in

ஆகாயத்தில் கிடைத்த அபூர்வப் பரிசு (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன்

ஆகாயத்தில் கிடைத்த அபூர்வப் பரிசு (சிறுகதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

களிடமிருந்து அந்தச் செய்தி  வந்ததில்  இருந்து  நிலை கொள்ளவில்லை சிவராமனுக்கு.  அவன் ஆழ்மனதில்  பிறப்பிலிருந்து  கொண்டிருந்த ஏக்கமல்லவா  அது?  

சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆகாயத்தில் இருந்து வரும் உறுமல் சத்தமும், வெயிலில் மின்னிச்செல்லும் அதன் மேனியும்… இரவில்  ‘பளிச், பளிச் ‘ என ஒளிரும் பச்சை  மற்றும்  சிவப்பு விளக்குகள்  அவனது  ஆசையைத் தூண்டிவிட்டுச்  சென்றதை மறக்க  முடியுமா?    

“மகளிடமிருந்து வெளிநாட்டுக்கு வர அழைப்பு  வந்தவுடன்  சுறுசுறுப்பு கூடி விட்டதே?”   தன் பங்குக்கு கேலி பேசினாள்  மனைவி  சியாமளா.     

அதுவரை சர்வதேச விமான நிலையத்தைப் பார்த்திராத சிவராமனுக்கு, மகளையும், மருமகனையும் ஸ்பெயின் நாட்டிற்கு  அனுப்புவதற்காக  சென்னை  வந்த போது தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.    

நீண்ட பாதையும்,  சர்சர்ரென்று  பறக்கும் கார்களும், இரவைப்  பகலாகக் காண்பிக்கும்  மின்விளக்குகளும், டவுன் பஸ்களைப்போல இறங்கி, ஏறிக் கொண்டிருக்கும் சர்வதேச  விமானங்களும்,  அதிலிருந்து  வந்து போகும்  பல  நாகரிக  மக்களும் அவனைக்  கிறங்கடித்தன.   

அன்று  மனதில்  ஒரு விதை விழுந்தது…  கண்  மூடுவதற்குள்  இது  போன்ற  விமானத்தில்  ஏறி  ஏதாவது வெளிநாடு செல்ல வேண்டும்  என்பது

மகளின் மூலமாக  இவ்வளவு சீக்கிரம் அந்த வாய்ப்புக்  கிடைக்கும்  என்று  சிவராமனோ,  சியாமளாவோ எதிர்பார்க்கவில்லை.                             

அடுத்து மகளிடமிருந்து  விசாவுக்கு  ஏற்பாடு  செய்யும்படி  தகவல்  வந்தது.   அலுவலகம் சென்று வரும் வழியில் தென்படும் டிராவல்ஸ் கம்பெனிகள் இப்போதுதான்  கண்ணுக்கு பளிச்சென்று  தெரிந்தன.

இங்கி  பிங்கி பாங்கி  போட்டுப் பார்த்து  கொஞ்சம்  பெரிதாகவும்,  நம்பிக்கையாகவும்  உணர்ந்த ஒரு டிராவல்ஸில்  நுழைந்தான் சிவராமன்.   இரண்டு   இளைஞர்கள் கணிணியிலும்,  தொலைபேசியிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும், அவனை உட்காரும்படி  உபசரித்தார்கள்.   

உள் அறையில் இருந்து  நீண்ட தாடியுடன்  வெளியே வந்த  ஒரு பாய், “உள்ளே வாங்க” என்று தன் அறைக்கு அழைத்துச்  சென்றார். அவர் அறை முழுவதும் இந்தியா  மற்றும்  உலக  வரைபடங்களும், அதன் மேலே ஊருக்கு  ஊர்  பறந்து  கொண்டிருக்கும் விமானங்களும் படமாக்கப்பட்டிருந்தன. அப்போதே ஆகாயத்தில்  பறப்பது போன்ற  உணர்வை  ஏற்படுத்தி  ஆர்வத்தைத்  தூண்டியது அந்த அறையின் சூழ்நிலை.  

பாய் சிவராமனிடம்  தன்னை  இப்ராஹிம் ஜெலாவுதீன்  என்று அறிமுகம் செய்து கொண்டார். பிறகு சிவராமனின் தேவைகளை அறிந்து கொண்டு,  ஒரு அச்சிடப்பட்ட  தாளை  நீட்டினார்.  அந்த தாளில் சிவராமன் விசா  பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய  ஆவணங்கள்  வரிசைப் படுத்தப் பட்டிருந்தன.  

அதில் இரண்டு ஆவணங்கள் பெறுவதற்கு மாத்திரம் கொஞ்சம்  சிரமப்படவேண்டுமோ என்ற  சந்தேகம்  தோன்றியது  சிவராமனுக்கு.  ஒன்று,  அவன்  மத்திய  அரசு அலுவலகத்தில் பணியாற்றுவதால் அவனது அலுவலகத்தில் இருந்து சிவராமன் வெளிநாடு  செல்ல தடை இல்லை என்று  உறுதியளிக்கும் கடிதம்.  

இரண்டாவது,  மகளும் மருமகனும்  வசிக்கும்  பார்ஸிலோனா  நகரத்துக்கு சென்று அவர்களுடன் பெற்றோர்களாகிய சிவராமனும், சியாமளாவும்  தங்க அந்த நாட்டு காவல் துறை அனுமதிக்கும் கடிதம்.  

இதையெல்லாம் சமர்ப்பித்தால், ஒரு பத்து நாட்களுக்குள் விசாவுக்கான நேர்காணல் அழைப்பு பெற்று விடலாம் என்றார் பாய்.  அதற்கு சேவைக் கட்டணமாக அவர் கூறிய தொகையும் நியாயமாய் இருக்கவே, மீண்டும் வருவதாகக் கூறி பாயிடம் இருந்து விடைபெற்றான்  சிவராமன். 

டித்துப் பிடித்து  அலுவலகத்தில்  அங்கும்  இங்கும் மேசைக்கு  மேசை அல்லாடி  ஒரு  வழியாக  தடையில்லா  சான்றிதழ்  பெற  ஒரு  வாரம்  பிடித்தது சிவராமனுக்கு. இதற்கிடையில் மகளும்  பார்ஸிலோனா  காவல் துறையிலிருந்து  சான்றிதழ் வாங்கி  அனுப்பிக் கொடுத்து விட்டாள்.   

பாய் கொடுத்த பட்டியலில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அவரிடம் கொடுத்து விட்டு,  பரீட்சை  முடிவை  எதிர்பார்க்கும்  பையனின்  ஆவலோடு  பாயின் முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தான்  சிவராமன்.  

ஒரு வழியாக பாயும் சரிபார்த்து இன்னும்  பத்து நாளில் பயணச்சீட்டு பெற்று விடலாம் என்றவுடன்,  ஏதோ  ஓட்டப்பந்தயத்தில் முக்கால்  பகுதியைக் கடந்து விட்டது போன்ற திருப்தி ஏற்பட்டது சிவராமனுக்கு.   

அடுத்து  வந்த  நாட்கள் இனிமையான  கற்பனைகளாலும்,  கனவுகளாலும்  நிறைந்தவையாக அமைந்தன.  அலுவலகத்தில் நண்பர்கள்  வேறு  ஸ்பெயின் சிவராமன்  என்று செல்லப் பெயரிட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர். கூகுள்  வரைபடத்தில் இந்தியாவிலிருந்து பார்ஸிலோனா  எவ்வளவு  தொலைவில் இருக்கிறது என்பதையும்,  வான் வழிப்பாதையில் கடலின்  மேல்  எவ்வளவு  நேரம்  பறக்க வேண்டி இருக்கும் என்பதையும்  மனைவிக்குக் காண்பித்து  அவள்  பீதியுறுவதை  ஒருவகை  திருப்தியோடு  பார்த்து  ரசித்தான். 

அந்த நாளும் வந்தது.   ஆர்வக்கோளாறினால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்து விட்டனர் சிவராமனும், சியாமளாவும்.  

வெளியில் அமர்ந்து, உள்ளே பகல் போல் ஒளிரும் நிலையத்தையும்,  இரவு பத்து மணிக்கும் கூட தூக்கத்தின் சாயல் இல்லாமல் விமான  சேவை  கெளண்டர்களில் வரிசையாக  நிற்கும்  பல நாட்டு பயணிகளையும்,  ட்ராலிகளின்  அணிவகுப்பையும் பார்க்கும்போது  பிரமிப்போடு கூடி பயமும் தோன்றியது.   

அழகிய  ஏர்ஹோஸ்டஸ் பெண்களின்  வணக்கத்தை அங்கீகரித்து  தங்களுக்கான  இருக்கையில் அமர்ந்து  மகளுக்கு செய்தியை அனுப்பியதும்தான்  ஒரு பெரும் நிம்மதி  ஏற்பட்டது.   

சீட் பெல்ட்டோடு போராடிக் கொண்டிருந்த சிவராமனுக்கு,  ஏர்ஹோஸ்டஸ் பெண் இனிய  முறுவலுடன் உதவி செய்தார்.   

இன்னும் பத்து  நிமிடத்தில் புறப்படும்  என்ற‌  அறிவிப்பைத் தொடர்ந்து, பயணிகள் கவனத்தில் கொள்ள  வேண்டிய  சிலவற்றை பணிப்பெண்கள்  டெமோ  செய்து  காண்பித்தனர்.  

விமானம் கிளம்பும் நேரம் நெருங்க  நெருங்க ஏனோ  இருவரையும் ஒரு பதற்றம்  தொற்றிக் கொண்டது. கிளம்புவதற்கு இரண்டு  நாட்களுக்கு  முன்பு  பொழுது  போகாமல் பார்த்த  ‘ஸ்நேக்ஸ்  ஆன் எ பிளேன்’  படத்தின் காட்சிகள்  வேறு  நினைவுக்கு வந்து பயமுறுத்தின. 

பக்கத்தில் திரும்பிப் பார்த்த போது,  ஒருவர்  கையில் கந்தர் சஷ்டி கவசம்  புத்தகத்தை  வைத்துக் கொண்டு கண்ணை மூடி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.  இவருக்கும்  இது தன்னைப் போல‌ முதல் பயணமாக இருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டான் சிவராமன்.  

அடுத்து சென்னையில்  இருந்து விமானம்  புறப்பட்டதும்,  தோஹாவில் இறங்கி  வேறொரு  விமானம்  ஏறியதும்,  பார்ஸிலோனா  விமான  நிலையத்தில்  இறங்கி  கன்வேயர் பெல்ட்டில் சுற்றி  வந்த  தங்களின்  லக்கேஜை  சரியாகக் கண்டுபிடித்து  எடுத்து,  சரியான வழியைக் கண்டுபிடித்து  வெளியேறி, காத்துக் கொண்டிருந்த மகளுடன் வீட்டை அடைந்ததும்  ஒரு  இனிய  கனாவைப் போலவே  இருந்தது.  

அடுத்து வந்த  அந்த  பதினைந்து  நாட்களும்  ஏதோ  ஒரு  புதிய  கிரஹத்தில், புதிய  மனிதர்களுடன்,  மறுபிறவி  எடுத்து  வாழ்ந்தது  போல  இனித்தது.   

இரவு பத்து மணிக்கு  மறையும் சூரியனும்,  தினமும்  சாலையை  தண்ணீரால்  கழுவி விடும் அரசு அலுவலரும்,  மெஸ்ஸியின்  சொந்த  ஊரில்  அவர்  விளையாடிய கால்பந்துப் போட்டியை  நூறு  யூரோக்கள் கொடுத்துப்  பார்த்ததும், போக்குவரத்தே இல்லாத சாலையில் சிக்னலுக்காகக் காத்திருந்து செல்லும்  கார்களும்  ஆச்சரியம் கொள்ள வைத்தன.   

அதே சமயம் திடீரென்று  நடுச்சாலையில்  நின்று  முத்தம் கொடுத்துக் கொள்ளும் இளசுகள் சிவராமனையும், சியாமளாவையும் வெட்கப்படவும்  வைத்தன.   

திரும்பும்  நாள்  நெருங்க  நெருங்க,  மனதில்  நிரம்பி  வழிந்து கொண்டிருந்த உற்சாகம் குறைந்து விசனம் பரவத்  தொடங்கியது.   சிவராமனும், சியாமளாவும்  பார்ஸிலோனவில் புறப்பட்டு  தோஹாவில் இறங்கும் வரை எல்லாம்  சுமுகமாகவே  நடந்து முடிந்தது.   

தோஹாவில் இருந்து  சென்னை செல்லும்  விமானம்  ஏறுவதற்காக  போர்டிங் பாஸ்  எடுக்கும் போதுதான், கெளண்டரில்  இருந்த அந்த சப்பை  மூக்கழகி (சைனாவா, ஜப்பானா தெரியவில்லை)  குண்டைப்  போட்டார். 

“யூ  ஆர்  புரமோட்டடு ஃப்ரம்  எக்கனாமி  கிளாஸ் டு  பிசினஸ்  கிளாஸ்”  என்றார். 

சிவராமனுக்கு பெரும்  சந்தேகம்.   எக்கனாமி  கிளாசில் டிக்கெட் போட்டுள்ள தனக்கு எதற்கு  இரண்டு மடங்கு  அதிக‌  சார்ஜ் உள்ள  பிசினஸ்  கிளாஸ் கொடுக்கிறார்கள்? ஏறி உட்கார்ந்த பிறகு பிசினஸ் கிளாசுக்கான  காசைக் கொடு என்றால்  என்ன  செய்வது?   

எவ்வளவோ மறுத்தும்  ஏன்  இந்த  சைனாக்காரி விடாமல்,  “நோ..நோ.. இட்  ஈ ஸ் அவர் காம்ப்ளிமெண்ட்” என்று   கட்டாயப்படுத்துகிறார்?  

ஒருவழியாக  அந்தப் பெண்ணின்  விளக்கத்திலிருந்து சிவராமன்  புரிந்து  கொண்டது இதுதான்.  அதாவது வரும்போதும்,  போகும்போதும்  சிவராமன்  தங்கள் கம்பெனி விமானத்தில் டிக்கெட் வாங்கியதால்  சிவராமனையும், சியாமளாவையும்  கெளரவிக்கும்  பொருட்டு  இந்தப் பரிசு.   

பார்க்கும் போதே வசீகரித்தது  பிசினஸ்  கிளாஸ்.   சிம்மாசனம்  போன்ற இருக்கை. உட்கார, சாய, படுக்க வசதி கொண்டது.   முன்னால்  பெரிய  ஸ்கிரீன் டி.வி.    காலுக்கு  முன்புள்ள  சிறு மேசையில் சுடச்சுட அன்றைய  ஆங்கிலப் பத்திரிகை.   

அமர்ந்தவுடன் விமானப் பணிப்பெண்  அருகில்  வந்து  குடிப்பதற்கு என்ன ஜூஸ் வேண்டும் என்று கேட்டதும், உலகில்  உள்ள  அத்தனை  மது வகைகள்  அடங்கிய  கேட்லாக்கைக் கொடுத்து ஆர்டர் கேட்டதும்…ஏன் பணக்காரர்கள்  மேலும்  பணக்காரர்கள்  ஆவதற்கு  அலைகிறார்கள்  என்று அப்போதுதான் புரிந்தது  சிவராமனுக்கு. 

ஊர்  வந்து சேர்ந்தவுடன்  தன்னை  விசாரிக்கும்  நண்பர்களிடம்  தனக்கு விமானத்தில் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பற்றியே  பேசி  பூரித்துக் கொண்டிருந்தான்  சிவராமன்.  

அடிக்கடி வெளிநாடு  செல்லும்  ஒரு  திருப்பூர் நண்பரிடம்  இதைச் சொல்லி  பெருமைப்பட்ட போது  இவனை  ஒரு  மாதிரி பார்த்தார்  அவர். 

“சிவராமா… எல்லா  விமானக்  கம்பெனிகளிலும்  நடப்பதுதான்  இது.  எப்போதும் எக்கானமி கிளாசுக்கு டிமாண்ட்  இருக்கும்.  பிசினஸ்  கிளாசும்,  முதல்  வகுப்பும் அதன்  கட்டணம்  காரணமாக  கொஞ்சம்  காலியாக  இருக்கும்.  விமானம்  புறப்படும்போது  உனக்குக் கூறியது போல  ஏதாவது  காரணத்தைக் கூறி  எக்கானமி  கிளாசில்  இடத்தை  உருவாக்கி  காசு  பார்த்து  விடுவார்கள்.  ஒரே  கல்லில்  இரண்டு  மாங்காய்.   இதெல்லாம்  பிசினஸ்   தந்திரம்”.    

அன்றிலிருந்து தனக்கு  ஆகாயத்தில்  கிடைத்த  பரிசைப்  பற்றி  யாருக்கும் சொல்வதில்லை  சிவராமன். 

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

அவலட்சணம் (சிறுகதை) – ✍ எ. யாஸ்மின் பேகம், சென்னை

மரணத்தின் சாவி  (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ஹெச்.என்.ஹரிஹரன், சென்னை