச்சுருக்காரு. நேத்து நான் போன்ல பேசும் போது இவரும் பக்கத்துல தான் இருந்தாரு, நான் வீடியோ கால்ல பார்த்தேன்” என அர்னவ் கூறியதும், மேலும் முகம் கடுத்தது விக்ரமிற்கு
ஆனால் அந்த புது விக்கியோ, முகத்தில் சலனமில்லாமல் அர்னவ் முன்பு ஒரு கோப்பை வைத்தான்
உடனே விக்ரம், “பாஸ் நாம கடலுக்குப் போறதுக்கு முன்னாடியே ஒரு விஷயம் சொல்லணும்னு நினச்சேன். ஆனா அது அப்ப முடியல, இப்ப சொல்லவா?” என வினவ
“சரி சொல்லு” என்றான் அர்னவ்
“அதோ உங்க முன்னாடி இருக்கே அந்தப் பைலை பாருங்க” என்றதும், அதைப் புரட்டியவனின் கண்கள் ரத்தமெனக் சிவந்தது
மேலும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த போனில் இருந்த வாய்ஸ் ரெக்கார்டாரைக் கேட்டான். அர்னவ் ஊர் திரும்பி விட்டால், அவனை எப்படி முடித்துக் கட்டலாம் என்று வேலவமூர்த்தியும் ராகேஷும் திட்டம் தீட்டியது அதில் இருந்தது
அர்னவ் இனி ஊர் திரும்ப மாட்டான் என்ற மிதப்பில் இருந்த இருவரும், அந்த அலுவலகத்தில் பல கோடி ரூபாய் கையாடல் செய்திருந்தனர், அதுவே அந்தக் கோப்பில் இருந்தது
அர்னவ் அறிந்து கொண்டான் என்பதை அறிந்த மற்ற இருவரும், விக்ரமைக் கொலை வெறியுடன் நோக்க
விக்ரமோ அசால்ட்டாக, “இதெல்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சுதுன்னு பாக்கறீங்களா? அதான் பாஸ் சொன்னாரே? இன்னொரு விக்கினு, அவன் நிஜமாவே இன்னொரு விக்கி தான். அதாவது, என்ன மாதிரியே என் பாஸ்சுக்கு நல்லது நினைக்கறவன். அவன் தான் இந்தத் தகவல் எல்லாம் எனக்குத் தந்தது. அவன் வேற யாரும் இல்ல, என் நண்பன் தான். ஒரு வகையில சொந்தமும் கூட. கடலுக்குள்ள போறதுக்கு முன்னாடி அவனுக்கு உங்கள பத்தி எல்லாம் சொல்லி, உங்களோட திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லிட்டு தான் நான் கிளம்பினேன்” என கூறி முடித்ததும், அதிர்ந்த மற்ற இருவரும் அர்னவிடம் சமாதானமாக ஏதோ பேச முனைந்தனர்
ராகேஷை பளாரென அறைந்தான் அர்னவ்
“இவங்க இப்பவே இங்கிருந்து போகணும் விக்கி, இதுக்கு மேல இவங்க இங்க இருந்தாங்கன்னா, நா கொல செய்யக் கூடத் தயங்க மாட்டேன். நாளைக்கு அவங்க வீட்டுக்கு ஒரு டாக்குமெண்ட் வரும், அதுல அவங்களுக்கும் எனக்கும், ஏன் இந்தக் கம்பனிக்கும் கூட எந்தச் சம்மந்தமும் இல்லனு எழுதித் தரணும்” என சிங்கமாய் அர்னவ் கர்ஜிக்க, எதுவும் பேச இயலாது தலை குனிந்தவாறு தந்தையும் மகனும் வெளியேறினர்
அப்பொழுது வெளியில் இருந்து இதெல்லாம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த கயாவும் சாமினியும், மற்ற இருவருக்கும் ஆறுதலாக அருகே நின்றனர்
“என்னவாயிற்று ருத்ர தேவரே? ஏன் இவ்வளவு ஆவேசம்” என கயா கரிசனமாக வினவ
நிலைமையைச் சீராக்க எண்ணிய விக்ரம், “ஏம்மா… நீ எப்ப தான் தமிழ் ஒழுங்கா பேசுவ? இவ்வளவு நாள் எங்க கூட இருந்தும் உனக்குத் தமிழ் ஒழுங்கா வரல?” என்று சீண்டியதும், பொங்கி விட்டாள் கயா
“என்னது எம் தமிழ் ஒழுங்கில்லையா? தமிழென்ற பெயரில் முக்கால் பங்கு பிற மொழி கலந்து பேசும் நீரா எம் தமிழைக் குறை கூறுவது?” என அவனைப் பிலு பிலுவெனப் பிடித்துக் கொண்டாள்
அவளிடமிருந்து தப்பிக்க, “எம்மாடி சாமினி… நானே இப்படின்ன, அப்ப கான்வென்ட்டுல படிச்ச நம்ம பாஸோட தமிழ் எப்படிருக்கு?” என விக்ரம் கேட்க
மெல்ல அர்னவின் அருகினில் சென்றவள், அவன் சட்டை பட்டனைத் திருகியவாறே, “என்னவர் மற்ற மொழி மொழிந்தாலும், அது மதுர மொழியாகத் தான் இருக்கும்” என்றாள்
உடனே விக்ரம், “பாத்தியா இது காதல்… எந்த இடத்துலயும் சாமினி பாஸ விட்டுக் கொடுக்கறாளா?” எனவும், சாமியே வந்து விட்டது கயாவுக்கு
“முதலில் எம் அன்னைத் தமிழைப் பழித்துக் கூறினீர்கள், இப்பொழுது என் அருமைக் காதலை இழித்துக் கூறுகிறீர்களா? உங்களை… நில்லுங்கள் விக்ரமரே… நில்லுங்கள் என்று கூறுகிறேனல்லவா?” என அவள் துரத்த
“அடிப் போடி அர லூசு… அடிக்க வரனு தெரிஞ்சும் நீ நில்லுன்னு சொன்ன நிற்பனா?” என ஓடினான் விக்ரம்
“நில்லுங்கள் விக்ரமரே… அந்த அர லூசென்றால் என்னவென்றாவது கூறுங்கள்” என்று கயா கத்திக் கொண்டே துரத்த
அதைக் கண்ட சாமினியும் அர்னவும், சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலிக்கும் வரை சிரித்தனர்
இந்தச் சிரிப்பு என்றும் அவர்கள் வாழ்வில் நிறைந்து இருந்தது
(முற்றும்)
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings