in ,

கனவுகளை நனவாக்கும் காரிகை!! – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“கனவு மெய்ப்பட வேண்டும் கைவசம் ஆவது விரைவில் வேண்டும்”. இது பாரதியின் வாக்கு. எல்லோருக்கும் கனவுகள் உண்டு அவை நிறைவேற அவர்கள் கடினமாக உழைப்பதும் உண்டு.

ஆனால் தனக்காக மட்டும் உழைப்பவர்கள் அடுத்தவர்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களைப் பற்றி கூட நினைப்பது இல்லை. ஆனால் ஒரு சிலர் மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள் அவர்களைப் போன்றவர்களை காண்பது மிகவும் அரிது.

விமலா நந்தகுமார் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான பெண்மணி. அவரை சமீபத்தில் சந்தித்தேன். மிகவும் எளிமையாக காணப்பட்ட அவர் மனதில் எத்தனை உறுதி மனிதநேயம் இருக்கிறது என்று புரிந்து  கொள்ள முடிந்தது.

சமுதாயத்தில் மிகவும் பிற்பட்ட பெண்களுக்காக அவர் 11 வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கிறார். கனவு என்பது உறங்கும் போது வருவதில்லை, உறங்கவே விடாமல் செய்வதுதான் கனவு என்று அப்துல் கலாம் அவர்கள் சொன்னார்கள்.

அப்படி கனவுகளோடு அவை நிறைவேறவேண்டும் என்ற வெறியோடு போராடும் பல பெண்களின்  போராட்டத்துக்கு இவர் துணை நிற்கிறார்.

“சக்தி பவுண்டேஷன்” என்ற ஒரு மகத்தான அமைப்பின் மூலம் அவர்களுடைய கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறார் அதற்காக பலரும் அவருடன் கைகோர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

“உண்டாலம்ம இவ்வுலகம்!” என்னும் புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது.

“அமிழ்தம் இயையவதாயினும் தமியர் உண்டலும் இவரே!

தனக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே!”

எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி அவர்களது போராட்டங்களை எளிதாக்கும் இந்தப் பெண்மணியை  நவராத்திரி கொலு ஒன்றில் சந்தித்தேன்.

சக்தி வழிபாடு  என்பது  எல்லாப் பெண்களுக்கும் உரியது. எல்லாப் பெண்களும் ஏற்றம் காணவும் வேண்டும் என்று அயராது பாடுபடும் இவரும் ஒரு மகா சக்திதான். அதிசயசக்தி, ஆக்க சக்தி என்றே சொல்லலாம்.

கணிதத்தில் தேர்ச்சி பெற்ற இவர் Msc Mphil BEd. தற்போதுPhd யும் செய்து கொண்டு இருக்கிறார்.

மும்பையிலும் ஜாகர்த்தாவிலும் கணிதப் பேராசிரியையாக முதல்வராக இருந்திருக்கிறார். பலகலை வித்தகர். ஓவியம் வரைதல் நீச்சல்  என்று பொழுது போக்குகளுடன் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

பள்ளிகளின் செயல்பாடுகளுக்காகவும்  மற்ற பல வாழ்க்கை விஷயங்களுக்காகவும் புத்தகங்கள் எழுதியுள்ள இவர் சுற்றுலா செல்வதிலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 33 தேசங்களுக்கு சென்று வந்திருக்கிறார்.

“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து !” என்பது மாதிரி அவர் தன்னைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

நான் சென்றிருந்த வீட்டில் இருந்த தீபா அவரைப் பற்றி சொன்னதும் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைப் பாதையே மாறியிருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் தூண்டுகோலாக உந்து சக்தியாக விளங்கும் திருமதி விமலா நந்தகுமார் அவர்களை மற்றவர்களும் அறியவேண்டும் என்று விரும்புகிறேன்.

“நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?” என்று குமுறிய பாரதி “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!” என்றும் வேண்டினார்.

அவரின் கனவுகளை நனவாக்கும் விமலா போன்றவர்களை போற்றி வணங்குவோம்!!

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாடல்களில் அவள் தாலாட்டு (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு