படித்துக் கொண்டிருநத செய்தித்தாளை வெறுப்புடன் தூக்கிப் போட்டாள் சியாமளா. பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவன் நாராயணன் சிரித்தார்
“பேப்பர் என்ன செய்தது ? அதன் மேல் என்ன அவ்வளவு வெறுப்பு?” எனக் கேட்டார்
“பேப்பர் மேல் எனக்கு என்ன வெறுப்பு? அதில் வரும் விஷயங்கள் தான் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றாள் சியாமளா
“என்ன விஷயம் அப்படி மனதைக் கஷ்டப்படுத்துகிறது?” என்ற கேள்விக்கு
“பெற்றோரை கவனிக்காமல் பிள்ளைகள் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், முதியோர் இல்லத்தில் இருந்து அவர்கள் கண்ணீரோடு பேட்டி கொடுப்பதும் படித்தால் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றாள் சியாமளா வருத்தமாய்
உலகில் நடப்பதைத் தான் அவர்கள் எழுதுகிறார்கள், கற்பனை செய்து கதையா எழுதுகிறார்கள்?” என்றார்
“கதையுமில்லை கற்பனையுமில்லை, உலகில் நடப்பது தான். ஆனால் இந்த காலத்துப் பிள்ளைகள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?” என ஆதங்கப்பட்டாள்
“பிள்ளைகள் அப்படி சுயநலமாக நடப்பதற்கு பெற்றோர்கள் தான் காரணம்” என்றார் நாராயணன்
“பெற்றோர்கள் என்ன தவறு செய்கிறார்கள்? தங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு பிள்ளைகளுக்காக வாழ்கிறார்களே, அது தவறா? எவ்வளவு நல்ல பையன் எதிர் வீட்டு பத்ரி. அவன் அப்பா இருக்கும் வரை உத்தமபுத்திரன். இப்போது கதறக் கதறக் தன் அம்மாவைக் கொண்டு போய் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வந்து விட்டான். பத்து மாதம் சுமந்து பெற்றதற்கு சரியான பரிசு” என்றாள் பரிகாசமாய்
அவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தார் நாராயணன்
“நான் என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி கேலியாக சிரிக்கிறீர்கள்?” என்றாள் லேசான கோபத்துடன்
“பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் போது, நான் பத்து மாதம் சுமந்து உன்னை காப்பாற்றுவேன், ஆனால் நீ என்னை மறக்காமல் காலம் முழுவதும் காப்பாற்ற வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டா பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறோம். நம் சந்தோஷத்திற்காகவும் சமூகத்தில் நம் மதிப்பை காப்பாற்றிக் கொள்ளவும் மக்களைப் பெற்றுக் கொள்கிறோம். நாம் தான் அவர்களைக் காப்பாற்ற கடமைப்பட்டுள்ளோம். நம் நன்மைக்கும் தீமைக்கும் நாம் தான் பொறுப்பு” என்றார் நாராயணன்
“பிள்ளைகளை வளர்த்து பெரியவனாக்குதல் நம் கடன் என்றால், வயதான காலத்தில் நம்மைக் காப்பாற்றுவது அவர்கள் கடமையில்லையா?”
“பெற்றவருக்கும் பிள்ளைக்கும் இடையே வியாபாரமா நடக்கிறது சியாமளா? அவர்கள் வளர்ந்து படிக்கும் போது ‘ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள நீ நன்றாகப் படிக்க வேண்டும் ‘ என்று தன்னலமில்லாமல் தானே சொல்லி வளர்க்கிறோம். அவர்கள் தங்கள் காலில் நிற்க ஆரம்பித்தவுடன், நாம் அதிகமாக அவர்களைச் சார்ந்து வாழ்ந்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது” என நிதர்சனத்தை எடுத்துரைத்தார் நாராயணன்
“சம்பாதிக்கும் எல்லாப் பணத்தையும் அவர்கள் படிப்பிற்காகவம் இதர செலவிற்காகவும் செலவிட்டப் பின்னர் நம் கையில் என்ன இருக்கும்? பணமும் இல்லாமல் உடல் பலமும் ஆலையில் இட்ட கரும்பு சக்கையாகத் தான் இருப்போம். அவர்களுக்கு செலவு செய்யும் போது நாம் நமக்கும் கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் ஆடம்பரச் செலவு செய்யக் கூடாது”
“நாம் எந்த ஆடம்பரச் செலவும் செய்யவில்லையே. நம் ஒரே மகனைக் கூட அரசாங்கப் பள்ளியில் தான் படிக்க வைத்தோம். அவனும் நன்றாகப் படித்து இப்போது பெரிய இஞ்ஜினீயரிங் கன்ஸல்டன்ஸி கம்பெனி நடத்துகிறான். அவன் குழந்தைகளும் ஊட்டி கான்வென்ட்டில் படிக்கிறார்கள். ஆனால் நம்மோடு போனில் பேசக் கூட அவனுக்கு நேரமில்லை” என்று பெருமூச்செறிந்தாள் சியாமளா
“இருக்கட்டும்… ஆனால் நாம் ஒன்றும் யார் கையும் எதிர்பார்த்து வாழவில்லையே. வெறும் கான்வென்ட் படிப்பு யாருக்கும் அறிவை வளர்த்து விடாது. அப்போது நான் பார்த்த ஆசிரியர் சம்பளத்தில் நம் பிள்ளையை கான்வென்ட்டில் படிக்க வைத்திருந்தால் கடனாளியாகி மேற்கொண்டு பெரிய பட்டப்படிப்பு படிக்க வைத்திருக்க முடியாது. உனக்குத் தெரியுமா சியாமளா? அமெரிக்காவில் போய் டாலரில் சம்பாதிக்கிறார்களே, அவர்களே குழந்தைகளை பப்ளிக் ஸ்கூல் என்னும் அரசாங்கப் பள்ளியில் தான் படிக்க வைக்கிறார்கள்” என்றார்
“ஒரு வேளை அந்த நாட்டில் கல்வியின் தரம் நன்றாக இருக்குமோ என்னவோ?” என கேள்வியெழுப்பினாள் சியாமளா
“நம் நாட்டு கல்வியின் தரம் எந்த நாட்டிற்கும் குறைந்ததில்லை. நம் நாட்டில் இருந்து எவ்வளவு பேர் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர்களாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று வெளிநாடுகளில் போய் வேலை செய்கிறார்கள். இந்த பத்ரியின் அப்பா, ஆரம்பம் முதல் தனக்கோ, தன் மனைவிக்கோ எந்த சேமிப்பும் இல்லாமல் மகனின் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிகோலிட்டான்.
சாதாரண பட்டப்படிப்பு கூடப் படிக்க லாயக்கில்லாதவனை, லட்சக்கணக்கில் கேபிடேஷன் பீஸ் கட்டி என்ஜினீயராகப் படிக்க வைத்தான். எந்தப் படிப்பு படித்தாலும் அதற்கான ஊதியம் இருக்கிறது. அந்த இலட்சங்களை பத்ரியின் அம்மா பெயரில் வங்கியில் டெபாசிட் செய்திருந்தால் அந்த அம்மாவிற்கு இப்போது முதியோர் இல்லம் போகும் நிலை ஏற்பட்டிருக்காது . எல்லா தவறுகளையும் பெரியவர்கள் நாம் செய்து விட்டு அவர்களை நொந்து என்ன பலன்”
இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, குடும்ப நண்பர் ஸ்ரீதர் கையில் சில அழைப்பிதழ்களுடன் உள்ளே நுழைந்தார்.
“வாடா ஸ்ரீதரா” என வரவேற்றார் நாராயணன்
சியாமளா அவரை வரவேற்று, மணக்க மணக்க காபி கொண்டு வந்து கொடுத்தாள்
நாராயணனிடம் ஒரு அழைப்பிதழ் கொடுத்து விட்டு, “என் பேரனின் ஆறாவது பிறந்த நாள் விழா” என்றார் ஸ்ரீதர்
“ஸ்ரீதரா, போன மாதம் தானே நீ உன் மனைவிக்கு கண் ஆப்பரேஷன் செய்ய பணத்திற்கு அலைந்து கடைசியில் என்னிடம் வந்து வாங்கிச் சென்றாய். நான் கொடுத்ததை சொல்லிக் காட்டவில்லை. விஷயம் தெரிந்து கொள்ள கேட்கிறேன்”
“ஆமாம்” என்றார் ஸ்ரீதர்
“பிறந்த நாள் பெரிய நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடுகிறீர்களே, நிறைய செலவாகுமே? அதற்காகத் தான் கேட்டேன்” என நாராயணன் கேள்வியாய் பார்க்க
“நாராயணா… நதி மூலம் ரிஷி மூலம் எல்லாம் ஆராய்ச்சி பண்ணாதே. என் மனைவிக்கு கண் ஆப்ரேஷன் என்பது என் செலவு. பேரனின் பிறந்த நாள் விழா என் மகன் செலவு. அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போடாதே. இறக்கை முளைத்த பறவையை தாய் பறவை சொந்தம் கொண்டாடலாமா? சரி, நான் வரட்டுமா? இன்னும் நம் நண்பர்கள் சிலருக்கு அழைப்பிதழ் தர வேண்டும்” என விடைபெற்றார் ஸ்ரீதர்
அவருடைய பேச்சை கேட்டு, திறந்த வாயை மூடாமல் ஆச்சரியத்தில் உறைந்து நின்றாள் சியாமளா
“இது தான் உலகம் சியாமளா. மேலை நாடுகளில் கல்லூரியில் சேரும் போதே பகுதி நேர வேலையில் சேர்ந்து விடுவார்கள். மேலும் வங்கி கடன் வாங்கி தங்கள் செலவைப் பார்த்துக் கொள்வார்கள் என்று என் நண்பன் ராமமூர்த்தி கூறியுள்ளார். அதனால் மாணவர்களுக்கு பொறுப்பும் கடமை உணர்ச்சியும் அதிகமாகும். பெற்றோருக்கும் அந்த தொகை அப்படியே சேமிப்பில் இருக்கும்” என்றார் நாராயணன்
“ரொம்ப நல்லாயிருக்கே. படிக்கும் போதேவா யாராவது குழந்தைகள் தலையில் கடன் சுமையை சுமத்துவார்கள். பிறகு அம்மா, அப்பா என்று இருந்து என்ன லாபம் ?” என்றாள் சியாமளா கோபமாக
“சரி தான். இப்படியெல்லாம் பரிதாபப்பட்டால் வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் தான் சேர்த்து விடுவார்கள்” என்று தலைக்கு மேல் இருகைகளையும் கூப்பி வணங்கினார்
“இதற்கு என்ன அர்த்தம்? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றா?” என்று சிரித்துக் கொண்டு கேட்ட சியாமளா, “ஆமாம், இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் எவ்வளவு சேமித்து வைத்து இருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றாள் கேலியாய்
“கட்டாயம். தெரிந்து கொண்டால் தான் நல்ல பொறுப்பான மனைவி” என்றவர், உள்ளே சென்று சில சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகங்களும் சில பத்திரங்களும் எடுத்து வந்தார்
எல்லா கணக்குகளும் அவர்கள் இருவர் பெயரிலும் இருந்தன. வீடுகளும், நிலங்களும் கூட நாராயணன் சியாமளா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது
எல்லாம் சுய சம்பாத்தியம் ஆதலால், யாரும் ஒன்றும் கேட்க முடியாது. இவர்கள் காலத்திற்குப் பிறகு மகளும், மகனும் வாரிசுதாரர் என்று முறையாக சேர்க்கப்பட்டிருந்தது
தன் கணவரின் முன்னெச்சரிக்கையும், சேமிப்பில் இருந்த தொகையையும் பார்த்து வியந்து பிரமித்து நின்றாள் சியாமளா
“இந்த சேமிப்பு உங்களுக்கு எப்படி சாத்தியமானது?” என்றாள் ஆச்சரியத்திலிருந்து விடுபடாமல்
“சிறு துளி பெரு வெள்ளம் தான், எல்லோருக்கும் இது சாத்தியமானது தான். நாம் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், நாம் பெற்ற மக்களேயானாலும் அவர்கள் உதவி கேட்காமல், தன்மானத்தோடு வாழ வேண்டும் என்ற மனஉறுதி மட்டும் போதும். வருமுன்னர் காவா தான் வாழ்க்கை, எரிமுன்னர் வைத்தூறு போல கெடும் என்ற குறளை நீ படித்ததில்லையா சியாமளா?” என்றார் நாராயணன் புன்னகையுடன்
#ad
#ad
என் அப்பா அடிக்கடி கூறும் விஷயங்களை கதையாகப் படித்ததில் மகிழ்ச்சி. இன்று பல குடும்பங்களில் நிலவி வரும் பிரச்சனைகளை மிகவும் நயமான வரிகளில் கூறியுள்ளார் கதையாளர்..!