மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ராஷ் பிஹாரி அவென்யூவில் உள்ள ‘ராம் விலாஸ்’ என்ற பெயர் பொறித்த காம்பவுண்டுக்குள் லட்சுமணன் கார் நுழைந்து அந்த வீட்டின் முன் நின்றது. உள்ளேயிருந்த காதம்பரி வாசலில் வந்து நின்றாள். இந்த காட்சியை தன் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு நின்றார் வாசு.
லக்ஷ்மணன் இன்று வேலையிலிருந்து ரிடையர் ஆகி வீட்டிற்கு வருகிறான். நாட்கள் தான் எவ்வளவு சீக்கிரம் ஓடி விட்டது என்று வாசுவின் மனம் எண்ணியது. ஆனால் நிகழ்ச்சிகள் இப்போது தான் நடந்தது போல் பசுமையாக மனத்திரையில் ஓடியது அன்று…
காதம்பரியும் மாதவனும் ஸ்கூட்டரில் மல்லேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிக்னல் அருகே சிவப்பு விளக்கைப் பார்த்து வண்டியை நிறுத்தினான்!
அதை கவனிக்காத வேறு ஒருவன் தன் வண்டியை வேகமாக ஓட்டி வந்து மாதவன் வண்டியில் மோத, எதிரே வந்த வண்டி ஏறி ஸ்தலத்திலேயே உயிரிழந்தான் மாதவன். காதம்பரி தூக்கி எறியப்பட்டதும் கை எலும்பு முறிந்தது, எல்லாம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது.
ஆக்சிடென்ட் என்பதால் மாதவனின் சடலம் போஸ்ட் மார்ட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. காதம்பரிக்கு முதலுதவி செய்து வீட்டில் கொண்டு இறக்கினார்கள் போலீஸ். உள்ளே இருந்து வந்த அவள் மாமியார் அம்புஜம் அவர் பின்னால் தன்பிள்ளை மாதவனை கண்களால் தேடினாள்.
உள்ளே இருந்து வந்த சாம்பு ஐயர், “கையில் என்னம்மா கட்டு? எங்க விழுந்தே? மாதவன் எங்கே?” என்று கேட்க, அம்புஜத்தை கட்டிக் கொண்டு ஓவென்று கதறினாள் காதம்பரி.
அதற்குள் கூட வந்த போலீஸ் சாம்பு ஐயரிடம் நடந்த ஆக்சிடென்ட் பற்றி கூற, அம்புஜமும் சாம்பு அய்யரும் “ஐயோ மாதவா எங்களை விட்டு போய் விட்டாயே” என்று பெருங்குரலெடுத்து அழ, அதைப் பார்த்த குழந்தைகள் இரண்டும் ஒன்றும் புரியாமல் அழ ஆரம்பித்தது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அழுகுரல் கேட்டு விஷயத்தை தெரிந்து மூவரையும் சமாதானம் செய்ய முற்பட்டார்கள். விஷயமறிந்த சொந்தம் அனைவரும் பெங்களூருக்கு விரைந்து வந்தார்கள்.
கிராமத்தில் விவசாயம் பார்த்து வந்த சாம்புவின் இரண்டாவது பையன் லட்சுமணன் வந்து அனைவரையும் சமாதானம் செய்ய முற்பட்டான். மாதவனின் அனைத்து காரியங்களையும் லட்சுமணன் செய்தார். காரியங்கள் முடிந்ததும் லட்சுமணன் அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு நன்னிலம் போக ஆயத்தமானான்.
மாதவன் ஆபீஸ் பியூன் வந்து லட்சுமணனிடம் ஒரு கவரைக் கொடுத்தான். அதை மன்னியிடம் கொடுக்க, அதை பிரித்து பார்த்த காதம்பரி, மாதவனின் வேலையை நம் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தருவதாகவும் அதன்பின் அவனுக்கு சேர வேண்டிய பணத்தை செட்டில் செய்வதாகவும் எழுதி இருப்பதாக கூறினாள்.
உடனே சாம்புவிடம், “நான் ஏற்கனவே நல்ல வேலையில் இருக்கிறேன். லட்சுமணன் தான் சரியான வேலை கிடைக்கவில்லை என்று கிராமத்திற்குச் சென்று விவசாயம் பார்க்க ஆரம்பித்தான். எனவே அண்ணாவின் வேலையை லட்சுமணனுக்கு கொடுக்கச் சொல்லி நான் எழுதி விடுகிறேன்” என்றாள்.
சாம்பு ஐயர் லட்சுமணனிடம் கேட்டு அதற்கு ஒப்புதல் வாங்கினார்.
ஒரு மாத லீவுக்கு பிறகு காதம்பரி ஆபீசுக்கு சென்றாள். ஒவ்வொருவரும் அவளைப் பார்த்து ஒவ்வொரு ஆலோசனை கூற ஆரம்பித்தார்கள் ஆலோசனை சொல்வதற்கு என்ன காசா? பணமா? அதைக் கேட்டு காதம்பரி ஒரு முடிவுடன் வீட்டிற்கு வந்தாள். வந்ததும் அவள் குழந்தை அம்புஜத்திடம் இருந்து இவளிடம் சிரித்துக் கொண்டே தாவினான்.
அவனுக்கு சென்ற மாதம் தான் ஆண்டு நிறைவு ஆயிற்று. அம்மா வந்து விட்டாள் என்று தெரிந்ததும் நாட்டியா ஓடி வந்து, “அப்பா எங்கே அம்மா?” என்று கேட்டாள், தினமும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் ஆபீஸுக்கு போவார்கள் வருவார்கள் என்பதால்!
அவளுக்கு மூன்று வயது, அவள் அப்பா இறந்தது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவள் அப்பா எங்கே என்று கேட்டதும் வீட்டில் உள்ள அனைவரும் அழ ஆரம்பித்தார்கள், அதைப் பார்த்து நாட்டியாவும் அழுதாள்.
உடன் காதம்பரி தன் மாமியாரிடம் வந்து, “என் குழந்தைக்கு அப்பா எங்கே என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” எனக் கேட்டாள். “எனக்கு கணவன் வேண்டும்” என்றாள்.
இதைக் கேட்ட மாமனாரும் மாமியாரும் திகைத்து, “என்ன கேட்கிறாய் நீ?” என கேட்க
“நானும் நாட்டிய கேட்ட கேள்வி தான் கேட்கிறேன்” என்றாள்.
“என்னடி உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? சுயநினைவோடு தான் பேசுகிறாயா?” என்று கேட்க
“ஆமாம் நிஜமா தான் கேட்கிறேன்” என்றாள்.
“மாதவன் இறந்ததில் உனக்கு சித்தம் கலங்கி விட்டது”
உடனே காதம்பரி, “நான் தெளிவாக தான் பேசுகிறேன். எனக்கு அப்பா அம்மா இல்லை, இன்னும் சில வருடங்களில் நீங்கள் இறந்து விடுவீர்கள். எனக்கு விடிய விடிய 25 வயது தான் ஆகிறது. உலகில் உள்ள ஆண்கள் என்னை சும்மா விடமாட்டார்கள்” என்று கூறி அழ ஆரம்பித்தாள்.
அம்புஜம் சாம்பு ஐயர் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து திகைத்து நின்றார்கள்.
“இன்று என் பெண் அப்பா எங்கே என்று என்னைக் கேட்டாள். இன்னும் சிறிது நாட்களில் அப்பா எங்கே என்று அனிருத் கேட்பான், நான் என்ன பதில் சொல்வேன்?” என்று கூறி அழ ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்த அம்புஜம், “சரி சரி அழாதே, உனக்கு பிடித்த யாரையாவது கல்யாணம் செய்து கொள், நாங்கள் சம்மதிக்கிறோம்” என்றாள்.
“நான் யாரையாவது கல்யாணம் செய்து கொண்டால் என் பணத்திற்கும் என் இளமைக்கும் தான் முக்கியம் கொடுப்பார்கள், என் குழந்தைகள் நிலை என்னவாகும் யோசித்தீர்களா?” என கேட்டாள்.
அதைக் கேட்ட அம்புஜம், “என்னை என்ன தான் செய்ய சொல்றே? நானே என் பிள்ளையை வாரிக் கொடுத்துவிட்டு நிற்கிறேனே” என்று சொல்லி அழுதார்.
உடன் காதம்பரி, “அதற்கு தான் சொல்லுகிறேன், நான் லட்சுமணனை கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்றாள்.
“அதற்கு அவன் சம்மதிக்க வேண்டுமே? நீ அவனுக்கு மன்னி, அம்மா ஸ்தானத்தில் இருப்பவள் ஆயிற்றே” என்று அம்புஜம் கூற
“லக்ஷ்மணன் வரட்டும் நான் கேட்கிறேன்” என்று கூறி அன்றைய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் காதம்பரி.
கிராமத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு தன் அண்ணாவின் வேலையை ஏற்றுக் கொள்ள பெங்களூர் வந்தான் லக்ஷ்மணன். அம்புஜமும் சாம்பு ஐயரும் காதம்பரியின் கல்யாண முடிவை கூறினார்கள்.
அதற்கு அவன், “நான் எப்படி உங்களை கல்யாணம் செய்து கொள்ள முடியும்? மன்னி என்று கூறிய வாயால் உங்களை எப்படி நான் பேர் சொல்லி அழைக்க முடியும்?” என்று கூறி அழ ஆரம்பித்தான்.
அதைப் பார்த்த காதம்பரி, “லட்சுமணா… உன்னை தவிர வேறு யாரும் என் குழந்தைகளை பாசத்துடன் வளர்க்க மாட்டார்கள். நீயும் நானும் தனியாக ஒரே வீட்டில் இருந்தால் ஊர் நாலும் பேசும். அதைத் தவிர்க்க தான் இந்த யோசனை. நீ எனக்கு அப்பா, அம்மா, சுவாமி முன்னால் ஒரு திருமாங்கல்யத்தை என்னிடம் கொடு, நானே அதை கட்டிக் கொள்கிறேன்.
நீயும் நானும் குழந்தைகளுக்கு அப்பா அம்மா என்ற உறவு, உலகத்தாருக்கு கணவன் மனைவி. ஆனால் நான் உனக்கு என்றும் மன்னி, நீ எப்போதும் போல் எனக்கு லட்சுமணன் தான். உன் அண்ணாவின் குழந்தைகளுக்காக உன்னை யாசகம் கேட்கிறேன், அப்பாவாக இரு என் குழந்தைகளுக்கு. நான் எந்த நேரத்திலும் என் நிலையில் இருந்து மாற மாட்டேன்.
உலகில் உள்ள கழுகு கண்களுக்கு விருந்தாக கூடாது என்றும் உன் அண்ணாவிற்கு மட்டுமே நான் மனைவி என்பது என் எண்ணம் என்று கூறி இதற்கு உன்னைப் பணயமாக வைக்கிறேன். இதற்கு உன் எண்ணத்தை மறைக்காமல் கூறு” என்று காதம்பரி கேட்டாள்.
இதைக் கேட்டு லக்ஷ்மணன் தடாலென்று காதம்பரியின் காலில் விழுந்து, “என் அண்ணாவிற்கு நான் இந்த உதவி செய்யவில்லை என்றால் நான் மனிதத் தன்மையற்றவன். இன்று முதல் என் அண்ணாவின் குழந்தைகள் என் குழந்தைகள். என்னை என்றும் உங்கள் லட்சுமணன் ஆக நடத்துங்கள்” என்று கூறி அழுதான்.
அதைப் பார்த்து அம்பஜமும் சாம்பு ஐயர் இருவரையும் அழைத்து ஆசி கூறினார்கள்.
காதம்பரியும் இலட்சுமணனும் தங்கள் வேலையை கல்கத்தாவிற்கு மாற்றிக் கொண்டு அம்மா அப்பா குழந்தைகளுடன் வந்தார்கள். கல்கத்தாவில் லட்சுமணன் ராஷ் பிகாரி அவின்யூவில் உள்ள ‘ராம் நிவாஸ்’ என்ற ஆபீஸ் குவாட்டர்ஸ்ஸில் குடியேறினார்.
அதே காம்பவுண்டில் அவனுடைய ஆபீஸ் மேனேஜர் வாசுவும் இருந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை, எனவே காதம்பரியின் குழந்தைகளுடன் விளையாடுவார்.
குழந்தைகள் தன் அம்மாவை மன்னி என்று கூப்பிடுவதும், லக்ஷ்மணன் காதம்பரியை மன்னி என்று கூப்பிடுவதும் பார்த்து இது பற்றி அம்புஜத்திடம் கேட்டார். பெண்களிடம் ரகசியம் தங்காது என்பதற்கு ஏற்ப, தங்கள் குடும்ப கதையை கூறி இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று வாசுவிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டாள்.
சாம்பு ஐயரும் அம்புஜமும் கல்கத்தாவில் ஒருவர் பின் ஒருவராக இறக்க, இவர்களுக்கு நெருங்கிய உறவு என்று யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. சென்னையில் ஏதாவது விசேஷம் என்றால் லக்ஷ்மணன் மட்டும் போய் வருவான்.
வருடங்கள் ஓடியது, நாட்டியாவும் அனிருத்தும் பி.இ முடித்து நல்ல வேலையில் சேர்ந்தார்கள். இவர்கள் இருவரும் கல்கத்தாவாசிகளாகவே வளர்க்கப்பட்டார்கள்.
நாட்டியாவின் அழகையும் புத்திசாலித்தனத்தையும் பார்த்து ஒரு பெரிய பணக்காரர் தன் மருமகளாக ஆக்கிக் கொண்டார். அனிருத்தும் தான் காதலித்தவளை அப்பா அம்மாவின் சம்மதத்துடன் கை பிடித்தான்.
லட்சுமணன் இன்று ரிடையர் ஆகி விட்டான். தன் நினைவுகளில் இருந்து மீண்டார் வாசு. கையில் பழத்துடன் லட்சுமணனுக்கு வாழ்த்துச் சொல்ல, வாசு அவர்கள் வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவர் கண்ட காட்சி… காதம்பரியின் காலில் லட்சுமணன் விழுந்ததைப் பார்த்தார். அன்று சீதா பிராட்டியின் காலில் லட்சுமணன் விழுந்ததைப் போல் இந்த கலியுக லக்ஷ்மணன் விழுந்து நமஸ்காரம் செய்வதாகத் தோன்றியது.
அன்று லட்சுமணன் சீதையை சுற்றி கோடு போட்டார். ஆனால் இந்த லக்ஷ்மணன் தன்னைச் சுற்றி ஒரு கோடு போட்டுக் கொண்டு, தன் சுக துக்கங்களை இழந்து வாழ்ந்து வருவதாக தோன்றியது. வாசுவின் கண்களில், ராமனின் சகோதரன் லட்சுமணன் போலவே இந்த லட்சுமணன் தெரிந்தான்.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings