கதியின்றி கடக்கிறேன் என்றேன்
அள்ளி அரவணைத்தாய்
இன்னொரு தாயாய் நீ
கதிரியக்கம் தாங்கவியலாதென
முன் கூட்டியே அறிந்ததனால்
எமை காக்கும் காவலனானாய் நீ
புத்தர் முதல் புல்செடி வரை
அனைவரையும் ஈர்த்தவளே
சின்னஞ்சிறு சிட்டுக்குருவி முதல்
உயிரெடுக்கும் கோடாரி வரை
காயப்படுத்தாது அணைத்தவள் நீ
காலைநேர பகலவன் வழி காண்கையில்
சோலைவனக் கிளியாய்
உனது பசுமை நிறம்
மனதை கொள்ளை கொள்கிறதே
மழையைத் தாங்காது தவிக்கும்
வாகனங்களுக்கும் மனிதர்களுக்கும்
நிழற்குடை நீயே ஆனாய்
குஞ்சுகளுக்காக இரைதேடி
மாலை நேரத்தில்
இருப்பிடம் திரும்பும்
பறவைகளின் சரணாலயம் நீ
விழியற்றவனுக்கும்
உற்ற வழிகாட்டி நீ
மாசற்ற காற்றைத் தரும்
அன்பு தொழிற்சாலையும் நீயே
திசைதிரும்பும் தென்றலுக்கும்
திசைகாட்டி நீ
கருவறை அரண்மனையிலிருந்து
வெளிவந்த என்னை
உன் சுவாசத் தொப்புள்கொடியால்
வாழ வைப்பதும் நீயே
பிறப்புமுதல் இறப்புவரை
உன்னையே நம்பியிருக்கிறது
மனிதஇனம் மொத்தமும்
உன்னிடம் பட்டகடனை
அடைக்க இயலாத நிலையில்
உன்னிலிருந்து உருவான
எழுதுகோலினால் எழுதப்பட்ட
இந்த கவிவரிகளே
உனக்கு என் சமர்ப்பணம்…!
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings