மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பெங்களூர், கண்டோன்மண்ட்… ஸ்டேட் பேங்க் கிளைக்கு அசிஸ்டன்ட் மேனேஜராக பதவி உயர்வு பெற்று, அங்கு ஜாயின் பண்ண சென்ற ரவி, ரிசப்ஷனில் அழகே உருவாய், ரோஜா சிரிப்புடன் அமர்ந்து இருந்த பெண்ணை கண்டு “நீங்க மைதிலி தானே?” என தயங்கி தயங்கி கேட்க
அவள் பார்வை அலட்சியமாய் ஒரு கணம் இவன் மேல் விழுந்து மறுகணம் பளிச்சென்று பிரகாசமாகி, “நீ! நீ! ரவி தானே!” என்று ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில், அவள் அவனை திருப்பி கேட்க. அவன் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறது….
மெட்ராஸ் (இன்றைய சென்னை) எழும்பூர் பகுதியில், ‘பாலர் குருகுலம் பள்ளி’ ஒரு கிருத்துவ அமைப்பின் தனியார் பள்ளி ஆகும். அங்கு பெரும்பாலும் வகுப்புகள், ‘சாந்தி நிகேதன்’ போல், மரநிழலில் பெரிய கம்பளம் விரித்து, குழந்தைகள் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி ஒன்றாய் அமர்ந்து தமிழ் வழியில் கல்வி போதிக்கப்பட்டது.
மொத்தம் 30 குழந்தைகள் கொண்ட, அந்த 4ஆம் வகுப்பில், மாணவன் ரவி, படிப்பிலும் சரி, வால் தனத்திலும் சரி படுசுட்டி. அவனுடன் படித்த செக்க சிவந்த, சுட்டி பெண்பிள்ளை, மைதிலிக்கும் இவனுக்கும் தான், முதல் மதிப்பெண் பெறுவதில் கடும்போட்டி நிலவும்
முதல் ரேங்க் வாங்கும் மாணாக்கர், ‘கிளாஸ் மானிட்டர்’ ஆக அடுத்த பரீட்சை வரும்வரை நியமிக்கப்படுவர். வகுப்பில் பேசுபவர் பெயர் குறித்து வைப்பது, ஆசிரியைக்கு குற்றேவல் செய்வது, அசிரியர் உத்தரவின் பேரில், தலையில் ‘குட்டக்க’ தண்டனை நிறைவேற்றுவது ஆகியன, மானிட்டரின் பிரதான பணிகள்.
மைதிலியிடம் இவ்வகையில் ரவி நிறைய குட்டு வாங்கி இருக்கிறான். ஆனால், ரவி அவளை இன்று வரை குட்டியதே இல்லை, அவ்வளவு பிரியம் அவள் மேல்!
ரவியும், மைதிலியும் ஏனோ, அந்த பால பருவத்திலேயே, எலியும் பூனையும் போல் இருந்தனர். அதில் பூனை மைதிலி!, எலி ரவி!. ஏனோ, அவள் எவ்ளோ திட்டினாலும், ரவி அதை பொறுத்து கொள்வான். ஆனால் அந்த பூனை மைதிலியோ, இவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதிலேயே குறியாய் இருப்பாள்.
அன்றைய நாட்களில், ஹோம் ஒர்க் செய்யாத மாணவர்/மணவியற்கு அதிக பட்ச, ‘கேப்பிட்டல் பநிஷ்மெண்ட்’ யாதெனில், துணிகளை கழற்றி நிர்வாணமாய், நிற்க வைப்பதே ஆகும்.!
ஆனால் அது அவ்வளவு எளிதாக, இதுவரை யாருக்கும் நிறைவேற்றபட்டதாக சான்றுகள் இல்லை. குழந்தைகளை, பயமுறுத்தவே, அது அமலில் இருந்தது
‘அரசு’ எனும் திருநாவுக்கரசு தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவன். மிகவும் அமைதியான பையன், ஆனால் அவனுக்கு ஏனோ படிப்பு சுட்டுபொட்டாலும் வராது,
ஹோம் ஒர்க் செய்யாமல் தினமும் இராஜேஸ்வரி டீச்சரிடம், ஸ்கேல் அடி, முட்டிப்போடுதல் போன்ற ‘பெஞ்ச் கோர்ட்’ தண்டனைகள் பெற்று, திருந்தாமல் தொடர்ந்து தவறு செய்ய, ஒருநாள் ‘துகில் உரி’ தண்டனை நிறைவேற்ற, வகுப்பின் முன் நிற்க வைக்கபட்டான்.
மாணவர்கள் ஆர்வத்துடன் நோக்க, மாணவிகள் குனிந்தபடி ஓரவிழிவில் கலவரத்துடன் கள்ளபார்வை பார்க்க, அப்பாவி அரசோ மகாபாரத கண்ணனை உதவிக்கு அழைக்காமல் சலனமின்றி நின்றிருந்தான்.
