அந்த வீட்டின் முன் சாமியானா போடப்பட்டிருந்தது, ஆண்களும் பெண்களும் போவதும் வருவதுமாய் இருந்தனர். அனைவர் முகத்திலும் சோகம், கண்களில் கண்ணீர்
மாலை அணிவிக்கப்பட்டு, நடுக்கூடத்தில் குளிர்சாதன பெட்டியில் மீளா துயிலில் வீற்றிருந்தாள் கமலா.
தலை மாட்டில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்க, அதனருகில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் லக்ஷ்மி
கமலாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த லக்ஷ்மியின் மனதில், சினிமா படம் போல், பழைய நினைவுகள் வலம் வரத் தொடங்கியது
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த லக்ஷ்மி, அக்கா வீட்டில் அடைக்கலமானாள். மாநிறமாக இருந்தாலும் களையான முகம், சுறுசுறுப்பு என, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் இருந்தாள் லக்ஷ்மி
அதோடு, எப்போதும் சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் அன்பாக பழகுவாள். லக்ஷ்மியின் அக்கா வீட்டுக்காரர் ஆபீஸில் வேலை செய்த ராமன், அடிக்கடி வீட்டிற்கு வருவான்
அப்படி வரும் சமயங்களில், லக்ஷ்மியை கண்டு விருப்பம் கொண்டவன், லக்ஷ்மியின் அக்காவிடம் அவளைத் தனக்கு திருமணம் செய்து தரும்படி கேட்டான்
லட்சுமிக்கு அப்போது 16 வயது ராமனுக்கு 30 வயது, வயது வித்தியாசம் அதிகமாய் இருந்ததால் அக்காவின் குடும்பம் தயங்கியது. ஆனால் ராமனின் அழகும், நல்ல வேலையும் அவர்களை சம்மதிக்க வைத்தது. ராமனின் விருப்பப்படி, லக்ஷ்மியை கை பிடித்தான்
ராமனுக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி இருந்தனர். அண்ணன் பம்பாயில் இருந்தார். அவருக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் பிள்ளைவரம் கிடைக்கவில்லை
இந்நிலையில், லக்ஷ்மி திருமணமான மறுமாதமே கர்ப்பமானாள். மாதங்கள் ஓட, சீமந்தத்திற்கு ராமனின் அண்ணாவும் மன்னியும் வந்தனர். லட்சுமிக்கு தாய் தந்தை இல்லாதால், தாங்களே பிரசவம் பார்ப்பதாக கூறினார்கள்
சீமந்தம் மிகச் சிறப்பாக நடந்தது. முகூர்த்தம் முடிந்ததும் அனைவருக்கும் இலை போட்டு பரிமாறினார்கள்.
ராமனின் அண்ணனின் ஒரு பக்கம் ராமனு,ம் மற்றொரு பக்கம் இன்னொரு தம்பியும் பந்தியில் அமர்ந்தனர். உணவு பரிமாறப்பட்டும் ராமனின் அண்ணன் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார்
தங்கள் அண்ணன் மேல் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்த தம்பிகள் இருவரும், மூத்தவர் உண்ணாமல் இருப்பதை கண்டு விழித்தனர்
“ஏன் அண்ணா சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?” என ராமன் கேட்க
“நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தந்தால் நான் சாப்பிடுகிறேன்” என்றார் அவர்
“என்ன அண்ணா? சொல், நான் சத்தியம் செய்கிறேன்” என்றான் ராமன் கொஞ்சமும் தயக்கமின்றி
“உனக்கு, அதாவது உன் மனைவிக்கு இந்த பிரசவத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும், ஆணோ பெண்ணோ எதுவாக இருந்தாலும், அந்த குழந்தையை எனக்கு தந்து விட வேண்டும். அந்த குழந்தையை உன் குழந்தை என்று நீயோ உன் மனைவியோ உரிமை கொண்டாடக் கூடாது என்று சத்தியம் செய்” என்றார்
உடனே ராமன் தன் இலையில் இருந்த சாதத்தின் மேல் சத்தியம் செய்து, “பிறக்கப் போகும் குழந்தையை என் அண்ணனுக்கு தந்து விடுகிறேன், எந்த காலத்திலும் எங்கள் குழந்தை என்று கூற மாட்டோம் இது சத்தியம்” என்றான்
பிறகு அண்ணன் தம்பிகள் மூவரும் சந்தோஷமாக உண்டனர்
லக்ஷ்மிக்கு பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ராமனின் மன்னி அவளுக்கு பிரசவம் பார்த்தாள். குழந்தை பால் குடிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் மன்னியே குழந்தையை வைத்துக் கொண்டாள்
இங்கிருந்தால், பாசத்தால் ராமனுக்கு குழந்தையின் மீது ஓட்டுதல் வருமென அஞ்சி, குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆனதும் லக்ஷ்மியையும் குழந்தையையும் பம்பாய் அழைத்துச் சென்றனர்.
பால்குடி மறந்ததும், குழந்தையை பம்பாயில் விட்டு விட்டு, லட்சுமி மட்டும் சென்னை வந்தாள்
காலங்கள் உருண்டோடியது. பம்பாயில் வளர்ந்த அந்த பெண் கமலாவிற்கு 12 வயது ஆன போது, அவளை சென்னைக்கு அழைத்து வந்தனர்
லக்ஷ்மியை மாமி என்றும் ராமனை மாமா என்றும் கமலாவிற்கு அறிமுகப்படுத்தினார்கள். இவர்களும் அதற்கு மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டனர்
முதல் குழந்தைக்கு பின், லக்ஷ்மிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்து அதில் மூன்று இறந்து விட்டது
ராமனின் அண்ணன் பம்பாயில் இருந்து வந்து சென்ற இரண்டு வருடங்களில், ஹார்ட் அட்டாக்கில் இவ்வுலகை விட்டு சென்றான் ராமன். அச்சமயம் , அவனின் அண்ணாவும் மன்னியும் மட்டுமே வந்தனர், கமலாவை அழைத்து வரவில்லை.
அதற்குப் பிறகு சில வருடங்களில் ராமனின் அண்ணனும் இறந்து விட, மன்னி கமலாவை ராமனின் தம்பி அழைத்துக் கொண்டு வந்தான்
கமலாவிற்கு திருமண வயது நெருங்கியிருக்க, ராமனின் தம்பி அவளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்தார்
அந்த திருமணத்திற்கு லக்ஷ்மிக்கு அழைப்பு இல்லை. தன் சூலில் உதித்த முதலில் மகவுக்கு திருமணம் என்று கூட அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே!
வேறு ஒரு உறவின் மூலம் பத்திரிகை வர, லக்ஷ்மி அந்த திருமணத்திற்கு சென்றாள். கண்ணில் நீர் மல்க, மனதார மகளுக்கு ஆசீர்வாதம் செய்தாள்
தன் கணவன் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற, தான் பெற்ற மற்ற பிள்ளைகளிடம் கூட கமலாவைப் பற்றி மூச்சுவிடவில்லை
கமலாவின் இறுதி சடங்கு ஆரம்பிக்க, பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள் லக்ஷ்மி
சடங்குகள் முடிந்து கமலாவை அமரர் ஊர்தியில் ஏற்ற, அவளின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது
அக்கணம், எத்தனை முயன்றும் கட்டுப்படுத்த இயலாமல், “ஐயோ என் மகளே என்னை விட்டுட்டு போகாத” என கதறி அழுதாள் லக்ஷ்மி
அறுபது ஆண்டுகளாக மனதில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பாசம் பீறிட்டு வர, யாராலும் லக்ஷ்மியை சமாதானம் செய்ய முடியவில்லை.
ஊரும் உறவும் புரியாமல் விழிக்க, லக்ஷ்மியின் தவிப்பும் அழுகையும், உலகுக்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது
தன் கணவன் செய்த சத்தியத்தை காப்பாற்ற பாசத்துக்கு வேலியிட்டு வாழ்ந்தவளின் மன உறுதியை, மகளின் இறுதி ஊர்வலம் உடைத்து விட்டது
“லக்ஷ்மி ஒரு நவீன குந்திதேவி” என கூட்டத்தில் இருந்த ஒரு உறவு கூற, பெற்றவளின் அழுகையும் அரற்றலும் , அங்கிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது
(முற்றும்)
டிசம்பர் மாத “பிரபல பதிவுப் போட்டி”யின் மூன்றாம் பதிவு இது. போட்டி விதிமுறைகளில் சொன்னது போல், வாசகர்களின் Views மற்றும் Likes கொண்டே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். ஆகையால், இந்த சிறுகதை உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த பதிவின் முடிவில் உள்ள Like Buttonஐ கிளிக் செய்யுங்கள்
நல்லதொரு சிறுகதை. பாராட்டுகள்.. அந்த கால கதை என்பதால் ஒரு சில விஷயங்களை இன்றைய சூழலுக்கு ஏற்றுக் கொள்ள முடியலை.
நன்றிங்க ஆதி
உண்மையைச் சொல்லணும்னா இப்படி எல்லாம் நடந்திருக்கும் என்பதையே முதல்லே ஏற்க முடியலை. குளிர்சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருப்பதால் சமீபத்திய நிகழ்வு போல் தான் இருக்கு. ஆனாலும் கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. சொல்லுவதற்கு மன்னிக்கவும். 🙁
No need to say sorry, you shared your view. Thank you
லஷ்மியின் மன உளைச்சல் எதிர்பாராத முடிவு. ஆனால் தற்காலத்து கதையாக யாரும் ஏற்க மாட்டார்கள். மற்றபடி கதையின் கருவை அதன் ஆசிரியர் அற்புதமாக படைத்திருக்கிறார்,
பாராட்டுக்கள்