“என்ன சாப்பாடு இது உப்பும் இல்லை காரமும் இல்லை”
“என்ன தான் உன் அம்மா செய்றா?”
“சும்மா தானே இருக்கா… வாய்க்கு ருசியா செய்தா என்ன?”
இது போன்ற பேச்சுகள் தனக்கு பழக்கம் தான் என்பதை போல் இருந்தது அவரின் முகம்
மஞ்சள் பூசிய முகம், நெற்றி நிறைய குங்குமம், தலைவாரி பின்னலிட்டு பூச்சூடி, எப்போதும் முகத்தில் தவழும் புன்சிரிப்போடு தன்னருகே வந்து நின்ற தாயை முறைத்தாள் வசுமதி.
மகளின் கோபத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்தும், எதுவும் அறியாதவர் போல், “என்ன டா” என தலையை கோதியவாறு கேட்க, தாயின் கையை வெடுக்கென்று தட்டி விட்டாள்
“மதி” என்று சற்று அழுத்தமாக அழைக்க
“ஆமா… என்கிட்ட மட்டும் தான் இதெல்லாம். அங்க ஒருத்தர் இருக்காரே, அவர்கிட்ட இது மாதிரி பேசறது?” என்று கூறிய அடுத்த நிமிடம்
“அய்யோ மதி, என்ன இப்படி பேசற? அவர்கிட்ட நான் எப்படி இப்படி பேசறது?” என்று குரல் நடுங்க கேட்டார்.
“எதுக்கு மா உனக்கு இந்த பயம்? அவர் உன் கணவர் மா, நீ தைரியமா பேச கொஞ்சம் முயற்சி பண்ணு”
அந்த பக்கம் பதிலேதும் வரவில்லை
“அம்மா நான் உன்கிட்ட தான் பேசறேன். நீ இப்படியே அமைதியா இருக்கிறதால தான் அப்பா எதுக்கெடுத்தாலும் குறை சொல்றார், மத்தவங்க முன்னால அவமானப்படுத்துறார்” என தன் தாய்க்கு அவரின் நிலையை புரிய வைக்க முயன்றாள்
“போதும் மதி, நேரமாகுது போய் குளி” என்று கூறிவிட்டு அகன்றார்
இப்படி சொல்லி விட்டு போகிறவரிடம் என்ன பேசியும் பயனில்லை என்பதை உணர்ந்த வசுமதி, பெருமூச்சுடன் குளியலறை நோக்கி நடந்தாள்.
நம் சமூகத்தில் இவரை போன்ற சில பெண்கள், இன்றும் வாழ்கிறார்கள் என்பதே நிதர்சனம்
கணவன் என்ன தான் அவமானப்படுத்தினாலும், அதை பொறுத்துக் கொண்டு அவர்கள் கூறும் குறைகளை ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொள்கிறார்கள்.
எதிர்த்து பேச ஒரு நொடி ஆகாது. ஆனால், அப்படி பேசுபவர்களின் வார்த்தைகளை சரியாக புரிந்து கொள்ளாது சில உறவுகள் சறுக்கி உள்ளது.
இந்த நிலை வரக்கூடாது என்பதாலோ என்னவோ, சில குடும்பங்களில் ஆணின் குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது. அதே நிலை தான் இந்த வீட்டிலும்
அங்கு வந்து நின்ற மனைவியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை ராஜன்
“என்னங்க…” என்று மெல்லிய குரலில் அழைத்த மனைவியை
‘என்ன’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார்
“இன்னிக்கு சீக்கிரம் வர முடியுமா?” என்று கேட்க
“எதுக்கு?” என்ற கேள்வி சூடாக வந்தது.
“கோவிலுக்கு…”
“ஏன்?” அடுத்த கேள்வி இன்னும் சூடாக
“அது… நம்ம கல்யாண நாள்… அதான்…” என வார்த்தைகளை மென்று விழுங்கி ஒருவாறு கூறி விட்டார்
“நான் வாழ்க்கையில் செய்த முதல் தவறு உன்னை கல்யாணம் செய்தது, அந்த தவறுக்கு இப்ப ஒரு கொண்டாட்டம் வேறயா” என சொல் அம்புகளை பாரபட்சம் பார்க்காமல் வீசிவிட்டு, அமைதியின் சிகரம் போல் முகத்தை வைத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டார்.
கண்ணீர் கண்களை மறைத்துக் கொண்டு, ‘இப்போது விழவா’ என அனுமதி கேட்டவாறு நிற்க, அதை சேலை தலைப்பில் அழுந்த துடைத்து விட்டு நிமிர்ந்தார் சத்யவாணி.
மகளும் சிறிது நேரத்தில் கல்லூரி சென்று விட, தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கத் தொடங்கினார் சத்யவாணி.
#ad
வீரபாண்டியன் – செவ்வந்தி தம்பதியின் செல்ல மகள் சத்யவாணி. அழகும், அறிவும் நிறைவாக பெற்றவள்.
மகளின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார் வீரபாண்டியன்.
அவருக்கு சொந்தமாக இரு துணி கடைகள் உண்டு. பண்டிகை காலங்களில் அவருடைய கடைகளில் கூட்டம் அலை மோதும். ஊரிலும் நல்ல பெயர் இவருக்கு.
“அம்மாடி வாணி” என்ற தாயின் குரலுக்கு
“சொல்லுங்க மா” என்று வந்து நின்று மகளை கண்டவரின் முகம், பெருமையில் பூரித்தது.
காலையில் குளித்து புது மலராக வந்து நின்ற மகளுக்கு நெற்றியில் முத்தமிட்டு, “அப்பா உன்னை வர சொன்னாங்க போயிட்டு வா டா” எனவும்
“சரி” என்று கூறிவிட்டு தந்தையை நோக்கி சென்றாள்.
அங்கு ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தவர், கொலுசு ஒலியை வைத்தே வருவது யார் என்பதை உணர்ந்து, “வாணி மா” என்றழைக்க
“என்ன ப்பா” என்றாள் சத்யவாணி
“நீ எந்த ஊர்ல இருக்கற கல்லூரிக்கு படிக்கப் போற?” என்று வினவ
“நம்ம ஊர்ல தான் ப்பா” என்றாள்
“உனக்கு வெளியூர்ல படிக்க விருப்பம் இருந்தாலும் சொல்லு டா, நான் ஏற்பாடு செய்றேன்” என்ற தந்தையின் கரங்களை பற்றியவள்
“உங்களை அம்மாவை எல்லாம் விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் ப்பா” என்ற மகளின் கரங்களை ஆதுரமாய் பற்றினார் தந்தை
இருந்தும் மனம் கேளாது, “அது இல்லடா… உன்னுடைய…” என்று ஏதோ கூற வந்தவரை தடை செய்தது அவரின் மனைவியின் குரல்.
“என்னங்க இது புள்ள வேண்டாம்னு தான சொல்றா, நீங்க ஏன் திரும்ப திரும்ப அதை பேசிட்டு இருக்கீங்க?” என முறைக்க
“அதுக்கு இல்ல செவ்வந்தி” என்று ஆரம்பித்த கணவரை பார்வையால் அடக்கியவர்
மகளின் புறம் திரும்பி, “நீ உள்ள போ வாணி” என மகளை அறைக்கு அனுப்பினார்
பின் கணவரிடம், “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று நேரடியாகவே கேட்க
“எனக்கு தெரிந்தவங்க எல்லாம் வாணிக்கு வரன் பார்க்க ஆரம்பிக்க சொல்றாங்க… பிள்ளை இங்க இருந்தா சரி வராது, அதான் படிக்க வெளியூர் அனுப்பலாம்னு யோசிச்சேன்”
“நீங்களா இப்படி பேசறது? எப்பவுமே மத்தவங்க விருப்பத்த நீங்க ஏற்க மாட்டீங்க, உங்க மனசுக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான அதை செய்வீங்க”
மனைவி தன் குணத்தை துல்லியமாக அறிந்திருப்பதை எண்ணி மனம் மகிழ்ந்தார் வீரபாண்டியன்
“என்னங்க…” என்று அழைத்து கணவனின் தோளை தொட
“நீ சொல்றது எல்லாம் சரி தான் மா… அவங்களுக்காக மட்டும் இதை நான் சொல்லல” என்று கூறியவர்
ஒரு இடைவெளி விட்டு பின் தொடர்ந்தார், “வாணி எல்லா விஷயத்திலும் நம்மையே எதிர்பார்த்து இருக்கா, கூண்டு கிளியா இருக்கிறவளை சுதந்திர பறவையாக பறக்க விட ஆசைப்பட்றேன்”
“நீங்க ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா வாணியை பிரிஞ்சு என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது. இன்னும் அதிகபட்சம் நாலு வருஷம் இங்க இருப்பா, அப்புறம் வேற வீட்டுக்கு போய்டுவா. அதுவரைக்கும் அவ என்னோட தான் இருப்பா, இருக்கணும்” என்று திட்டவட்டமாக கூறி விட்டு நகர்ந்தார் செவ்வந்தி
மகளின் பயந்த சுபாவம் மாற வேண்டும் என்று நினைத்து அவர் ஒன்றை செய்ய முயன்றால், அவரின் மனைவியோ அதற்கு இப்படியொரு முட்டுக்கட்டை போடுவாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பார்க்கலாம் காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என மௌனமானார்
அந்த ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தாள் சத்யவாணி
மகளின் விருப்படியே அதே ஊரில் இருக்கும் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் சேர்த்து விட்டார்.
அவர் எண்ணியது போல் மகள் தன் கூட்டில் இருந்து வெளியே வந்து அவளின் முயற்சியால் சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கினாள்.
கல்லூரியில் நடக்கும் அனைத்து பேச்சு போட்டியிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றாள் சத்யவாணி
அதனை தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை எழுதி தன் திறமைகளை வளர்த்து கொள்ள, அவளின் தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கல்லூரியில் நடக்கும் பட்டிமன்றங்களில் சத்யவாணி என்ற பெயரை கேட்டாலே எதிரணி நடுங்கும் என்ற அளவுக்கு இருந்தது அவளின் பேச்சு.
படபடவென பொரிந்து தள்ளாமல், நிறுத்தி நிதானமாக அதுவும் அழுத்தமான கருத்துக்களை கொண்டு பேசும் அவளின் உரைக்கு பலர் அடிமை.
மூன்று வருடங்கள் விரைவாக நகர்ந்தது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், சத்யவாணிக்கு நல்ல வரன் அமைந்தது
ராஜன் வருமான வரித்துறையில் உயர்ந்த பதவியில் இருந்தார். பெற்றோருக்கு ஒரே மகன். கைநிறைய சம்பளம், சொந்த வீடு என பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, திருமணத் தேதி உறுதி செய்யப்பட்டது.
சீரும் சிறப்புமாக மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார் வீரபாண்டியன்.
வரவேற்பு, மறுவீட்டு விருந்து என அனைத்தும் முடிந்தபின், இருவரின் பெற்றோரும் இணைந்து சென்னையில் வீடு பார்த்து இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர்
தனியாக வந்தபின் தான், கணவனின் குணத்தை சத்யவாணியால் அறிய முடிந்தது
ராஜனின் ஆணாதிக்க குணத்தை கண்டு அஞ்சத் தொடங்கினாள்
சாப்பாட்டில் குறை கூறுவது என்று தொடங்கி, அவள் எது செய்தாலும் அதில் ஒரு தவறை கண்டுபிடிக்கும் தன் கணவரை எண்ணி வருந்தினாள்.
கல்லூரியில் படிக்கும் போது இருந்த சத்யவாணிக்கும், இப்போது இருப்பவளுக்கும் எத்தனையோ வித்தியாசங்கள்.