“சட்டையை கழட்டுடா!” என டீச்சர் குரல் உயர்த்தி அதட்ட
அவன் மெல்ல சட்டை பொத்தான்களை கழட்ட தொடங்க, “ரோமானிய சாம்ராஜ்யம்” ஆனது அந்த வகுப்பு. எங்கும் நிசப்தம், சட்டையை ஒருவழியாக கழட்ட… அடுத்த கட்டம் செல்ல அரசு தயங்கி தயங்கி நிற்க, அவன் விழிகளோ பெண் பிள்ளைகளின் பக்கம் சங்கடத்துடன் ஆராய தொடங்கியது
என்ன நினைத்தாரோ! ஏது நினைத்தாரோ ராஜேஸ்வரி டீச்சர், அவன் கருணை மனுவை ஏற்று கொண்டு விடுதலை வழங்க, அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என, தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.
அதிலிருந்து அவன் ஒரு நாள் கூட, ஹோம் ஒர்க் செய்ய தவறவில்லை.
அந்த சம்பவத்திற்கு பிறகு, மைதிலி ரவியிடம், அதிகபட்ச சண்டை பிடிக்கும் போது , “இரு இரு ! நீ ரொம்பதான் அல்டிக்கிற! ஒருநாள் டீச்சர் இடம் மாட்டிவிட்டு, உன்னை டவுசர் கழட்ட வைக்கிறேன்!” என மங்கம்மா சபதம் செய்தாள்.
அந்த சவால் கேட்டு, பயந்து போய் விட்டான் ரவி. மைதிலி அவனிடம் சண்டை, சமாதானம் என மாறிமாறி உறவாட, ரவியோ அவளுடன் எப்போதும் அபிரிமித நட்புடன் பழகி வந்தான்
பள்ளி, ஆண்டு விழா ஏற்பாடுகள் தொடங்கின. மைதிலி பரத நாட்டியத்திலும், ரவி குரூப் டான்சிலும் பங்குபெற, தினமும் மாலையில் ரிகர்சல் நடந்தது.
ஒருநாள் அவள் ரிகர்சல் போது, “டேய் ரவி… எனக்கு ஓரு உதவி செய்ரியா? இந்த ஹேர் பின்னை கொஞ்சம் நல்லா டைட்டாக போட்டு விடேன்”என கெஞ்ச, அவனும் போட்டு விட்டான்
அவன் கஷ்டகாலம், அவன் அத்தோடு நிற்காமல், அவள் ரோஸ் தடவிய கதுப்பு கன்னத்தை விளையாட்டாக கிள்ள, அவள் டக்கென கோபத்துடன் திரும்ப, அவன் நகம் கன்னத்தை சற்றே ஆழமாக கீறி விட்டது
வலி தாங்காமல் கண் கலங்க, “சீ போடா நாயே, நாளிக்கி எங்க அப்பாகிட்ட சொல்லி உன்ன மாட்டி விட்ரனா இல்லையா பார்” என கூறி ஆத்திரத்துடன் சென்றாள் மைதிலி
ரவிக்கு பயம் பிடித்து கொண்டது. ‘துகிலுரி’ ராஜ தண்டனை வேறு நினைவுக்கு வந்து வந்து அவனை அச்சுறுத்தியது. மைதிலியின் டிரவுசர் சபதம் அவனை நடுநடுங்க வைத்தது!
ஒரு வாரம், தலைவலி வயிற்று வலி என சாக்கு போக்கு சொல்லி பள்ளி பக்கமே போகவில்லை
ராஜேஸ்வரி டீச்சர் வீட்டு கதவை தட்ட, ரவி அஞ்சிநடுங்கி நிற்க, அவரோ “ஏண்டா ரவி… ஒருவாரமா ஸ்கூலுக்கே வரல்ல?” என வாஞ்சையுடன் ஆதரவாக கேட்க
‘அப்படா, மைதிலி என்னை மாட்டி விடவில்லை’ என நினைத்து ஆசுவாசப்பட்டு அகமகிழ்ந்து, ஏதோ நொண்டி சாக்கு சொல்லி டீச்சரை வழியனுப்பி வைத்தான்
அடுத்த நாள் இவன் பள்ளிக்கு போக, மைதிலி இவன கண்டுக்கவும் இல்ல! பேசவும் இல்ல..! இவனும் ஆள விட்டா போதும்னு அவள் பக்கமே தல வைத்து கூட படுப்பதில்லை
ஓரிரு மாதங்களில், முழுபரீட்சை முடிந்தவுடன் அவன் அப்பாவுக்கு வெளியூர் மாற்றல் உத்தரவு வரவே அவன் குடும்பமே வேறு ஊருக்கு சென்றது
இருபது ஆண்டுகள் கழித்து, இன்று மீண்டும் மைதிலியை பார்த்து அதிர்ச்சியுற, அவளோ அர்த்த புஷ்டியுடன் அவன் ‘பேண்ட்டை’ நோட்டமிட, அவன் மெல்ல கைகளை கீழே இறக்குகிறான்.
அவள் கொல்லென்று வனப்புடன் சிரித்து, இவன் கண்களை தன் கண்களுடன் இரண்டற கலக்க விடுகிறாள். அதில் காதல் அபரிமிதமாய் அப்பி கிடப்பதை, அப்பட்டமாக உணர்கிறான் ரவி.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings