in

நீரினைத் தேடிடும் வேரென நான் (அத்தியாயம் 3) – விபா விஷா – பிப்ரவரி 2021 போட்டிப் பதிவு

நீரினைத் தேடிடும்...❤ (பகுதி 3)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ன்று முதல் நாள் அலுவலகம் முடிந்து வந்த ஜானவி, கோபமே உருக்கொண்டு வீடு வந்தாள்

அவளது கோபத்தின் காரணமென்ன? அது தான் நமக்கு ஏற்கனவே தெரியுமே

அலுவலகத்தில் நாள் இனிமையாகவே கழிந்தாலும், காலையில் யாதவ் இறக்கிய பேய் இன்னும் ஜானவியை விட்டு முழுவதும் இறங்கவில்லை

யாதவ் மீதிருந்த கோபம் மொத்தமும் வேறு யார் மீது இறங்கலாம் என்று காத்துக் கொண்டிருக்க, அவள் வீட்டினுள் நுழைகையிலேயே அது தெரிந்தது

“அம்மா.. மா.. எங்க இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வந்தவள், சமையலறையிலிருந்து வெளிவந்த தன் தாயைக் கண்டதும்

“மா… எங்க போய்ட்டிங்க? எவ்வளவு நேரமா கூபிட்றேன்?” என்று கத்தினாள்

“ஹேய் நான் எங்க டி போய்ட்டேன்? நீ ரெண்டு முறை கூப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள வந்துட்டேன்ல? நீ முதல் நாள் வேலை முடிச்சு வர்றப்போ, உன்ன இனிப்போட வரவேற்கலாம்னு உனக்குப் பிடிச்ச கேசரி செய்யப் போனேன்” என்றார் நிர்மலா.

“ஆமா ஆமா… வரவேற்பு ஒண்ணு தான் குறைச்சல்” என்று ஜானவி சொல்ல, அவளை விசித்திரமாய் நோக்கினாள் அன்னை

“ஏய் என்ன ஆச்சு உனக்கு? ஏன் வந்ததும் வராததுமா இப்படிக் காயற?” என அன்னை கேட்டதும், காலையில் நடந்ததனைத்தையும் கூறினாள் ஜானவி

“அந்த யாதவுக்கு நான் யாருனு இன்னும் தெரியல. குகன் வரட்டும், அவன்கிட்டச் சொல்லி நான் யாருனு அவனுக்குத் தெரிய வைக்கறேன்” என, அன்று இரவு வரையிலும் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்

தந்தை தங்களது ஜவுளிக் கடையிலிருந்து வந்ததும், அவரிடமும் ஒருமுறை இந்தப் புராணத்தைப் படித்தவள், இதற்கு மேல் காத்திருக்க முடியாதென்று எண்ணி, தன் அண்ணனுக்குப் போன் போட்டாள்

போன் செய்த நொடி, வீட்டிற்கு வெளியிலேயே குகனின் ரிங் டோன் சத்தம் கேட்க, அண்ணன் வந்துவிட்டான் என ஆவலுடன் வாயிலை நோக்கியவள், அந்திவானமென முகம் சிவந்தாள்… வெட்கத்தினாலல்ல, கோபத்தினால்

ஏனெனில் அங்கு அவள் வீட்டினுள் வந்து கொண்டிருந்தது, அவன் தான். அவள் காலையிலிருந்து யாரை மனதார நினைத்து… மன்னிக்கவும்…யாரை மனதார சபித்துக் கொண்டிருந்தாளோ, அவனே தான்

அந்த யாதவின் பின்னால் அவ்வளவு மரியாதையுடன், பணிந்து பணிந்து அவனை வரவேற்றவாறு வந்து கொண்டிருப்பது யார் தெரியுமா? அவளது அண்ணன் குகன் தான்

“வெல்கம் சார், இது தான் எங்க வீடு, வாங்க. அப்பா அம்மா  இங்க வாங்க. இவர் மிஸ்டர் யாதவ், என் சீனியர் ஆஃபீசர். இது என் அப்பா அம்மா, இவ என்னோட தங்கை ஜானவி” என்று பரஸ்பரம் அறிமுகம் செய்வித்தான் குகன்

அவனைக் கண்டதும் ஜானவிக்குப் பற்றிக் கொண்டு வந்தது. இந்தக் குகன் வேறு அவனிடம் ரொம்பக் குழையவும், அவன் தலையிலேயே ஒரு போடு போடலாமா என்றிருந்தது

ஆனால் யாதவோ, முகத்தில் கூட எதுவும் காண்பிக்காது எல்லோரிடமும் இயல்பாய் பேசிக் கொண்டிருந்தான்

“இங்க நம்ம மலைல அகழ்வாராய்ச்சி செய்றாங்க இல்லப்பா, அத ஒரு தடவை பார்த்துட்டு போலாம்னு வந்தோம். சார் என்னை அப்படியே வீட்டுல ட்ராப் பண்றேன்னு வந்தார்” என்றவன்

தன் தாயிடம், “அம்மா, சாருக்கு ஒரு காபி” என்று கூறிவிட்டு, மீண்டும் யாதவிடம் திரும்பிப் பேசலானான்

நிர்மலா உள்ளே சென்றதும், அவரைத் தொடர்ந்து பின்னே சென்றாள் ஜானவி

அவர் காபி போட்டு முடித்ததும், “அம்மா நீங்க கேசரி செஞ்சிங்கள்ல, அதக் கொண்டு போய் அவங்களுக்குக் கொடுங்க, நான் காபி எடுத்துட்டு வரேன்” என்று அவரை முன்னே அனுப்பியவள்

அன்னை வெளியே சென்றதும், கலந்து வைத்திருந்த இரண்டு கப் காபியிலும் இரண்டு கை உப்பை அள்ளிப் போட்டாள்

“மவனே, என்னையா அத்தனை பேருக்கு முன்னாடி கை ஓங்கின? இன்னைக்கு நீ காலி” என்று யாதவைத் திட்டியவள்

“அடேய் அண்ணா, என் போன கூட எடுக்காம, நீ இந்த யாதவ் கூட ஜோடி போட்டுட்டு சுத்திட்டு இருக்கியா? இன்னைக்கு அவன் கூடச் சேர்ந்து நீயும் காலி. ச்சே… இப்போ கைவசம் பேதி மாத்திரை வேறே எடுக்க முடில. அண்ணணாச்சேனு கொஞ்சம் பாவமாத் தான் இருக்கு. சரி பொழச்சுப்போ…” என்று மனதுள் நினைத்தவாறே, இருவருக்கும் காபியைக் கொண்டு போய் கொடுத்தாள் ஜானவி

அவள் இருகோப்பைகளை மட்டும் எடுத்து வருவதைக் கண்ட நம்பிராஜன், “என்னம்மா அவர்களுக்கு மட்டும் காபி கொண்டு வந்திருக்க, எனக்கெங்க?” என கேட்கவும்

“அய்யயோ அப்பா… நீங்க வயசானவங்க…” என்று பதறிப் போய் அவள் சொன்னதைக் கேட்ட மற்ற அனைவரும் திகைத்து

“என்னது??” என்று கேட்கவும்

உடனே, “இல்லப்பா, உங்களுக்கு வயசாகிடுச்சு. இவ்வளவு லேட்டா காபி சாப்பிட்டா நல்லதில்லை இல்ல? அதான் சொன்னேன்” என்று ஒருவாறு சமாளித்தாள்

“ஓஹோ” என்று தலையாட்டியவாறே யாதவும், குகனும் ஒரு சேர காபி கப்பை வாயில் வைத்தார்கள்

சற்றுக் கண்கள் சுருங்க, உதட்டில் மெல்லிய சிரிப்புடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானவி

ஒருதுளி காபி நாவில் பட்டது தான் தாமதம், இருவரும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் சட்டென்று பார்த்துக் கொள்ளவும், சிரிப்பை அடக்க முடியாது தவித்தாள் அவள்

இருவரும் அடுத்த நொடி காபி கப்பைக் கீழே வைத்துவிட, “ஏன்.. என்னாச்சு குகன்? என்று பெரியவர்கள் இருவரும் கேட்டனர்

“ஒண்ணுமில்லமா, நான் குகன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும், அத பேசிட்டு வந்துடறோம்” என அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் யாதவ்

இருவரும் வீட்டு வாசலுக்கு வந்த பின்பு, “குகன் உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?” என்று கேட்டான் யாதவ்

யாதவின் இந்தக் கேள்வியில் சங்கடமடைந்த குகன், “இல்ல சார்.. சாரி, ஏதோ தப்பு நடந்துடுச்சு” என்று திணறவும்,

“சுகர் இல்லனா, அப்போ உப்பு ஜாஸ்தியாகிடாம பார்த்துக்கோ” என்றவன், மீண்டும் வீட்டினுள் சென்று

“நான் கிளம்பறேன் சார், கிளம்பறேன் மா…” என்று விடை பெறவும்

“அச்சச்சோ ஏன் சார் காபி குடிக்காம கிளம்பறீங்க?” என்று வினவினார் நிர்மலா

“ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு மா, இன்னொரு நாள் விருந்தே சாப்டுட்டா போச்சு” என்று கூறியவன்

“ஆனா அந்த விருந்துல உங்க பொண்ண பரிமாறக் கூட விட்றாதீங்க” என மனத்திற்குள் நினைத்துக் கொண்டான்

யாதவ் அங்கிருந்து கிளம்பியதும், ஜானவி தன் அண்ணனிடம் காட்டுக் கத்தல் கத்தத் தொடங்கி விட்டாள்

“என்ன நீ அவனுக்குப் போய் அவ்வளவு மரியாதை குடுக்கற? அவன் இன்னைக்கு என்ன பண்ணினான்னு தெரியுமா? காலையில டிராபிக் ஜாம்ல ஏன் சார் டிராபிக் க்ளியர் பண்றதுக்கு இவ்வளவு லேட் பண்றீங்கனு கேட்டதுக்கு, அத்தனை பேர் முன்னாடி என்ன அடிக்கக் கை ஓங்கிட்டான். நான் அவனை உன்கிட்ட மாட்டி விடலாம்னு உனக்காகக் காத்துட்டுருந்தா, நீ அவனுக்குக் கூஜா தூக்கிட்டு வர” என்று அவள் எகிற

“அதுக்காக நீ காபியில உப்பள்ளி போடுவியா? அதுவும் எனக்கும் சேர்த்துப் போட்டு வச்சுருக்க? அவரு நம்ம பேமிலில உப்பு நோய் வந்துடப்போகுதுனு கலாய்ச்சுட்டு போறார் தெரியுமா?” என்று பதிலுக்கு அவன் எகிற, அங்கு ஒரே களேபரமாகிவிட்டது.

றுபுறம் யாதவின் வீட்டிலோ, ஒரு பெரிய பட்டாளமே அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

யாதவின் தம்பி சார்விக், தங்கை சாதனா, யாதவுடன் ஒன்றாகப் படித்து, தற்போது காதலர்களாய்  இருக்கும் மகிழவன்-மாதுரி, அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் விபின் மற்றும் கவின் (இரட்டையர்கள்), அனைவரும் யாதவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்

இரட்டையர்களில் ஒருவனான விபினுக்குத் தான், யாதவின் தங்கை சாதனாவைப் திருமணம் செய்வதாக முடிவு செய்திருக்கிறார்கள்

சார்விக்கும், சாதனாவும், ஐ.டியில் வேலையில் இருக்க, மகிழவன் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார். மாதுரி வீட்டிலேயே தான் இருக்கிறாள்

விபினும் கவினும் பொறியியல் முடித்திருந்தாலும், தங்களது தந்தையின் இரண்டு சூப்பர் மார்கெட்டுகளையும் ஆளுக்கு ஒன்றாய் பார்த்துக் கொள்கிறார்கள்.

யாதவ் வீடு வந்த நேரத்தில், அனைவரும் அவன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கக் கண்டதுமே, “ஏதோ வில்லங்கம்” என புரிந்து விட்டது அவனுக்கு

“இந்த ராப்பிசாசுங்க எல்லாம் ஏன் ஒண்ணா கூடி இருக்குதுங்க, சரியில்லையே…” என மனதுக்குள் எண்ணியவாறே வந்தான்

அவனைக் கண்டதும் மொத்த கூட்டமும் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, யோசித்தவாறே சிரம பரிகாரம் செய்யச் சென்றான் யாதவ்

அவன் திரும்பி வந்ததும், மீண்டும் அனைவரும் அவனையே நோக்க, எரிச்சலான யாதவ்

“டேய் என்னடா விஷயம்? ஏன் எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கறீங்க?” என்று கேட்டான்

ஆனால் அதற்கும் பதிலின்றிப் போகவே, தன் வழமை போல “நீங்க என்னமோ பண்ணுங்க” என்பது போல் தோளைக் குலுக்கி விட்டு எழப் போனவனைத் தடுத்தாள் மாதுரி

“இன்னைக்குக் காலையில ஏதோ ஓர் பொண்ணு உன்ன நடுரோட்டுல வச்சு வாரு வாருனு வாறிடுச்சாம்… என்ன விஷயம்?” என்று சற்றுக் கேலியாகக் கேட்கவும்

“ச்சே இவ்ளோ தானா? இதுக்குத் தானா இவ்ளோ சீன் போட்டீங்க? ஆமா டிராபிக்ல ஒருத்தி ரொம்பப் பண்ணுனா, அதுக்கென்ன? அது தான் அவளை அப்போவே நல்லா மிரட்டிட்டு வந்துட்டேன்ல?” என கெத்தாக கூறினான் யாதவ்

“யாரு நீயா? நீ எப்பவும் இந்த மாதிரி உன்ன யாரவது ராங் டீல் பண்ணினா, அவங்க மன்னிப்பு கேக்கற வரைக்கும் விட மாட்டியே? ஆனா இவங்கள மட்டும் எப்படி?” என சார்விக் கேட்க

“ஆமா… இப்போ கூட அவ கையால உப்பு காபி குடுச்சுட்டு வந்தியாம், அதுக்கு என்ன அர்த்தம்?” என சாதனா கேட்டதும், தூக்கி வாரிப் போட்டது யாதவிற்கு

“ஹேய் நிறுத்து நிறுத்து, அவ உப்பு காபி குடுத்தது உனக்கெப்படித் தெரியும்? அந்த விஷயம் எனக்கும் அவ அண்ணனுக்கும் மட்டும் தான தெரியும்? முதல்ல இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு யாருடா சொன்னது?” என்று யாதவ் அனைவரையும் பார்த்துக் கேட்க

மர்மச் சிரிப்புடன், “எங்களுக்கெல்லாம் சீக்ரெட் ஸ்பை இருக்காங்க, நீ என்ன பண்ணினாலும் எங்களுக்குத் தெரிஞ்சுடும் தெரியுமா?” என்று மகிழவன் கூறவும், தலையைப் பிடித்துக் கொண்டான் யாதவ்

“சரி மச்சி யார் அந்தப் பொண்ணு சொல்லு?” என்று விபின் அவன் தோள் பற்றிக் கேட்க

கவினோ இன்னும் ஒரு படி மேலே போய், “போன் நம்பர் வாங்கிட்டியா ப்ரோ?” என்று கேட்டான்

அவனது கடைசிக் கேள்வியில் தலை நிமிர்ந்த யாதவ், அனைவரையும் முறைத்தான்

பின்பு, “எப்பா சாமி.. காலையில ஏதோ ஒரு பொண்ணு என்ன டென்ஷன் பண்ணினா, சாயந்திரம் என்னோட ஜுனியர அவனோட வீட்டுல ட்ராப் பண்ணப் போனேன். அது அவ வீடுன்னு நான் என்ன ஜோசியமா பார்த்தேன்

அவளே சக்கரை கலந்த காபியில் மறுபடியும் உப்பக் கொட்டி காபின்ற பேருல ஒரு கண்றாவியக் கொடுத்துட்டாளேனு கடுப்புல இருக்கேன். இதுல நீங்க ஏண்டா ஒரு போலீஸ்காரனையே இத்தனை கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றீங்க?” என்று அவன் ஆயாசத்துடன் கூற

“ஓஹோ அவ்வளவு தானா?” என்று மற்றவர்கள் சலித்துக் கொண்டே அங்கிருந்து அகன்றனர்

“ஹூப்ப்ப்..” என்றொரு பெருமூச்சை விட்டவன், இரவு உணவை வெளியிலேயே சாப்பிட்டு விட்டதாய்க் கூறி, தனது அறைக்குள் வந்து கதைவடைத்துக் கொண்டான் யாதவ்

பின்பு ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தவன், தன் தொலைபேசியை எடுத்து ஒரு எண்ணை அழுத்தினான்

மறுமுனை உயிர் பெற்றதும், “ஹலோ… என்ன ஏதாவது விவரம் கிடைச்சுதா?”

“…………………….”

“ஒரு சின்ன க்ளூ கூடக் கிடைக்கலையா?”

“………………….”

“சரி இன்னும் ஒரு மாசம் காத்திருக்கலாம், அப்பவும் கண்டுபிடிக்க முடிலனா…” என மனதில் நினைத்ததை கூறாது கட்டுப்படுத்தியவன்

“இன்னும் முப்பது நாள் உங்களுக்கு டைமிருக்கு” என்றதுடன் அழைப்பை துண்டித்தான்

பின்பு தனது டைரியை எடுத்தவன், “ஜானு என்னால உன்னைக் கண்டுபிடிக்க முடியுமா? யாரப் பார்த்தாலும் எனக்கு உன்ன மாதிரியே தெரியுது, என்கிட்ட வந்துடு ஜானு. இப்ப வரைக்கும் என் மனசுல நீ தான் இருக்க ஜானு, என்னோட ஜானகி” என்று எழுதி விட்டு, அந்த டைரியை அணைத்தவாறே உறங்கியும் விட்டான் யாதவ்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. நிறையக் கதாபாத்திரங்கள். நினைவில் வைச்சுக்கணும். கதாநாயகியாக இந்த ஜானவி தான் யாதவ் நினைக்கும் ஜானுவா? தொடரக் காத்திருக்கேன்.

    • தொடர்ந்து படிக்கையில் கதாப்பாத்திரங்களின் பெயர்களுல் குழப்பமிருக்காது சிஸ். அடுத்தடுத்து வரும் அத்தியாயமும் உங்களை சுவாரஸயப்படுத்தும்.
      தங்களது கருத்துக்கு நன்றிகள்!

தவல அடை!! (Adhi Venkat) – பிப்ரவரி 2021 போட்டிப் பதிவு

கண்ணன் எந்தன் காதலன் (கவிதை) ராணி பாலகிருஷ்ணன் – பிப்ரவரி 2021 போட்டிப் பதிவு