#ads – Deals in Amazon👇
மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)
“எப்ப வர்றேன்னு சொன்னீங்க இப்ப வந்து நிக்குறீங்க? நான் இங்க காத்துக்கிட்டிருக்கிறது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?”
வழக்கமா இந்த மாதிரி கேட்கும் போதே அழுகை பொங்கிகிட்டு வரும் மீனாவுக்கு. ஆனால் சமீப காலமா அழுகாமல் ஆத்திரம் அதிகம் காமிக்கிறாள்.
லேட்டானதுக்கு என்ன காரணம் சொல்லி சமாளிக்கப் பார்த்தாலும், ”வாடி வா, நீ சொல்ற பொய்க் காரணம் எனக்குத் தெரியும். சரி எப்பிடித் தான் கதை விடறன்னு பார்க்கலாம்” ன்ற மாதிரியே லுக் விடறாள்
அது மட்டுமா, “இன்னைக்கு மீட்டிங் இருந்துச்சு, ஹெட் ஆபிஸ்ல இருந்து வந்தவங்க என் பிளான்ட்டுக்கு வந்து பேசிக்கிட்டிருந்தாங்”னு நான் சொல்லிக்கிட்டிருக்கும் போதே
“அப்புறம், அவங்க போக லேட்டாயிருச்சு, அதுக்கப்புறம் மீனா காத்திருப்பாளேன்னு தவிச்சு ஓடோடி வந்தீங்களாக்கும். மனுசன் சாயங்காலம் காபி கூட குடிக்காம அலுத்து களைச்சு வந்திருக்கேன், இப்பிடி நிக்க வச்சு கேள்வி கேட்குறன்னு ஒரு டயலாக் வரணுமே… அதைக் காணோம்”னு மேலும் சர்ப்ரைஸ் கொடுக்க, செய்வதறியாது திகைச்சு நின்னேன்
முதல்ல இது வழக்கமாக நடக்கிறதால, அதை வச்சு கேலி பேசுறான்னு நினைச்சேன். ஆனா அதுக்கப்புறம் ஒன்னு செஞ்சா பாருங்க, “நீங்க களைச்சுப் போய் வந்திருக்கீங்க, இருங்க காபி போட்டுத் தர்றேன்”னு அடுப்படிக்குள்ள போனா
சரி காபி தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். போனவ தட்டு நிறைய லட்டு ஜிலேபி மிக்சர் சேவுன்னு பரப்பி வச்சு, நார்மலா நான் குடிக்கிற டம்ளரை விட பெரிய டம்ளர்ல காபியை திக்கா கலந்து நிறைய சீனி போட்டு கொண்டு வந்துட்டா
அதை பாத்ததும் எனக்கு வயித்தைக் கலக்கிருச்சு. ஏன்னு கேக்குறீங்களா? ஸ்….கிட்ட வாங்க, உங்ககிட்ட மட்டும் சொல்றேன்.
நான் மீனாகிட்ட பொய் சொன்னேன். என்னைப் பார்க்க யாரும் வரலை. ஷாப்பிங் போனா வர லேட்டாகும்னு நான் தான் வேணும்னே லேட்டாகிளம்பினேன். கிளம்பறதுக்கு முன்னாடி கேன்டீன்ல சொல்லி பஜ்ஜி சமோசா டீ’னு வயிறு நிறைய ஒரு வெட்டு வெட்டிட்டு கிளம்பி வந்தேன்
இவகிட்ட டயர்டா இருக்கிறதா பொய் சொன்னேன். அது தெரிஞ்சு பலி வாங்குற மாதிரியே இத்தனையைக் கொண்டு வந்து திங்கச் சொல்றா
அடக்கடவுளே நான் என்ன பண்ணுவேன்? எப்பிடி இதிலிருந்து எஸ்கேப் ஆவேன்?
