in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 3)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

ந்தகோபால் மஞ்சுளாவுடன் தனியாகப் பேச வேண்டும் என்று வற்புறுத்தினான். தனியாகப் பேசும் போது, தன்னைப் பற்றி விவரித்தான்.

“தன்னை மணக்க சம்மதமா?” என்று கேட்டான்

மஞ்சுளா அவனை உறுத்துப் பார்த்து சிரித்தாள்.

“இப்போது சுயம்வரமா நடக்கிறது? அண்ணா, அண்ணி என்ன சொல்கிறார்களோ அது தான் என் விருப்பம்” என்றாள்

பெரியவர்கள் சம்மதத்துடன் தட்டை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் அதற்கு முன் ஒரு கோரிக்கை வைத்தார்கள். மஞ்சுளா வேலைக்குப் போகக் கூடாது என்றார்கள். அதற்கு மஞ்சுளா ஒத்துக் கொள்ளவில்லை

“எங்களுக்கு பல கோடிகளுக்கு சொத்துக்கள் இருக்கிறது. எங்களுக்கு இருப்பது ஒரே மகன். அவனும் பல லட்சங்கள் சம்பாதிக்கிறான். நீ வாங்கும் சில ஆயிரங்கள் சம்பளத்திற்காக வேலைக்குப் போக வேண்டாம்” என்றார் லட்சுமி, நந்தகோபாலின் தாயார்

“அண்ணா, எனக்கு இப்போது திருமணம் வேண்டாமே” என்று கூறி விட்டு எழுந்த மஞ்சுளாவை கையமர்த்தினார் ஸ்ரீதர், நந்தகோபாலின் தந்தை

“கொஞ்சம் பொறு அம்மா. எங்கள் மகன் நந்தகோபால், இத்தனை நாள் எத்தனையோ பெண்களை காட்டியும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. உன்னைப் பார்த்து மட்டும் தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். எங்களையும் இங்கு அழைத்து வந்தான். அவன் விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம். நீ அவன் மருத்துவத் தொழிலுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வேலைக்குப் போவது எங்களுக்கு சம்மதம்” என்றார்

ஒரு வழியாக திருமண நிச்சயம் நடந்தது. ஆனாலும், மஞ்சுளாவின் வேலைக்குப் போவதில் உள்ள உறுதியான பேச்சு, நந்தகோபாலுக்கோ அல்லது அவன் அம்மா லட்சுமிக்கோ அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதை, அவர்கள் முகபாவம் காட்டியது

திருமணம் சிறப்பாக நடைபெற்றது. பெரிய அளவில் செலவு செய்து தங்கள் ஒரே மகனின் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தினார்கள்.

மணப்பெண்ணுக்கு தங்க நகை செட்டுகளும், முத்து, வைர செட்டுகளாக தனித்தனியே கொடுத்துத் தங்கள் பணக்காரத்தனத்தைக் காட்டினார்கள்.

மஞ்சுளாவுக்கு நகைகள் மேலோ அல்லது பணத்தின் மேலோ அதிக ஆர்வம் இல்லாததால், எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாள்

திருமணத்திற்குப் பின் முதல் முறையாக ‌கும்பகோணத்திற்குத் தன் மாமியார் வீட்டிற்குச் சென்றாள். காந்தி நகர் காலனியில் பெரிய பங்களா. வீட்டைச் சுற்றி  தென்னை மரங்கள், மாமரங்கள், வாழை மரங்கள், பூச்செடிகள் என்று இருந்தன

ஒரு பக்கம் பெரிய நீச்சல் குளம். வீடெல்லாம் பெரியதாக இருந்ததே தவிர, மஞ்சுளாவை நல்ல முறையில் வரவேற்க அங்கிருந்தவர்களுககு மனம் பெரியதாக இல்லை. நந்தகோபால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை

முள் மேல் இருப்பது போல் இருந்து விட்டு, ஒரு வாரத்தில் சிதம்பரத்தில் தனிக்குடித்தனம் தொடங்கினாள். அதுவும் ஆடம்பரமான பங்களா தான். நந்தகோபாலின் மருத்துவமனைக்கு அருகிலேயே கட்டியிருந்தனர்

வீட்டோடு செல்லம்மா என்று ஒரு சமையல்காரி இருந்தாள். ஐம்பது வயதைத் தாண்டிய விதவை. அமைதியும், கருணையும் பொழியும் முகம். தன் அம்மா இருந்தால் இப்படித் தான் இருப்பார்களோ என்று நினைத்தாள் மஞ்சுளா

மணப்பெண்ணை புதிய வீட்டில் கொண்டு வந்து விடும் போது, ராகவனும் சாரதாவும் தங்கள் மகள் ஜானகியை அழைத்துக் கொண்டு, சீர் வரிசைகளையும் எடுத்து வந்தார்கள்.

ஆனால் அவர்களையும் மதித்துப் பேச யாரும் தயாராக இல்லை. அதன் பிறகு அவர்களும் அந்த வீட்டிற்கு வரவில்லை.

திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய முதல் சம்பளம் அறுபதினாயிரம் ரூபாய் வங்கியில் டெபாசிட் ஆனதைக் கணவனுக்குக் காட்டினாள். அவ்வளவு கேவலமாக, கேலியாக அவனைத் தவிர யாராலும் சிரிக்க முடியாது

“ஏன் இந்த கேலிச் சிரிப்பு?” என்றாள்

“நம்மிடம் இரண்டு டிரைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மாதம் முப்பதாயிரம் வாங்குகிறார்கள். அதற்கே உன் சம்பளம் சரியாகி விட்டது. பிறகு சமையல்காரம்மா, மேல் வேலை செய்யும் ஆள் என்று தனித்தனியாக இருக்கிறார்கள். இந்த எக்ஸ்ட்ரா செலவுகளே ஒரு லட்சம் ஆகி விடுகிறது. இதில் உன் சம்பளம் எந்த மூலை என்று நினைத்தேன். இதற்கு ஏன் தான் வேலைக்குப் போகிறாயோ என்று யோசித்தேன், சிரிப்பு வந்து விட்டது” என்றான், அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்

இப்படித் தான் எல்லா விஷயங்களிலும் தன்னுடைய பணக்காரத்தனத்தைக் காட்டி இவளை மட்டம் தட்டிக் கொண்டு வந்தான்

திருமணமாகி ஒரு வருடம் வரை வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கிடையே சாதாரணமாகவே ஓடியது. கோபி கிருஷ்ணா பிறந்தான். கோபியிடம் மிகவும் பிரியமாக இருந்தான் நந்தகோபால்.

பிரசவத்திற்கு சாரதா வந்து ஒரு வாரம் கூட இருந்தாள். குழந்தையைப் பார்க்க வந்த நந்தகோபாலின் பெற்றோர், அப்போது கூட மஞ்சுளாவிடம் ஒன்றும் பிரியமாகப் பழகவில்லை என்றே கூற வேண்டும்.

“குழந்தை அப்படியே அச்சு அசல் என்னைப் போலவே இருக்கிறான் பார் மஞ்சு” என்றான் நந்தகோபால் பெருமையுடன்

‘குணத்தில் உங்களைப் போல் இல்லாமல் இருக்க வேண்டும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்

அவன் பணத்தைப் பற்றித் தற்பெருமை பேசப் பேச, மஞ்சுளா நத்தையாகத் தன்னைச் சுருக்கிக் கொண்டாள். அவனிடமிருந்து விலகி நின்றாள்.

அவனுடைய கார்களை அவள் உபயோகிப்பதில்லை. தன் சுயதேவைளைத் தன் சம்பளத்தில் இருந்து தானே பூர்த்தி செய்து கொண்டாள். நந்தகோபால் குழந்தை கோபியின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால், நாளடைவில் அவன் குணங்கள் மாறலாம் என்று நம்பினாள்.

ஒரு நாள் காலை நேரம், மஞ்சுளாவின் ஒன்று விட்ட சித்தப்பா மகள் சிந்தாமணி திடீரென்று அவள் வீட்டிற்கு வந்தாள்.

அவளை மஞ்சுளாவிற்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. உடையிலிருந்து நடை வரை ஏதாவது ஒரு புகழ்பெற்ற நடிகையை காப்பி அடிப்பாள். அந்த நடிகையையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டேயிருப்பாள்.

அவள் ஆடை அலங்காரத்தைப் பார்த்தாலே கண்களை மூடிக் கொள்ளத் தோன்றும். அன்றும் அப்படித் தான் பார்த்தாலே கண்கள் கூசும் ஒரு உடையில் வந்திருந்தாள்.

வேண்டா வெறுப்பாக “வா சிந்தாமணி ” என்று வரவேற்றாள் .

“நான் இப்போது சிந்து மட்டும் தான். என் பேரிலிருந்து மணியை எடுத்து விட்டேன்” என கலகலவென்று சிரித்தாள்.

“அப்படியா? அம்மா, அப்பா வைத்த பெயரை ஏன் மாற்றினாய்?” என்று வியந்து கேட்டபடி, அவளுக்கு டீ கொண்டு வந்து கொடுத்தாள்.

“நான் இப்போது டீ, காபி எல்லாம் குடிப்பதில்லை. ஏதாவது ஜூஸ் தான். அம்மா, அப்பா பேர் வைக்கும் போதே காலத்திற்கு ஏற்றாற் போல் வைக்க வேண்டும். சிந்தாமணி, குண்டலகேசி என்று பெயர் வைத்தால் என்ன செய்வது? அதனால் தான் ‘மணி’யைக் கட் செய்து விட்டு ‘சிந்து’ என்று மாற்றிக் கொண்டேன்” என்றவள் மீண்டும் உரக்க சிரித்தாள்

“ஏது, இப்போதாவது அக்காவைப் பார்க்க வேண்டும் என்று உன் மனதில் தோன்றியிருக்கிறதே. நீ நர்ஸிங் முடித்து கோயம்புத்தூரில் வேலை செய்வதாகச் சொன்னார்களே”

“கோயம்புத்தூர் ரொம்ப போர் அடித்து விட்டது. அதனால் நம் ஊர் பக்கம் வரலாமென்று டாக்டர் நந்தகோபால் மருத்துவமனைக்கு விண்ணப்பித்து ‘செலக்ட்’டும் ஆகிவிட்டேன். அதை ‘ செலிபரேட்’ செய்யத் தான் வீட்டிற்க்கு ‘பிரேக் பாஸ்ட்’டிற்கு வரச் சொன்னார். உன்னிடம் சொல்லவில்லையா?”

வழக்கமாக நந்தகோபால் மருத்துவமனை சம்பந்தமாக வருபவர்களை‌ வீட்டிற்கு அழைக்க மாட்டான். இதென்ன புதுப் பழக்கம் என்று ஆச்சர்யப்பட்டாள் மஞ்சுளா.

மஞ்சுளா கல்லூரிக்குச் செல்ல வேண்டும். இங்கேயிருந்து இவளை உபசரிப்பதா இல்லை கல்லூரிக்குச் செல்வதா என்று தயங்கியபடி யோசித்துக் கொண்டு நின்றிருந்தாள் மஞ்சுளா

அப்போது மாடியில் இருந்து ஸ்டைலாக இறங்கி வந்தான் நந்தகோபால்.

“மஞ்சு, நீ கிளம்பு. என் நர்ஸை நான் பார்த்துக் கொள்கிறேன், சமையல்கார மாமி தான் இருக்கிறார்களே” என்றான்

செல்லம் மாமி ஒரு பொருள் பொதிந்த பார்வையுடன் மஞ்சுளாவைப் பார்த்தாள். மறுவார்த்தை பேசாமல் கிளம்பினாள் மஞ்சுளா

ரு மாதம் எல்லாம் ஒழுங்காகத் தான் சென்றது. இந்த ஒரு மாதத்தில், ஆமை வீட்டிற்குள் நுழைந்தது தெரியாமல் மஞ்சுளா எப்போதும் போல் கல்லூரிக்குச் செல்வதும் ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதுமாக இருந்தாள்.

அரசல் புரசலாக நந்தகோபாலையும், சிந்தாமணியையும் இணைத்து பல செய்திகள் மஞ்சுளாவின் காதில் விழுந்தன. ஆனால் மஞ்சுளா கணவனை நம்பினாள். விடாப்பிடியாகக் காதலித்து, தன் பின்னாலேயே சுற்றி வந்த ஒருவன் அவ்வளவு சீக்கிரம் மனம் மாற மாட்டான் என்று நம்பினாள்

இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நந்தகோபால் வீட்டில் இருப்பதில்லை. மஞ்சுளாவும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. குழந்தை கோபிக்கு கதை, பாட்டு என்று சொல்லிக் கொடுப்பதிலும், சமையலில் செல்லம் மாமிக்கு உதவி செய்வதிலும் ஞாயிற்றுக்கிழமை கழிந்தது.

மஞ்சுளா கல்லூரியில் மதியம் சாப்பிடும் நேரத்தில் செல்லம் மாமி போன் செய்தாள்

“மஞ்சு, குழந்தைக்கு வாந்தியும் ஜுரமுமாக இருக்கு, இப்போது கூட ஒருமுறை வாந்தி எடுத்து விட்டான். உடனே வர முடியுமா அம்மா?” என்றாள்

“அவன் அப்பாவிற்கு போன் செய்தீர்களா மாமி?” என்று கேட்டாள் மஞ்சுளா

“செய்தேன், ஆனால் ஸ்விட்ச் ஆப் என்று வருகிறது” என்றாள் மாமி

“நான் உடனே அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறி விட்டு, கல்லூரியில் முதல்வரின் அனுமதியுடன் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்

மாடி அறையில் மிகவும் சோர்வுடன் கண்களை மூடிப் படுத்திருந்தான் கோபி. கோபியைத் தூக்கிக் கொண்டு நந்தகோபாலின் மருத்துவமனைக்குச் சென்றாள்

அவன் அறைக்கு வெளியே இருந்த ரிஸப்ஷனிஸ்ட், “டாக்டர் ஒரு முக்கிய கான்பரன்ஸில் இருப்பதால் யாரையும் உள்ளே விடக் கூடாது என்று சொல்லி இருக்கிறார் மேடம்” என்றாள்

மஞ்சுளா எதையும் காதில் வாங்காமல் அவளைத் தள்ளி விட்டு, அவன் அறைக் கதவைத் திறந்து உள்ளே போனவள், வெட்கித் தலை குனிந்தாள்.

நந்தகோபாலின் மடியில் அரைகுறை ஆடையுடன் சிந்தாமணி. வெட்கத்தாலோ அல்லது அச்சத்தாலோ, சிந்துவை தள்ளி விட்டு எழுந்து நின்றான் நந்தகோபால்.

மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

(தொடரும் – புதன் தோறும்)

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. “Naan ippOthu en peyarii uLLa ‘Chinthuvai’ eduththuvittu ippOthu veRum ‘MaNi ‘ thaan enRu cholli gala galavenRu chiriththaaL enRa choRkaLai migavum rasiththEn. Inthak kathaiyai ezhuthiya ‘Kathaasiriyarukku’ en vaazhththukkaL. Pardon me for not writing these remarks in Tamil now.

    M.K. Subramanian,
    Chapel Hill, N. Carolina-27516,
    USA..

பல வலி (சிறுகதை) – ✍ கவிஞர் இரஜகை நிலவன், மும்பை 

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்