in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 13)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“எதற்காக இந்த பார்ட்டி என்று உங்களுக்குத் தெரியுமா அத்தை?” என்றாள் மஞ்சுளா வியப்புடன்.

காது கேட்காத மாதிரி் “சாரதா” என்று கூப்பிட்டுக் கொண்டு சமையல் அறைக்கு சென்று விட்டாள் லட்சுமி.

பல்கலைகழகத்தின் தமிழ் இலாக்காவில் இருந்து லட்சுமிக்கும் இரண்டு முறை அழைப்பு வந்தது. மஞ்சுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நந்தகோபால் கார் ஓட்ட, கோபியை அழைத்துக் கொண்டு லட்சுமியும், மஞ்சுளாவும் அன்று மாலை நான்கு மணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு எளிமையாக ஆனால் அழகாக அலங்கரித்துக் கொண்டு கிளம்பினர்.

தமிழ் இலாக்காவிற்குப் போகும் வழியெல்லாம் ‘வாழ்க தமிழ்’ என்று தொங்கும் தோரணங்கள். நந்தகோபாலும் மஞ்சுளாவும் ஒன்றும் புரியாமல் வியப்புடன் பார்த்தவாறே நடந்து சென்றனர்.

“மம்மி இதுதான் நீங்கள் இந்தியாவில் இருந்தபோது வேலை செய்த இடமா? அடேயப்பா ! எவ்வளவு பெரிய பல்கலைகழகம்!!” என்றான் கோபி தன் கண்களை அகல விரித்து.

“வேலை செய்த இடம் மட்டுமல்ல கோபி! உன் அம்மா படித்ததும் இங்கே தான்” என்றாள் லட்சுமி.    

இதற்குள் சியாமளா, இன்னும் நான்கு பேராசிரியர்களுடன் வந்து, மஞ்சுளாவிற்கு  ‘கங்கிராஜுலேஷன்ஸ்’என்று வாழ்த்து தெரிவித்தார்கள்.

மேடையில் தமிழ் இலாக்காவின் ஹெட் ஆப் த டிபார்ட்மென்ட் பேசும்போது தான் மஞ்சுளாவிற்கு விழாவின் காரணம் தெரிந்தது. அவளுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. அவள் எழுதிய ‘காடும் காடு சார்ந்த இடமும் முல்லை’ என்ற புத்தகத்திற்கு அந்த ஆண்டின் சாகித்ய அகாடமி அவார்ட் கிடைத்திருக்கிறது.

லட்சுமி தான் மஞ்சுளா எழுதிய புத்தகங்களில் சிறந்த இரண்டை, அவள் அமெரிக்காவில் இருக்கும்போது ஒரு சிறந்த  பதிப்பகத்தின் மூலம் வெளியிடச் செய்தாள். அதில் ஒரு புத்தகம் தான் காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்பது. இந்தியாவில் உள்ள பத்து முக்கியமான காடுகளையும், அதில் விளையாடும் மிருகங்களையும், அசைந்தாடும் மூலிகைச் செடிகளையும், பயன் தரும் மரங்களையும் அழகாகக் காட்டி அந்தக் காடுகளில் நாமே நேரில் பயணம் செய்வது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியிருந்தாள்.

அதில் உண்மையும், கொஞ்சம் கற்பனைக் கதையும் காதலும் கலந்து படிப்பவர் நெஞ்சங்களைப் புரட்டிப் போட்டன. அந்தப்  புத்தகத்திற்குத் தான் தமிழ் மொழிக்காக அந்த வருடத்திற்கான சாகித்ய அவார்ட்  வழங்கப்பட்டிருந்தது.

அதற்காகத்தான் அந்த தேனீர்  விருந்து. எல்லோரும் பாராட்டிப் பேசினர். லட்சுமிக்கு அளவிட முடியாத சந்தோஷம். மஞ்சுளாவிற்குக் கிடைத்த அவார்ட் தனக்கு கிடைத்தாற்போல் சின்னக் குழந்தை போல் குதித்தாள்.