சில நேரம் தன்னை பார்த்து அந்த கேள்வியை கேட்டு கொள்வாள், ‘நானா அவள் என்று’. அதற்கு விடை தான் பூஜ்யமாக இருக்கும்.
ஒருமுறை கடற்கரை சென்ற போது, ஏதோவொரு ஆர்வத்தில் அருகே நின்ற கணவனின் கரத்தை பற்றி இழுத்தாள் சத்யவாணி
மனைவி சட்டென்று தன் கரத்தை பிடித்து இழுப்பாள் என்று அறியாது நின்ற ராஜன், தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்ய, அதற்குள் கரங்களில் இருந்த ஐஸ்கிரீம் சிதறி அவருடைய ஆடையை அபிஷேகம் செய்தது.
தன் தவறை உணராத சத்யவாணி, “என்னங்க என்னங்க” என மீண்டும் அழைக்க, சிறிதும் கசங்கல் இல்லாத ஆடையை அணியும் ராஜனை, இந்த ஐஸ்க்ரீம் அபிஷேகம் கோபம் கொள்ளச் செய்தது
பொது இடம் என்றும் பாராமல் மனைவியின் தோளை பற்றி திருப்பி ‘பளார்’ என்று ஒரு அறை விட்டு, முரட்டுத்தனமாக கைகளை பிடித்து இழுத்து வீட்டுக்கு வந்தார்.
கடிந்து கூட பேசாத தாய் தந்தைக்கு பிறந்தவளை, கரம் நீட்டி அடித்ததை எண்ணி சிறிதும் யோசிக்காமல், தன் வார்த்தைகளால் மனைவியை விளாசிக் கொண்டிருந்தார்
“கிராமத்தில இருந்த உன்னைப் போய் எனக்கு ஜோடி சேர்த்தாங்க பார், அவங்கள சொல்லணும். பொது இடத்தில் எப்படி நடக்கணும் கூட தெரியலை, நீ எல்லாம் என்ன படிச்ச பொண்ணு”
“உங்கப்பா காசு கொடுத்து தான் டிகிரி வாங்கி தந்துருப்பார்”
“எனக்கு கொஞ்சம் கூட சரிசமமாக இல்லாத உன்னைப் போய்…” என தன் பேச்சால் மனைவியை வாயடைத்து நிற்க வைத்தார்.
தேள் போல் வார்த்தையால் கொட்டி விட்டு அகன்றார்.
கணவன் அடித்தது கூட சத்யவாணிக்கு வலிக்கவில்லை, ஆனால் அவன் பேசிய வார்த்தைகள், இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.
இரவு உணவு கூட அருந்தாமல் தூங்கச் சென்றவளை, கணவனின் கரங்கள் வளைத்துக் கொண்டது. விடுபட முயன்றும் தோல்வியே எஞ்சியது
பகல் முழுவதும் கதிரவனை போல் அனலை வீசிவிட்டு, இரவில் சந்திரன் போல் குளுமையை தரும் கணவனை எந்த வகையில் சேர்ப்பது என புரியாது குழம்பினாள்
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் கர்ப்பம் தரித்தாள் சத்யவாணி. இதை அறிந்த இருவரின் பெற்றோரும் மகிழ்ந்தனர்
ராஜன் எப்போதும் போலவே இருந்தார், முகத்தில் துளியும் மகிழ்ச்சி இல்லை.
நாட்கள் நகர்ந்தது.
ராஜன் – சத்யவாணி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறக்க, அவளுக்கு வசுமதி என பெயர் சூட்டினர்.
முதுமை காரணமாக இருவரின் பெற்றோரும் ஒருவர் பின் ஒருவராக இறையை நாடினர்
அதன் பின், மகள் மட்டுமே உலகம் என்றானது சத்யவாணிக்கு.
கணவனின் புறக்கணிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் பேச்சுக்குக் கூட பஞ்சம் ஆனது.
இருந்தும் பாறையில் முட்டிய கல் போல் கணவனிடம் பேச முயற்சித்துக் கொண்டே இருந்தாள் சத்யவாணி
வசுமதிக்கு தந்தையின் இந்த குணம் பிடிப்பது இல்லை, எனவே அவரிடம் எப்போதும் ஒதுங்கியே இருப்பாள்.
வீட்டுக்கு யாராவது வந்தால் மனைவியை எல்லோர் முன்னிலையில் ஏதாவது ஒன்றை கூறி மட்டம் தட்டுவார்.
முதலில் மனம் வருந்த செய்தது, பின் அதுவே பழகிவிட்டது.
கடிகாரம் தன் இருப்பை காட்ட, நிகழ்காலத்துக்கு வந்தாள் சத்யவாணி
“அச்சோ நேரம் ஆகிருச்சு, மதி வந்துடுவா ஏதாவது செய்வோம்” என்று தனக்குள் பேசியபடி சமையலறை பக்கம் சென்றார்.
மகளுக்கு பிடித்த வாழைப்பூ வடையும், பாயாசமும் செய்தார்.
“அம்மா” என்று கூறிக் கொண்டே வந்து தாயை பின்னால் இருந்து அணைத்தாள் வசுமதி
“என்ன என்னோட செல்லம் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க, என்ன விஷயம்?” என தானும் மகளின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டவாறு கேட்க
“இன்னிக்கு ஒரு கேம்பஸ் இன்டெர்வியூ இருந்தது, அதுல செலக்ட் ஆகி இருக்கேன். படிப்பு முடிஞ்சப்புறம் வேலைக்கு சேர சொல்லி இருக்காங்க மா” என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவாறு சொல்ல
“சந்தோஷம் டா” என்று கூறி, மகளை அணைத்து உச்சி முகர்ந்தார்.
மகளுக்கு செய்தவற்றை எல்லாம் ஊட்டி விட்டார். அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு என்பதை பாவம் அவர்கள் அறியவில்லை.
வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேளையாக மனைவியை அழைத்தார் ராஜன்.
அதிசயமாக கணவன் அழைப்பை எண்ணி வியந்தவாறு அவரின் அருகே வந்து ” என்னங்க?” என்று ஆசையாகக் கேட்க
“இந்த கவரை பிரித்துப் பார்” என கையில் திணித்தார்
என்னவாக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்புடன் பிரித்துப் பார்க்க, அதில் ஒரு பையனின் புகைப்படமும், அவனைப் பற்றிய விவரங்களும் இருந்தது
“பையன் நல்லா இருக்கான், யாருக்கு பாக்கறாங்க?” என்று கேட்க
“வசுமதிக்கு” என்ற ஒற்றை வார்த்தையில், மகிழ்ச்சி மங்கி போனது.
“மதிக்கா? அவ சின்னப் பெண், அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்?” என தன் மறுப்பை தெரிவிக்க, இதெல்லாம் காது கொடுத்து கேட்கும் ரகம் அல்ல ராஜன்.
“நான் உன் விருப்பத்த கேட்கல, வர்ற வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வருவாங்க, அதுக்கு வேண்டியதை பண்ணு” என உத்தரவிட்டார்
தயங்கியவாறு, “அப்பா நான் வேலைக்கு போயிட்டு, இரண்டு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கறேன் ப்ளீஸ் பா” என கெஞ்சும் குரலில் வசுமதி சொல்ல
“என்னுடைய வார்த்தைக்கு அவ்வளவு தான் மரியாதையா இந்த வீட்ல” என்று சத்தம் போட்டவர், மனைவியைப் பார்த்து, “எல்லாம் உன்னால தான்” என கோபமாக கத்தினார்
“நான் என்ன செஞ்சேன்? திருமணம் அவ விருப்பப்படி தான் நடக்கணும், நீங்க கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கக் கூடாது” என சத்யவாணி குரலை உயர்த்த
“என்ன சத்தம் அதிகமா இருக்கு?” என அதட்டினார்
“ஆமாம் என் பெண்ணுக்காக நான் பேசுவேன் தான்” என்றார் சத்தியவாணி
வாய் சண்டை கை சண்டையாக மாறும் நிலை ஏற்பட, “போதும் நிறுத்துங்க” என கத்தினாள் வசுமதி
மனைவியை அடிக்க ஓங்கிய ராஜனின் கரம் கீழே இறங்கியது.
பெற்றோர் முகத்தை பார்த்து, “எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்” என்று கூறிவிட்டு, தன் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்
மனைவியை ஒரு வெற்றி புன்னகை பார்த்து விட்டு கடந்து சென்றார் ராஜன். அதை அலட்சியம் செய்து விட்டு, மனம் படபடக்க மகளை காண விரைந்தார் சத்யவாணி.
அழுகையில் குலுங்கும் மகளின் முதுகை ஆதரவாக வருட, அந்த ஸ்பரிசத்தில் தன் அழுகையை நிறுத்திவிட்டு தாயை அணைத்துக் கொண்டாள் வசுமதி.
“எதுக்கு மதி அப்படி சொன்ன?”
“என்னால் உங்க இரண்டு பேருக்கும் சண்டை வர வேண்டாம் மா” என கண்ணீரோடு சொல்ல
“உங்க அப்பா எப்பவும் தான் என்னோட சண்டை போடுவார், அதுக்காக உன்னோட கனவ கலைக்க போறியா?” என மனம் ஆறாமல் கேட்டார்
“விடு ம்மா, இது தான் விதி போல” என்றாள் சோர்வாய்
“நான் பேசிப் பார்க்கிறேன் மதி” என்று தைரியம் சொல்ல
“வேண்டாம்” என்று அழுத்தமாக கூறிவிட்டு, தாயின் மடியில் முகம் புதைத்தாள் வசுமதி
அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவாறு, மகளை தட்டி கொடுத்து தூங்க வைத்தார் சத்யவாணி
வெள்ளிக்கிழமை பெண் பார்க்கும் படலம் நடந்தது.
பையனின் பெயர் நெடுஞ்செழியன், வங்கியில் பணிபுரிகிறான், நல்ல குடும்பம், குறை என்று கூற எதுவுமில்லை.
அனைவருக்கும் வசுமதியை பிடித்து விட, பெரியவர்கள் இணைந்து திருமணம் தேதியை உறுதி செய்தார்கள்.
இத்தனை நாளும் நத்தை போல் நகர்ந்த நாட்கள், இப்போது காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடியது.
திருமணம் நல்லபடியாக முடிய, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அறைக்கு வந்த வசுமதியை பார்த்து சிரித்தான் நெடுஞ்செழியன்
தந்தையின் செயலால் வருத்தத்தில் இருந்தவளுக்கு, கணவனின் சிரிப்பு சினத்தை ஏற்படுத்தியது.
“எதுக்கு இப்போ இந்த சிரிப்பு? நான் என்ன கோமாளி மாதிரி இருக்கனா?” என கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு விட்டவாறு கேட்க
“சாரி சாரி” என்று மன்னிப்பு வேண்டினான் நெடுஞ்செழியன்
இன்னும் கோபம் தணியாது தன்னை முறைத்துக் கொண்டு இருக்கும் மனைவியின் கரம் பற்றி அருகே அமர வைத்தான், “இங்க பாருடா…” என்று முகத்தை பற்ற
‘பார்க்க மாட்டேன்’ என்பதை போல் தலையை ஆட்டினாள்.
அவளின் சிறுபிள்ளை தனத்தில் மனதை தொலைத்தவன், “வசு” என்றழைத்து நெற்றியில் முத்தமிட, கணவனின் இந்த பிரத்தியேக அழைப்பில் அவளின் முகம் பிரகாசமடைந்தது.
பெண் பார்க்க வந்த போதே அவனை பிடித்து இருந்தது. தந்தையின் செயலால், விருப்பம் இல்லாதவள் போல தன்னை காட்டிக் கொள்ள முயன்றாள்.
கணவனின் இந்த அழைப்பு அவள் மனதை கவர, மெல்ல தன் விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
“உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைனு எனக்குத் தெரியும், ஆனால் நான் உன்னை விரும்பி தான் திருமணம் செய்தேன்” என்றான்
“புரியல?”
“நான் உனக்கு காலேஜ்ல சீனியர்”
“வாட்?”
“ஆமா… நான் கடைசி வருஷம் படிக்கும் போது தான் நீ சேந்த. ஏனோ தெரியலை உன் முகத்தை அடிக்கடி பாக்கத் தோணும், அதுக்காகவே உன் க்ளாஸ் பக்கம் வருவேன்”
“நான் உங்களை பாத்ததில்ல”
“தெரியும்… நீ தான் நிலத்தை பார்த்து நடக்கிற பெண்கள் கூட்டத்தை சேர்ந்தவளாச்சே” என கிண்டலாக கூற
“போதும் செழியன்” என சிணுங்கினாள் வசுமதி
“அப்பா… என் பெயரை ஆறு மாதத்திற்கு அப்புறம் சொல்லிட்ட” என மீண்டும் அவன் கேலியில் இறங்க
“ப்ச்… என்ன நடந்தது, சொல்லுங்க ப்ளீஸ்”
“சரி சொல்றேன்… அப்ப எனக்கு அது என்ன உணர்வுனு சொல்லத் தெரியலை, அப்படியே விட்டுட்டேன். ஆனா உன்னை மறக்கல. படிப்பு முடிஞ்சு வேலை அது இதுனு நாள் போயிடுச்சு.
அப்புறம் வீட்ல கல்யாண பேச்சு வந்தது. உன் போட்டோ பார்த்தவுடனே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? சொல்ல வார்த்தையே இல்ல. நான் ரொம்ப ஆசையா உன்னை பார்க்கலாம்னு வந்தா, நீ என் முகத்தை கூட பாக்காம காபி குடுத்த” என அவளின் காதை பிடித்து கிள்ள
“அது…” என்று ஏதோ கூற வந்தவளை, கை உயர்த்தி தடுத்தான்
“நான் பேசி முடிக்கிறேன். எனக்கு மனசு கஷ்டமா இருந்தது, என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது தான் உன் அம்மா போன் பண்ணாங்க” என்று சொல்லி நிறுத்த
“அம்மா என்ன சொன்னாங்க?” என்றாள் பதட்டமாய்
“உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு சொன்னாங்க”
“செழியன் அது…” என்று தயங்க
“அத்தை எல்லாத்தையும் சொல்லிட்டாங்க வசு, உன் விருப்படி நீ வேலைக்கு போகலாம், அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்” எனவும்
“ரொம்ப நன்றி செழியன்” என்று கண்ணீரோடு கூறியவளை, ஆறுதலாக அணைத்துக் கொண்டான்
“வசு… எதை நெனச்சும் நீ கவலைப்படக் கூடாது சரியா?” என காதலுடன் கூற
‘சரி’ என தலையாட்டினாள்
“குட் இப்போ தூங்கலாம் வா” என்றவனை கேள்வியாக பார்க்க
“நம்மை நாம் புரிந்து கொண்ட பிறகு தான் இதெல்லாம்” என படுத்தவன, அவளையும் தூங்க வைத்தான்.
#ad
சத்யவாணிக்கு மகளை பற்றிய கவலை சிறிதும் இல்லை, மருமகன் நன்றாக பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது
நெடுஞ்செழியன் – வசுமதியின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக காதலுடன் சென்றது.
ஒரு வருடம் கழித்து வசுமதி கருவுற்றாள்.
மகளை கண்ணும் கருத்துமாக சத்யவாணி பார்த்துக் கொள்ள, சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு கவிநேயன் என பெயர் சூட்டினர்.
வருடங்கள் நகர, ராஜனின் ஆதிக்கம் அந்த வீட்டிலில் குறைந்தது.
