ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மஞ்சுளாவுக்கு வகுப்பிலும் மனம் நிலைக்கவில்லை. காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினாள்.
ஹாலில் மாட்டியிருந்த’ கூக்கு பறவை கடிகாரம்’ ஐந்து முறை கூவி விட்டு உள்ளே போய் விட்டது.
கோபிக்கு பள்ளிக்கூடம் மூன்று மணிக்கெல்லாம் முடிந்து விடும். அங்கிருந்து நேராக ‘டே- கேர்’ சென்டருக்குப் போய் விடுவான். பிறகு ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவான்
அவன் வீட்டிற்கு வரும் முன் பெரும்பாலும் மஞ்சுளா வந்து விடுவாள். இன்று மணி ஐந்தாகியும் கோபி இன்னும் ஏன் வரவில்லை என்று யோசித்துக் கொண்டு வெளியே போய் கண்ணாடிக் கதவின் வழியே பார்த்தாள்
ஸ்வெட்டர், ஹூட் வைத்த ஜாக்கெட் எல்லாம் போட்டுக் கொண்டு பேக்-பேகை மாட்டிக் கொண்டு துள்ளித் துள்ளி வந்து கொண்டிருந்தான்.
அவளைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே வந்து, தோளில் மாட்டியிருந்த பையைத் தூக்கி அருகில் இருந்த சோஃபாவில் வீசியெறிந்து விட்டு அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்து சிரித்தான் கோபி.
“கண்ணா, என்ன இது! ஷூ சாக்ஸை கழற்றி விட்டு குளிக்கவில்லை, என்ன ஆயிற்று உனக்கு?” என்றாள் மஞ்சுளா சிரித்துக் கொண்டே
“அம்மா, வரும் சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு ஹைஸ்கூல் மீட்டிங் ஹாலில் பியானோ கான்ஸெர்ட். நான் ஒரு மணிக்கெல்லாம் அங்கே இருக்க வேண்டும் என்று மியூசிக் டீச்சர் கூறினார்கள்” என்றான் குதூகலமாக
“அப்படியா! ரொம்ப சந்தோஷம். நாம் சனிக்கிழமை சீக்கிரம் லஞ்ச் முடித்துக் கொண்டு பன்னிரண்டு மணிக்கே கிளம்ப வேண்டும். அப்போது தான் காரைப் பார்க் செய்ய இடம் கிடைக்கும். சரி, நீ போய் கை வாஷ் பண்ணிக் கொண்டு சமையலறைக்கு வா. நான் உனக்கு சாப்பிடக் கொஞ்சம் பிஸ்கட்டும், சாக்லேட் மில்க்கும் கலந்து வைக்கிறேன்” என்று அவன் கைகளை விடுவித்து விட்டு, அவனுக்கு வேண்டிய உணவை எடுத்து வைக்க உள்ளே சென்றாள்.
கோபி மாடியில் உள்ள அவன் அறைக்கு ஏதோ ஒரு பாட்டை முனகிக் கொண்டு சென்றான். அப்போது அவள் செல்போன் ஒலித்தது. நந்தகோபால் தான்.
‘சட்டரீதியாகத் தான் அவனிடமிருந்து பிரிந்தாயிற்றே. இப்போது ஏன் தொந்தரவு செய்கிறான்?’ என்று எரிச்சலுடன் போன் எடுத்து, “ஹலோ” என்றாள்
“நான் நந்தகோபால் பேசுகிறேன் மஞ்சுளா. உன்னைத் தொந்தரவு செய்வதற்கு மன்னித்துக் கொள். வரும் சனிக்கிழமை சந்திக்கலாமா?” என்றான் ஆவலுடன்
“ஏன் இன்னும் ஏதாவது பேப்பரில் கையெழுத்து வாங்க வேண்டுமா?” என்றவள், டக்’ கென்று நாக்கைக் கடித்து “ஸாரி” என்றாள்
“நீ கேட்டதில் தப்பில்லை. நான் உன்னை அவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கறேன். எனக்கு உன்னையும் நம் குழந்தையையும் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது. வரும் சனிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ பார்க்க முடியுமா? ப்ளீஸ்” என்றான்.
