இரவு மணி 9:00
ஆபீஸிலிருந்து வனிதா வீட்டிற்கு கிளம்பும் போதே தாமதமானதால், சாலையில் டிராபிக் இல்லை
சூரியன் FMல் சித் ஶ்ரீராம் நிதானமாக பாடிக் கொண்டிருந்தான். கைகளும், கால்களும் காரை இயக்குவதில் ஈடுபட்டிருக்க, மனம் ஒன்றையே சுற்றிச் சுற்றி வந்தது
மனித மனம் சஞ்சலப்பட்டால், ஒன்று கடவுளை நினைக்கும், அல்லது கடவுளிடம் போய்ச் சேர்ந்த நெருங்கிய சொந்தங்களை நினைக்கும். அப்படித் தான் வனிதா அவள் அப்பாவின் நினைவை அசை போட்டுக் கொண்டிருந்தாள்
அப்பா எவ்வளவு பெரிய பலம், நம்பிக்கை. ‘நான் இருக்கேன் மா’னு ஒரு வார்த்தை அப்பா சொன்னா போதுமே, எல்லா தடைகளையும் கடந்துறலாமே
மூணு வயசுல இருட்டுல தனியா போக பயந்தப்பவும் சரி, இருவது வயசுல வேலை இன்டெர்வியூக்கு போகும் போதும் சரி, “நான் இருக்கேன் மா, நீ தைரியமா போ”னு அப்பா சொன்ன அந்த வரிகள் தான் வனிதாவை ஐ.டி’யில் இத்தனை பெரிய பதவியில் அமர்த்தி இருக்கிறது
‘அப்பா இப்போ இருந்தா என்ன சொல்லி இருப்பார்? எத்தனை நாள் கழிச்சி வந்திருக்கு இந்த அமெரிக்க பயண வாய்ப்பு. ஆபீஸில் நாளைக்கே சம்மதம் சொல்லணும்’
‘தனி ஆளா இருந்தா உடனே ஓ.கே சொல்லியிருப்பேன். இப்போ சதீஷ்கிட்ட கேட்கணும். விஷால் குட்டி மூணு மாசம் என்னை விட்டுட்டு இருப்பானா தெரியலை’ என மனம் அலைபாய, சூப்பர் மார்க்கெட் கண்ணில் தென்பட்டதும் காரின் ஓட்டத்தையும், எண்ண ஓட்டத்தையும் பிரேக் போட்டு நிறுத்தினாள் வனிதா
அங்கு பழங்கள் வாங்கிய கையோடு, மறக்காமல் இரண்டு கட்டு அகத்தி கீரையும் வாங்கிக் கொண்டாள்
விஷால் சதீஷ் இருவருக்கும் அவள் அப்பா மாதிரியே அகத்திக் கீரை பிடித்துப் போனது அவளுக்கு எப்போதும் ஆச்சர்யம் தான். அதுவும் வெங்காயம் போட்டு செய்யும் கீரை பொரியல் என்றால் கூடுதல் இஷ்டம்
இருவரும் வீட்டில் இவளுக்காக காத்திருந்தனர்
இரவு சாப்பாடு முடித்து விஷால் தூங்கிய பிறகு, வனிதா தன் கணவனிடம் விஷயத்தை பேசத் தொடங்கினாள்
விஷயத்தைக் கேட்டதும், “கங்கிராட்ஸ் வனி. இதத் தான முதல்ல சொல்லி இருக்கனும் நீ. சரி நாளைக்கே ஓ.கே சொல்லிடு. டிராவல் டேட்ஸ் கட்பார்ம் ஆனதும் நம்ம பர்சேஸ் ஆரம்பிக்கலாம்” என்றான் சதீஷ் மகிழ்வுடன்
“ஆனா சதீஷ்… உங்களால தனியா விஷால பாத்துக்க முடியுமா?” என வனிதா தயங்க
“டோன்ட் வோரி டியர், ஐ வில் டேக் கேர்” என்றான் சதீஷ்.
“இருந்தாலும் விஷால்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்” என்று எண்ணியபடி உறங்கச் சென்றாள்
காலை 8:30 மணி
“அம்மா அகத்திக் கீரை சூப்பர். லஞ்சுக்கும் கொஞ்சம் வெச்சிடு” என்ற விஷாலிடம், அமெரிக்க பயணம் குறித்து கேட்டாள் வனிதா
பத்து வயது சிறுவன் விஷாலுக்கு என்ன புரிந்ததோ, “நான் இருக்கேன் மா, நீ தைரியமா போ” என்றான், அப்படியே அவள் அப்பாவைப் போல
“அட்ரா சக்கை! ஜூனியரும் ஓ.கே சொல்லியாச்சு, அப்போ இன்னிக்கு டின்னருக்கு ஹோட்டலுக்கு போவோம்” என கண் சிமிட்டி சிரித்தான் சதீஷ், அதுவும் அவள் அப்பாவைப் போல
சிறு வயதில் அப்பாவே உலகமாக இருந்தவளுக்கு, இப்போது தன் உலகமான கணவரும், மகனும், தன் அப்பாவை போல தன்னை தாங்குவதை எண்ணி, மகிழ்ச்சியில் திளைத்தாள் வனிதா, அகத்திக் கீரையை டிபன் டப்பாவில் வைத்துக் கொண்டே
(முற்றும்)
சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings