மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“பாஸ், உங்களைப் பார்க்க ப்ரொஃபஸர் சுதர்ஸன் வரார், ஏதோ ரொம்ப முக்கியமான விஷயமாம்” என்றான் வஸந்த்.
தலைக்கு அபரிமிதமாகக் கறுப்புச் சாயம் பூசிக்கொண்டு, அதற்கு நேர்மாறாக மிக வெண்மையான சட்டை அணிந்து கணேஷின் அலுவகத்தினுள் பேராசிரியர் சுதர்ஸன் நுழைந்தபோது காலை மணி சரியாக ஒன்பதரை.
பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின்னர் கணேஷ் கேட்டான், “சொல்லுங்க சார், நாங்க எந்த விதத்தில் உங்களுக்கு உதவி செய்ய முடியும்?”
“நீங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குப் போயிருக்கிங்களா?” என்று கேட்டார் சுதர்ஸன்.
“போயிருக்கோம் ஸார், ரொம்ப நல்ல அழகான கோயில். நிறைய நேரம் அங்க இருந்திருக்கோம். அங்க போனாலே, அந்த ஸ்வாமியை விட நம்ம சுஜாதா ஸாரைப் பத்தித்தான் அதிகம் பேசுவோம்” என்றான் அருகில் நின்றிருந்த வஸந்த்.
“அது யாரு, சுஜாதா? உங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?” என்ற சுதர்ஸனை விநோதமாகப் பார்த்துவிட்டு,
“பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா ஸார். அவர் சொந்தப் பேர் ரங்கராஜன். யு மீன், அவரைத் தெரியாதுன்னு சொல்றீங்களா?” என்றான் வஸந்த் சற்று ஆச்சரியம் கலந்த குரலில்.
“ஓ, ஸாரி, நான் தமிழ் புத்தகங்கள் எப்போதுமே படிக்கறதில்லை. எனக்குத் தெரியாது” என்றார் சுதர்ஸன்.
வஸந்துக்குக் கண்ணைக் காட்டிய கணேஷ், “மேல சொல்லுங்க சார்” என்றான்.
“ஸ்ரீரங்கம் மூலவர் ஸ்ரீ ரங்கநாதரோட கண்கள் ரெண்டுலையும் ரொம்ப விலையுயர்ந்த வைரங்கள் இருந்தன. பின்னாளில் அவை திருடபட்டுவிட்டன…” என்ற பேராசிரியர் சுதர்ஸன் தொடரும் முன்
“தெரியும் ஸார், ஆர்லோவ் (Orlov) வைரங்கள்னு சொல்லுவாங்க” என்றான் கணேஷ்.
“அவற்றை பெருமாளுக்குக் காணிக்கையாக வழங்கியது என் மூதாதையர். அதற்கான மிகப் பழைய டாக்குமெண்ட் என்கிட்டே இருக்கு. கொடுத்தவர் பேர் பாஷ்யம் ஐயங்கார். ரொம்ப க்ளியரா டாகுமெண்ட்ஸ் இருக்கு. எனக்கு அவை திரும்ப வேணும். மறுபடியும் ரங்கநாதருக்கு காணிக்கையா குடுக்கப் போறேன்” என்றார் பேராசிரியர் சுதர்ஸன்.
“தாராளமா. அது ஹேர்லூம்னு சொல்லுவாங்களே அது மாதிரி பரம்பரையா உங்க குடும்பச் சொத்து. ஆனா, ஒரு விஷயம் நீங்க புரிஞ்சிக்கணும். பல தலைமுறைகள் முன்னால யாரோ உங்களோட தாத்தா ஒருத்தர், கோயிலுக்குக் காணிக்கையா குடுத்திருக்காரு. எனவே, என்ன கேஸ் போட்டாலும் செல்லாது. ப்ரைமாஃபேஸி இது கேஸே இல்லைன்னு ரிஜெக்ட் ஆயிடும்…..”
“இந்த வைரத்திற்கு இந்திய அரசு உரிமை கோரி திரும்ப பெற முடியும். சமீபத்துல இங்கிலாந்து ராணி கிட்ட கோஹினூர் வைரத்தைத் திரும்ப நமக்குக் கொடுக்கணும்னு ஒரு வேண்டுகோள் வெச்சாங்க. அது மாதிரி என்றாலும், பல காரணங்களுக்காக இந்திய அரசு தயங்குகிறது”.
கணேஷ் தொடரும்முன் பேராசிரியர் சுதர்ஸன் குறிக்கிட்டார், “தெரியும், இரண்டாவது, அது இந்தியாலயிருந்து எப்பவோ காணாம போயிடுச்சு. எனவே நாம, எதுவுமே செய்ய முடியாது. அது சரி அந்த ஆர்லோவ் வைரங்கள் இப்போ இருக்கிற இடம் பத்தி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.
“ஆர்லோவ் வைரங்கள் மட்டுமில்லாம ஏராளமான விலைமதிக்க முடியாத வைரங்கள் ரஷ்யா வசம் இருக்கின்றன. அவை எல்லாமே க்ரெம்லின் ஆர்மரி (Kremlin Armoury) எனப்படும் ரஷ்யாவின் புகழ்பெற்ற ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியான மாஸ்கோ டைமண்ட் ஃபண்ட் (Moscow Diamond Fund) என்கிற வைர நிதியத்தில் பலத்த பாதுகாப்போடு இருக்கின்றன” என்ற கணேஷை ஆச்சரியமாகப் பார்த்த பேராசிரியர், புன்னகைத்துவிட்டு,
“ஓ , நைஸ், உங்களுக்குத் தெரியறதே, அப்போ என் வேலை ஈஸி. என்ன செலவானாலும் பரவாயில்லை. அந்தத் திருட்டுப்போன டயமண்ட்ஸ் எனக்கு வேணும்” என்றார் தீர்மானமான குரலில்.
அந்த அறையில் ஒரு 30 செகண்டுகள் முழு அமைதி நிலவியது.
“புரியலை ஸார், என்ன சொன்னீங்க, திரும்பச் சொல்லுங்க” என்றான் வஸந்த்.
பேராசிரியர் சுதர்ஸன் சற்றுத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்,
“இந்தியால இருந்து பிரிட்டிஷ் அரசாளர்களும், முகலாய அரசாளர்களும் கொள்ளையடிச்ச பொருட்கள் கொஞ்சநஞ்சமல்ல. கோடி, கோடிகளாக இருக்கும். நான் அரசியல்வாதி அல்ல. எந்தக் கட்சியையும் சார்ந்தவனும் அல்ல. ஆனால், நம் மக்களிடம் சேராமல் திட்டமிட்டு மறைத்த பல உண்மைகளில் நம்முடைய விலைமதிப்பில்லாத வைரங்களும் அடங்கும். கோஹினூர் வைரத்தில் ஆரம்பித்து இதோ இந்த ஆர்லோவ் வரை ஏகப்பட்ட வைரங்கள் திருடப்பட்டு நாடு கடத்தப்பட்டன. ஆனால், இவை பெரும்பாலும் சபிக்கப்பட்ட வைரங்கள் (cursed diamonds) எனப்படுகின்றன…..”
“இதைத் திருடியவர்கள், திருடிய வைரங்களை விலை கொடுத்து வாங்கியவர்கள், பிறகு அந்த வைரங்களை ஏதாவது ஒருவகையில், க்ரௌன் (கிரீடம்), ஸெப்டர் (செங்கோல்), சிம்மாசனத்தில், அட்டிகையில் (கழுத்தில் அணியும் ஆபரணம்) போன்றவற்றில் வைத்து அழகு பார்த்த பல ராணி / ராஜா, பெரிய மனிதர்கள், மோசமான முறையில் இறந்தார்கள். இதுபோன்ற வைரங்களில், குறிப்பாக இந்தியாவில், தோஷம் இருக்கிறதா என்று சரிபார்க்க வல்லுநர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை ப்ளெமிஷ் (blemish) என்பார்கள். இது இருந்தால் அந்த வைரத்தை உபயோகிக்கக் கூடாது என்பார்கள். சாதாரண ஆபரண வைரங்களிலேயே இவ்வளவு கெடுபிடி என்றால், திருடப்பட்ட வைரங்கள்?”
“ஸாரி, உங்களுக்கு ஆர்லோவ் வைரத்தின் பின்புலத்தைப் பற்றி சற்று விளக்க முயற்சிக்கிறேன். உங்களுக்கு நேரம் இருக்கிறதல்லவா?” என்றார் பேராசிரியர் சுதர்ஸன்.
கணேஷ் தலையாட்டி, சுதர்ஸனைப் பார்த்து, “டைம் நிறைய இருக்கு ஸார், ப்ளீஸ் கன்டினியூ” என்றான்.
“இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட வைரங்கள் இங்கிலாந்திடம் மட்டுமல்ல ரஷ்யா, ஈரான், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளிடமும் உண்டு. விஜயநகர பேரரசு காலத்தில் (இன்றைய ஆந்திராவில்) கண்டெடுக்கப்பட்ட Daria-i-Noor (வெளிச்சக் கடல் / கடலளவு வெளிச்சம்) வைரம், இந்தியாவை ஆண்ட முகலாய அரசர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, (அப்போதைய பெர்ஷியா) தற்போது ஈரான் நாட்டிடம் உள்ளது.
இந்த வைரத்தின் இன்றைய மதிப்பு பல கோடியாகும். மிகப் புராதன வைரம் என்பதால் இந்த விலை. அந்த வைர கல்லின் மதிப்பு இதைவிட குறைவாகவே இருக்கும்.
இது போன்று ஒன்றிரண்டல்ல, ஏராளமான விலைமதிக்க முடியாத வைரங்கள் ரஷ்யா வசம் இருக்கின்றன. அவை எல்லாமே மிகப் பாதுகாப்பாக க்ரெம்லின் ஆர்மரி (Kremlin Armoury ) எனப்படும் ரஷ்யாவின் புகழ்பெற்ற ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியான மாஸ்கோ டைமண்ட் ஃபண்ட் எனப்படும் வைர நிதியத்தில் இருக்கின்றன.
இங்கு 5-ம் நூற்றாண்டிலிருந்து ரஷ்யா வசம் இருந்த, அவர்கள் படைகள் கொள்ளையடித்த, மற்ற கொள்ளயர்களிடமிருந்து விலைக்கு வாங்கிய பல்வேறு வகை வைரங்கள் அங்கு இருக்கின்றன. பழைய ஒன்றிணைந்த (USSR ) சோவியத் நாடுகள் வசம் இருந்த வைரங்கள் மட்டுமல்லாது, கிழக்கு / மேற்கு ஐரோப்பா, ஆசியாவின் பல்வேறு பகுதியிலிருந்து விலைக்கு வாங்கிய, திருடப்பட்ட அரிய வகை வைரங்கள் அங்குள்ளன. அங்குதான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கண்களிலிருந்து திருடப்பட்ட ஆர்லோவ் வைரங்களும் உள்ளன”
இந்த இடத்தில் பேராசிரியரின் பேச்சில் வஸந்த் குறிக்கிட்டான்.
“மன்னிக்க வேண்டும், ப்ரொஃபஸர். அங்குதான் அந்த ஆர்லோவ் வைரம் இன்னும் இருக்கிறது என்று எப்படி நிச்சயமாகத் தெரியும்?” என்று கேட்டான்.
“நிச்சயம் தெரியும். என்னுடைய ரிஸர்ச் அசிஸ்டன்ட் மாதவியை மூன்று மாதங்கள் முன் இதற்காகவே ரஷ்யா அனுப்பினேன். அவள் அங்கு சென்று, குறிப்பிட்ட அந்த ஆர்லோவ் வைரம் அங்குதான் இருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தினாள்” என்றார் சுதர்ஸன்.
இப்போது கணேஷ் குறுக்கிட்டான். “எனக்கும் ஒரு சந்தேகம், ஸார். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் ஒரு கண்ணிலிருந்த வைரத்தை மட்டும்தான் ஃப்ரெஞ்சு ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரன் திருடியதாகக் கேள்விப்பட்டேன். அப்போது இன்னொரு கண்ணிலிருந்த வைரம்?” என்றான்.
“ஆம், அதைப் பற்றிய சரியான விவரம் இல்லை. தகவல் சற்று ஸ்கெட்சியாகவே உள்ளது. ஆனால், ரஷ்ய நிதியகத்தில் இரண்டு வைரங்களும் அருகருகே இருந்ததைப் பார்த்ததாக மாதவி சொன்னாள்” என்றார் சுதர்ஸன்.
சுதர்ஸன் தொடருந்தார், “வஸந்த், பதினேழாம் நூற்றாண்டில் கோல்கொண்டாவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய விலை மதிப்பபற்ற வைரத்தைச் செதுக்கி ரங்கநாதரின் இரு கண்களில் பதிக்கப்பட்டு இருந்தது.
ஶ்ரீரங்கம் ரங்கநாதரின் கண்களில் பதிக்கப்பட்ருந்த இந்த ஆர்லோவ் வைரங்கள் சுமார் 190 காரட் – அதாவது 38 கிராம் எடை உடையன. இதோடு ஒப்பிட்டால் கோஹினூர் வைரம் 105 காரட் தான். பெயர் தெரியாத பிரெஞ்சு வீரன் ஒருவன்தான், வைரத்தைக் குறி வைத்திருந்தான் அதற்காகவே அவன் கி.பி. 1747-ல் ஸ்ரீரங்கத்துக்கு வந்தான்.
ஹிந்து மதத்துக்கு மாறிவிட்டதாக அனைவரையும் நம்ப வைத்தான். அங்கிருந்த அர்ச்சகர்களிடம் நட்பை வளர்த்துக் கொண்டான். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தான். ஒருநாள் இரவு கடும் மழையும் புயலும் அடித்துக் கொண்டிருந்தது.
கோயிலுக்குள் புகுந்தவன், வைரம் பதிக்கப்பட்டிருந்த மூலவர் ரங்கநாதரின் விக்ரஹத்தின் கண்களிலிருந்து வைரங்களை எடுத்துவிட்டு, போலி கற்களை ஸ்வாமியின் கண்களில் பதித்துவிட்டான் என்று சொல்கிறார்கள்.
இதன் இன்னொரு வெர்ஷன், அவன் ஒரு கண்ணில் உள்ள வைரத்தை மட்டுமே திருடினான். பிறகு, அவனுக்குப் பயம் வந்துவிட்டதால், இன்னொரு கண்ணிலிருந்து வைரத்தை எடுக்கவில்லை. ஆனால், பின்னாளில் அந்த இன்னொரு வைரமும் எப்படியோ ரஷ்யாவிலிருந்த கௌன்ட் (Count). ஆர்லோவ் வசம் போய்விட்டது என்கிறார்கள்.
கருவறைக்குள் ஒரு ஹிந்து பக்தன் போல வேடமிட்டு) நுழைந்து அவ்வைரங்களைத் திருடிப் பின்னர் அன்றைய மதராஸில் ஒரு பிரிட்டிஷ் மாலுமிக்கு விற்றான்
கி.பி 1750 லிருந்து பல அயல் நாட்டு வணிகர்களின் கைமாறி, ஆம்ஸ்டர்டாமில் ஒரு ரஷியரால் 400,000 கில்டருக்கு (இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி) கொடுத்து வாங்கப்பட்டு, ரஷ்ய அரசி இரண்டாம் கேத்ரினுக்கு பரிசளிக்கப்பட்டது.
அப்படிப் பரிசளித்த கௌன்ட் பெயர் க்ரிகோரி ஆர்லோவ். அவர் பெயரால்தான் இப்போதும் அந்த வைரம் அறியப்படுகிறது. ஆனால், வைரங்களின் blemish (தோஷம்) காரணமாகவோ என்னவோ, அந்த விலைமதிப்பற்ற ஆர்லோவ் வைரங்களைக் கொடுத்த பின்னரும், கேத்ரினுக்கு க்ரிகோரி ஆர்லோவ் மீது காதல் வராததால், அந்த அரண்மனையையே சுற்றித்திரிந்து, பைத்தியம் பிடித்து இறந்தார் அந்த ஆர்லோவ் என்கிறது சரிததிரம்.
அரை முட்டை வடிவிலான இந்த இரு வைரங்களும் இதன் பின்னர் ரஷ்யாவின் Czar (ஸார்) எனப்படும் அரசர்களின் கருவூலத்தில் காக்கப்பட்டு ரஷ்யப் பேரரசின் செங்கோலில் பதிக்கப்பட்டன. 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, அவை அரசாங்கத்தின் சொத்தாக மாறிவிட்டன.
இன்றளவும் ரஷ்யாவின் மாஸ்கோ நகரின் க்ரெம்லினிலுள்ள வைர நிதியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது! இந்த வைரங்களை எப்படியாவது அங்கேயிருந்தும் இந்தியா கொண்டு வரணும், கணேஷ், அது லீகலா, நேர் வழில முடியாதுன்னு தெரியும், இல்லீகலா ஏதாவது செய்யணும். எவ்ளோ செலவானாலும் சரி” பேராசிரியர் சுதர்ஸன் குரலில் ஏராளமான அழுத்தம் இருந்தது.
“சொல்லிடீங்கள்ல, இதோ வஸந்த்…..எவ்வளவு தீரச்செயல் வேணும்னாலும் செஞ்சு அந்த வைரங்களைக் கொண்டு வந்துடுவான்” என்றான் கணேஷ், சிரிப்பை அடக்கிக்கொண்டு
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த வஸந்த், “பா………..ஸ்……..” என்றுஅலறினான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுதர்ஸன் புன்னகையுடன், “என்ன கணேஷ், ஏதாவது ப்ராபளமா ?” என்றார்.
“ஸார், ஒரு விஷயம் நீங்க புரிஞ்சிக்கணும். நாங்க இரண்டு பேரும் லாயர்ஸ். இன்டியானா ஜோன்ஸ் இல்ல. அந்த வைரங்கள் ரஷ்யால இருக்கும்போது, நீங்க எவ்ளோ செலவழிக்கச் சித்தமா இருந்தாலும் நாங்க நிச்சயம் அதை அங்கேயிருந்து நகர்த்த முடியாது. ரெண்டாவது, ரஷ்யா ரொம்பக் குளிரும். எனவே அங்க சாகறதுல எனக்கு இஷ்டம் இல்ல” என்றான் அதே அழுத்தமான குரலில்.
=================================
“பாஸ், நான் ஒரு நடை போயி, நம்ம ப்ரொஃபஸர் சுதர்ஸன் என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு வரேன்” என்ற வஸந்தைப் பார்த்துப் புன்னகைத்த கணேஷ்,
“மாதவியைப் பார்க்கப் போறேன்னு சொல்லு. அதுதான் தெளிவா அந்தாளு கிட்ட இந்த சாகச வேலையெல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டேனே, அப்புறம் ஏன் கிடந்து அலையறே?” என்றான்.
“இருந்தாலும் பாஸ், ஒரு எட்டுப்போயி பார்த்துட்டு வர்றேன். நேத்து நீங்க பொசுக்குன்னு முடியாதுன்னு சொல்லிட்டிங்க. சுதர்ஸன் முகத்தைப் பார்க்கணுமே? பாவம்…..” அவன் தொடரும் முன் அவன் மொபைல் அழைக்கவே, “எஸ்” என்றான்.
சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுவிட்டு, கணேஷிடம் மொபைலை நீட்டினான். “பாஸ், உங்களுக்கு, டாக்டர் ஆதிசேஷன்” என்றான்.
“சொல்லுங்க டாக்டர், என்ன விஷயம்?” என்று கேட்டான் கணேஷ்.
“கணேஷ், நேத்து உங்களைப் பார்க்க வந்த டாக்டர் சுதர்ஸன் என்னோட பிரதர்-இன்-லா. என்னோட வைஃப், அவர் சிஸ்டர்தான். உங்களைப் பார்க்கணுமே? எப்போ வரலாம்?” என்றார் குரலில் புன்னகையுடன்.
“ஓ, டாக்டர் அப்படியா? அவர் கேக்கறது ஈஸியா செய்யக்கூடிய விஷயம் இல்லை சார். எனிவே, நீங்க எப்போ வேணும்னாலும் என்னைப் பார்க்க வரலாம்” என்றான் கணேஷ்.
அழைப்பு மணியின் ஓசை கேட்டு வாசல் கதவைத் திறந்த வஸந்தின் குரலில் ஆச்சரியம், “டாக்டர் வாங்க, ஸார் வெல்கம்” என்றான்.
உள்ளே நுழைந்த டாக்டர் ஆதிசேஷனையும் அவர் பின்னால் வந்த சுதர்ஸனையும் பார்த்த கணேஷ், “டாக்டர், ஸர்ப்ரைஸ் ! என்ன எங்க ஆபிஸ் வாசல்ல இருந்தே பேசினீங்களா?” என்றான்.
“ஆமாம், கணேஷ். வந்துட்டோம். இருந்தாலும், உங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னுதான் வாசல்ல காரை நிறுத்திட்டுக் கூப்பிட்டேன். நீங்க நெகட்டிவா ஏதாவது சொல்லியிருந்தாலும் உள்ளே வந்திருப்போம்” என்று சொல்லி சிரித்தார் ஆதிசேஷன்.
“கணேஷ், உங்க ரெண்டு பேருக்கும் பயண ஏற்பாடு எல்லாத்துக்கும் நான் பொறுப்பு. அங்கே, மாஸ்கோல என்னோட கலீக் விக்டர் இருக்காரு. உங்களுக்குத் தேவையான ஹெல்ப் செய்வாரு. அந்த ஆர்லோவ் டயமண்ட் சம்பந்தமா ஒரு பெரிய பிளான் எங்க கிட்ட இருக்கு. நீங்க கோஆபரேட் பண்ணனும். அதுதான் முக்கியம்.
திரும்ப வரும்போது, டிப்ளமேட்டிக் பௌச்ல வைரங்களைக் கொண்டு வர்றதுக்கு, அங்க இருக்கிற கான்ஸலேட் ஆளுங்க ரெண்டு பேர் உதவி செய்வாங்க. இது ரொம்ப டிஸ்க்ரீட். எங்கேயேயும் அஃபீஷியலா யாருக்கும் இது தெரியாது.உங்க ரெண்டு பேர் உயிருக்கும் எந்த வித வில்லங்கமும் வராம இருக்க நான் அரேஞ்ச் பண்றேன்…”
ஒரு சிறிய இடைவெளி விட்டு மூச்சு வாங்கினார் பேராசிரியர் சுதர்ஸன். கணேஷ் இடம் வலமாகத் தலையாட்டினான்.
“ப்ரொஃபஸர், நடக்காத விஷயம் இது. நீங்க பின்னணில எவ்ளோ அரேஞ்ச் பண்ணினாலும், அந்த வைரங்களை அங்கேயிருந்து எப்படி எடுக்கறது? லாயரான நானே திருடலாமா? பெரிய இஷ்யூவாயிடும் ஸார், அதுவும் ஓவர்சீஸ் வேற” அவன் குரலில் ஒரு சலிப்புத் தெரிந்ததை வஸந்த் கவனித்தான்.
===============================
“எல்லாம் ரெடி, பாஸ். அங்க போயி இறங்கிட்டு, ஏதாவது தேவையிருந்தா உங்களைக் கூப்பிடறேன்” என்றான் வஸந்த்.
“ஓகே வஸந்த். ஸாரி. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வற்புறுத்தி ஒத்துக்க வச்சிட்டாங்க. உன்னைத் தனியா அனுப்ப எனக்கும் சங்கடமா இருக்கு” என்ற கணேஷைத் பார்த்து புன்னகைத்த வஸந்த்,
“பெரியவங்க நீங்க டிஸைட் செஞ்சதுக்கு அப்புறம் நான் சின்னப் பையன் என்ன சொல்றது” என்று சொன்னபோது வாசல் மணி அழைத்தது.
கதவைத் திறந்தக ணேஷினால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
“ஓ, மாதவி வாங்க. நீங்களும் கூட வர்றதுனாலதான் வஸந்த்துக்கு இவ்ளோ ஈடுபாடுன்னு இப்போ புரியுது” என்றான்.
க்ரீம் நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் கருநிற ஜீன்ஸுடன், மெல்லிய புன்னகையம் அணிந்திருந்த அந்த மாதவி நளினமாக இருந்தாள். வயது முப்பத்திற்குள் தான் இருக்கும் என்று கணேஷ் நினைத்தான்.
வஸந்தைக் கேட்டால் அவள் வயது, எடை, அங்கலட்சணங்கள் எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைத்து விடுவான்.
“ஏன் வஸந்த், நானும் உங்க கூட வர்றேன்னு கணேஷ் கிட்ட சொல்லலையா?” என்றபோது குரல் கூட செக்ஸியாக இருப்பதாகவே பட்டது.
“சொல்ல வந்தேன் மாதவி, அதுக்குள்ளே நீங்க வந்துட்டீங்க” என்றான் வஸந்த்.
=============================
மாஸ்கோ புஷ்கின் ஏர்போர்ட்டில் இறங்கி, ஹோட்டல் ரூமை அடைவதற்குள் வஸந்தும், மாதவியும் அல்லல்பட்டு விட்டார்கள். கனமான உடைகளையும் மீறி, எலும்புக்குள் துளைத்தது குளிர்.ரூமை அடைந்து, சற்று தெம்பு வந்தவுடன் கணேஷுக்கு போன் செய்தான்.
தான் பிளேனில் வரும்போது யோசித்த விஷயத்தை, இம்மி பிசகாமல் கணேஷிடம், கூடுமானவரை ஆங்கில வார்த்தைகள் எதுவும் கலக்காமல் (ரஷ்யாவில் அனைத்து கால்களும் மானிட்டர் செய்ப்படுவதால் ஒரு எச்சரிக்கை நடவடிக்கை), அதுவும் சாதாரண மொபைல் கால் இல்லாமல் பேராசிரியர் சுதர்ஸன் எச்சரித்தபடி, வாட்ஸாப் கால் பேசிவிட்டு, மணி பார்த்தான்.
இந்தியாவை விட அங்கு, மாஸ்கோவில் நேரம் இரண்டரை மணி நேரம் பின்னால் இருப்பதை மனதில் கொண்டு, மாதவி இருந்த அறைக்குச் சென்றான்.
“கம் வஸந்த், உங்ககிட்ட கொஞ்சம் நம்ம பிளான் பத்திப் பேசணும்<” என்ற மாதவியும் குளித்துவிட்டுப் புதிதாக இருந்தாள்.
“நம்ம ப்ரொஃபஸர்.சொன்னதை உங்ககிட்ட பிரீஃப் பண்ணைச் சொன்னார் இங்க இருக்கிற டாக்டர் விக்டர். இப்போ நாம என்ன பண்றோம்னா….” என்று ஆரம்பித்தவளை தடுத்து நிறுத்தினான் வஸந்த்.
“மாதவி, எனக்கு அவர் சொன்னது தெரியும். ஆனா, நாம அது போல செய்யப்போறதில்ல. நான் ரொம்ப சிம்பிளா ஒரு ஐடியா வெச்சிருக்கேன். நம்ம கூட வந்து ஹெல்ப் பண்ணப்போற உங்கள் ஆளுங்க எங்க? முக்கியமா, டாக்டர் விக்டர் எங்க?”சிறிது நேரத்தில் தன் முன் கூடியிருந்த அந்த நான்கு பேரையும், மாதவியையும் பார்த்துவிட்டு, தன் தொண்டையைச் செருமிக்கொண்டான் வஸந்த்.
“ரொம்ப க்ராண்டா ஒரு பிளான் போட்டுக் குடுத்தாரு நம்ம ப்ரொஃபஸர்.சுதர்ஸன். இங்க க்ரெம்லின் ஆர்மரிக்குள்ள ஏகத்துக்கு செக்யூரிட்டி இருக்கு. எல்லாமே ஆட்டோமேட்டட். இது தவிர காலாஷ்னிகோவ் கன் கையில வச்சுக்கிட்டு கார்ட்ஸ். தே ஆர் ரெடி டு கில்.
அவங்களுக்கு ஆர்டர் என்னன்னா ஷூட் டு கில் என்பதுதான். அதனால, ரொம்ப கேஷுவலா இருக்கிறது முக்கியம். நாம போகப்போகிற, மாஸ்கோ டைமண்ட் ஃபண்ட் எனப்படும் வைர நிதியம் அந்த பில்டிங்கோட தரைமட்டத்துல (ground floor) இருக்கு. இதுல சிக்கல் என்னன்னா ஆட்டோமேட்டட் செக்யூரிட்டி அதிகமா இருக்கிறது.
ஆனா, அதுவே நமக்குப் பெரிய அட்வான்டேஜும் கூட. எல்லாமே ஆட்டோமேட்டட் அப்படிங்கிறதால செக்யூரிட்டி ஆளுங்க ரிலாக்ஸ்டாவே இருக்காங்க. இவ்ளோ செக்யூரிட்டியை மீறி யார் என்ன பண்ண முடியும் அப்படிங்கிற நம்பிக்கை. அதுதான் நமக்குத் தேவையும் கூட.
முதல்ல நரேன், விவேக் போயி தேவையான அரேஞ்ச்மெண்ட் எல்லாம் பண்ணிடுவாங்க, பின்னால நான், விக்டர், தாமு மூணுபேரும் போறோம். மாதவி மட்டும் ஜஸ்ட் டிபிக்கல் டூரிஸ்ட் மாதிரி தனியா வருவாங்க. நம்ம பிளான் இதுதான். யாரும் துளிக்கூட மாத்தவோ, மீறவோ கூடாது.
ஞாபகம் வச்சுக்கங்க, நாம எதையும் இங்க திருட வரல. ப்ரொஃபஸர் சுதர்ஸன் சொன்ன மாதிரி இந்தியாவுக்குச் சொந்தமான பொருளை மீட்டு எடுத்துகிட்டுப் போகப்போறோம். அதுனால, மனசுல யாருக்கு கில்டி ஃபீலிங் வேண்டாம். அது டேஞ்சர். அப்புறம், மாதவி, விக்டர் தவிர மீதி மூணு பேரும் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க” என்றான் வஸந்த்.
அருகிலிருந்த மாதவியின் அசிஸ்டண்ட் தாமு சிரித்துவிட்டு, “சூப்பர் வஸந்த், ஓஷன்ஸ் ட்வெல்வ் படம் மாதிரி இருக்கு” என்றான்.
=================================
மறுநாள் காலை சற்று சீக்கிரமாகவே தயார் ஆகி, டாக்டர் விக்டர் சொன்னபடி, “ஆர்மரி ஷிஃப்ட்ல, மார்னிங் 10 மணி ஸ்லாட்டில் போயிடலாம். அதுதான் முதல் ஸ்லாட். கூட்டம் கொஞ்சம் கம்மியா இருக்கும்.”
மாதவி சிம்பிளான வெள்ளை ஓவர்கோட் அணிந்து ஜீன்ஸுடன் வந்த போது விஸிலடித்த வஸந்த், “உங்களுக்குக் குளிர் தெரியல?” என்றதற்குச் சிரித்த அவள், “எனக்குக் குளிர் விட்டுப்போய் ரொம்ப நாளாச்சு” என்றதை ரசித்தான், அருகில் கணேஷ் இல்லாததை உணர்ந்தான்.
க்ரெம்லின் ஆர்மரி ரஷ்யாவின் மிகப்பெரிய ம்யூஸியம் என்பதாலும், அதிலிருக்கும் ஓவியங்கள், நகைகள், வைரங்கள், கிரீடங்கள், மற்ற அணிகலன்கள் போன்றவை உட்பட மிக விலையுயர்ந்த பொருட்கள் ஏராளம் என்பதால், சாதாரண நாட்களிலும் நிறையவே கெடுபிடி இருப்பதைப் பார்க்க முடிந்தது.
வஸந்த் பின்னால் திரும்பிப் பார்த்த போது, செக்யூரிட்டி அதிகாரிகள் கூட்டமாக இரண்டாவது மாடிக்கு அவசர அவசரமாகச் செல்வதைப் பார்க்க முடிந்தது.
முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு அமெரிக்கன் டூரிஸ்ட்டிடம், “எதற்காக இவ்வளவு செக்யூரிட்டி?’ என்று வஸந்த் கேட்க, அந்த வயதான அமெரிக்கர்,
“உங்களுக்குத் தெரியாதா? அங்குதானே விலைமதிப்பற்ற, உலகப்புகழ் ஃபேபர்ஜே (Faberge’) முட்டைகள் இருக்கின்றன. இன்று அவற்றைத் திருட முயற்சி செய்யப்போவதாக யாரோ ஒரு க்ராக்பாட் போனில் சொல்லியிருக்கிறான். இவ்வளவு செக்யூரிட்டியை மீறி அதை யாராவது செய்ய முடியுமா? இருந்தும் ஒரு ஜாக்கிரதைக்காக கூடுதல் செக்யூரிட்டி அங்கு செல்கிறது” என்று சொல்லிவிட்டு, எதற்காகவோ தன் தோள்களை ஒருமுறை குலுக்கிக்கொண்டார்.
அந்தப் பெரியவரிடம் தான்தான் அந்தக் க்ராக்பாட் என்று சொல்லிப் பீற்றிக் கொள்ள விருப்பமில்லாமல், வஸந்த் கையிலிருந்த மேப்பைப் பார்க்க ஆரம்பித்தான்.
திடீரென சலசலப்பு… மேப்பிலிருந்து நிமிர்ந்தவன், வெகு கனமாக, வேகமாக மழை பெய்ய ஆர்மபித்ததை உணரும் போது, முன்னாலும், பின்னாலும் இருந்த கூட்டம், அங்குமிங்கும் தறிகெட்டு ஓடுவதை உணர்ந்தான். மணி பார்த்துக் கொண்டான்.
காலையில் டிவியில் வெதர் பீரோ ஆசாமி சொன்னது போலவே மழை பெய்ய ஆரம்பித்து விட்டதற்கு மனதில் நன்றி சொல்லிக்கொண்டான். மழை சத்தத்தையும் மீறி முக்கிய நுழைவு அருகே பெருங்கூச்சல் கேட்டது.
ஒரு மிகக் கனமான லாரி, நிலைதடுமாறி, அலைந்து, நேராக செக்யூரிட்டி பூத் மீது மோதி, கூச்சலும், குழப்பமும் அதிகரித்ததை உணர்ந்து, மெதுவாக ஆர்மரிக்குள் நுழைந்தான். தூரத்தில் மாதவி ஒரு கண்ணாடிக் கூண்டை வேடிக்கைப் பார்ப்பதைக் கவனித்தான்.
திடீரென்ற மழையாலும், வாசலில் உள்ள கூச்சல், குழப்பதாலும் கூட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதை பார்க்க முடிந்தது. வைரங்கள், மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் செல்லும்போது, பெரும் வெடிச்சத்தம் கேட்டது. ம்யூஸியம் அலாரம் அலற ஆரம்பித்தது.
“இந்தப் புகழ்பெற்ற ம்யூஸியத்திற்கு வந்துள்ள பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். எதிர்பாராத இரண்டு, மூன்று சம்பவங்களால் ம்யூஸியத்தின் வெளிக்கதவு அடைக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் இப்போது வெளியேற முயற்சிக்க வேண்டாம்……”பல்வேறு மொழிகளில் வந்த அந்த அறிவிப்பை மீறி ம்யூஸியத்தின் பல பகுதிகளிலிருந்து வெவ்வேறு அலாரங்கள் ஊளையிட்டு அலறின.
பொதுவாக அந்த இடத்தின் அமைதி குலைந்தது.
=======================================
“இதுதான் அந்த வைரங்கள் வஸந்த். இவற்றை எடுத்துக்கொண்டு அதற்கு பதில் மாற்றி வைக்க, அதே எடையில், அதே உருவத்தில் மாற்று (போலி) வைரங்கள் உள்ளன. நம்முடைய எலக்ட்ரீஷியன் நரேன் உள்ளே இருக்கும் சில ரஷ்யர்கள் உதவியுடன் பல அலாரம்களை பைபாஸ் செய்துவிட்டான். அவற்றில் இந்த ஷோகேஸும் ஒன்று. நேரமில்லை. இந்த இடத்தில இருக்கும் சிசி கேமராவையும் செயலிழக்கச் செய்தாயிற்று. சீக்கிரம்” என்றாள் மாதவி.
அவள் அருகிலிருந்த டாக்டர் விக்டர் தலையாட்டிவிட்டு, தன் கையிலிருந்த சாவி மூலம் அந்த ஷோகேஸ் கதவைத் திறந்து உள்ளே ஒரு அடி உயர பெடஸ்டல் ஸ்டாண்ட் மீது இருந்த இரண்டு அரைமுட்டை வடிவிலிருந்த வைரங்களை எடுக்க, அதே வேகத்தில் சட்சட்டென அந்த இரண்டு இடங்களிலும் தன் கையிலிருந்த இரண்டு வைரங்களை மாதவி வைத்துவிட, ஷோகேஸ் கதவை மீண்டும் விக்டர் பூட்டிவிட்டு, விக்டர், வஸந்த், மாதவி மூவரும் சற்றுத் தள்ளி நின்று காத்திருக்கும்போது, சரசரவென நான்கு செக்யூரிட்டி ஆட்கள் அங்கு ஓடிவர, அதில் ஒருவன் பல்வேறு வித வைரங்கள் டிஸ்பிளே ஆகியிருந்த ஷோகேஸ்கள் தலைமாட்டு உயரத்தில் மூடியிருந்த ஒரு சிறிய சர்க்யூட் டப்பாவைத் திறந்து, ஒரு சில பட்டன்களைத் தட்ட, அனைத்து ஷோகேஸ்கள் மீதும் இருக்கும் சிறிய பச்சை நிற லைட் கண் சிமிட்ட ஆரம்பித்தது.
அப்போதுதான் இவர்களைக் கவனித்த ஒரு செக்யூரிட்டி ஆங்கிலத்தில் , “இங்கே என்ன செய்கிறீர்கள். சில எதிர்பாராத பிரச்சனைகள் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து அலார்ம்களையும் பைபாஸ் செய்யவேண்டி வந்தது. இப்போது சரி செய்துவிட்டோம். அதனால் மூடப்பட்ட வெளிக்கதவு இன்னும் திறக்கவில்லை. வெளியே உள்ள விஸிட்டர்ஸ் ஹாலில் சென்று அமருங்கள். உங்களுக்கு வெளியே செல்லலாம் என்று அழைப்பு வந்தவுடன் வெளியேறுங்கள். சிரமத்திற்கு மன்னியுங்கள்” என்று சொல்லிவிட்டு, மற்ற செக்யூரிட்டி அதிகாரிகளுடன் வெளியேறினார்.
