ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
திடீரென்று ஹாலின் மறுகோடியில் சத்தம் கேட்கவும், ஜான் எழுந்து அங்கே விரைந்தான். அமெரிக்காவில் உள்ள அலுவலகமே தவிர, பலரும் இங்கிருந்து போனவர்கள் தான். எனவே எல்லோருக்கும் தமிழ் தெரியும்.
“ஜான், பாருங்க பாலாவை. ஏதோ போன் பேசியவர் அப்படியே பின்னாடி சாஞ்சிட்டார்” என்றான் பக்கத்து சீட்டுக்காரன் பியூஷ்.
“பாலா… பாலா…” என்று கூப்பிட்டு முகத்தில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தான் கமலேஷ். போன் ஆஃப் செய்யாமல் இருந்ததைப் பார்த்து அதை எடுத்தான் ஜான்.
மறுமுனையில் ரேணுகா “ஹலோ… ஹலோ…” என்று கத்திக் கொண்டிருந்தாள்.
இவன் ரேணுகாவிடம் “நான் ஜான் பேசறேம்மா, என்ன சொன்ன போன்ல? பாலா அப்படியே சாஞ்சுட்டாம்மா” என்றான்
அவள் விஷயத்தைச் சொல்லி விட்டு, “அவர் முழிச்சிகிட்டாரா? அவரைப் பார்த்துக்கோ ஜான்” என்றாள்
மூவரும் ஒரே காலேஜில் படித்தவர்கள் தான், எனவே அவளுக்கு ஜானை நன்றாகத் தெரியும்
“சரி ரேணு… நீ கவலைப்படாதே. நான் பாத்துக்கறேன்” என்று சொல்லி போனை கட் செய்து விட்டு பாலாவிடம் போனான்
“என்னடா பாலா… இப்படி கோழையா இருந்தா எப்படி? கொஞ்சம் உன்னை அமைதிப்படுத்திக்கோ” என்றான்
“டேய் நான் உடனே இந்தியாவுக்குப் போகணும்டா, ஏற்பாடு பண்ணு” என்று சொல்லி சின்னக்குழந்தை போல் அழுதான் பாலா.
“சரி… நான் போய் உன்னை அனுப்ப ஏற்பாடு செய்ய முடியுமான்னு பாக்கறேன்” என்ற ஜான், இன்னொரு சிநேகிதனிடம் “அவனைப் பார்த்துக்கோ” என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.
அவனுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் கேத்தே பசிபிக் ஏர் சர்விசில் வேலை செய்வதால், டிக்கெட்டை சுலபமாக வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான்.
ஏர்போர்ட்டில் விட்டு விட்டு கிளம்பும் முன் பாலாவைக் கட்டிக் கொண்ட ஜான், “பாலா, நீதான் விஷ்ணு ஸகஸ்ரநாமம் கேட்பியே, அதை திரும்பத் திரும்ப கேட்டுகிட்டே போடா. நானும் ஜீஸஸை பிரார்த்தனை பண்ணிகிட்டே இருக்கேன். கிருஸ்துவோ, கிருஷ்ணனோ நிச்சயம் காப்பாத்திக் கொடுத்துடுவாங்க” என்றபடி கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டான்.
அழுதபடி பிளேனில் ஏறினான் பாலா. ஏர்போர்ட் வரும் வரை, ஏன் வந்தபின் கூட, ரேணுகாவிடம் விவரமாகப் பேச லைன் கிடைக்கவில்லை.
“நீ உள்ள போய் உட்காரு, நான் ரேணுகாவிடம் பேசி உனக்கு விவரம் சொல்கிறேன்” என்றான் ஜான்
பிளேனில் இவனுக்கு விசேஷ கவனிப்பாக இருந்தது. ஜான் சொல்லியிருக்க வேண்டும். விஷ்ணு ஸகஸ்ரநாமம் ஓடிக் கொண்டிருந்தது இயர்போனில் கேட்டுக் கொண்டே கூடவே மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், இவன் விழித்துக் கொண்டு தான் இருந்தானா? அவனுக்கே தெரியாது.
லைனே கிடைக்கவில்லையோ என்னவோ, அவனிடமிருந்து தகவலே இல்லை. நல்லவேளையாக ஃபிராங்க்ஃபர்ட்டில் இறங்கி பிளேன் மாறும் போது கிடைத்த இடைவெளியில் ரேணுகாவுடன் பேச முடிந்தது
“அம்மா, அப்பாவுடன் பேசறீங்களா?” என ரேணுகா கேட்க, ஒன்றும் வேண்டாம் என்று இவன் கடுப்படித்து விட்டு போனை வைத்து விட்டான் பாலா.
விஷயம் இது தான். இவன் நியூயார்க் போய் மூன்று மாதங்கள் ஆகி விட்டன. அங்கு இன்னும் மூன்று மாத வேலை இருக்கிறது. மருமகள் பாவம் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாளே, அவளையும் குழந்தைகள் இரண்டு பேரையும் எங்கேயாவது வெளியே கூட்டிப் போய் வருவோமே என்றாளாம் அம்மா.
பாலாவுடைய 6 வயது பையன் வைபவ், 4 வயது பெண் விபா, ரேணுகா, இவன் அப்பா, அம்மா எல்லாருமாக கேட் வே ஆஃப் இண்டியா போயிருக்கிறார்கள்.
கொஞ்ச நேரம் புறாக்களைத் துரத்தி விளையாடி கடலை வேடிக்கை பார்த்து பொழுதை கழித்த பிறகு, இருட்டிக் கொண்டு வரவே வீட்டிற்குப் புறப்பட்டால், வைபவைக் காணவில்லை.
கத்திக் கூப்பிட்டு தேடியிருக்கிறார்கள், கிடைக்கவில்லையாம். அப்போதே அங்கிருந்த ரோந்து போலீசிடம் புகார் கொடுத்து விட்டுத் தேடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இரவு நேரமாகி விட, ஒரு கான்ஸ்டேபிளை காரை ஓட்டச் சொல்லி இவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டாராம் போலீஸ் இன்ஸ்பெக்டர். வீட்டிற்கு வந்தும் மூவரும் அழுது கொண்டிருந்தார்கள்.
அம்மா “நான் தான் வெளிய போகணும்னு சொன்னேன், எல்லாம் என்னால் தான்” என்று அழ
“நான் தானே பார்த்துக் கொண்டிருந்திருக்கணும், இந்த சின்னது இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்” என்று ரேணுகா அழ
“ஐயோ… என் பேரன் யார் கையில் மாட்டினானோ, என்ன ஆவானோ? நாளைக்கே பாலா வந்தால் நான் எப்படி அவன் முகத்தைப் பார்ப்பேன்” என்றெல்லாம் சொல்லி அழுதாராம் அப்பா
அப்போது தான் ரேணுகா பாலாவிற்குப் போன் செய்திருக்கிறாள்.
அபுதாபிக்குப் போய் பிளேன் மாறி மும்பை போக வேண்டும். அங்கு போகும் வரை, ‘துப்பு கெட்டவர்கள், பார்த்துக் கொள்ள முடியாதவர்கள் வெளியே அழைத்துப் போவானேன்? அப்படியே மருமகள் மேல் பாசம் பொங்கி வழிகிறது. எல்லாம் வேஷம். இவர்களுக்கு அவுட்டிங் போக வேண்டுமென்றிருந்தால் இவர்கள் மட்டும் போக வேண்டியது தானே?’ என்றெல்லாம் மனதினுள் வைதபடியே தான் வந்தான் பாலா
ரேணுகாவையும், குழந்தைகளையும் அவளுடைய அண்ணன் வீட்டில் விட்டு விட்டுப் போகும்படி எத்தனை சொன்னார்கள்? அங்கு விட்டிருந்தால் இப்படி ஆகியிருக்காதோ என்னவோ.
ரேணுகா தான், “நீங்களும் யு.எஸ் போய், நானும் குழந்தைகளுடன் அண்ணா வீட்டிற்குப் போய்விட்டால், அம்மா அப்பா வருத்தப்படுவார்கள். தவிர, மும்பையிலிருந்து பூனே எவ்வளவு தூரம். நடுவில் ஒரு தரம் எல்லாருமே போய் வந்தால் ஆச்சு” என்றாள்.
இப்போது 6 வயது குழந்தையைத் தொலைத்து விட்டு எல்லோரும் திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தவன் கண்களில் கண்ணீர் அருவியாகப் பெருகியது.
அபுதாபியில் இவன் இறங்கும் போது “மிஸ்டர் பாலகுமார், உங்கள் வீட்டை தொடர்பு கொள்ளவும்” என்று ஒலிபெருக்கியில் அழைப்பு வந்தது.
குழந்தை கிடைத்திருக்கும் என்று நினைத்து உடனே போன் செய்தால், ரேணுகா இப்போது இன்னும் பெரிதாக அழுகிறாள்.
பதறிப் போன இவனுக்குக் கிடைத்த செய்தி ‘அம்மா, அப்பா இருவரும் விஷம் அருந்தி ஆஸ்பத்திரியில் ஐசியூவில் இருக்கிறார்களாம்’
விடியற்காலையில் அவர்கள் பெட்ரூம் கதவைத் திறக்கவேயில்லையாம். அக்கம்பக்கத்துக்காரர்களின் உதவியால் கதவை உடைத்துப் பார்த்ததில் வாயில் நுரை வரக் கிடந்தார்களாம். உடனே பக்கத்து வீட்டுகாரரின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.
இவனுக்கு முதல் பிளேனில் இருந்த மனோநிலை மாறி, ‘பாவம் அப்பா அம்மா… ஏதோ கொஞ்சம் ஜாலியாக வெளியே கூட்டிப் போய் வரலாம் என்று தானே போயிருக்கிறர்கள்? இந்த ரேணுகாவிற்குத் தானே பொறுப்பு இருந்திருக்க வேண்டும்? எத்தனை அருமையான பெற்றோர்கள்? அவர்களை இழந்து விட்டு மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா? ஐயோ… அவர்கள் பிழைக்க வேண்டுமே ஆண்டவா’ என்று மனம் புலம்பியது.
மும்பையில் பிளேன் தரையைத் தொட்டதும் முதல் ஆளாக வெளியே வந்து ஆஸ்பத்திரிக்கு ஓடினான். இவனைக் கண்டதும் ரேணுகா அவனைக் கட்டிக் கொண்டு கதறினாள்.
ஐசியூ கண்ணாடி வழியாகப் பார்த்தால் இரண்டு பேருக்கும் மூக்கில் ட்யூபும், முகத்தில் மாஸ்க்குமாகத் தெரிந்தார்கள். கைகளில் ட்யூப் வழியாக சலைன் வேறு ஏறிக் கொண்டிருந்தது.
இவனுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. வெளியே வந்த டாக்டர் “கடவுளை வேண்டிக்கோங்க, இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. வயது என்று ஒன்று இருக்கிறதே” என்று சொல்லி விட்டு நடந்தார்.
அங்கு வந்திருந்த பாலாவுடைய அத்தை, “வாடாப்பா, உங்க அம்மாவுக்கு எப்பவுமே ஊர் சுத்த ஆசை. அது தான் இப்ப இப்படி ஆயிருக்கு”என்று நொடித்தாள்.
