மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வாசலில் ஜல் ஜல் என்ற மணியோசையும், வண்டி நிற்கிற சத்தமும் கேட்டது. இந்த மத்தியான நேரத்தில் யார் வருவது என்ற கேள்வியுடன் வாசலுக்கு வந்த நாணா, வண்டியில் தன் தங்கை ரமா தனியாளாக வந்து இறங்குவதை பார்த்து திடுக்கிட்டான் .
‘இந்த முறை என்ன பிரச்சனையோ?’ என அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
அதற்குள் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடி வந்த குழந்தைகள், அத்தையை பார்த்தவுடன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அவர்களுக்கென்ன இரண்டு நாட்கள் ஜாலியாக கதை சொல்ல, விளையாட ஒரு ஆள் கிடைத்தாயிற்று.
“வாம்மா” என்று வாய் அழைத்தாலும், மனதுக்குள் ஏகப்பட்ட கேள்விகள்.
இரண்டு வருஷம் முன்னால் தான் ரமாவிற்கு திருமணம் ஆயிற்று. அப்போது அப்பா இருந்தார். ஒரே பிள்ளை, சிறிது நிலபுலமும் இருக்கிறது.
இதைத் தவிர அப்பாவும், பிள்ளையுமாக கோவில் கைங்கரியம் வேறு செய்கிறார்கள். சிறிது வசதியான இடம் தான். தன் பெண் கஷ்டபடக் கூடாது என எண்ணிய அப்பா, தன் சக்திக்கு மீறியே செலவு செய்து கல்யாணம் பண்ணி வைத்தார்.
கல்யாணம் பண்ணிய அடுத்த மாதத்தில் இருந்து ஏதாவது ஒரு காரணம் சொல்லி ரமாவை பிறந்தகத்திற்கு துரத்தி விடுவதே அவள் மாமியாரின் வழக்கமாக போய் விட்டது.
“விதைநெல் வாங்க பணமில்லை, அறுவடை வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்” என்று ஏதோ சொல்லி அப்பாவிடம் பணம் வாங்கி வர சொல்லுவார்.
அல்லது, “சரியாக சமைக்க தெரியவில்லை, கைக்காரியம் பதவிசு இல்லை” என ஏதோ ஒரு சண்டை இழுத்து அழவைத்து அனுப்பி விடுவார்கள்.
மாப்பிள்ளை ஒத்தை பிள்ளையாய் போனதால் என்னவோ, சரியான அம்மா கோண்டு. மாமனாரும் சரியான அசடு. மனைவி எதிரில் வாயை திறக்க மாட்டார்.
அப்பாவும் ஒவ்வொரு தடவையும் எப்படியாவது பணத்தை பிரட்டி, சமாதானம் செய்து ரமாவை கொண்டு விட்டு விட்டு வருவார். பெண்ணின் எதிர்காலம் பற்றிய பயமே, அவர் மனதை குடைந்து, தவறான முடிவெடுத்து விட்டோமோ, நன்றாக விசாரிக்கவில்லையோ என புலம்புவார். போன வருஷம் திடீரென்று அவர் உயிரும் பிரிந்தது.
அதற்கு வந்தவள் தான், அதற்கு பின் ரமா இங்கு வரவில்லை. இப்போது எதற்காக வந்திருக்கிறாள் என எப்படி உள்ளே நுழைந்தவுடன் கேட்பது.
எனவே, வரவழைத்து கொண்ட சிரிப்புடன், “என்னம்மா எல்லோரும் சௌக்கியமா, மாப்பிள்ளை வரவில்லையா?” என்று கேட்டான்.
அதற்கு, “எல்லோரும் சௌக்கியம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது.
அதற்குள் நாணாவின் மனைவி கோதை அடுக்களையிருந்து எட்டி பார்த்து, “வா ரமா, சௌக்கியமா? வெயிலில் வந்திருக்கிறாய், மோர் குடிக்கிறாயா?” என்று கேட்டாள்.
“இல்லை மன்னி, அப்புறம் குடிக்கிறேன்” என்று கூறியவள், அண்ணாவின் முக குறிப்பை அறிந்து, “அண்ணா பயப்படாதே” என்றாள்.
பின்னர் தொடர்ந்து, “எங்கள் அகத்தில் அனைவரும் ஒரு தூரத்து சொந்தத்தில் நடைபெறும் கல்யாணத்துக்கு போகப் போகிறார்கள். எனக்கு இரண்டுங்கெட்டான் நாளாக இருப்பதால் அங்கெல்லாம் வந்து அலைய வேண்டாம், அண்ணா அகத்தில் போய் நான்கு நாள் ஜாலியாக இருந்து விட்டு வா என்று வண்டி கட்டி இங்கு அனுப்பி வைத்து விட்டார்கள். என்னுடைய அனுசரனையான போக்கும், பாசமான பணிவிடையும், எதற்கும் அனாவசியமாக கேள்வி கேட்காத குணமும் என் மாமியாரையே மாற்றி விட்டது. கவலைப்படாதே, இனி என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது” எனக் கூறினாள்.
‘இறந்து போன அப்பாவே தெய்வமாக இருந்து காப்பாற்றி இருக்கிறார்’ என நினைத்த நாணா, ஒரு நீண்ட நிம்மதி பெருமூச்சுடன் தங்கையை பார்த்து புன்னகைத்தான்.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
என்னுடைய சிறுகதையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