மாதவி கையையும், விக்டர் கையையும் பிடித்து இழுத்த வஸந்த் அங்கிருந்து வெளியேறும் வழியில் உள்ள டாய்லெட்டினுள் புகுந்தான். ஒரு பொதுவான நுழைவாயிலில் உள்ளே நுழைய, வலதுபுறம், இடதுபுறம் இரண்டு கதவுகள் ஆண் என்றும் பெண் என்றும் அறிந்துகொள்ளும் விதமாக படங்கள் ஒட்டியிருக்க, அந்தப் பொதுவான வழியில் மூவரும் நின்று கொண்டனர்.
“வஸந்த், நீங்கள் சொன்னதுபோலவே, அலாரம் பைபாஸ் ஆகியிருந்தாலும், வைரங்கள் வைக்கப்பட்டிருந்த பெடஸ்டல் மீது இருந்த ப்ரெஷர் பாட் (Pressure Pad) செயலிழக்கவில்லை. நல்லவேளையாக, நான் ஒரிஜினல் ஆர்லோவ் வைரங்களை எடுத்த அடுத்த மைக்ரோ செகண்டில் மாற்று வைரங்களை மாதவி வைத்துவிட்டதால், அந்த ப்ரெஷர் பாட் சத்தம் போடவில்லை. இவற்றைத் திறக்கச் சாவிகளை ஏற்கனவே விவேக் ஏற்பாடு செய்திருந்ததாலும், ஒவ்வொரு ஷோகேஸ் மீதும் இருந்த தனிப்பட்ட சிசி கேமரா, மற்றும் அலாரம் பட்டன்கள் பைபாஸ் ஆகியிருந்ததாலும் தப்பித்தோம்” என்றார்.
தன் பிடியிலிருந்த மாதவியின் கை நடுங்குவதை வஸந்த் உணர்ந்தான்.
“டாக்டர் விக்டர், நாம் இன்னும் வெளியே போகவேண்டும், அப்போதுதான் நிம்மதி” என்றவன், விக்டரிடமிருந்த சிறிய கறுப்பு நிற வெல்வெட் சுருக்குப் பையை வாங்கி, மாதவியின் கையில் வைத்து அமுக்கினான்.
“மாதவி, வெளியே போகும்போது நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” சொல்லிவிட்டு வஸந்தும், விக்டரும் சட்டென வெளியேற, கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் கழித்து முகத்தில் மிகவும் பயந்த உணர்ச்சியோடு வெளியே வந்த மாதவி, சிறிது தூரம் நடந்திருப்பாள்.வெளியே செல்ல முக்கியக் கதவுகள் திறந்திருப்பதையும், லாரி மோதிய செக்யூரிட்டி பூத்தினுள்ளே சில செக்யூரிட்டி அதிகாரிகள் ஒவ்வொரு காமிராவையும்கவனித்துக்கொண்டிருப்பதையும், இன்னொரு பக்கம், கடந்த சில நிமிடங்களில் நடந்த குழப்பங்களைப் படம்பிடித்த காட்சிகளை சில அதிகாரிகள் ரீவைண்ட் செய்து பார்ப்பதையும் பார்த்தவள், அப்படியே தரையில் மயங்கி விழுந்தாள்.
=====================================
“சூடா ஒரு காஃபி அருந்தினால் சரியாகிவிடும், கமான்” என்று விக்டர் சொன்னவுடன், மெல்லிய புன்னகையுடன் மாதவி, காஃபிக் கோப்பையை கையில் எடுத்துக் கொண்டாள்.
எதிரே அவளைப் பார்த்துக் கொண்டிருந்த வஸந்த், “பேராசிரியர் சுதர்ஸனுக்கு என் பாஸ் கணேஷ் மூலம் தகவல் சொல்லி, அவருடைய ஆள் என்று ரமேஷ் மிஸ்ரா என்பவர் வந்து, வைரங்கள் இருந்த அந்தக் கறுப்புப் பையை எடுத்துக் கொண்டு கான்ஸலேட்டுக்குப் போய் விட்டார்.
நாளை டிப்ளமேடிக் பௌச்சில் இந்தியாவுக்கு வருவதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறேன் என்று சொல்லிச் சென்றுவிட்டார். ஆனா மேடம் நீங்க எதுவும் சொதப்பிடக் கூடாதுன்னுதான் என் பயம். நல்லவேளை. நீங்க கீழே விழுந்தவுடன், அங்கேயிருந்த ஒரு லேடி டாக்டர், ‘நடந்த சம்பவங்களைப் பார்த்த அதிர்ச்சியில் மயங்கியிருக்கலாம்’னு சொல்லி ஆம்புலன்ஸை வரவழைச்சு உடனே ஏற்றிவிட்டது சௌகரியமாகப் போச்சு” என்று சொல்லிப் புன்னகைத்தான்.
அருகேயிருந்த விக்டர் புன்னகைத்து, “தாங்க்ஸ் வஸந்த், நீங்க முதல்ல உங்க பிளானைச் சொன்னவுடன் எனக்கும், மாதவிக்கும் ரொம்ப சந்தேகம் இருந்தது. ப்ரொஃபஸர் சுதர்ஸன் சஜஸ்ட் பண்ண எலாபரேட் பிளானை விட்டுவிட்டு, நீங்க சொன்னதைச் செய்யணுமான்னு யோசிச்சோம். ஆனா, ப்ரொஃபஸர் சுதர்ஸன் ரொம்பத் தீர்மானமா நீங்க சொல்றதைக் கேக்கணும்னு சொல்லியிருந்தார். நல்ல வேளை, நீங்களும் தெளிவா சொல்லி, நாங்களும் ஒழுங்கா செஞ்சுட்டோம்…”
வஸந்த் குறிக்கிட்டான். “இல்லை டாக்டர் விக்டர், இந்த மாதிரி ரொம்பப் பாதுகாப்பு இருக்கிற இடத்துல முழுக்க முழுக்க அவங்களைக் குழப்பி, அவங்க கவனத்தைப் பல இடங்கள்ல திசை திருப்பி இதெல்லாம் செஞ்சாதான் சரியா வரும்னு தோணித்து. மாதவி, நீங்க, உங்க டீம் ஆளுங்க எல்லாரும் சரியா அவங்கவங்க பங்கைச் சரியா செஞ்சதால தப்பிச்சோம்”
“சரி ஒண்ணு சொல்லுங்க. இப்போ, ஒரிஜினல் வைரங்களை எடுத்துட்டோம், வேற டம்மி வைரங்களை வெச்சுட்டோம். இது எப்போ, எப்படி அந்த மியூசியம் அத்தாரிட்டிஸுகளுக்குத் தெரியும்?”
“ரெகுலர் இன்வென்ட்ரி எடுக்கிற ஃப்ரீக்வன்ஸி தெரியல. ஆனா, ஒண்ணு நிச்சயம், அந்த ம்யூசியத்துல ஆயிரக்கணக்கான பொருட்கள் இருக்கு. எல்லாமே, முறையா ஆடிட் செஞ்சு, டோட்டலா ஆட்டோமேடிக்கா மானிட்டர் செஞ்சு, நிறைய செக்யூரிட்டி மெஷர்ஸ் இருக்கிறதால உடனே இது தெரிய வராதுன்னே நினைக்கிறேன். அங்கே, ம்யூசியத்துல இருக்கிற ஆளுங்களுக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே காசு கொடுத்து, அலாரம் பைபாஸ் பண்ண வெச்சோம்.
செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் ஃபிக்ஸ் பண்ற வேற ஒரு போட்டிக் கம்பெனி சார்பா வந்திருக்கோம். இப்போ நீங்க வெச்சிருக்கிற செக்யூரிட்டி சிஸ்டம் குப்பை, எங்க சிஸ்டம்தான் பெஸ்ட் அப்படின்னு மியூசியம் அதிகாரிங்களுக்குப் புரிய வைக்கவே, உங்களை இப்படி பைபாஸ் பண்ண வைக்கிறோம்னு சொல்லி, அவங்களுக்குத் திருப்தி வர்ற மாதிரி பணம் கொடுத்து சமாளிச்சிட்டோம்”.
“அது தவிர, ம்யூஸியத்தில் குப்பைகளை எடுக்கும் நிறுவன ஆட்கள் சிலபேர் மூலம், ஒரு லாரியை ஏற்பாடு செஞ்சு மோத வெச்சோம். அந்த ட்ரைவர் ஒரு ரஷ்யன், நிறைய வோட்கா குடிச்சிட்டு இப்படிச் செய்ய வெச்சோம். அவனுக்கு வோட்கா குடிச்சது மட்டும்தான் நினைவிருக்கும்”.
“அப்புறம், செகண்ட் ஃப்ளோர்ல, பெரிசா சத்தம் வர்ற மாதிரி, அதே சமயம் பெரிசா சேதம் அதிகமா செய்யாத ஒரு பாம் வெடிக்கிற மாதிரியும் செஞ்சோம். இதை நாங்க யாரும் நேரடியா செய்யாம, இதுக்குன்னு சில ரஷ்யன் கம்பெனிஸ் இருக்கு. அது மூலமா செஞ்சோம். எனவே நாங்க யாரும் மாட்டமாட்டோம்”. என்றார் விக்டர்.
===================================
மறுநாள் மாலை விமானம் ஏறும்முன் செய்திகளைக் கூர்ந்து கவனித்த வஸந்த், கிட்டத்தட்ட எல்லா மீடியாவிலும், எதிர்பாராத உயரழுத்த மின் கசிவு காரணமாக க்ரெம்லின் ஆர்மரியில் குழப்பம். உடனே தீர்த்து வைக்கப்பட்டது.
நல்ல காலமாக உயிர்ச்சேதம் எதுவுமில்லை என்றே செய்திகள் வந்ததைக் கவனித்தான்.
டெல்லியில் இறங்கி, இமிக்ரேஷனை முடித்துக்கொண்டு, சென்னை வந்து சேர்ந்தபோது, கணேஷ் காத்திருப்பதைப் பார்த்த வஸந்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அருகே பேராசியர் சுதர்ஸனும் நின்றிருந்தார்.
அவரிடம் சிறிது நேரம் பேசும்போது, “கணேஷ் & வஸந்த், ரொம்ப தாங்க்ஸ். இன்னும் கொஞ்சம் நாள்ல இந்த வைரங்கள் ரங்கநாதர் கண்ணுக்கு மறுபடியும் போயிடும். அப்போ கூப்பிடறேன் அவசியம் வந்து பாருங்க” என்றவரிடம் சரி சொல்லிவிட்டு, மாதவிக்கு பை சொல்லிவிட்டு, காரில் கணேஷும், வஸந்த்தும் வரும்போது,
“என்ன வஸந்த், ஆச்சரியமா இருக்கு? அந்த மாதவியை அவ்ளோ சீக்கிரம் விட்டுட்டியே? என்ன விஷயம்?” என்றான் கணேஷ்.
“அதுவா பாஸ். அது ரொம்ப இன்டெலக்சுவல் லாடிடா. நமக்கு ஒத்துவராது” என்றான்.
பல்லாவரம் அருகே சிக்னலில் கடந்து சென்ற ஒரு பெண் கறுப்பாகக் களையாக இருந்ததைப் பார்த்த வஸந்த், “பாஸ், இந்த இயற்கை அழகோடு இருக்கிற பொண்ணுங்களைப் பார்த்தாலே ஒரு மாதிரி உடம்பெல்லாம் சூடா ஆயிடுது பாஸ். என்னா வைரம் பாஞ்ச கட்டை” என்றவனை முறைத்துவிட்டு, கணேஷ் காரைக் கிளப்பினான்.
“பக்கத்துல பாரு, ஆஜானுபாகுவா கூடவே ஒரு ஆளும் போறான் வஸந்த், ஜாக்கிரதை” என்றான்.
வஸந்த் சிரித்தான், “அவன்தான் பாஸ் வைரம்” என்றான்.
சிரித்துக் கொண்டே, தலையில் அடித்துக்கொண்ட கணேஷ், “வஸந்த், உன்னைத் திருத்தவே முடியாதுடா!” என்றான்.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
ராம் ஶ்ரீதர் சார், உங்கள் பெருமாள் வைரம் சிறப்பு. சுஜாதா சார் திரும்ப உயிர்தெழுந்தார்.
That’s awesome! Congrats. !. இந்த கதையை குறும் படமாக எடுத்தால் நன்றாக விறுவிறுப்பாக இருக்கும்.
சுஜாதாவின் புது கதைகள் இல்லாத நிலையில் உங்கள் கதைகள் சில அவரது பாணியில் வந்து கொண்டிருந்தால் நன்றாக இருக்கும்.
Hi Ram Sridhar, Very good detective story. Surprise was use of Naren and Vivek names… Enjoyed reading