in

எங்கே என் அத்தை? (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

எங்கே என் அத்தை? (சிறுகதை)

மாதப் போட்டிக்கான பதிவு – நவம்பர் 2021

 

விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய வினாடியே என்னுள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

விமான பணிப்பெண் அருகில் வந்து “மேடம் சீட் பெல்ட் போட்டுக்கறீங்களா? நான் ஹெல்ப் பண்ணவா” என ஆங்கிலத்தில் கேட்கும் வரை, சீட் பெல்ட் போடவில்லை என்பது நினைவுக்கு வரவில்லை.

தனியாக இந்தியா வருவது எனக்கு புதிதல்ல. நானும் அவரும் அவசியத்திற்கு தனியாக வந்து செல்வோம். திட்டமிட்ட பயணம் என்றால் மட்டுமே குழந்தைகளை அழைத்து வருவோம். அப்போதெல்லாம் மனம் அலை பாய்ந்ததில்லை.

இப்போது என் பிரிய அத்தையைப் பார்க்கப் போகும் சந்தோஷம் என்னுள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

நினைவுகள் பின்னோக்கி ஓடியது.

அப்போது நாங்கள் தஞ்சாவூரில் குடியிருந்தோம். அப்பா, அம்மா, அண்ணா, நான், பாட்டி, சீதா அத்தை, அத்தை பசங்க..பாலா, ராதா, வீட்டோடு இருந்து வேலை பாத்த மீனு என 10 உருப்படிகள். வீடு ஜேஜே’வென இருக்கும்.

அம்மா பெரிய பானையில் தான் சாதம் வடிப்பாள். சீதா அத்தைக்கு என் மேல் தனி பிரியம். அத்தையின் செல்லம் நான் தான்.

அப்பாவின் ஒரே தங்கை. உள்ளூர் மாப்பிள்ளையாக பார்த்தால், தங்கையை பிரிய வேண்டாம் என உள்ளூர் பையனுக்கு கட்டி கொடுத்தார். ஆனால் எல்லாம் ரொம்ப நாள் நிலைக்காமல் போனது.

இரண்டு பிள்ளைகள் பிறந்த, கொஞ்ச நாளிலேயே, ஒரு சாலை விபத்தில் மாமா போய் சேர்ந்தார். காரியம் முடிந்த கையோடு, தங்கையையும், பிள்ளைகளையும் தன் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார் அப்பா.

என் நினைவு தெரிந்த நாளிலிருந்து, சீதா அத்தை எங்களுடன் தான் இருக்கிறாள். அத்தையைப் போல ஒரு மனுஷியை பார்க்க முடியாது. எவ்வளவு சோகம் உள்ளுக்குள் இருந்தாலும், துளி கூட காண்பிக்க மாட்டாள்.

காலை எழுந்ததும், எங்கள் எல்லோரையும் காலைக் கடன்களை ஒழுங்காக செய்ய வைப்பாள். குளித்து முடித்ததும், விபூதி பூசி தேவார திருவாசக பாடல்களை பாடச்  சொல்லிக் கொடுப்பாள்.

மற்ற எல்லா பிள்ளைகளும் பள்ளி கிளம்பி,  விட நான் மட்டும் முரண்டு பண்ணுவேனாம். அத்தை, என்னை மட்டும் மடியில் இருத்தி, கதை சொல்லி சாப்பாடு ஊட்டி, பிறகு தானே பள்ளியில் கொண்டு விடுவாள்.

இரவு நேரத்தில், கற்சட்டியில் சோறு பிசைந்து, கவளமாக கையில்  உருட்டி போடுவாள். நாயன்மார்கள், ஆழ்வார்கள் என தினமும் ஒருவர் கதையை சுவாரஸ்யமாக சொல்லுவாள்

வேலை பார்க்கும் மீனுவைக்   கூட, வீட்டுக் குழந்தையாகத் தான் பார்ப்பாள்

“ஏட்டி மீனு, கிட்ட வா. வந்து ரெண்டு கவளம் வாங்கிக்கோ” என்பாள்.

என் பாட்டிக்கு இது பிடிக்காது, முணுமுணுப்பாள். மீனுவுக்கு லேசாக உடம்பு சரியில்லையென்றால், உடனே டாக்டரிடம் அழைத்துப் போவாள்.

“தொடப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சம் ” என்பாள் பாட்டி.

“அம்மா அப்படி பேசாதே, அவ சின்ன பொண்ணு. நம்ம புள்ள வேற அவ வேற இல்ல. குத்திப்பாரு உன்னோட உடம்புலேயும்  சிவப்பு ரத்தம் தான் ஓடுது, அவ உடம்புலயும் சிவப்பு இரத்தம் தான் ஓடுது” என்பாள் அத்தை

நான் வளர வளர, அத்தையின் நல்ல பண்புகள் என்னுள் பதிய ஆரம்பித்தது.

இன்று வரை எங்கள் வீட்டு கார் டிரைவரை ‘அண்ணா’ என்று தான் அழைக்கிறேன். வேலை பார்ப்பவர்களையும் கூடப்பிறந்தவர்களாகத் தான் பாவிக்கிறேன். அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு தவறாமல் போவேன். இதெல்லாம் அத்தை வளர்ப்பில் வந்த பண்பு என்று எண்ணிக் கொள்வேன்.

ஒரு செடி வாடியிருந்தால் கூட பொறுக்காது, உடனே ஒரு வாளி தண்ணீரைத் தூக்கிக் கொண்டு ஓடுவாள். பாசம், கருணை, நேர்மை என நற்பண்புகளின் மொத்த உருவம் என் அத்தை, அப்படிப்பட்ட பாச தேவதையைத் தான் பார்க்கப் போகிறேன்.

அத்தை பசங்க கல்யாணத்திற்கு வந்த போது, வேலையில் சரியாக பேச முடியவில்லை. போன தடவை நான்  தஞ்சாவூர் வந்தப்ப,  பாலா அத்தான் சிங்கப்பூரில் டாக்டராக இருக்கிறான் என்றும், அத்தை மகன் கூட இருப்பதாக அப்பா சொன்னார்.

பாலா அத்தான் சென்னையில் மருத்துவமனை கட்ட, அத்தை தஞ்சாவூரை மறந்து சென்னையிலேயே செட்டிலானாள். 10 நாட்களாவது அத்தையுடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு தான், சென்னைக்கு பிளைட் டிக்கெட் போட்டிருந்தேன்

ஏர்போர்ட்டுக்கு அத்தான் வந்திருந்தான். செக்கிங் முடித்து வெளியே வர ஒரு மணி நேரம் ஆயிற்று. வீடு வரும் வரை குழந்தைப் பருவத்து நிகழ்வுகளையே பேசிக் கொண்டு வந்தோம்.

என்னைப் போல அத்தானும் எல்லா விஷயங்களையும் நினைவில் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

வீடு வந்ததும் வாசலிலேயே, என் கண்கள் அத்தையை தேடியது.
“அபி அம்மாவ தேடுறியா?  இப்ப வந்துடுவா. ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட். எல்லாம் அம்மா தான் பார்த்துகறா”

“என்னது? அத்தை ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் பார்க்கறாளா? “

“எல்லாம் உன் செல்ல அத்தையை  நீயே கேட்டுக்கோ, நான் இப்பக் கிளம்பறேன். பேஷண்ட்ஸ் வெயிட் பண்ணிகிட்டு இருப்பாங்க.. செல்வி, அம்மாவுக்கு வேணுங்கறதை செஞ்சு கொடு” என்று வேலை பார்க்கும் பெண்ணிடம்  சொல்லிவிட்டு கிளம்பி போனான் அத்தான்.

மனதின் ஓரத்தில் ஒரு சிறு ஏமாற்றம் எட்டிப் பார்த்தது. பல வருடங்கள் கழித்து வரும் என்னை வரவேற்க, அத்தை ஆசையோடு வாசலில் நிற்பாள், கட்டி அணைத்துக் கொள்வாள் என்று எதிர்பார்த்தது தவறோ?  என்று தோன்றியது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அத்தையின் கார் உள்ளே நுழைய, நான் வாசலுக்கு ஓடினேன். காரிலிருந்து இறங்கிய அத்தையைப் பார்த்ததும் ஒரு கணம் திகைப்பாக இருந்தது.

மடிப்பு கலையாத காட்டன் சேலையை நீட்டாக கட்டி பின் பண்ணி, மேட்ச்சாக டிசைன் பிளவுஸ் போட்டிருந்தாள். ஒரு கணம் தஞ்சாவூர் சுங்கடி சேலை கட்டிய அத்தை கண் முன் வந்தாள்.

அடுக்களை கழுவி விட்டு படுக்கும்போது லேசாக நனைந்த அந்த ஈரச் சேலையின் குளிர்ச்சிக்காக,  அவள் மேல் காலைப் போட்டுக் கொண்டு தூங்கியது நினைவுக்கு வந்தது.

பாலா அத்தான் குழந்தைகளுக்கு அந்த பாக்கியம் கிடைக்காது என்று நினைத்த போது, எனக்கு சிரிப்பு வந்தது.

“வாடி அப!” என்ற அத்தை, நாகரீகமாக என்னை ஹக் பண்ணி கொண்டாள்.

உள்ளே வந்தவள் சோபாவில் அமர்ந்து. “செல்வி” என்று குரல் கொடுக்க, செல்வி இரு கண்ணாடித் தம்ளர்களில் ஜூஸ் எடுத்து வந்தாள்.

“ஏண்டி அறிவிருக்கா? இப்படி ததும்ப கொண்டு வராதேன்னு  எத்தனை தடவை சொல்றது. சாரில சிந்திட்டா? காஸ்ட்லி சாரி வீணாகிடாது!” என்றவள், “அப்ப்பா இவர்களிடம் மாரடிக்க வேண்டியிருக்கு!” என்று அலுத்துக் கொண்டாள்

டிரைவர் சாவியை கொண்டு வந்து கொடுக்க, “சுந்தரம்… தினமும் லேட்டா வந்தா சரிப்படாது. நான் சீக்கிரம் வேற ஆள் தான் தேடணும்” என்றாள் அத்தை கண்டிப்பான குரலில்

“இல்லம்மா… குழந்தைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு”

“காரணம் எல்லாம் எனக்கு வேண்டாம், டிசிப்ளின் தான் முக்கியம்” என்றாள் கடுமையாக

“அப்புறம் அபி, நீ உன் பிள்ளைங்க,  உன் வீட்டுக்காரர்  எல்லாம் நல்லா இருக்காங்களா? உனக்காகத் தான் இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டேன். நாளைக்கு என் கூட ஹாஸ்பிடலுக்கு வா, உனக்கு சுத்திக் காண்பிக்கிறேன். ஹாஸ்பிடல் நிர்வாகத்தை நான் தான் பார்த்துக்கறேன்” என்றாள் அத்தை

கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அத்தை, பேசுவதை கேட்க ஆச்சரியமாக இருந்தது.

அதே நேரம், வேலையாட்களிடம் அவள் காட்டிய கடுமை எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அத்தை நிறையவே மாறிவிட்டாள்.

மறுநாள் சொன்னபடி ஹாஸ்பிட்டல் கூட்டிக் கொண்டு போனாள். அத்தை இயல்பாகவே நிர்வாகத்தில் கெட்டிக்காரி. ஒரு படித்த பெண்ணை பி.ஏ.வாக வைத்துக் கொண்டு, பல்வேறு வேலைகளை மேற்பார்வை பண்ணுவது, பிரமிப்பாக இருந்தது.

மிகவும் பெருமையாகவும் இருந்தது. என்னை தன் அறையில் உட்கார வைத்து விட்டு வெளியே போனாள்.

நான் எதேச்சையாக வெளியே வர, அத்தை அடுத்த அறையில் யாருடனோ பேசுவது லேசாக கேட்டது.

“மேடம்… அந்த பேஷண்ட் வசதியில்லாதவன். அவனால் இந்த டெஸ்ட்கெல்லாம் பணம் செலவு பண்ண முடியாது.  அது  அவனுக்கு எடுக்க தேவையுமில்லை”

“டாக்டர் இவ்வளவு சம்பளம் கொடுத்து உங்களை வேலைக்கு எடுத்தது, எங்களுக்கு வருமானத்தை சம்பாதித்து கொடுக்கத் தான். ஏழைகளுக்கு சேவை பண்ண இல்லை.  அவங்களுக்கு செலவு பண்ண வசதி இல்லைன்னா, அரசாங்க ஆஸ்பத்திரி போக வேண்டியது தானே? நாம தடுக்கலையே!”

கோபமாய் வெளியே வந்தவள், என்னை பார்த்து திகைத்தாள்

“அபி… இப்ப உள்ள உலகத்துல இப்படி எல்லாம் இல்லைன்னா ஆஸ்பத்திரி நடத்த முடியாது. கொஞ்சம் கறாரா இருந்தால தான் லாபத்தைப் பார்க்க முடியும்” என்றாள், அந்த ஆஸ்பத்திரியின் நிர்வாக அதிகாரி சீதா

என் இளமனதில் புத்தரின், காந்தியின், தர்மத்தை போதித்தவள். மனம் கசந்தது.

“சரி வா.. வீட்டுக்குப் போகலாம்!” என்றாள் அத்தை

“அத்தை… நான் நாளைக்கு தஞ்சாவூர் போகலாம்னு இருக்கேன். அப்பா அம்மாவை பாக்கணும் போல இருக்கு” என்றேன்.

“பிறந்த வீட்டு ஞாபகம் வந்துருச்சு உனக்கு, போயிட்டு வா” என்றாள் பட்டும் படாமல்

மனதில் இனம் புரியாத சோகமும் ஏமாற்றமும் பிடித்தாட்ட, மறுநாள் தஞ்சை கிளம்பினேன்

அங்கு, நினைவுகளிலாவது என் பிரிய அத்தையை மீட்டெடுக்கலாம் என்ற ஆசையுடன்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. மாற்றம் …எனது உறவினர் ஒருவரிடம் கண்டது இக்கதை எழுத தூண்டியது.
    தங்கள் கருத்துக்கு அன்புடன் மிக்க நன்றி சகோதரி

இல் ❤ (சிறுகதை) – ✍ இன்பா, சென்னை

அறிந்தும் அறியாமலும் (சிறுகதை) – ✍ கௌசல்யா லட்சுமி, மலேஷியா