மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருத்தருக்கும், பிறந்த நாளிலிருந்து வாழ்வின் கடைசி நாள் வரை அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தையுமே அடைய வேண்டும் என்பதே குறிக்கோளாகும்
நல்ல அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், நண்பர்கள், பணம், பதவி என்று அனைத்தும் கிடைத்தால், வாழ்க்கை முழுமை பெறும் என்பது உண்மை தான்
ஆனால் அவை எல்லாவற்றையும் விட, எவன் ஒருவன் காதலில் வெற்றி பெறுகிறானோ அவன் தான் முழுமையான வெற்றியாளன் என்பது தான் வாசனின் எண்ணம்
ஆம் வாசனுக்கும், அவனுடைய நீண்ட நாள் காதலியான மாதவிக்கும் நேற்று தான் திருமணம் நடந்து முடிந்தது. காதல்னா அப்படி ஒரு காதல். சந்தோஷத்தில் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனான் வாசன்.
“மாப்ள, நம்மளுக்கின்னே இந்த லெக்கின்ஸ்ச கண்டு புடிச்சிருக்கானுக போல, என்னமா நடந்து போறாளுக பார்த்தியாடா?’’
“டேய் வாசன், ஏண்டா இப்படி அசிங்கமா பேசற?’’ ஒனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா தானே?’’
“என்னடா நீ பெரிய பழம் மாதிரி பேசற, பாக்குற பொண்ணுங்களையெல்லாம் நம்ம தங்கச்சியா நெனைச்சியான்னா அப்படியே படிச்சி முடிச்சதும் நீ என்ன சாமியாரா போயிடுவியா? மாப்ள எந்தந்த வயசில எதையெத அனுபவிக்கனுமோ, அதத அனுபவிக்கனும்டா, அத விட்டுட்டு பெரிசா பேசற?’’
அன்பரசியில் ஆரம்பிச்சி, ஐஸ்வர்யான்னு தொடர்ந்து காதல் லீலைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தான் வாசன்
காலேஜ்ல எல்லா பொண்ணுங்களுக்கும் இவந்தான் ட்ரீம் பாய்னு நினைச்சிட்டு இருப்பான். காலேஜ் நாட்கள்ல எந்தவித ஒழுங்குமில்லாம கண்ட கண்ட பொண்ணுங்களோட சுத்திட்டு இருப்பான்
ஆனா என்ன தான் வெளியில எல்லா பொண்ணுங்களோடேயும் சுத்தினாலும், மாதவி மேல வாசனுக்கு எப்போதுமே ஒரு தனி கண்ணு தான். கல்லூரி காலம் கடந்து ஐந்து வருடங்கள் கழித்து, ஒரு நாள் மாதவி அவள் வேலைப் பார்க்கும் ஆபிஸ்க்கு வந்து நின்றான்
வெள்ளைக்கலர் ஸ்கூட்டரில், வித்தியாசம் ஏதும் தெறியாதவாறு வெள்ளை நிற நிலவு ஒன்று தவழ்ந்து வருவதைப் போல, மாதவி கேட்டிற்கு வெளியே வந்தாள். தனக்காகத் தான் வாசன் வெளியே நிற்கிறான் என்பது தெரிந்தும், அவனை கண்டுகொள்ளாமல் கம்பெனி கேட்டிலிருந்து வேகமாக வெளியே வந்தவள், வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பித்தாள்.
மாலை நேர கூட்ட நெரிசலைக் கடந்து, அவ்வளவு எளிதாக சென்னையில் யாரும் அவரவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாது என்பது நிதர்சனமான உண்மை தான். ஆக்சிலேட்டரை வேகமாக திருகி தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக மாதவியின் அருகே வந்து நின்றான் வாசன்
”என்ன மாதவி நான் பாட்டுக்கு வேலையெல்லாம் விட்டுட்டு ஒன்னோட ஆபிஸ் வாசல்ல வந்து நிக்கிறேன், நீ என்னன்னா கண்டுக்காம போயிட்டு இருக்க? அப்படியே லெஃப்ட் எடுத்து மங்கள் பார்க்குக்கு வா, ஒங்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று சொல்ல, சிக்னலும் பச்சைக்கொடி காட்டியது
வயதானவர்கள், வாலிபங்கள், சின்னஞ்சிறார்கள் என்று கலவையாக மக்கள் கூட்டம் மாலை நேரத்தில் பார்க் உள்ளே நடைபயிற்சி மேற் கொண்டிருந்தார்கள். காதலர்கள் என்ற போர்வையில், காலிபசங்கள் ஒவ்வொரு மரங்களுக்கு கீழே மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டும், காதலிக்கும் போது எச்சில் கூட புனிதம் என்ற வரிககளை தவறாக புரிந்துக் கொண்டு பாட்டிலிலுள்ள வெளிநாட்டு விசதிரவங்களை மாறி மாறி உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
இலைமறை காயாக அந்த காலங்களில் திரையரங்குகளில் பார்த்த பொதுமக்கள், வெட்ட வெளிச்சமாக இப்போது பொது இடங்களில் பார்க்க நேரிடுகிறது. ஒரு சிலர் இந்த கருமங்களை பார்ப்பதெற்கென்றே முக்கிய வேலைகளையெல்லாம் தள்ளிப் போட்டு விட்டு அலாரம் வைத்து அலுவலகம் போவதைப் போல் இங்கு வந்து விடுகிறார்கள்.
கொரானோ அறிமுகமில்லாத காலத்திலேயே சமூக இடைவெளியை அறிமுகப்படுத்தியவர்கள் நம்முடைய பழைய காதலர்கள். அதையே கடைபிடித்து சற்று இடைவெளியுடன் வாசனுக்கு எதிரே அமர்ந்தாள் மாதவி.
ஒரு சில வினாடிகள் இருவருக்குமிடையே அமைதி நிலவியது, அமைதியை கலைத்தான் வாசன். ”இங்க பாரு மாதவி, ஒவ்வொரு தடவை நாம சந்திக்கும் போது ஏதோ முதல் தடவையா சந்திக்கிறா மாதிரி நீ நடந்துக்கிறது எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல. அங்கப் பாரு, நேத்து தான் காதலிக்க ஆரம்பிச்சிருப்பாங்க, ஆனா இன்னைக்கு மடியிலப் படுத்து சந்தோஷமா இருக்காங்க”ன்னான்
நான்கு புறமும் பவ்யமாக திரும்பிப் பார்த்தவள், பளாரென்று அறைவதைப் போல வாசனைப் பார்த்தாள்.
“இல்லயில்ல நான் தப்பா ஏதும் சொல்லல, நாம என்ன அவுங்களப் போலவா, நாம ட்ரூ லவ்வர்ஸ்ல” என்றான் முகத்தில் அசடு வழிய.
மலரின் முட்கள் விரிவதைப் போல தன் உதடுகளை விரித்து, “இங்கப் பாரு வாசன், நீயும் நானும் ஸ்கூல்மேட் தான். ஆனா நான் ஒன்ன இப்பவும் நல்ல ஃப்ரண்டா தான் பாக்கறேன், நீ ஏன் அத புரிஞ்சிக்க மாட்டேங்கறேன்னு தெரியல எனக்கு. நீ சுத்தாத பொண்ணுங்க இல்ல, ஒன்னப் பத்தி எனக்கு நல்லா தெரியும், என்னப் பத்தி ஒனக்கும் நல்லா தெறியும். ஏன் நான் சொல்றத கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கிற, உனக்கும் எனக்கும் செட்டானாலும், எங்க குடும்பத்துக்கும் ஒங்க குடும்பத்துக்கும் செட்டாகுது, நான் சொல்றத புரிஞ்சிக”ன்னாள் மாதவி.
“நீ சொல்றதெல்லாம் சரி தான் மாதவி, ஆனா நீ நெனைக்கிறா மாதிரி நான் பழைய வாசனில்ல. ஏனோ தானோன்னு சுத்திட்டு இருந்த என்ன நல்வழி படுத்தினது நீதான, ஒன்னோட நட்பு தான. அந்த நட்பு தான் இப்ப காதலா மாறி ஒம் முன்னாடி என்னைய அமைதியா உட்கார வச்சிருக்கு. தேரு கன்னாபின்னானு போகும் போது வடம் புடித்து சரிபடுத்தற மாதிரி, நீ ஏன் என் வாழ்க்கையில இருக்கக்கூடாது”னு தத்துவம் பேசினான் வாசன்.
“எனக்கென்னமோ நாய் வால நிமித்த முடியுன்னு தோணல’’
”ஏன் மாதவி நான் திருந்தி வந்து பச்ச குழந்தை மாதிரி ஒம் முன்னாடி நின்னும் கூட, நீ என்னை ஏத்துக்க மாட்டேங்கற? நான் என்ன செஞ்சா என்னைய ஏத்துப்ப, சொல்லு”
“நீ எது செஞ்சாலும் என்னால ஏத்துக்க முடியாது, ஏன்னா எங்க வீட்ல மாப்ள பார்த்துட்டாங்க. நீ எனக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சியன்னா, தயவு செய்து இனிமே தொந்தரவு செய்யாம இருந்தா போதும் ப்ளீஸ்”
“சின்ன வயசிலயிருந்து தண்ணி அடிக்கறதுலயிருந்து, பொண்ணுங்களோட சுத்தினது வரைக்கும் நான் எதையுமே ஒங்கிட்ட மறைச்சதில்ல. ஏன் ஒனக்கும் என்னைய பத்தின எல்லா உண்மைகளும் தெரியும், அதனாலத் தான் உரிமையா ஒங்கிட்ட என் காதல சொன்னேன். ஆனா நீ என்னைய நாய் மாதிரி அலைய விட்டுட்டு, இப்ப கூலா விலகிக்கோன்னு சொல்றத பார்த்தா, மாதவின்னு பேர் வச்சிருக்க ஒன்ன கன்னகி கணக்கா நினைச்சது என்னோட தப்பு தான்”னான் வாசன்.
“பாத்தியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான சொன்னேன், நாய் வால நிமித்த முடியாதுனு. அங்க கடிச்சி இங்க கடிச்சி கடைசியில என்னையே கடிக்க வந்துட்டல்ல”
“அய்யோ மாதவி சாரி, கோபத்தில ஏதோ தப்பா பேசிட்டேன் மன்னிச்சிடு” என்று கெஞ்சினான் வாசன்.
“இனி என் வாழ்நாள் முழுக்க நான் ஒன்னைய பார்க்கவே கூடாது”னு சொல்லி விட்டு அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்த மாதவியை தடுத்தான் வாசன்
“நீ யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ, ஆனா ஒனக்கு ரெண்டாவது தாலியாவது எங்கையால கட்டுவேன்”னு சபதமிட்டான் வாசன்.
அவன் பேச்சை காதில் வாங்காமல் வேகமாக பார்க்கை விட்டு வெளியேறினாள் மாதவி.
கையில் வைத்திருந்த சிகரெட் தன்னை தானே எரித்துக் கொண்டு, இறுதியில் வாசனின் விரல்களை சுட்ட போது தான், பழைய நினைவுகளிலிருந்து சுயநினைவுக்கு வந்தான் வாசன்.. சிகரெட் துண்டை எறிந்து விட்டு கை விரல்களை உதறியபடி கெஸ்ட் ஹவுஸ்க்குள் சென்றான்
“என்ன புது மாப்ள வெளியில ஏதோ பலமா யோசனையில இருந்தா மாதிரி தெறிஞ்சிது”
“அதெல்லாம் ஒன்னுமில்ல மாதவி, நம்ம கல்யாணம் கடைசி வரைக்கும் நடக்காம போயிடுமோனு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா கடவுள் நம்மள சேர்த்து வச்சிட்டாரு, அத நெனச்சு தான் சந்தோஷத்தில கடைசியா ஒரு தம் போடலாம்னு போட்டுட்டு வந்தேன்”
“எனக்காக ஒன்னோட எந்த பழக்க வழக்கங்களையும் மாத்திக்க வேண்டாம் வாசன், நீ நீயாகவே இரு” என்றாள் மாதவி.
“இல்லல்ல நான் இனி வாழ்நாள் முழுக்க ஒனக்கு புடிச்சா மாதிரி தான் வாழப் போறேன் மாதவி” என்ற வாசன், மாதவியை அணைத்தான்
பல நாள் கனவு, அன்று நிறைவேறிய பெருமிதம், அன்றைய காலை பொழுதினில் வாசனுக்கு ஏற்பட்டது
“நாம சீக்கிரமே ஒரு புள்ளய பெத்துக்கணும் மாதவி” என வாசன் கூற
“அதுக்கு வாய்ப்பில்ல, நான் பேமிலி பிளேனிங் பண்ணிட்டேன்” என்ற மாதவியை அதிர்ச்சியோடு பார்த்தான் வாசன்
“என்ன மாதவி நான் சீரியசா கேட்டுட்டு இருக்கேன், நீ விளையாடற”
“என்ன வேணும் ஒனக்கு, எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கான். ஒனக்கும் ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பொண்ணு இருக்கா. அப்புறம் இன்னும் எதுக்கு நாம குழந்தை பெத்துக்கணும். நம்ம விதி ஒம் பொண்டாடியும் உடம்பு சரியில்லாம இறந்திட்டாங்க, எம் புருஷனும் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்திட்டாரு.
இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் நாற்பது வயசாகிடுச்சி. தனியா இருக்கிற எங்கிட்ட ஆபிஸ்ல மேலதிகாரியிலயிருந்து, ப்யூன் வரைக்கும் புரபோஸ் பண்ணி தொல்லைப் பண்ணூவானுங்க, ஒனக்கும் துணையில்லை. அதான் நீ புரபோஸ் பண்ணிடவுடனே நான் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிச்சேன்”னாள் மாதவி.
மீண்டும் சிகரெட்டை எடுத்துக் கொண்டு ரூமை விட்டு வெளியே சென்றான் வாசன்.
‘என்னங்க ஒங்கள்ட உள்ள எல்லா நல்ல குணங்களும் நம்ம பையண்ட இருக்குங்க, இந்த சமூகத்திலயிருந்து என்னைய பாதுகாத்து நம்ம புள்ளைய வளர்க்கதாங்க நான் இந்த கல்யாணத்தை செஞ்சிக்கிட்டேன். ஒங்களோட உயிரணுக்கள சுமந்த என் கர்ப்பபைல, இனி இவனோடத சுமக்க மாட்டேங்க’ என மறைந்த தன் கணவனிடம் மானசீகமாக கூறினாள் மாதவி
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
சுமார்