அதற்குள் ரேணுகாவின் அண்ணா, “பாவம் நல்லதை நினைச்சி தானே ஆன்ட்டி கூட்டிட்டு போயிருக்காங்க, என்னமோ வேளைக் கோளாறு” என்றார்
பாலாவிற்கு எதையும் கேட்கவே பிடிக்கவில்லை. எத்தனை நேரமோ தெரியாது. வெளியில் உட்கார்ந்து நேரத்தைக் கழித்தார்கள் பாலாவும், ரேணுகாவும்.
“ஏய்! சின்னது எங்கே? அதையும் தொலைச்சுட்டியா?” என்று மனைவியிடம் நிஷ்டூரமாகக் கேட்டான் பாலா.
“என்னங்க நீங்க? ஆஸ்பத்திரிக்குப் போய் குழந்தையைத் தூக்கிட்டு வருவானேன்னு பக்கத்து வீட்டு அம்மாகிட்டே விட்டுட்டு வந்திருக்கேன்” என்று அவள் சொல்லவும், முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் மௌன தபஸைத் தொடர்ந்தான்.
சற்று நேரத்தில் டாக்டர் வருவதைப் பார்த்த இவர்கள் இருவரும் எழுந்து நின்றார்கள்.
வேகமாக உள்ளே போய் வந்த டாக்டர் “இனிமேல் பயம் ஒன்றுமில்லை, மிஸ்டர் பாலகுமார். நீங்கள் போய்ப் பார்க்கலாம்” என்றார்.
இருவரும் அவசரமாக உள்ளே ஓடினார்கள். அந்த அவசரத்திலும் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து கைகூப்ப மறக்கவில்லை ரேணுகா
அப்பாவைப் பார்த்த பாலா, “அப்பா என்னப்பா… நீங்கள் எத்தனை படித்தவர் பெரியவர், இப்படிச் செய்யலாமா?” என்றான் அழுது கொண்டே.
“நீ பெத்ததைத் தொலைச்சுட்டேனே பாவி. நான் பெத்ததை எப்படிப் பார்ப்பேன்? என்னை ஏண்டா காப்பாத்தினீங்க?” என்று கதறினார்
அதற்குள் திரைக்கு அடுத்த படுக்கையில் இருந்த அம்மா, “குழந்தையைப் பத்தி ஏதாவது தெரிஞ்சிதா? என்னை மன்னிச்சுக்கோடா, இல்லை… எனக்கு மன்னிப்பே கிடையாது. சாவு தான் சரியான தண்டனை” என்று ஓவென்று அழுதாள்.
“என்னம்மா நீ இப்படிப் பேசறே? குழந்தை கிடைச்சுடுவாம்மா நம்புவோம், நம்பளை தெய்வம் ஒரு நாளும் கை விடாது” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
வாசலில் ஏதோ சப்தம். ரேணுகா வைபவோடு இரு போலீஸ்காரர்கள் பின் தொடர உள்ளே ஓடிவந்தாள்.
“ஓரு நல்ல மனம் படைத்த டீ விக்கிறவர் ஒருவர் உங்கள் பையன் தனியாக அழுதுகிட்டு நிற்கறதைப் பார்த்து விட்டு அவனை தேற்றி பொழுது விடிந்ததும் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார். இதோ கூட்டி வந்துட்டோம்” என்றார் ஒரு போலீஸ்காரர்.
“அம்மா அப்பா… இதோ வைபவ் நல்லபடியா திரும்பி வந்துட்டான். உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்களை திருப்பிக் கூட்டிகிட்டா வர முடியும்? இல்லை உங்களுக்கு நீங்க வளர்த்த உங்க பேரன் மேலே அக்கறை இல்லை, கவனம் இல்லைன்னு நான் குத்தம் சொல்லிடுவேனா?” என்று சொல்லி பெரிதாய் அழ, வைபவ் அவன் கண்களைத் துடைத்து விட்டு சிரித்தான்
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் வெற்றி பெற்ற 20 சிறுகதைகள், நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன், அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வில் அச்சு புத்தகமாக வெளிவர இருக்கிறது.
இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக சாதனை நிகழ்வில் நீங்களும் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings