in ,

லைக் தரும் போதை (சிறுகதை) – ருக்மணி வெங்கடராமன்

ழுத்தாளர் ருக்மணி வெங்கடராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“அம்மா! இங்கே பாருங்கம்மா. நான் வரைந்த ஓவியத்தை.” 

“அருமையாக இருக்கிறது நந்தினி.! ரொம்ப அழகா வரைஞ்சிருக்க.”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“சின்னக் குழந்தையிலிருந்தே நீ இப்படித்தான். ஏதாவது புதிதாகச் செய்தால், எல்லோரும் கை தட்டிப் பாராட்ட வேண்டும். அதில் உனக்கு ஒரு சந்தோஷம்.”

“போம்மா, நீ வேற! இப்போது நான் வரைந்த இந்த ஓவியத்தை என் தோழிக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கப் போகிறேன்.”

அடுத்த நாள் அந்த ஓவியத்தை வித்யா என்ற தோழிக்குப் பரிசாகக் கொடுத்தாள் நந்தினி. 

வித்யா அந்த ஓவியத்தை முகநூலில் பகிர்ந்தாள். ஆனால், அதை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஒரே ஒரு (‘Like’) லைக் மட்டுமே வந்திருந்தது.

 அந்த ஒரு (‘Like’) லைக் உடன் ஒரு கருத்தும் வந்திருந்தது.

“உயிருள்ள ஓவியம்!”

அடுத்த நாள் வரை காத்திருந்தாள் நந்தினி. எந்தக் கருத்தும் இல்லை. விருப்பக் குறியீடும் இல்லை. ஆனால் அந்த ஒரு கமெண்ட் மனதைத் தொட்டது.

“அம்மா! என் ஓவியத்தை யாரும் பார்க்கவில்லை என்று வருந்தினேன். ஆனால், ஒருவருடைய இந்தக் கருத்து எனக்கு இன்னும் வரைய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குது.” என்றாள் நந்தினி.

“சரி. 

அப்போது அம்மா சொன்னார்: “உன் திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே. முதலில் நீ உன்னை நம்பு.”

அன்று பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும்போது, ஒரு காட்சி நந்தினியின் கவனத்தை ஈர்த்தது. உடனே அதைத் தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டாள்.

வீட்டுக்குச் சென்றதும் அந்தக் காட்சியை ஓவியமாக வரைந்து முகநூலில் பகிர்ந்தாள்.

‘உழைக்கும் கரங்கள்’ என்ற தலைப்புடன் ஓவியம் அருமையாக இருந்தது. வயதானவர்  வண்டியில் புத்தகங்கள் விற்க்கும் காட்சியை காட்சிப் படுத்தி இருந்தாள். அத்துடன் தான் எடுத்த புகைப்படத்தையும் இணைத்திருந்தாள்.

“முடிந்தால் இவரிடம் புத்தகங்களை வாங்கி ஊக்குவிக்கவும்” என்ற குறிப்புடன் பதிவிட்டாள். அவர் புத்தகங்கள் விற்க வரும் இடங்களைப் பற்றிய தகவல்களையும் இணைத்திருந்தாள். சிறிது நேரத்திலேயே நந்தினியின் பதிவுக்கு ஏராளமான ‘Like’களும், கருத்துகளும் குவிந்தன.

“அம்மா! என் ஓவியத்திற்கு எத்தனை (‘Like’) லைக்குகள் வந்திருக்கின்றன பாருங்கள்!”

அவளுடைய முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அம்மாவைத் தழுவிக் கொண்டாள்.

அடுத்த நாள் மாலை நடைப்பயிற்சிக்காகப் பூங்காவுக்குச் சென்றாள் நந்தினி.  அங்கு ஒரு பெஞ்சில் எட்டு வயது சிறுவன் ஒருவன் பூங்காவில் எரியும் மின் விளக்கில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அவனருகில் அவனுடைய பாட்டி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தாள்.

பாட்டியிடம் சுண்டல் வாங்கிய நந்தினி, அவர்கள் இருவரையும் தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டாள். அடுத்த நாள் அந்தப் புகைப்படத்தையும், தான் அவர்களை வரைந்த ஓவியத்தையும் இணைத்து, ‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில் முகநூலில் பதிவிட்டாள்.

“முடிந்தவர்கள் இந்த மாணவனின் கல்விக்கு உதவுங்கள்” என்று குறிப்பிட்டு, அந்த மாணவனைச் சந்தித்த இடத்தையும் குறிப்பிட்டு இருந்தாள்.

இந்தப் பதிவுக்கும் ஆயிரக்கணக்கில் (‘Like’)களும், கருத்துகளும் வந்தன. நந்தினிக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அந்தப் பதிவை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டாள். அம்மாவிடமும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தாள்.

அப்போது அம்மா அமைதியாகச் சொன்னார்: “இந்த இரண்டு படங்களிலும் இடம் பெற்றவர்களை  நேரில் சென்று பார்த்துவிட்டு வா.”

“ஏதோ நீ சொல்லற. பார்க்கிறேன்.”என்று கூறி விட்டுச் சென்றாள்.

முதலில் அந்தப்  முதியவரைக் காணச் சென்றாள் நந்தினி. தன் பதிவைக் காட்டினாள். அவர் அதைப் பார்த்துவிட்டு, “நன்றாக வரைந்திருக்கிறாய். நிறைய (‘Like’) லைக்கும்  வாங்கியிருக்கிறாய். பாராட்டுகள்!” என்றார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், “ஆனால்.. என் பசி தீரவில்லை!” என்றார். அந்த வார்த்தைகள் நந்தினியின் மனத்தில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனே தன் அலைபேசியில்  அந்தப் பெரியவரைப் பேட்டி எடுத்து நேரலையில் இணையத்தில் பதிவிட்டாள்.

“பெரியவரே! ஏன் இந்த வயதிலும் வியாபாரம் செய்து கஷ்டப்படுகிறீர்கள்?”

“இது தான் என் தொழில். நான் ஓய்ஞ்சு உட்கார்ந்தா எப்படி சாப்பிடறது.?  நான் பழைய புத்தகங்களை கிலோ கணக்கில் வாங்கி, புத்தகங்கள் கிழிந்திருந்தால் ஒட்டி, அட்டைப் போட்டு பாதி விலைக்கு விற்பனை செய்கிறேன். பெரும்பாலும் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களையும் விற்பனை செய்கிறேன்.”

“ஏன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து வியாபாரம் செய்யாமல் வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்கிறீர்கள்?”

“மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்தந்த அரசு பள்ளிக்கூடங்கள் அருகில் விற்றால் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு சில புத்தகங்களை இலவசமாகவும் கொடுக்கிறேன்.”

சிறிது நேரம் தயங்கியவர் தொடர்ந்து பேசினார்.

“எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறவியிலேயே பார்வை குறைபாடு உள்ளவன். எனக்கு வசதி இல்லாததால் அவனைப் படிக்க வைக்க முடியவில்லை. அவனுக்காகவும் நான் சம்பாதிக்கிறேன்.”

அந்த நேரலைப் பதிவைப் பார்த்த பலர் உதவ முன்வந்தனர். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அந்தப் பெரியவரின் மகனுக்குக் கல்வி வழங்க முன்வந்தது. பதினைந்து வயதில் அவன் கல்வியைத் தொடங்கினான். மேலும், அந்தப் பெரியவர் விற்பனை செய்த புத்தகங்களை ஒரு அரசு நூலகமும் வாங்கிக் கொள்ள முன்வந்தது. அந்தப் பெரியவர் நந்தினிக்கு பலமுறை நன்றி தெரிவித்தார்.

ஆயிரம்( ‘Like’)  லைக்குகளைவிட, நிஜ வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த அந்த உதவிதான் நந்தினியின் மனத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அடுத்து அந்தப் பாட்டியைச் சந்தித்தாள். “பாட்டி, இந்தப் பையன் உங்க பேரனா?” என்று கேட்டாள்.

பாட்டி புன்னகைத்தபடி சொன்னாள்: “இல்லைம்மா. இவன் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பையன். அவனைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் சுண்டல் விற்க்கிறேன்.”

அந்தப் பேட்டியையும் நந்தினி நேரலையில் வெளியிட்டாள். அந்த உருக்கமான உரையாடலைக் பார்த்த ஒரு தம்பதியினர் அந்தச் சிறுவனின் கல்விப் பொறுப்பை ஏற்க முன் வந்தனர்.

பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். நந்தினிக்கு இப்போது ஏராளமான (‘Like’) லைக்குள் பாராட்டுகளும் கிடைத்தன. ஆனால், அவளுடைய மனதில் (‘Like’ ) லைக்குகளின் அர்த்தமே மாறியிருந்தது.

“அம்மா! உனக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இனிமேல் (‘Like’) லைக்குகளுக்காக மட்டும் படம் எடுக்கவோ, ஓவியம் வரையவோ மாட்டேன். என் திறமையால் பிறருக்கு என்ன உதவி கிடைக்கும் என்று யோசித்துத்தான் செய்வேன்.” என்றாள் நந்தினி.

அவளுடைய குரலில் மகிழ்ச்சியும் மனநிறைவும் இருந்தன. அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.  தன் ஓவியத் திறமையைப் பயன்படுத்தி, ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக ஒரு சிறிய ஓவியக் கண்காட்சியை நடத்த முடிவு செய்தாள். இந்த முறை அவளுடைய நோக்கம்( ‘Like’ )லைக் பெறுவது அல்ல; கிடைக்கும் வருவாயை ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்குவதே.

கண்காட்சி நாளும் வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு யாரும் வரவில்லை. நந்தினியின் மனம் உடைந்தது.

அப்போது அம்மா அவளருகில் வந்து சொன்னார்: “நீ முயற்சி செய்ததே பெரிய விஷயம். கூட்டம் வரவில்லை என்றால் என்ன? பிறருக்காகச் செய்யும் நல்ல செயலைக் கூட்டம் பார்த்துத்தான் மதிக்க வேண்டுமா? உனக்குத் தெரியாமல் யாராவது உன் ஓவியத்தைப் பார்த்து பாராட்டியிருக்கலாம். நமக்குத் தெரியாமல் கூட இருக்கலாம்.”

அப்போது கண்காட்சிக்கு வந்திருந்த ஒருவர் நந்தினியின் ஓவியங்களைப் பார்த்தார்.

“இந்த ஓவியத்தை மாநில அளவிலான ஓவியப் போட்டிக்கு அனுப்புங்கள்.” என்றார்.

அவர் போட்டி பற்றிய விபரங்களைக் கூறி ஊக்குவித்தார். நந்தினியும் அந்த ஓவியத்தைப் போட்டிக்கு அனுப்பினாள். சில மாதங்களுக்குப்  பிறகு, அவளுடைய ஓவியம் தேர்வு செய்யப்பட்ட செய்தி வந்தது. பெரிய விழா எடுத்து  பரிசுத் தொகையை தந்தனர்.

அந்தப் பரிசுத் தொகையைத் தன்னிடம் வைத்துக் கொள்ளாமல், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கினாள். அந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.

ஆயிரக்கணக்கான(‘Like’ )லைக்குகள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

நந்தினி அமைதியாக அந்தப் பதிவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பாராட்டுக்கள் கூட போதை தரும் ஒன்று தான்.‌ 

ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சாலையில் ஒரு முதியவர் பேச்சு மூச்சின்றி விழுந்து கிடந்தார்.‌‌ அந்த வழியே சென்ற பெண் தன் அலைபேசியில் அந்த முதியவரைப் படம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

நந்தினி உடனே ஆம்புலன்ஸை தகவலைச் சொல்லி வரவழைத்தாள். படம் பிடித்துக் கொண்டு இருந்த பெண்ணை அழைத்து “என்ன லைக் வர வேண்டும் என்று ஷேர் செய்தாயா?”

“ஆம். அதில் உங்களுக்கு என்ன வருத்தம்?”

“அந்த பெரியவரை காப்பாற்ற முன் வராமல் படம்பிடித்துக் கொண்டு இருந்த பெண் இவள்” என்று உன் போட்டோவைப் முகநூலில் போடவா?”என்று கேட்டதும் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். 

நீ உதவி செய்வதை யாராவது முகநூலில் போடும் பொழுது உன் செயல் அங்கீகரிக்கப் படும். மனதும் நிம்மதி அடையும்.”

அந்தப் பெண் “மன்னிங்க. இனி இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்வேன்” என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.

அப்போது நந்தினியின் கைபேசியில் ஒரு வருடத்திற்கு முன்பு ‘இதே நாளில்’ என்று ஓர் பழைய   ஓவியத்தை கூகுள் ஷேர் செய்தது.

அவள் வரைந்த முதல் ஓவியம். அதற்கு வந்திருந்தது ஒரே ஒரு (‘Like’‌)லைக். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது நந்தினியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

அப்போது அவளுக்குப் புரிந்தது. “ஆயிரம் பேர் (‘Like’) லைக் செய்வது வெற்றியாக இருக்கலாம். ஆனால், ஒரே ஒருவர் நம்முடைய திறமையை உண்மையாக நம்புவது… வாழ்க்கையை மாற்றும் சக்தி.”

அவளுடைய ஓவியங்களுக்கு வந்த (‘Like’ ) லைக் ஆயிரம். ஆனால், அவளுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது அந்த ஒரு (‘Like’) லைக் தான்

எழுத்தாளர் ருக்மணி வெங்கடராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காசி பயண கட்டுரை – கீதா ரமேஷ்

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் (சிறுகதை) – பவானி உமாசங்கர்