மனைவியை குறை கூறுவதை குறைத்துக் கொண்டு, ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தார். ஏனோ அது கடவுளுக்கு பொறுக்கவில்லை போலும்
வழக்கம் போல் இரவு உறங்க சென்ற சத்யவாணி, காலையில் கண் விழிக்கவில்லை.
யோசனையாக மனைவியின் மூக்கில் கை வைக்க, அவளின் சுவாசம் நின்றிருந்ததை உணர்ந்ததும், அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் ராஜன்
மருமகனுக்கு தகவல் சொல்ல, மொத்த குடும்பமும் வந்தது
அதன் பின், அனைத்து காரியங்களும் மடமடவென நடந்தது.
வசுமதி கதறி அழ, மனைவியை சமாதானம் செய்ய முயன்று தோன்றான் நெடுஞ்செழியன்
“பாட்டி பாட்டி” என்றழைத்தவாறு கவிநேயன் நிற்க, எதையும் உணராது நின்றார் ராஜன்
எல்லாம் முடிந்தது. சத்யவாணி இறந்து இருபது நாட்கள் ஆன நிலையில், மகள் தன் வீட்டுக்கு அழைத்தும் செல்லாமல், தன் வீட்டிலேயே இருந்தார் ராஜன்
வீட்டை சுத்தம் செய்யலாம் என ஆரம்பித்த ராஜனின் கண்ணில் ஒரு பெட்டி பட, அதை திறந்து பார்த்தவர், அதிர்ந்து நின்றார்
அந்த பெட்டியில் ஏறக்குறைய முப்பது புத்தகங்கள் இருந்தது. அவற்றை எல்லாம் எழுதியது தன் மனைவி என்ற செய்தி அவரை அதிரச் செய்தது.
கவிதை மற்றும் கதை புத்தகங்கள் என நிரம்பி வழிந்தது. ஒரு புத்தகத்தை எடுத்து, நடுங்கும் கரங்களால் வருடிப் பார்த்தார் .
‘ஒரு பெண்ணின் ஏக்கம்’ என்ற தலைப்பில், ஆசிரியர் பெயர் ‘சத்யா ராஜன்’ என்று இருக்க, அதில் தன் மனைவியின் ஏக்கங்கள் அப்பட்டமாக வெளிப்பட்டு இருப்பதை வாசித்தவரின் கண்கள் கசிந்தது
தன்னுடைய வெறுப்புகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்ந்த மனைவியின் மறுபக்கத்தை அவர் அறியவில்லை. அறிந்தபின், அவள் இல்லை
காலம் கடந்த பின் மனைவி மீது காதல் பிறக்க, அதை பகிர்ந்து கொள்ள அவரின் சத்யா அருகே இல்லை.
மனைவியின் புகைப்படம் முன் கண்ணீரோடு அமர்ந்தவர், “மன்னிச்சுடு சத்யா” எனவும், மாலையில் இருந்த ஒரு ரோஜா மொட்டு கீழே விழுந்து, மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை உணர்த்தியது.
தன் மனைவி திறமை இல்லாதவள் என்றெண்ணி மட்டம் தட்டி வார்த்தைகளை சிதறவிட்டார் ராஜன். திறமை இருந்தும் அதை கணவனுக்கு தெரியபடுத்தாமல் மறைத்து மறைந்தாள் சத்யா.
ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் இரண்டையும் களைந்து, அன்பை மட்டுமே ஆதிக்கம் செய்வோம். அன்பான வாழ்வு வாழ்வோம்
Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads
Ads will be placed in this website &
Promoted across our Social Media Platforms
(முற்றும்)
மனம் விட்டுப் பேசினால் எல்லாம் கரைந்து போயிருக்கும். எங்கே! அதற்கு இடமே கொடுக்கலையே ராஜன்1 சில ஆண்கள் இப்படித்தான். தாங்கள் தான் புத்திசாலி என்னும் நினைப்பில் மனைவியை மட்டம் தட்டுவார்கள். நிறையப் பார்த்தாச்சு!
நன்றாக சரளமாக எழுதி இருக்கிறார். வாழ்த்துகள்.