“ம்….இன்னும் என்ன யோசனை, சாப்பிட்டுக் கிளம்புங்க நேரமாச்சு”
“நேரமாச்சு…வந்து சாப்பிட்டுக்கிடுறேன்”
“வந்து டிபன் சாப்பிடணும், இப்ப இதை சாப்பிடுங்க, களைப்பா இருப்பீங்க” பேசிக்கிட்டே என் சட்டையைக் கழட்டி வாங்கிட்டு போயிட்டா
என்னமோ தெரியலை கொஞ்ச நாளா எனக்கு சட்டையைக் கழட்டுறது மாட்டுவது எல்லாம் அவளே பண்றா. வரவா வர்றதை நினைச்சு பயமா இருக்கு, என்னிக்கு செலவு வரப்போகுதோ?
அட அன்பு தாங்க வரவு…திட்டு தாங்க செலவு.
ஒரு வழியா முழி பிதுங்க எல்லாத்தையும் முழுங்கிட்டு மலைப்பாம்பா உருண்டுக்கிட்டே ஷாப்பிங் போயிட்டு வந்துட்டேன். இவளை ஷாப்பிங் பண்ண விட்டுட்டு நாலு தடவை வாஷ்ரூம் போயிட்டு வந்தது சோகக் கதைங்க. அங்க வேலை பார்க்கிறவங்க எல்லாம் என்னை வித்தியாசமா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
அன்னைக்கிலிருந்து இவள் “ஷாப்பிங் சீக்கிரம் வாங்க”னு சொன்னாளே பேதியாயிருது
இன்னொரு நாள் ஜவுளிக்கடைக்கு வரச் சொன்னா. நான் வழக்கம் போல அசால்டாக அந்த ஷாப்பிங் அனுபவத்தை மறந்துட்டு லேட்டா கிளம்பினேன்
என் கெட்ட நேரம் அன்னைக்கு பார்த்து டிராபிக்ல மாட்டிக்கிட்டு வீடு போய்ச் சேர ரொம்பவே லேட்டாயிருச்சு.
ஐயோ இன்னைக்கு என் கதி என்னவோன்னு பயந்துகிட்டே வீட்டுக்குப் போனேன். கூலா உட்கார்ந்து டி.வி பார்த்துக்கிட்டிருக்கா
“கிளம்பலை? டிரஸ் வாங்கணும்னு சொன்னியே?” வாயைக் குடுத்து மாட்டிக்கிட்டேன்
“எப்ப பத்து மணிக்கா?”
“நான் சீக்கிரம் கிளம்பிட்டேன், டிராபிங்ல மாட்டிக்கிட்டேன்”
“பொய் சொல்லாதீங்க”
“வேணும்னா டிரைவரைக் கேளு” சொன்னதோட நிக்காமல் டிரைவருக்கு கால் போட்டுக் குடுத்தேன் ”பேசு”
“சார் சரியா ஆறு மணிக்குக் கிளம்பிட்டாங்க. டிராபிக்ல மாட்டிக்கிட்டோம், அதான் லேட்டாயிருச்சு”
“நான் உங்கிட்ட அதைப்பத்தி கேட்கவே இல்லையே, நீங்களா ஏன் சொல்றீங்க?”
பாவி…. முந்திரிக்கொட்டை இவன் மாட்டி என்னையும் மாட்டி விட்டுருவான். அவன்கிட்ட வேற ஏதோ பேசிட்டு போனை வச்சுட்டா
அன்னைக்கு வயித்தை நிறைச்சு கொடுமைப்படுத்தினாள். இன்னைக்கு டின்னர் கூட கொடுக்காம படுக்க போயிட்டா
என்ன தான் நடக்குது? எப்பவும் பொம்பளைங்க பொய் சொல்றதை கண்டுபிடிச்சுடுவாங்க, நாம என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்கன்னு தெரியும்.
ஆனா இவ கதை வேற தினுசா இருக்கே? ஏதோ என்னோட திருட்டுத்தனத்தை பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே ‘உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்’ன்ற மாதிரியே ரியாக்ட் பண்றாளே
எதுவும் மாயம் மந்திரம் கத்துக்கிறாளோ? அடிக்கடி நாம பொய் சொல்றதை முகத்தை வச்சு கண்டுபிடிச்சு, நம்மளை கையும் களவுமா பிடிக்கிறதுக்கு திட்டம் போடுறாளோ? எப்படியோ கூடிய சீக்கிரம் விவகாரம் வெடிக்கப் போகுது. எப்பிடி சமாளிக்கப் போறேனோ?
மறுநாள், “ஏங்க இங்க இருந்த உங்க யூனிபார்ம் எங்க?”
“நீ ஏன் வீணா கஷ்டபடுற, அதான் கம்பெனியிலேயே துவைச்சு அயர்ன் பண்ணிக் குடுக்குறாங்கல்ல, நான் அங்கேயே குடுத்துடறேன்”
“வேண்டாம் குடுங்க… அதான் நான் துவைக்கிறேன்ல?” கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு போய் துவைக்கிற இடத்துல வீசுறாள்
“சரி விடு, நானே மிஷின்ல போடுறேன்”
“சும்மா இருக்க மாட்டீங்களா? எல்லாம் எங்களுக்குத் தெரியும்” அலறிக் கொண்டு வந்தவளை யோசனையோடு பார்த்தேன்.
ஓ இப்ப புரிஞ்சுருச்சு, இந்த சட்டையில் தான் ஏதோ இருக்கு. என்னவா இருக்கும்?
சரி அதை நான் தான போடப் போறேன், அப்ப பார்த்துக்கலாம் என்று காத்திருந்தேன்
மீனாகிட்ட பை சொல்லிட்டு கார்ல ஏறி அந்தப் பக்கம் லேசா நகர்ந்ததும், சட்டைப் பையை மேலே கீழே தேடினேன்.
“என்னங்க ஸார், எதையாவது விட்டுட்டீங்களா வண்டியை வீட்டுக்குத் திருப்பவா?” டிரைவர் கேட்டதும் அவசரமா மறுத்தேன். பின்ன எலி இருக்குற பொறி எங்கிட்ட தான இருக்கு?
“இல்லையில்லை… நான் பார்த்துக்கிறேன் நீ போப்பா”
ஒவ்வொரு பட்டனா பார்த்தேன், மேலிருந்து இரண்டாவது பட்டன் கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சுச்சு. சரி இங்க வச்சு ஆராய வேணாம், ஆபிஸ் போனதும் ரூம்ல வச்சு பார்க்கலாம்னு காத்திருந்தேன்
அன்னைக்கு பார்த்து கூட வர்ற மேனேஜர் வர்றதுக்கு லேட்டாயிருச்சு. எனக்கு இருப்புக் கொள்ளலை.ஒரு வழியா அரை மணி நேர பயணத்துல ஆபிஸ் போயிட்டோம்
போனதும் பேக்கை எடுத்துக்கிட்டு என் அறைக்கு ஓடினேன். என் அவசரத்தை வேற விதமா புரிஞ்சுகிட்டு கூட வந்த மேனேஜர் நக்கலா பார்க்க, ‘அட போ.யா… என் நிலைமை உனக்கென்ன தெரியும்’னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன். போன வேகத்துல பேக்கை தூக்கிப் போட்டுட்டு சட்டைப் பட்டனைப் பார்த்தேன்.
வாரே வா… பட்டன் மாதிரியே இருந்தது உண்மையில் பட்டன் இல்லை, ஆடியோ வீடியோ ரெண்டையும் படம் பிடிச்சுக் காட்டுற பட்டன் கேமிரா. அதுவும் வயர்லெஸ்
அடிப்பாவி இதை வச்சுத் தான் நான் செய்றதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டியா? சும்மாவே உன் கேமிரா கண்ணை வச்சு நான் சொல்றது பொய்யின்னு கண்டுபிடிச்சுடுவ. இதுல கேமிரா வேறயா?
இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வளவு அருமையா முன்னேறியிருக்கு, பட்டனுக்கும் இதுக்கும் வேறுபாடே தெரியலையே. இந்தச் சின்னக் கருவி எவ்வளவு பெரிய வேலையை செய்திடும் தெரியுமா?
நேத்து தான் வேற எதையோ தேடப் போய், தற்செயலா பட்டன் கேமிரா பத்தி நெட்ல படிச்சேன். அதை இவள் என் பொண்டாட்டி மீனா எவ்வளவு லாவகமாக சட்டையில பொருத்தியிருக்கா பாருங்களேன்
வேலை செய்கிறதுல, கம்பெனி என்டர்டெயின்மெண்ட்ல இதை நான் கவனிக்க மாட்டேன்னு புரிஞ்சுகிட்டு, கடந்த பல மாசமா இதே வேலையா இதை வச்சு என்னைக் கண்காணிச்சிருக்காளே?
அடப்பாவி… அப்ப ஸ்டெனோ என் ரூம்ல வந்து பேசுறது, நான் ஹெச்.ஆர் கூட கடலை போடறது, கேன்டீன்ல சாப்பிடும் போது ஏ ஜோக் அடிச்சு சிரிக்கிறது, கொலீக்ஸ்கிட்ட வீட்டைப் பத்தி புலம்பறது, நாங்கள் புரணி பேசுறது, எல்லாம் கேட்டிருப்பாளே
வேற என்னென்னத்தை பார்த்து தொலைச்சாளோ? அது சரி, இவ்வளவையும் தெரிஞ்சுகிட்டு இன்னும் ஏன் பேசாம இருக்கா?
ஏதாவது கேட்டுட்டால் இத்தோட முடிஞ்சுரும்னு காத்திருந்து காவு வாங்க நினைக்கிறாளா இருக்கும். அது சரி, இதைப் பத்தி அவகிட்ட பேசலாமா வேண்டாமா? அன்னைக்கு மீட்டிங்கைக் கூட மிஸ் பண்ணிட்டு, இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.
அது தான் சரி. நாம இப்ப எதுவும் அவகிட்ட கேட்க வேண்டாம். அவ பார்க்குறான்னு தெரிஞ்சுருச்சுல்ல, இனி நம்ம நாடகத்தை ஆரம்பிப்போம்.
வேணும்னே நல்ல பிள்ளையா நடந்துக்கிடுவோம். நம்ம பக்கம் ரொம்ப வீக்கா இருக்கு, கொஞ்சமாவது ஸ்ட்ராங்க் ஆகிக்கிருவோம்னு முடிவு பண்ணினேன்
சாப்பிடறது பேசுறது எல்லாமே நல்லபடியா இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன். சரியா நாலே நாள், அதுக்கு மேல நல்லவனா நடிக்க என்னால முடியலை
அன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் நிதானமா காபியெல்லாம் குடிச்சு முடிச்சுட்டு கேட்டேன்.
“இது எத்தனை நாளா நடக்குது?”
“எது…?”
“பட்டன் கேமிரா விசயம்….!”
“ஓ…..கண்டு பிடிச்சுட்டீங்களா வெரிகுட்”
“உனக்குக் கொஞ்சமாவது பயமிருக்கா….?”
“தப்பு பண்றது நீங்க…நான் ஏன் பயப்படணும்?”
“நான் என்ன தப்பு பண்ணேன்…?”
இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது, படுபாவி அடுக்கிட்டாஆரம்பத்திலிருந்து
“எங்கேயாவது அவசரமா போகணும் வாங்கன்னு கூப்பிட்டால் வேணும்னே லேட் பண்றது, கேட்டா மீட்டிங்னு பொய் சொல்றது. நீ தான் எனக்கு எல்லாம்னு உருகிட்டு கம்பெனியில கண்டவளோட எல்லாம் கடலை போடுறது. பொண்டாட்டியைப் பத்தியே புரணி பேசுறது. ச்சீ…ச்சீ இதுல செக்ஸ் ஜோக்ஸ் வேற”
“நிறுத்து, இதே மாதிரி நானும் விதம் விதமா கேமிராவை வீட்ல எங்க வேணும்னாலும் வைக்க முடியும், அப்ப நீ செய்றதும் எனக்குத் தெரிய வரும்”
“அடப்பாவி… இத்தனை நாளும் என்னை நம்பாமத் தான் என் கூட வாழ்றீங்களா? சொல்லுங்க? எங்க எங்க என்ன மாதிரியான கேமிரா வச்சுருக்கீங்க? ஆனால் எனக்கென்ன பயம், மடியில கனம் இருந்தால் தான் வழியில பயம் வரும்?”
“ச்சீ..ச்சீ நாலு பேரு வந்து போற இடம், நான் அப்படிச் செய்வேனா? உன் தங்கச்சி என் அத்தை பொண்ணுங்க வர்றாங்க போறாங்க”
“ஆமா ரொம்ப ஒழுங்கு, அதான் அந்தக் குட்டிக் கேமிரா உங்க வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்திருச்சே”
“பேசுறதையுமா கேட்ட?”
“ஆமா…. எல்லாக் கழுதையையும் தான்”
“எங்க வாங்குன? அது வேலை செய்றது எப்பிடின்னு யார் சொல்லிக் குடுத்தாங்க?”
“எல்லாம் என் பிரண்ட் தீபா தான். அவ ஏதோ நெட்ல பார்த்தாளாம். முதல்ல வீடியோ மட்டும் தான் எடுக்க முடிஞ்சது, நாங்கள் எங்க மூளையைப் பயன்படுத்தி ஆடியோவும் ரெக்கார்ட் பண்ணினோம்”
“விட்டா எங்க மனசுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிறவும் ஏதாவது கண்டுபிடிப்பீங்க போல?”
“அதை எப்பவோ ஆரம்பிச்சுட்டோம், கூடிய சீக்கிரம் நீங்க நல்லா மாட்டுவீங்க”
“நீங்க மட்டும் அதைக் கண்டுபிடிச்சீங்க, உலகத்திலிருக்கிற அத்தனை மனைவியும் போட்டி போட்டு வாங்குவாங்க. கோடீஸ்வரி ஆகிடுவீங்க”
“எங்களுக்கு பணம் வேண்டாம், படுபாவிங்க இந்த கணவன்கள் மனைவிகிட்ட விதம் விதமா மனசாட்சியே இல்லாம பொய் சொல்றீங்களே, அதைக் கண்டுபிடிச்சாலே போதும்”
“சரி சரி… இதுவரைக்கும் அந்தக் கேமிரா உனக்கு எப்பிடி உதவுச்சு?”
“நீங்க ஹாயா ரூம்ல உட்கார்ந்து சிகரெட் பிடிச்சது, உங்க மேஜைக்கு அடியில் ஒளிச்சு வச்சிருக்கிற பீர் பாட்டில், பொம்பளைங்க பிள்ளைங்ககிட்ட வழியிறது எல்லாம் தான். நடு இதயத்துல உட்கார்ந்துகிட்டு உங்களை அப்படியே லைவ் ஜெராக்ஸ் பண்ணிடுச்சு” சொல்லிக்கிட்டே அவளோட பெரிய ஆயுதமான அழுகையைக் கூட்டி கூப்பாடு போட்டுட்டாள்
அதோட விட்டாளா? இதோட தொடர்ச்சியா வேறு சில கண்டுபிடிப்பில் அவள் இறங்க, நான் எப்போதும் என்னைத் தடவி எனக்குள்ள எங்க என்ன இருக்குன்னு தேடிக்கிட்டே இருக்கேன்
பட்டன் காமிரா வரைக்கும் போயிட்டாள், இன்னும் என்னவெல்லாம் செய்வாளோ? சின்னச் சின்ன சிப் எல்லாம் வந்திருச்சாமே? அதை எங்க வேணாலும் வைக்கலாம்
மனைவிங்க உஷார் ஆயிட்டாங்க…கணவர்களே கவனம் கவனம் !
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
இந்தாளுக்கு ஜாக்கிரதை பத்தலை . நான் எல்லாம் ரொம்ப உஷார். மாட்டவே மாட்டேன்