“ஸாரி, சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கோபிக்கு ஹைஸ்கூலில் பியானோ கான்ஸர்ட் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை அருகில் உள்ள முருகன் கோயிலில் அவனுடைய வாய்ப்பாட்டு கச்சேரி இருக்கிறது” என்றாள் .
“சனிக்கிழமை , பியானோ கான்ஸர்ட்டுக்கு நானும் வரலாமா?” என்றான் .
“ஸாரி, முன் அனுமதியுடன் என்ட்ரி டோக்கன் இருந்தால் தான் உள்ளே அனுமதிப்பார்கள்” என்றாள்
“நான் இங்கே ஏன் வந்தேன் என்று கூட கேட்க மாட்டாயா மஞ்சு? இங்கே மருத்துவக் கல்லூரியில் ஒரு கான்பரன்ஸ். இன்னும் இருபது நாட்கள் தான் தங்கியிருப்பேன். அதற்குள் உங்களைப் பார்க்க மனம் ஏங்குகிறது” என்றான் கெஞ்சும் குரலில்
“நான் போனை வைத்து விடுகிறேன்” என்றவள் போனை ‘ஆப்’ செய்து விட்டாள் .
“மம்மி! ஃபோனில் யார்?” என்று கேட்டுக் கொண்டே கோபி அங்கே வந்தான்
அவனுக்கு ஒன்றும் பதில் சொல்லாமல், கலந்த பாலை மைக்ரோஅவனில் சூடு செய்து அவனிடம் கொடுத்தாள். கோபி அத்துடன் வந்த போனின் அழைப்பை மறந்து, வேகமாகப் பாலை குடித்து விட்டு, பியானோ பிராக்டீஸ் செய்யத் துவங்கினான்
மஞ்சுளா மனம் மீண்டும் பழைய நினைவுகளில் மனம் தாவியது.
இவள் திருமணத்தின் போது சிதம்பரத்தில் தான் டாக்டராக பிராக்டீஸ் செய்து கொண்டு இருந்தான் நந்தகோபால். ஓரளவிற்கு பிரபலமான டாக்டர். பரம்பரை பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
அவன் பெற்றோர் இருவரும் கும்பகோணத்தில் டாக்டர்களாக தனியார் மருத்துவமனை வைத்து பணத்தில் கொழித்து வந்தார்கள். அவன் அவர்களோடு சேர்ந்து மருத்துவம் செய்யாமல், சிதம்பரத்தில் வந்து தனியாக பிராக்டீஸ் செய்தது தான் விதி போலும்
நல்ல நிறமும், ஆறடி உயரமும், உயர்த்திற்கேற்ற கனமும், சுருண்ட முடியுமாக பார்க்க விவேகானந்தர் போல் இருந்தான். ஒரு முறை பார்த்தால் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகான தோற்றம் அவனுக்கு.
மஞ்சுளா, சாண்டில்யனின் மஞ்சளழகி போல் அழகான எடுப்பான தோற்றமா? பட்டிமன்றங்களிலும் டி.வி.யிலும் கேட்கும் அவள் பேச்சுத் திறமையா? அவள் எழுதிய புத்தகங்களுக்கும் கட்டுரைகளுக்கும் கற்றோரிடமிருந்து வரும் பாராட்டா? இவற்றில் எது அவனைக் கவர்ந்தது?
எங்கே அவன் அவளுக்கு அடிமையானான் என்று தெரியவில்லை. மஞ்சுளாவின் ஒவ்வொரு பட்டிமன்றப் பேச்சிற்கும் முதல் வரிசையில் இருப்பான். பேச்சு முடிந்ததும் அவளோடு தனியாகப் பேச முயல்வான்.
ஆனால் அவளோ எதையும் கண்டு கொள்வதில்லை. ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டுப் போய் விடுவாள். ஆனால் நந்தகோபால் பிடிவாதம் மிக்கவன். பணக்காரன் அல்லவா? நினைத்தது உடனே கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன்
எதையும் தன்னுடைய பணத்தால் சாதித்து விடலாம் என்று நினைப்பவன்.
மஞ்சுளாவைப் பற்றி விசாரித்தான். அவள் பெற்றோரில்லாமல் சிறு வயது முதல் அண்ணா அண்ணியிடம் வளர்ந்தவள் என்று தெரிந்து கொண்டான். அண்ணா அண்ணி இருவரும் வங்கி ஊழியர்கள் என்றும், மஞ்சுளாவின் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார்கள் என்பதையும், மஞ்சுளாவும் அவர்கள் பேச்சை மீறி நடக்க மாட்டாள் என்பதையும் நன்கு அறிந்து கொண்டான்
உடனே உதவிக்குத் தன் பெற்றோரை அண்டினான். அவர்களுக்கோ மஞ்சுளாவிடம் துளியும் அபிப்பிராயம் இல்லை!
ஒரு டாக்டர் தான் தங்கள் மருமகளாக வரவேண்டும் என்று எண்ணம் வைத்திருந்தார்கள். மேலும் பரம்பரை பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்து மருமகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்
ஒரு முப்பது பெண் டாக்டர்களை மகனுக்காகப் போய் பார்த்தார்கள். எல்லோரும் அவர்களுக்கு மனதிற்குப் பிடித்தவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் ஏனோ நந்தகோபாலுக்கு யாரையும் பிடிக்கவில்லை. இதற்குள் அவனுக்கு முப்பது வயதைத் தாண்டியது
அந்த வயதில் பெண் டாக்டர்களாகத் தேடும் போது விதவைகளாகவோ, விவாகரத்து ஆனவர்களோ, ஏன் கையில் குழந்தையோடு கூட இருந்தார்கள். மனம் வெறுத்து விட்டது அவர்களுக்கு.
இந்த மாதிரி சூழ்நிலையில் தான் நந்தகோபால் மஞ்சுளாவைப் பற்றிக் கூறினான். அவர்கள் அரை மனதுடன் தான் அவளைப் பெண் பார்க்க வருவதாக ஒத்துக் கொண்டார்கள்
திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பழங்களோடும், ஸ்வீட் பாக்கெட்டுகளோடும் தன் பெற்றோருடன் மஞ்சுளா வீட்டின் முன் வந்து நின்றான் நந்தகோபால்.
ராகவனும், சாரதாவும் இதை எதிர் பார்க்கவில்லை. மஞ்சுளா சாதாரண ஒரு நூல் புடவையில் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தாள்
ஒரு எளிய நூல் புடவையில் கல்விக் கடவுள் சரஸ்வதியே நேரில் நின்றது போல் இருந்தாள். இவ்வளவு அழகா இந்த பெண் என்று வியந்து போனார்கள் நந்தகோபால் பெற்றோர்.
மஞ்சுளாவும் இவர்களை எதிர் பார்க்கவில்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்
சாரதா தான் தன்னை சுதாரித்துக் கொண்டு வந்தவர்களை உபசரித்தாள். ஆனால் அவளுக்கும் அவர்கள் வந்த காரணம் புரிந்தும் புரியாமல் இருந்தது. ஆனாலும் நந்தகோபால் போன்ற பெரிய டாக்டர் தன் வீட்டிற்கு மாப்பிள்ளையாக முடியுமா என்று சந்தேகப்பட்டாள்
வந்தவர்கள் நேரடியாக விஷயத்தைச் சொன்னார்கள். ராகவனாலும் சாரதாவாலும் நம்ப முடியவில்லை. மஞ்சுளாவிடம் விருப்பமோ அல்லது வெறுப்போ தெரியவில்லை. எப்போதும் பெரியவர்கள் பேசும் போது இடையில் பேசுவது அவள் பழக்கம் இல்லை.
சாரதாவிற்கு மட்டும் மிகவும் சந்தோஷம். “மஞ்சுளா மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டோம், அவள் அதை மறுத்து விட்டாள். இப்போது ஒரு டாக்டருக்கு மனைவியாகப் போகிறாள்” என்று மிகவும் மகிழ்ந்தாள்
ராகவன் பிரமித்து நின்றான். நந்தகோபால் மஞ்சுளாவுடன் தனியாகப் பேசவேண்டும் என்று வற்புறுத்தினான். தனியாகப் பேசும் போது, தன்னைப் பற்றி விவரித்தான். தன்னை மணக்க சம்மதமா என்று கேட்டான்
மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும் – புதன் தோறும்)
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings