in ,

முறுக்கு மேலே கிறுக்கு😊(சிறுகதை) – ✍ லக்ஷ்மீஸ் பவன்

முறுக்கு மேலே கிறுக்கு😊(சிறுகதை)

மாதப் போட்டிக்கான பதிவு – நவம்பர் 2021

“என்னடா சுவாமிநாதா… பொண்ணுக்கு கல்யாணம் பேசி முடிச்சாச்சு, இனி மளமளன்னு கல்யாண வேலைய பாக்காம என்ன இப்படி விட்டத்த பாத்துண்டு உக்காந்துன்டு இருக்க?”  

கோமதி மாமியின் குரல் கேட்டு திடுக்கிட்டார் சுவாமிநாதன்

“அட ஆரம்பமே அசத்தலா இருக்கே..மேரேஜ் ஸ்டோரியா.. மேலே சொல்லுங்க” என எழுத முற்பட்டாள் ஆனந்தி.

இதைக் கேட்ட ஆரவ், “இங்க பாரு, சொல்றத எழுது. இப்படி நடுல பேசினா எனக்கு கதை வராது பாத்துக்கோ”

தலையை ஆட்டியவாறு, “சரி சொல்லுங்க” என்றாள்

ஆரவ் மீண்டும் யோசித்து, “பாரு கதை தடை பட்டுருச்சு, இப்ப இந்த சுவாமிநாதருக்கு என்ன பிரச்சனைனு எழுதலாம்?”

“இங்க பாருங்க,  இந்த பத்திரிக்கை போட்டில மட்டும் ஜெயிச்சிட்டா, பரிசு 20,000ரூ. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. சாமிநாதருக்கு ஒரு பெரிய பிரச்சனையா யோசிங்க, வேணும்னா பண கஷ்டம்னு வெச்சுக்கலாமா?”

“இல்ல ஆனந்தி, அது ரொம்ப யூசுவலா  இருக்கும்”

“அப்போ பொண்ணுக்கு அம்மா இல்ல, அந்த அம்மாவை இவரு நினைச்சு பீல் பன்றா மாதிரி …” யோசனையை கேட்டு ஆரவிடமிருந்து ஒரு முறைப்பே பதிலாய் வந்தது.

கணவன் மனைவி இருவரும் இப்போது விட்டத்தைப் பார்த்து யோசித்தனர்.

டிங்டாங்..

வாசல் அழைப்பு மணி அடிக்க, “யாரு? யு கேரி ஆன், நான் இப்போ வந்துடறேன்” என வாயில் பக்கம் போனாள் ஆனந்தி.

“என்ன தம்பி?”

“அக்கா  ரைஸ் மில்லுக்கு போகணும்னு சொன்னீங்களாமே, அப்பா சொன்னாரு. இப்போ அந்த பக்கம் போறேன், சாமான் குடுத்தீங்கன்னா அரைச்சட்டு வந்துடுவேன்” என்றான் மளிகை கடை அண்ணாச்சியின் மகன்

“இதோ வரேன் தம்பி” என அரிசியும் உளுந்தும் எடுக்க உள்ளே ஓடினாள்.

கதை பற்றிய யோசனையோடு இருந்த ஆரவ்’விடம், “ஒரு நிமிஷம்” என சைகை காட்டி, அரிசி, உளுந்து தூக்கை அண்ணாச்சி மகனிடம் ஒப்படைத்தாள்.

“இங்க பாரு தம்பி, அரிசி ஈர அரிசி. முறுக்கு சுத்த, நல்லா நைஸா அரைக்கணும். அரிசி போட்டுட்டு அப்பறம் உளுந்து போட சொல்லு, கையோடு இருந்து வாங்கிட்டு வந்துடு தம்பி” 

கதவை தாளிட்டு மீண்டும் ஆரவ் சொல்லும் கதையை எழுத ஆரம்பித்தாள்.

“ம் .. சொல்லுங்க, விஸ்வநாருக்கு…  சாரி சாமிநாதருக்கு என்ன ப்ராப்ளம்?”

“சொல்றேன் எழுது…”

கோமதி மாமி குரல் கேட்டு திடுக்கிட்டான் சுவாமிநாதன். 

“மாமி வாங்கோ, ஏதோ உங்கள மாதிரி பெரியவா ஆசீர்வாதம் என் பொண்ணுக்கு இப்போ நல்ல இடமா அமைஞ்சிடுத்து. கல்யாணத்துக்கு…”

டிங் டாங் .. மறுபடி அழைப்பு மணி.

ஆனந்திக்கு ஆச்சர்யம். “அட தம்பி, இவ்வளோ சீக்கிரமா அரைச்சி குடுத்துட்டானா? ரொம்ப தாங்க்ஸ் பா”

“அக்கா 5 கிலோ அரிசி, அரை கிலோ உளுந்து. அரவு கூலி 95 ரூவா. இந்த பிடி, மீதி அஞ்சு ரூபா கணக்கில் வெச்சிக்கோ”

கதவைத் தாளிட்டு, மீண்டும் கதை எழுத தொடர்ந்தாள்.

“கல்யாணத்துக்கு…” என வாய் திறக்கும் போது

சுவாமிநாதரின் மனைவி பேச்சு குரல் கேட்டு, “யாரு கோமதி மாமியா? வாங்கோ மாமி, காபி சாப்பிடரேளா?” என்றாள்.

“ஓ .. அவர் வைப் பேர் என்ன?” ஆனந்தி கேட்டதும், ஆரவ் முறைக்கவும், மறுபடி எழுதலானாள்.

டிங் டாங்…..மறுபடியும்… அதே அதே ..

“என்ன தம்பி?” மறுபடி அண்ணாச்சி மகன் வந்திருப்பதால் ஆச்சர்யமாய் கேட்டாள் ஆனந்தி.

“ஆங் அக்கா, ரைஸ் மில் அண்ணே சொன்னாரு. மிஷின் சூடுல மாவு சூடா இருக்குமாம், அத உடனே காய வெக்கனுமாம், இல்லேன்னா மாவு கெட்டு போய்ருமாம். அத சொல்ல மறந்துட்டேன், அதான்…”

“ஆமாம் தம்பி, நானும் மறந்துட்டேன் பாரு. ரொம்ப தாங்கஸ் பா”

உள்ளே வந்த ஆனந்தி, “ஒரு 10 மினிட்ஸ் ப்ரேக் எடுப்போமா? ஒரு காபி குடிச்சால் கதை இன்னும் வேகம் எடுக்கும் இல்ல…”

அதை ஆமோதித்த ஆரவ், காபிக்காக காத்திருந்தான். காபி கலக்கும் வேளையில் , மறக்காமல், மாவை காய வைத்து விட்டு வந்தாள்.

“என்ன ஆனந்தி, ஏதாவது பண்டிகை வருதா? முறுக்கு மாவு ஏற்பாடெல்லாம் களை கட்டுது?”

“இல்ல… உங்க பையன் அர்ஜுன் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கான், கை முறுக்கு வேணும்னு. அதான்…”

“சரி, நம்ம கதைக்கு வருவோம்”

“சொல்லுங்க… கதைலயும் காபி வேணுமானு கேக்கறாங்க, நம்மளும் காபி குடிக்கறோம். அப்படியே கதைக்குள்ள ஒன்றிட்டோம் நம்ம.. சூப்பரா வரும் பாருங்க உங்க கதை…”

“சரி சரி மேலே எழுது”

“காபி சாப்பிடரேளா மாமி?”

“ஆமாண்டியம்மா… ஆத்துல எத்தனை வாட்டி காப்பி குடிச்சாலும், மத்தவா போட்டு குடுத்தா, அது ஒரு தனி ருசி தான்”

சுவாமிநாதர் மனைவியின் பளிச்சென்ற புன்சிரிப்பு, அவளின் வைர மூக்குத்தியோடு போட்டி போட்டது.

“சித்த இருங்கோ மாமி கொண்டு வரேன்” என சமையல் கட்டிற்கு விரைந்தாள்.

“சுவாமிநாதா, சும்மா சொல்லக் கூடாது, உங்க அம்மா பண்ணின ரொம்ப நல்ல காரியம், இந்த மாதிரி ஒரு பொண்ணை உனக்கு கட்டி வெச்சது தாண்டா. கல்யாணம் ஆன புதுசுல எப்படி இருந்தாளோ, இப்பவும் மாறாம அப்படியே இருக்கா. அழகு, அமைதி, அடக்கம்…. ஒண்ணும் மாறலை. இப்படி ஒரு பொம்மனாட்டிய வெச்சிண்டு, ஏண்டா விட்டத்தைப் பாத்துண்டு இருக்க?”

மெட்டியும், கால் கொலுசும் ஒரு சேர ஒலிக்க, சுவாமிநாதரின் மனைவி காப்பி டவரா டம்ளர் சகிதம் வந்தாள்.

“ஒரு நிமிஷம், என் மொபைல் அடிக்குது”

“ஹல்லோ”

“…”

“ஆங் மாமி சொல்லுங்க”

“…”

“இல்ல இல்ல, இப்போ சொல்லுங்க எழுதிக்கறேன்”

“…”

“அரிசி மாவு – 1 டம்ளர், உளுத்த மாவு – 1 ஸ்பூன், வெண்ணை -1 ஸ்பூன், உப்பு

சீரகமா சரி, அதுவும் 1 ஸ்பூனா, சரி மாமி , ஆங். ஓ.கே. கண்டிப்பா எப்படி வந்ததுன்னு சொல்றேன்”

“…”

“என்னது போட்டோவா …சரி வாட்ஸ் அப்ல அனுப்பறேன். சரி மாமி வெச்சிடறேன்” என அலைபேசி இணைப்பை துண்டித்தவள்

“நம்ம  முக்கு வீட்டு மாமி. சும்மா முறுக்கு அளவு கேட்டுக்கிட்டேன், அவ்வளவு தான்”

ஆரவ் முறைப்பது எதற்கு என புரிந்தவுடன், “ஓ இதுவா, அவங்க அளவு சொன்னாங்களா, உடனே இந்த பேப்பர்லயே  எழுதிட்டேன்.  யூ டோன்ட் வொரி, நான் வேற காபி எழுதி குடுத்திடறேன். ம்… சொல்லுங்க, அவங்க கொலுசு போட்டு வந்தாங்க…”

“குடுடியம்மா… சர்க்கரை போடலையோன்னோ?”

“இல்ல மாமி” 

“அதானே உனக்கு தெரியாதா? நீ தான் மனுஷா வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பாத்து பாத்து செய்வியே”

இதை கேட்ட சுவாமிநாதரின் மனைவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து, அவளின் நெற்றி குங்குமத்தோடு போட்டி போட்டது.

“ஹலோ… இருங்க இருங்க அந்த அம்மாவோட பொண்ணுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு. எப்படி பார்த்தாலும் ஒரு நாப்பது நாப்பத்தி அஞ்சு வயசு இருக்குமா? இந்த அம்மாவுக்கு இவ்வளோ டீடெய்லிங் தேவையா? எனக்கே கடுப்பாகுது, அவங்களோட அழக நீங்க சொல்லும் போது”

ஒரு புன் முறுவலுடன் ஆரவ், “இது வெறும் கற்பனை தான் கண்ணா.. ஆக்சுயலி அந்த கேரக்டரே உன்ன பாத்து வந்த இன்ஸ்பிரேஷன் தான் கண்ணா” (என ஒரு பிட்டை பொட்டு வைத்தான்)

“சரி சரி மேல சொல்லுங்க” என்றாள் வெட்கத்துடன்

டிங் டாங்……

“நீ இரு, நான் போய் பாக்கறேன்” என எழுந்தான் ஆரவ்.

திரும்ப வரும் போது அவன் கையில் ஒரு மாவு சலிக்கும் சல்லடை

“யாரு எதிர் வீட்டு ரேகா ஆன்டியா?” 

“ஆமாம், நீ சல்லடை கேட்டியாமே”

“அவங்களுக்கு ஓணம் பண்டிகைக்கு பட்சணம் செய்யணுமாம், இன்னிக்கு ஈவினிங்குள்ள திரும்ப தந்த நல்லா இருக்கும்னு சொன்னாங்க”

“என்ன மறுபடி ப்ரேக்கா?”

“மாவு சலிக்கவா?”

“சரி போய் தொல, ரொம்ப நேரம் எடுக்காதே, ஏற்கனவே கடுப்புல இருக்கேன்”

“இல்ல இல்ல… ஜஸ்ட் 10 மினிட்ஸ். நீங்க யோசிச்சு வையுங்க, நான் வந்ததும் எழுதறோம் கதைய முடிக்கறோம்”

சமையல் கட்டிற்குள் விரைந்தாள் ஆனந்தி.

கதை பற்றிய யோசனையில் மூழ்கினான் ஆரவ்.

யோசனை செய்தவாரு எப்போது உறங்கிப் போனான் என தெரியாது. சூடான எண்ணை வாசனையும் முறுக்கு வாசனையும் ஒருசேர அவனை எழுப்பியது.

“ஆனந்தீதீதீ…” அவன் கத்தலுக்கு தட்டில் முறுக்கோடு வந்தாள் ஆனந்தி.

“எந்திரிச்சிட்டீங்களா? நான் வந்து பாத்தேன், நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. சரி அந்த டைம்ல முறுக்கு வேலைய முடிச்சிடலாம்னு, இந்தாங்க டேஸ்ட் பண்ணி பாருங்க”

ஆரவ் கோவத்தால், அந்த முறுக்கு அவன் பற்களுக்கு இடையில் சிக்கி பொடிப் பொடி ஆகின

“பாத்தீங்களா… முறுக்க திங்கற சத்தம் முக்கு மாமி வீடு வரை கேட்கும் போல இருக்கே. ஹப்பா ஒரு வழியா இந்த முறுக்கு வேலைய இன்னிக்கு முடிச்சட்டேன். என்ன, அந்த சுவாமிநாதரின் பிரச்சனை தான் என்னனு நீங்க சொல்லல” என ஆனந்தி கூற

பயங்கற கடுப்பாகிய ஆரவ், “கதை தானே, சொல்றேன் எழுதிக்கோ”

காபி குடித்தவாறே கோமதி மாமி, “சொல்லுடா, என்னன்ட சொல்றதுக்கு என்ன? என்னவானாலும் சொல்லு, இந்த மாமி இருக்கேன் உனக்கு உதவி செய்ய”

“இல்ல மாமி, கல்யாணத்துக்கு 7 சுத்து, 5 சுத்து முறுக்கு எல்லாம் சீர் வைக்கணும். இல்ல மாமி விடுங்கோ, ஒன்னும் பிரச்சனை இல்ல, நான் பாத்துக்கறேன்”

“அதுக்கு என்னடா? பேஷா சீர் செய்துடலாம். அதுல என்ன பிரச்சனை உனக்கு? என்னன்ட சொல்றதுக்கு என்னடா சுவாமிநாதா?”

“இல்ல மாமி, அவ்வளோ முறுக்கு எல்லாம் இந்த பல் செட் வெச்சின்டு திங்க முடியாதேன்னு யோசிச்சின்டு இருந்தேன் மாமி”

இதை கேட்டு தலை நிமிர்ந்து பார்த்த ஆனந்தியைப் பார்த்து, “என்ன பாக்குற? இதை எழுதி முடிச்சட்டு, முற்றும் போட்டு  முடிக்கற வரை இந்த இடத்தை விட்டு நகர்ந்து போன, கொலையே விழும் பாத்துக்கோ”

எப்படித் தான் வந்த சிரிப்பை அடக்கி, அவன் சொன்னதை எழுதி முடித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தாளோ, ஆனந்திக்கே தெரியாது.

ஆனந்திக்கோ முறுக்கு மேல் கிறுக்கு

ஆரவுக்கோ… முறுக்கால்… 😂

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. என்ன ஒரு அழகானகதை தலைப்பே அருமை அருமை…ஆனந்திக்கு முறுக்கு மேல் கிறுக்கு ஆரவ்க்கு ஆனந்தி மேல் கிறுக்கோ ..நல்ல காமெடி முறுக்கு.செம்மயா எழுதிட்டிங்க. காலை வேளை இதை வாசித்து சிரிச்சிக்கிட்டே வேலை செய்ய எங்க ஓனர் என்னை பார்த்து ஒரு மாதிரி முறைச்சிட்டு போறார்.இதுக்கு என்னா சிரிக்குது தானா கிறுக்கான்னுட்டு அழகான கதை…

முத்தமும் சத்தமும் (சிறுகதை) – ✍ செராமு, தஞ்சாவூர்

நிலையற்ற மாயை (சிறுகதை) – ✍ முகமது பிர்தவ்ஸ், திருநெல்வேலி