மஞ்சுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. தன் எழுத்திற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமா என்று நம்பமுடியாமல் திகைத்தாள். நந்தகோபால்  தன் மடியில் அமர்ந்திருந்த கோபியை சந்தோஷத்தில் இறங்க அணைத்துக் கொண்டான்.

சாகித்ய அகாடமியிலிருந்து பல்கலைகழகம் மூலம் மஞ்சுவிற்கு வந்த சான்றிதழும், கடிதமும் மேடையில் கொடுத்தனர். மனம் நிறைய சந்தோஷத்துடனும், திருப்தியுடனும் நந்தகோபால் கார் ஓட்ட, அருகில் அமர்ந்து  தன் மாமியார் மாமனாருடனும் குழந்தை கோபியுடனும் கும்பகோணம் திரும்பிக் கொண்டிருந்தாள் மஞ்சுளா.

காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த டாக்டர் ஸ்ரீதர் திடீரென சிரித்தார்.

“சொல்லி விட்டு சிரித்தால் நாங்களும் சிரிப்போமில்வையா?” என்றாள் லட்சுமி.

“ஒன்றுமில்லை, நாம் கிளம்பும் போது முரளி வந்து ‘அங்கிள், அண்ணி கிளம்ப இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. அதற்குள் திருமணம்  நடத்த முடியுமா?’ என்று கேட்டான். அப்போது ஜானகி உடனே ‘அதனாலென்ன? அடுத்த கோடை விடுமுறையின் போது  அத்தை வருவார்கள் இல்லையா? அப்போது கூட திருமணம் வைத்துக் கொள்ளலாம்’ என்றாள் கிண்டலாக” என்று நிறுத்தினார் ஸ்ரீதர்.

“அதற்கு முரளி என்ன சொன்னான்?” என்றாள் லட்சுமி ஆர்வமாக.

“அதுவரையில் என்னால் காத்திருக்க முடியாது. அவர்கள் கிளம்பும் போது விமான நிலையத்திலேயே ஊரறிய  உலகறிய தாலி கட்டி விடுவேன் என்றான்” என்று சொல்லிச் சிரித்தார்.

“மீனாவும் நாராயணனும் கூட அவர்கள் வந்திருக்கும் இந்த ஒரு மாத விடுமுறைக்குள் திருமணம் முடித்து விட்டுத்தான் துபாய் கிளம்ப வேண்டும் என்று  முடிவு செய்திருக்கிறார்கள்” என்றாள் லட்சுமி .

“இப்போது ஏன் அத்தை அவர்கள் பாண்டிச்சேரி சென்றிருக்கிறார்கள்?” மஞ்சுளா.

“இருவருடைய உறவினர்களும் அங்கேதான் இருக்கிறார்கள். அவர்களைப்  பார்த்துவிட்டு ஒரு வாரத்தில் கும்பகோணம் வந்து விடுவார்கள். முரளியும் அதனால்தான் அவர்களுடன் சென்றிருக்கிறான்” லட்சுமி.

கும்பகோணம் வந்த இரண்டு நாட்களில், ஸ்ரீதர் வீட்டு டெலிபோன் ஓயாமல் அடித்தது. லட்சுமிதான் எடுத்தாள்.

“டாக்டர் மேடம், இந்த ஊர் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து ‘இளைஞர் தமிழ் சங்கம்’ என்று  ஒரு சங்கம் தொடங்கியிருக்கிறோம் . அதில் இந்த ஆண்டு சாகித்ய அகாடமி அவார்ட் வாங்கிய பேராசிரியர் டாக்டர் மஞ்சுளாவிற்கு பாராட்டு விழா நடத்த விரும்புகிறோம்” என்றனர்.

மஞ்சுளாவிற்கு இந்த விழாக்களில் எல்லாம் அவ்வளவு ஆர்வமில்லை. ஆனால் லட்சுமி தான் வற்புறுத்தி, “இதெல்லாம் மாணவர்களின் இலக்கிய ஆர்வத்திற்கு ஒரு தூண்டுகோல். அவர்களுக்கு ஒரு ஆர்வமும், உற்சாகமும் கிடைக்கும்” என்று விழாவிற்கு ஒத்துக் கொள்ள வைத்தாள்.

கோபிக்கு இந்த விழாக்களும், பாராட்டுகளும் புதிய அனுபவமாக இருந்தது. எல்லாப் புகழும் நன்றாகப் படிப்பதால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்து தன் தாயைப் பிரியமுடன் பார்த்து ஆசையுடன் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.

பாராட்டுக்களும், பரிசளிப்புகளுமாக ஒரு வாரம் ஓய்வின்றி ஓடியது. மஞ்சுளா அமெரிக்கா திரும்ப வேண்டிய நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்குள் பாண்டிச்சேரி சென்ற மீனாவும், நாராயணனும் கும்பகோணம் திரும்பினர்.

நந்தகோபால் மட்டும் சரியாகப் பேசாமல், சரியாக சாப்பிடாமல், மிகவும் அலைப்புற்றவனாக, ஏதோ மிகுந்த கவலையாக இருந்தான். மஞ்சுளாவும், லட்சுமியும் மட்டும் அவனை கவனித்துக் கொண்டே இருந்தனர்.

லட்சுமி ஒரு நாள் தன் மகனிடம், “நந்தகோபால் உடம்பு ஏதும் சரியில்லையா? அல்லது சிதம்பரம் கிளினிக்கில் அந்த சிந்து அடித்த கூத்தை நினைத்துக் கொண்டிருக்கிறாயா?”  என்றாள் கவலையுடன். மஞ்சுளாவும், ஸ்ரீதரும் கூட அவனை அதே கவலையுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“அம்மா, என் உடம்பிற்கு ஒன்றுமில்லை” என்றான் பெருமூச்சுடன்.

“மஞ்சுவும், கோபியும் நம்மைப் பிரிந்து அமெரிக்கா போகிறார்களே என்ற ஏக்கமா நந்தகோபால்? எனக்குக் கூட இந்த குட்டி கிருஷ்ணனைப் பிரிவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது! என்ன செய்வது?” என்று கேட்டுக் கொண்டே அருகில் விளையாடிக் கொண்டிருந்த தன் பேரனை அள்ளி அணைத்துக் கொண்டார் ஸ்ரீதர்.

‘இவர்கள் எல்லோரும் தன் மீது இத்தனை அன்பைப் பொழியும் போது, இவர்களை விட்டு எப்படி அமெரிக்கா போவது?’ என்ற கேள்வி மஞ்சுளாவையும் தடுமாற வைத்தது. உணர்ச்சி மிகுதியால் அவள் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள், “மாமா, நான் வேண்டுமானால் என் வேலையை ராஜினாமா செய்து விட்டு இங்கேயே ஒரு கல்லூரியில் வேலை தேடிக் கொள்ளட்டுமா?” என்றாள் .

“நோ நோ… அந்தத் தவற்றை  மட்டும் செய்யாதே மஞ்சு. நீ எங்களை விட்டு விலகி வெகுதூரம் சென்றபிறகு தான் உன் அருமை எங்களுக்குப் புரிந்தது. கோபி எவ்வளவு நன்றாகப் படிக்கிறான். அவன் படிப்பை அடிக்கடி மாற்றி ‘டிஸ்டர்ப்’ செய்யக் கூடாது. உன் வளர்ச்சியும் தடைபடக் கூடாது” என்றாள் லட்சுமி.

இவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது நந்தகோபால் செல்போன் ஒலித்தது. கலிபோர்னியாவில் அவனுடய அறையில் தங்கியிருந்த சைனீஸ் டாக்டர்  நண்பர் தான் அழைத்தது.

“ஒரு நிமிடம்” என்று கூறி விட்டுத் தனியாக சென்று பேசிய நந்தகோபால், வேகமாக தன் அறைக்கு ஓடினான். சிறிது நேரத்தில் “மஞ்சு” என்று கத்தினான். அவன் கத்திய கத்தலில் மூவரும் பயந்து அவன் அறைக்கு ஓடினர்.

“மஞ்சு, இந்த மெயிலைப் பார். அம்மா, என்னையும் என் இரு சைனிஸ் நண்பர்களையும் நாங்கள் பயிற்சி பெற்ற கலிபோர்னியாவின் அதே மருத்துவமனையில் முழு நேர மருத்துவராக பணிபுரிய விருப்பமா என்று கேட்டிருக்கிறார்கள்! விருப்பத்தை ஒரு வாரத்திற்குள் தெரிவித்தால் உடனே ‘விசா’ பேப்பர்களை அனுப்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்றான் உற்சாகமாக .

“நீ என்ன செய்யப் போகிறாய் நந்து?” என்று கேட்டார் ஸ்ரீதர்.

“எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அப்பா. நாம் எல்லோரும் கலந்து பேசி முடிவு செய்வோம்”

“இதில் மேற்கொண்டு கலந்து பேசுவதற்கு என்ன இருக்கிறது? இத்தனை வருடங்களாக நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழாமல் பிரிந்து இருந்தது போதும்! கோபியும் அம்மா அப்பா இருவரின் அரவணைப்பிலும், ஆதரவிலும் வாழ வேண்டும். நீ உடனே உன் சம்மதத்தை தெரிவித்து விடு நந்து” என்றாள் லட்சுமி.

“இந்த வயதான காலத்தில் உங்களை விட்டு, சிதம்பரத்தில் இருக்கும் மருத்துவமனையையும் விட்டு அவர் ஏன் அமெரிக்கா அவர் வேண்டும்? நான் ஏற்கனவே சொன்னபடி அமெரிக்காவில் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கேயே ஏதாவது ஒரு பல்கலைகழகத்தில் வேலையில் சேர்ந்து கொள்ளட்டுமா?” என்றாள் மஞ்சுளா.

“போதுமே! அசடு மாதிரிப் பேசாதே மஞ்சு. நீங்கள் இருவரும் நீங்கள் பெற்ற செல்வத்தோடு, யாருடைய தொந்தரவும் இல்லாமல் சில வருடங்கள் தனியே இருக்க வேண்டும். எங்களுக்கும் ஒன்றும் வயதாகி விடவில்லை. நாங்கள் என்ன கோல் ஊன்றியா நடந்து கொண்டிருக்கிறோம்? சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனையை முரளி ஜானகியின் பொறுப்பில் விடலாம்” என்றாள் லட்சுமி தீர்மானமாக.  

மஞ்சுளா வியப்புடன் அவளைப் பார்த்தாள்

“மஞ்சுளா, என்னம்மா அப்படிப் பார்க்கிறாய்? லட்சுமி சொல்வது நூற்றுக்கு நூறு சரி. நமக்கு இனிமேல் தான் நிறைய வேலை இருக்கிறது. முதலில் நந்தகோபால் அமெரிக்காவில் பணிபுரிய தன் ஒப்புதலைத் தெரிவித்து ‘விசா’ பேப்பர்ஸ வரவழைத்து  ‘விசா’ வாங்க வேண்டும். நல்ல நாள் பார்த்து ஜானகி, முரளி திருமணம் முடிக்க வேண்டும்; இனி நாம் ஓய்வாக இருக்க முடியாது” என்று கூறி எழுந்தார் ஸ்ரீதர்.

“ராகவனையும் ,சாரதாவையும் உடனே அழைத்துத் திருமண வேலைகளை ஒப்புவிக்க வேண்டும். முரளி அவர்களுக்கு உதவி செய்வான். நந்தகோபாலும், மஞ்சுளாவும் விசா வாங்குவதற்கான வேலைகளை கவனிக்கட்டும்” என்று லட்சுமி கடகடவென்று உத்தரவிட்டாள் .

நந்தகோபால் தன் சைனீஸ் நண்பர்கள் ஆலோசனையுடன், தன் சம்மதத்தைத் தெரிவித்து ஈமெயில் அனுப்பினான். இரண்டே நாட்களி்ல் விசா பேப்பர்கள் ஆன்லைனில் வர, மஞ்சுளா எல்லா பேப்பர்களையும் நகல்கள் எடுத்துக் கொண்டாள்.

அவர்கள் கேட்ட எல்லா விவரங்களையும், விசா அப்ளிகேஷனுடனும் இணைத்து அதனுடன்  தேவையான பேப்பர்களையும் இணைத்தாள். பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, சொத்துக்கள் மற்றும் பெற்றோர்கள் விவரம் எல்லாவற்றையும் இணைத்து, ஒழுங்காக அடுக்கி, மூன்று நகல்களாக முழு விண்ணப்பங்கள் தயாரித்தாள். அதில் ஒரு நகலை மட்டும் ந்ந்தகோபாலிடம் கொடுத்தாள். அதைத் தன் பாஸ்போர்ட்டுடன் சேர்த்து வைத்துக் கொண்டான்.

மற்றொன்றை லட்சுமியிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னாள். ஒரு நகலை தன் ஹேண்ட் பேகில் பத்திரப்படுத்தி முக்கிய  பேப்பர்களுடன்  வைத்துக் கொண்டாள்.

யு.எஸ். எம்பஸியில் இன்டர்வியூவிற்கான தேதியும்  நந்தகோபால்  வாங்கிக் கொண்டான் .

“நல்ல ஹோட்டலில் தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்து விடவா டாடி?”  என்றான் நந்தகோபால்

 “நோ நோ… ஹோட்டல் எல்லாம் வேண்டாம். என் நண்பன் ஜவஹர் ஐ.ஏ.எஸ், சென்னைத் தலமைச் செயலகத்தில் பெரிய அதிகாரியாக இருக்கிறான். அவனும் அவன் மனைவி ரத்னாதேவியும் அவர்களுடைய பெரிய வீட்டில் தனியாக இருக்கிறார்கள். அவர்கள் ரொம்ப நாட்களாக எங்களை அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு போன் செய்து விட்டு அவர்கள் பங்களாவில் தங்கிக் கொள்ளலாம். கோபிக்கு விளையாட முடியும். கோபிக்கும், மஞ்சுளாவிற்கும் சுத்தமான வீட்டுச் சாப்பாடு கிடைக்கும். ஹோட்டலில் சாப்பிட்டால் உடம்பிற்கு ஏதாவது வந்து விட்டால் என்ன செய்வது?” என்றார் ஸ்ரீர்.

 கோபி ஓடி வந்து அவன் அப்பாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு கொஞ்சினான்.

“டாடி ! நாம் சென்னையில் உங்கள் வேலை முடிந்தவுடன் மஹாபலிபுரம் போய்ப் பார்க்கலாமா? என் பிரண்ட் நிஷாந்த் கூட அந்த ஊரைப் பற்றிச் சொல்லியிருக்கிறான் டாடி”

“கட்டாயம் போகலாம். சென்னையிலும் முக்கியமான இடங்களுக்குப் போகலாம் கண்ணா” என்றவன், மகனைத் தூக்கி அணைத்துக் கொண்டான். சென்னையில் ஜவஹரும் ரத்னா தேவியும் அவர்களைப் பிரியமாக உபசரித்து மிக அன்புடன் நடத்தினார்கள். கோபி அவர்களுடனே சுற்றிக் கொண்டிருந்தான் .

நந்தகோபாலிற்கும் ஐந்து வருடங்கள் அமெரிக்கன் விசா எந்தத் தடையுமின்றி கிடைத்தது. அவன் மனைவி மஞ்சுளாவும், மகன் கோபியும் அமெரிக்கப்  பிரஜையாக இருந்ததும் ஒரு காரணம் என்று தெரிந்தது. மேலும் நந்தகோபால் அமெரிக்காவில் பயிற்சிப் பெற்ற பல்கலைகழகத்தின் மூலமாக விசா பேப்பர்கள் வந்ததும் மற்றொரு காரணம்.

“விசா வேலை வெற்றிகரமாக முடிந்தது. இனி கும்பகோணம் போய் முரளி, ஜானகி திருமண ஏற்பாட்டை முடிக்க வேண்டும்” என்றார் ஸ்ரீதர் லட்சுமியிடம்.

(தொடரும் – புதன் தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

புன்னகை (சிறுகதை) – ✍ கௌரி கோபாலகிருஷ்ணன், சென்னை

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 7) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்